இயேசு கூறிய உவமைகள் அனைத்தும் விசேஷமானவைகளாகக் காணப்படுகிறது. எப்பொழுதெல்லாம் இயேசு ஜனங்களோடு பேசினாரோ அப்பொழுதெல்லாம் உவமைகளாகத் தான் பேசினார். இதை மத்தேயு 13 : 34ல் பார்க்கிறோம். ஜனங்கள் எளிதாக புரிந்து கொள்வதற்காக உவமைகளாப் பேசினார். காணக்கூடாதவைகளை காணக்கூடியவற்றைக் கொண்டு ஆண்டவர் விளக்கியதை உவமை என்கிறோம். இயேசு பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களையும், அதில் பிரவேசிப்பதற்கான வழிகளையும் உவமைகள் மூலமாக கூறினார்.
பொக்கிஷத்தைக் கண்டு, மறைத்து, பெற்றது:
மத்தேயு 13 : 44 “அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.”
ஒரு மனிதன் இன்னொருவன் நிலத்தில் உழுவதற்கோ அல்லது அந்த நிலத்தில் வேலை செய்வதற்கோ போயிருக்கக்கூடும். அப்பொழுது அங்கு புதையல் இருப்பதை அறிந்து கொண்டான். பொக்கிஷம் என்பது விலையுயர்ந்தது. அது வெளிப்படையாகக் காணப்படுகிற ஒன்றல்ல. எல்லோருக்கும் வெளிப்படுகிற காரியமும் அல்ல. சிலருக்கு மட்டும்தான் அது கிடைக்கும். எல்லோருக்கும் அது கிடைப்பதுமில்லை. அந்தக் காலத்திலிலுள்ளவர்கள் நிலங்களில் கோதுமையும், வாற்கோதுமையும், எண்ணையும், தேனும் போன்ற விலையேறப்பெற்ற பொக்கிஷங்களை புதைத்து வைத்திருக்கிறோம் என்று கூறியதை எரேமியா 41 : 8ல் பார்க்கிறோம். ராஜாக்களும், ஐசுவரியவான்களும் தங்களுடைய கல்லறைகளில் பொக்கிஷங்களைப் புதைத்து வைத்திருப்பார்கள். அதேபோல் பரலோக பொக்கிஷங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் பொக்கிஷ சுரங்கமாக இருக்கிறோம். பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு கூறினார். அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
பரலோக ராஜ்ஜியமான பொக்கிஷம்
பொக்கிஷம் என்பது விலையேறப்பெற்றது. அது வெளி உலகத்திற்குத் தெரியாது. இதில் பரலோகராஜ்யமானது ஒரு பொக்கிஷமாயிருக்கிறது. இதை பூமியில் இருக்கிற ஒன்றுக்கும் ஒப்பிட முடியாது. அது ஒப்பற்றது, மனுஷனுடைய அறிவினால் ஆராய முடியாதது. பரலோகத்திலுள்ள பொக்கிஷம் என்பது பரலோகத்திலிலுள்ள மகா மேன்மையானவைகளைக் குறிக்கிறது. அது அழியாத நித்திய ராஜ்ஜியம். அங்கு பாவம் இல்லை. கண்ணீர் இல்லை, தாகமில்லை, பிசாசு இல்லை, அங்கே சூரியனுடைய வெளிச்சம் அவசியம் இல்லை, பகலில் வாசல் அடைக்கப்படுவதில்லை. வியாதி இல்லை, துக்கமில்லை, சாபம் இல்லை, தளங்கள் பொற்தளங்களாக உள்ளது. இவை அனைத்தும் உலகத்தில் கிடைப்பதில்லை. பரலோகத்திலுள்ளவைகள் அனைத்தும் நிரந்தனமானவை. அங்கே புதிய வானம், புதிய பூமி, புதிய எருசலேம், புதிய சீயோன் என்பதான நித்தியமான வாசஸ்தலங்கள் காணப்படுகிறது. அவைகள் எல்லாமே எப்பொழுதும் புதியவைகளாகவே இருக்கிறது. அவைகள் எப்பொழுதும் பழையதாவதே இல்லை.
