இந்த உவமையை லூக்கா 8 : 5 – 20லும், மத்தேயு 13 : 1 – 23லும், மாற்கு 4 : 1 – 20லும் காணலாம். இயேசு அநேக சத்தியங்களை உவமைகள் மூலம் வெளிப்படுத்தினார். ஜெப ஆலயத்தில் இயேசு அதிகமாகப் பிரசங்கம் பண்ணினார். ஆனால் யூதர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் உவமைகளாகப் பேச முடிவெடுத்தார். இந்த உவமையில் 4 நிலங்களைப் பற்றி கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
- வழியருகே உள்ள நிலம்,
- கற்பாறை நிலம்,
- முள்ளுள்ள நிலம்,
- நல்ல நிலம்.
இந்த நான்கு நிலங்களிலும் போடப்பட்ட விதை எவ்வாறு வளருகிறது என்பதையும், நான்கு விதமான உள்ளங்களையும் பற்றி இயேசு விளக்கிக் கூறுகிறார்.
வழியருகேயுள்ள நிலம்:
மத்தேயு 13 : 3, 4, 19 “அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.”
“அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.”
“ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.”
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
ஒரு விவசாயி விதைகளை விதைக்கும் போது, விதையானது பல இடங்களில் விழுகிறது. நமது இருதயமும் இதேபோல் வித்தியாசம் வித்தியாசமாக இருக்கிறது. சில விதை வழியருகே விழுந்தது. அந்த விதை விழுந்த நிலமானது உழப்படாத நிலம். அது வழிப்பாதையான நிலமாதலால் அந்த வழிப்பாதையில் ஜனங்கள் நடந்து நடந்து சென்றிருப்பார்கள். அதனால் அந்த மண் மிகவும் கடினமானதாக இருக்கும். எனவே விதை மண்ணுக்குள் செல்லவில்லை. மண்ணுக்குள் செல்லாத அந்த விதையை ஆகாயத்துப் பறவைகள் பொறுக்கிக் கொண்டு சென்றது. லூக்கா 8 : 11ல் விதையானது தேவனுடைய வசனம் என்று இயேசுவே கூறியிருக்கிறார். விதையை ஜீவனுள்ள வித்து என்று வேதம் கூறுகிறது. இதில் பறவைகள் என்பது பிசாசைக் குறிக்கிறது. இதேபோல் சிலர் பரலோகராஜ்யத்தில் வசனங்களைக் கேட்கிறார்கள் ஆனால் வீட்டிற்குப் போவதற்குள் அவர்களுடைய நிலமாகிய இருதயத்திலிருந்த வசனத்தைப் பிசாசானவன் எடுத்துப் போடுகிறான். எனவே அந்த வசனங்கள் அவர்கள் மனதில் பதியவில்லை. ஏன் அதை பிசாசானவன் எடுத்துப் போடுகிறான் என்றால் வசனமானது நமது இருதயத்தில் இருந்தால் அது முளைத்து விடும். அது முளைத்தால் நமது வாழ்க்கை மாறும். நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். எனவேதான் அதைப் பொறுக்கி விடுகிறான். நாம் அதைச் சாத்தான் பொறுக்குவதற்கு இடங்கொடாமல் நமது இதயத்தில் கொண்டுவரவேண்டும். வாயினாலே அறிக்கையிட வேண்டும். அதைத் தியானம் பண்ண வேண்டும். சிந்தையில் அதைக் கொண்டுபோய் அசை போடவேண்டும். வசனம் அப்பொழுதுதான் வளரும்.
எரேமியா 31 : 33 “அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
கர்த்தர் நமது உள்ளத்தில் வசனத்தை வைத்து, நமது இருதயத்தில் அதை எழுதுவதாகக் கூறுயதைப் பார்க்கிறோம். மோசேயிடம் கர்த்தர் கற்பலகைகளில் எழுதிக்கொடுத்தார். மோசே அதைத் தோல் சுருள்களில் எழுதிக்கொடுத்தார். தேவனோ அதை நமது இருதயத்தில் எழுதுகிறார்.