அதை ஒருவன் அனுபவிக்க வேண்டுமானால் அவன் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும். பரலோக ராஜ்யத்தை யாரும் தன்னுடைய சொந்தக் கண்களால் காண முடியாது. பரலோக இராஜ்ஜியத்தின் பொக்கிஷங்களைப் பெற்றுக்கொள்ள இயேசு தான் வழியாக இருக்கிறார். அதைத் தான் இயேசு
யோவான் 14 : 6ல் “அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” என்றார்.
உலகத்திலுள்ள எல்லாமே அழியக்கூடியதாயிருக்கிறது. பரலோக ராஜ்யத்துக்குள்ளவைகள் அனைத்தும் அழியாதது. நித்தியமானது. அவைகளை அனுபவிக்கத்தான் மனிதனை தேவன் படைத்தார். தேவனுடைய சிருஷ்டிப்பு மகா விசேஷமானது. தேவன் தனது சாயலில்படியேயும், தமது ரூபத்தின்படியேயும் மனிதனை சிருஷ்டித்தார். மனிதனைக் குறித்து தேவனுக்கு விசேஷமான நோக்கம் உண்டு. அதென்னவெனில் கிறிஸ்துவின் சாயலைப் போல உருவாக வேண்டும். கிறிஸ்துவின் குணாதிசயங்கள் காணப்பட நமக்குள் வேண்டும். அவர் பரிசுத்தமுள்ளவராக இருப்பது போல நாமும் பரிசுத்தமுள்ளவராக இருக்க வேண்டும். அவரைப்போல பூரணராக கடந்து போக வேண்டும். அவ்வாறிருந்தால் இயேசு,
யோவான் 14 : 3 “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” என்றார்.
நிலமாகிய இயேசு:
பொக்கிஷம் இருக்கிற நிலம்தான் இயேசு. இயேசுவுக்குள் தான் அனைத்துப் பொக்கிஷங்களும் அடங்கியிருக்கிறது. இந்த பொக்கிஷங்களை அடைய முதலாவது அந்த நிலத்தை சொந்தமாக்க வேண்டும். இயேசுவை சொந்தமாக்க முதலாவது அவரைக் காண வேண்டும். அவரைக் காண்பதற்கு முன் அவரைக் குறித்துக் கேள்விப்பட வேண்டும். அப்போது விசுவாசக் கண்கள் திறக்கும். இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். 12 வருஷமாக பெரும்பாடு என்ற வியாதியினால் அவஸ்தைப்பட்ட ஒரு பெண்ணை மாற்கு 5 : 27 – 34ல் பார்க்கிறோம். அவள் தன்னிடமிருந்த அத்தனை பணத்தையும் செலவழித்தும் அந்த வியாதி குணமடையவில்லை. நம்பிக்கை இழந்தாள். அந்த நேரத்தில் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டாள். அவளுடைய விசுவாசக் கண்கள் திறக்கப்பட்டது. கேள்வியினால் விசுவாசம் பெருகும் என்று வேதத்தில் பார்க்கிறோம். பரலோக பொக்கிஷங்களை ஒருவன் அடைய வேண்டுமானால் அவளுடைய விசுவாசக் கண்கள் திறக்கப்பட வேண்டும். அவளுக்குள் விசுவாசம் வளர்ந்து எப்படியாகிலும் கிறிஸ்துவின் வஸ்திரத்தைத் தொட்டு சுகம் பெற வேண்டுமென்ற தீர்மானம் எடுத்தாள். அது பெரிய கூட்டமாக இருந்ததால் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் போதும் என்று நினைத்தாள்.
அந்தக் கூட்டத்தில் அவளுடைய வியாதியின் தன்மையையும் பொருட்படுத்தாமல் பெருங் கூட்டத்திற்குள் சென்று இயேசுவின் வஸ்திரத்தின் ஒரத்தைத் தொட்டாள். இயேசுவினுடைய வல்லமை அவளுக்குள் வந்து சுகம் பெற்றாள். இது யாருக்கும் தெரியாது. இது மறைக்கப்பட்டிருந்தது. அவள் தான் சுகம் பெற்றதை உணர்ந்தாள். இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை புறப்பட்டதை உணர்ந்தார். திரளான ஜனங்கள் சென்றனர். ஆனால் அவர்களுக்குள் இந்த வல்லமை பிரவேசிக்கவில்லை. விசுவாசத்தோடு தொட்ட இந்த ஸ்திரீயிடம் மட்டுமே இயேசுவின் வல்லமை பிரவேசித்தது. என்னைத் தொட்டது யாரென்று இயேசு கேட்டார். சீஷர்கள் திரும்பி இயேசுவிடம் இத்தனை திரளான ஜனக்கூட்டத்தில் தொட்டது யார் என்று கேட்கிறீர்களே என்று கேட்டனர். அதைக் கேட்ட ஸ்திரீயானவள் தன்னை மறைத்துக் கொள்ள முடியாமல் தன்னை இயேசுவிடம் வெளிப்படுத்தினாள். அவள் சுகம் பெற இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டாள், விசுவாசித்தாள், அவைகளைக் கிரியைகளில் காட்டினாள். விடுதலை பெற்றாள். நாமும் அதேபோல் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு விசுவாசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இயேசு இரட்சகர் மட்டுமல்ல, வைத்தியராகவும் இருக்கிறார். ஆத்தும மணவாளனாகவும் இருக்கிறார். நல்ல மேய்ப்பனாகவும், நல்ல நண்பனாகவும் இருக்கிறார். இந்த உவமையில் ஒரு மனுஷன் வேறொரு மனுஷனின் நிலத்தில் புதைந்திருக்கிற ஒரு பொக்கிஷத்தைக் கண்டான். அவனுக்குள் சந்தோஷம் உண்டாகியது. அந்தப் பொக்கிஷத்தை எடுத்தால் எல்லோரைப் பார்க்கிலும் ஐசுவரியவானாகிவிடுவேன் என்று எண்ணுகிறான். அது இன்னொருவருடைய நிலமாக இருக்கிறவரையிலும் இவனால் அந்தப் பொக்கிஷத்தை எடுக்க முடியாது. எனவே ஞானமாக எப்படியாகிலும் அதை வாங்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணினான். அவனுக்கிருந்த சொத்து மதிப்பு எவ்வளவென்று தெரியாது. ஆனால் அவனிடமிருந்த சொத்து மதிப்பை விட இந்த பொக்கிஷத்தின் மதிப்பு அதிகமாக இருக்குமென்று நினைக்கிறான். இது அவனுடைய சுயநலத்தைக் காட்டுகிறது. பிறகு அந்த நிலத்தில் தரித்திருந்து தோண்டிப் பொக்கிஷத்தைப் பெற்று அனுபவித்துக் கொண்டேயிருக்கலாம் என்றெண்ணுகிறான். தனக்குள்ள எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கினான். நிலத்தை மட்டுமல்ல அதிலிருக்கிற புதையலையும் சேர்த்தே வாங்குகிறான். அந்த நிலத்தின் சொந்தக்காரனுக்கு தன்னுடைய நிலத்தில் பொக்கிஷம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவில்லை. இதேபோல்தான் அனைவரும் கிறிஸ்துவுக்குள் தங்களுக்கு இருக்கிற ஐசுவரியத்தின் மேன்மையை அறிந்து கொள்ளாதபடி இப்பிரபஞ்சத்தில் தேவனானவர் அவர்களுடைய மனக்கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான் என்று 2 கொரிந்தியர் 4 : 4ல் பவுல் கூறியதைப் பார்க்கிறோம். விலைமதிப்பற்ற பொக்கிஷமான இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த போது
யோவான் 1 : 10, 11 “அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.”
“அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” என்றார்.
அன்றைக்கு ஈசாக்கின் மூத்த மகனான ஏசா தன் சேஷ்ட புத்திர பாகத்தின் மதிப்பு என்னவென்று தெரியாமல் போனதால் அற்ப கூழுக்காக அதை விற்றுப் போட்டான். எலிசாவின் வேலைக்காரனாய் இருந்த கேயாசி நாகமானின் பணத்துக்காக விலையேறப்பெற்ற அபிஷேகத்தை விற்றுப் போட்டான் இயேசுவின் சீடராக இருந்த யூதாஸ்காரியோத் 30 வெள்ளிக்காசுக்காக அப்போஸ்தலரின் அழைப்பையும் மகிமையையும் இழந்தான். இதைத்தான் இயேசு
வெளிப்படுத்தல் 3 : 11ல் “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.”
என்று கூறியதைப் பார்க்கிறோம். தேவனுடைய பிள்ளைகள் தங்கள் அறியாமையினால் கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் மேன்மையை இழக்கிறார்கள்.
இயேசு என்ற பொக்கிஷத்தைப் பெற:
இயேசு என்ற பொக்கிஷத்தை சொந்தமாக்க ஒரு மனிதன் முற்றிலும் தன்னை வெறுமையாக்க வேண்டும். ஜாதிப் பெருமை, அழகுப் பெருமை, படிப்புப் பெருமை எதுவும் கூடாது. அந்த மனுஷன் தனக்குண்டானவைகளை விற்று அந்தப் பொக்கிஷத்தைப் பெற்றுக் கொண்டதைப் போல, நாமும் உலகப்பொருட்களை அற்பமாய் எண்ணி, இயேசுவுக்காய் எந்தத் தியாகமும் செய்ய முன்வர வேண்டும். நம்மை முழுவதும் சமர்ப்பித்தால்தான் இயேசுவை நமக்குச் சொந்தமாக்க முடியும். அதன்பின்தான் அவரிடமுள்ள பொக்கிஷங்களை சொந்தமாக்க முடியும். அந்தப் பொக்கிஷங்கள் இயேசுவுக்குள்தான் காணப்படுகிறது.
அன்றைக்கு நோவா வரப்போகும் ஜலப் பிரளயத்திலிருந்து தன் குடும்பத்தை காக்க தேவன் கூறியபடி தன்னுடைய எல்லாவற்றையும் விற்று ஒரு பெரிய பேழையைச் செய்தான். நோவாவுக்கு உலக ஆசைகளை பார்க்கிலும் பேழை தான் பெரிய பொக்கிஷமாய் இருந்தது. வேதம் நோவாவைப் பற்றி என்ன சொல்லுகிறது என்றால்,
எபிரேயர் 11 : 7 விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.”
ஜலப் பிரளயத்துக்குப் பின் நோவாவும் அவனது குடும்பத்தாரும் வெளியே வந்த போது, எந்த பேழைக்காக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விட்டானோ, அந்த நிலங்கள் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அவனுடைய காலடிக்கு வந்தது. கிறிஸ்துவுக்காய் பிரயாசப்பட்டவர்கள் எவரும் தரித்திரர் ஆனதில்லை அதனால் தான் இயேசு,
மத்தேயு 19 : 29ல் “என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;”
இதேபோல் பவுலும் இயேசுவைக் கண்டவுடன் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிற பொக்கிஷங்களைக் கண்டான். எனவே எப்படியாவது கிறிஸ்துவை ஆதாயம் பண்ணவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் வந்தது. பவுல் கூறும்போது,
பிலிப்பியர் 3 : 7, 8, 11 “ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.”
“அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.”
“அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.”
என்றான். அவன் அவ்வாறு எண்ணியதால்தான் தேவன் அவரை பிரதான அப்போஸ்தலனாக, வல்லமையான ஊழியக்காரனாக மாற்றி, வேதத்தில் அநேக புத்தகங்களை எழுதுவதற்கும் அவனைப் பற்றி பிரசங்கிப்பதற்கும் தகுதி உள்ளவன் ஆனான். தேவபிள்ளைகளே கிறிஸ்துவே உங்களுக்கு மேன்மையாக, விலையுயர்ந்த பொக்கிஷமாக இருக்கட்டும். அவருக்கே உங்கள் முழு அன்பையும் கொடுங்கள்.
தேவன் நமக்குள் வைத்திருக்கும் பொக்கிஷம்:
தேவன் ஒரு மனிதனுக்குள் வைத்திருக்கும் வேறு ஒரு பொக்கிஷம் நமக்குள் இருக்கும் ஆத்மா. ஆத்மாவின் விலை மதிப்பானது முழு உலகத்தின் விலை மதிப்பை விட பெரியது. அதனை விலையேறப்பெற்றதாக மாற்றியது என்னவென்றால் கிறிஸ்துவின் ஜீவன். அந்த ஆத்மாவில் தேவன் எத்தனையோ அருமையான காரியங்களை வைத்திருக்கிறார் ஒரு மனிதனுடைய சரீரம் அழிந்து போனாலும் அழியாத பகுதி ஆத்மாதான். ஆத்மாதான் விலையேறப் பெற்றது.
மத்தேயு 16 26 “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”
நம்முடைய ஆத்துமாவினுள் தேவன் தங்க வேண்டும் என்று விரும்புகிறார். மனுஷருடைய மத்தியில்தான் தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறதென்று வெளிப்படுத்தல் 21 : 3ல் பார்க்கிறோம். நம்முடைய ஆத்மாதான் தேவனுடைய ஆலயம் (1 கொரிந்தியர் 3 16). நம்முடைய ஆத்துமா தான் தேவனுடைய ஜெப வீடு. மகிமையின் ஆவியானவர் நமக்குள் வந்து தங்கியிருக்கிறார் (1பேதுரு 4 : 14)
கொலோசெயர் 1 : 27 “….கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.”
அதனால்தான் சாத்தான் அந்த ஆத்மாவை தன் பக்கமாய் இழுக்கிறான். தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ய வைத்து, அந்த ஆத்மாவில் வாசம் பண்ண எண்ணுகிறான். உலக சிற்றின்பங்களைக் காட்டி அதில் விழச்செய்கிறான். ஆத்மாவுக்குள் பாவம் வந்துவிட்டால் நமக்கும் தேவனுக்குமிடையேயுள்ள தொடர்பு போய்விடும். பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்று எசேக்கியல் 18 : 20ல் பார்க்கிறோம். கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை கரை படாமல் காக்க அக்கறை கொண்டவர். அதைத்தான் அப்போஸ்தலனாகிய யோவான்
3 யோவான் 1 :2 “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.” என்று கூறியதைப் பார்க்கிறோம்.
தேவனுடைய பொக்கிஷங்களை சரீரமாகிய இந்த மண் பாண்டத்தில் போட்டு வைத்திருக்கிறோம். தேவனுடைய வல்லமை நமக்குள் இருக்கிறதென்றால் தேவனுடைய பொக்கிஷம் நமக்குள் இருக்கிறது என்று பொருள். தேவனுடைய சமாதானம் நமக்குள் இருந்தால் தேவனுடைய பொக்கிஷம் நமக்குள் கிரியை செய்கிறது என்று பொருள். தேவனுடைய சந்தோஷம் நமக்குள்ளே இருக்குமானால் தேவனுடைய பொக்கிஷம் நமக்குள் செயல்படுகிறது என்று பொருள். இவ்வாறு ஒவ்வொரு ஆவிக்குரிய அனுபவமும் பொக்கிஷமாக நமக்குள் இருக்கிறது. இயேசுவினுடைய ஜீவியத்தில் எல்லா விஷயங்களும் கிரியை செய்ததை நாம் காணலாம்.
தேவனுடைய வல்லமையும், சந்தோஷமும் இயேசுவுக்குள் கிரியை செய்தது. அதனால்தான் அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் சந்தோஷப்பட்டார். அவமானத்தை எண்ணாமல் அலட்சியப்படுத்தினார். சந்தோஷப்பட்டு சிலுவைப் பாடுகள், மரணத்தின் மூலமாக பிதா என்ன செய்யச் சித்தம் கொண்டு அனுப்பினாரோ அதை அவர் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். அவருக்காக ஒரு கூட்ட ஜனங்களை தயார்படுத்த வேண்டும் என்ற தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றினார். பரலோக ராஜ்யத்தின் பொக்கிஷங்களைப் நாம் பெற்றுக்கொள்ள இயேசுவை முதலில் சொந்தமாக்க வேண்டும். இயேசுவுக்குள் நாம் எந்த அளவு ஜெபத்தில் நெருங்குகிறோமோ அந்த அளவு ஆவியானவர் நம்மோடுகூட இடைப்படுவார்.. ஆழமாகக் கடந்து செல்ல செல்ல, அவரோடு கூட நடக்க நடக்க ஆழமான ரகசியங்களை இயேசுவின் மூலம் நாம் பெற்றுக்கொள்ள முடியும். இதை
யாக்கோபு 1 : 17ல் “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” என்பதிலிருந்த்து அறிகிறோம்.
சகலமும் அவர் மூலமாகவும், அவரைக் கொண்டும் சிருஷ்டிக்கப்பட்டது. எனவே பொக்கிஷங்கள் எவ்வளவு என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். காரியத்தை ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை. தேவன் நம்மை அபிஷேகித்து ராஜாவாக மாற்றுகிறார். அபிஷேகம் பெற்ற மனிதனால்தான் பரலோகப் பொக்கிஷங்களைப் பெற முடியும். பரலோக பலன்களைப் பெறமுடியும்.
பொக்கிஷத்தைப் பெற தடை:
பாவம் என்ற தடையானது ஒரு மனிதனைக் குருட்டாட்டம் பிடிக்கச் செய்கிறது. அறியாமை என்னும் குருட்டுத்தனம், ஆத்மாவைப் பிடிக்கும் குருட்டுத்தனம், சரீரத்தைப் பிடிக்கும் குருட்டுத்தனம். ஒரு மனிதனை இந்த 3 குருட்டாட்டத்துக்குள் கொண்டு செல்கிறது. ஆனால் மனிதன் அறியாமை என்னும் குருட்டாட்டத்துக்குள் இருக்கிறபடியால் அவனுடைய ஆராய்ச்சியை வேறு பக்கம் வைத்துக் கொண்டிருக்கிறான். மார்த்தாளைப் பார்த்து இயேசு நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப் படுகிறாய் தேவையானது ஒன்றே என்று கூறினார். அந்த நல்ல பங்கு தான் இயேசு. இயேசு வீட்டுக்கு வந்தவுடன் மரியாள் அவருடைய பாதங்களில் அமர்ந்து இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டாள். மார்த்தாளோ வந்தவர்களுக்கு ஆகாரம் சமைத்தாள். ஒருநாள் எல்லாம் நம்மை விட்டுப் போகும். மனுஷன் வேஷமாகவே திரிகிறான். ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக் கொண்டு போகிறான் என்று அறியாமல் இருக்கிறான் என்று பிரசங்கி 4 : 8ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.
நாம் கற்றுக்கொண்டது:
மற்ற எல்லாவற்றையும் விட நேசிக்கத்தக்க விலையேறப்பெற்ற பொக்கிஷமான தேவனுடைய இராஜ்ஜியத்தில் பங்காக மாற முற்படுவோம். அதில் நாம் பங்கு பெறுவதைத் தடுத்து நிறுத்தும் அனைத்தையும் விட்டு இந்தப் பொக்கிஷமாகிய இராஜ்ஜியத்தை பெற்றுக் கொள்ள வாஞ்சிப்போம்.
மத்தேயு 6 : 19, 20 “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.”
“பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.”
என்று கூறியிருப்பதை பின்பற்றி பரலோகத்துக்குரிய பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க முற்படுவோம். தன்னைவிட்டு எடுபடாத பங்கான கிறிஸ்துவைத் தேடி தேவனுடைய பார்வை, பரிசுத்தம், தரிசனம், வல்லமை எனக்கு போதும் என்று நினைத்து பலத்த ஆசீர்வாதத்தை பெற முயற்சிப்போம். பூமிக்கடியில் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் மறைந்திருப்பதைப்போல கிறிஸ்துவும் உலகத்தாரின் பார்வையில் மறைந்திருக்கிறார். ஆனால் நாம் முழு இதயத்தோடு அவரைத்தேடி அந்தப் பொக்கிஷத்தைப் பெறுவோம்.