எஸ்ரா 7 : 10ல் “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.”
இதில் எஸ்றா வேதத்தை ஆராய தன்னுடைய இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான் என்று பார்க்கிறோம். வேதத்தை நேசித்தால் நமக்கு மிகுந்த சமாதானம் உண்டாகும். ஆதியிலே பொல்லாங்கன் காயினை தன்வசப்படுத்திக் கொண்டான். ஆனால் ஆபேலை தன் வசப்படுத்த முடியவில்லை. அதற்குக் காரணம் ஆபிரகாமிடமிருந்த இருந்த கொள்கைகளை ஆபேல் பின்பற்றினான். கானான் அவைகளைப் பின்பற்றவில்லை. சாத்தான் காயினைப் பிடித்துக் கொண்டான். எனவே நாம் வசனங்களை இருதயத்தில் இருத்தி அதை அசைபோட வாஞ்சிப்போம்.
ஆதியாகமம் 15 : 8 – 13ல் இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஆபிரகாம் தேவனிடம் “நான் கானானை சுதந்தரிப்பேன் என்பதை எதனால் அறிவேன்” என்று கேட்டான். அதற்குக் கர்த்தர் மூன்று வயது கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறா குஞ்சையும் தன்னிடத்தில் கொண்டு வரச் சொல்லி, அதைப் பலியிடக் கூறினார். கர்த்தர் கூறியதைப் போல ஆபிரகாம் அனைத்தையும் கொண்டுவந்து தேவனுக்குப் பலி செலுத்தினான். ஆனால் அந்தப் பலியைச் செலுத்த விடாதபடி பிசாசு பறவைகளை அந்தப் பலியின் மேல் இறங்கவைத்தான். ஆனால் ஆபிரகாம் அதைத் துரத்தின பின் சூரியன் அஸ்தமிக்கும் போது ஆபிரகாமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது. அப்பொழுது தேவன் பேசினார். சாத்தானும் நீங்கள் விசுவாசிப்பதையும், இரட்சிப்பதையும் தடை செய்வான்.
ஆதியாகமம் 15 : 13 “அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.” என்றார்
கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை போல அவர்கள் யோசேப்புக்குப் பின் 400 வருடங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்து, யோசேப்பின் நான்காம் தலைமுறையில் தான் திரும்பி வந்தனர். இதில் பறவைகள் அந்தப் பலியைச் செலுத்தி தேவனைப் பேச விடாதபடி தடைகளைக் கொண்டு வந்ததைப் பார்க்கிறோம்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
கற்பாறை நிலம்:
மத்தேயு 13 : 5, 6 20, 21 “சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.”
“வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.”
“கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;”
“ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.”
விவசாயி விதையை விதைக்கும் பொழுது சில விதை மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது. இந்த கற்பாறையின் மேல் பகுதியில் மட்டும்தான் மண் இருக்கும். எனவே அந்த விதையானது வேர் விடாதபடி மண் ஆழமாக இல்லாததால் சீக்கிரமாய் முளைக்கும், ஆனால் கடுமையான உஷ்ணத்தினால் அது கருகிப் போய்விடும். வேர் ஆழமாக இல்லாததினால் உலர்ந்துபோகும். இது எதைக் காட்டுகிறதென்றால் சிலர் வசனத்தை நன்றாக கேட்பார்கள். சந்தோஷமாக அதை ஏற்றுக் கொள்வார்கள். உடனடியாக நல்ல தீர்மானமும் எடுக்கின்றனர். ஆண்டவருக்குத் தம்மை ஒப்புக்கொடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உபத்திரமும், சோதனையும் வந்தவுடன் கொஞ்சநாளுக்குள் அவர்கள் பின் மாற்றத்திற்குள் போய்விடுகிறார்கள். ஆவிக்குரிய ஜீவியத்தின் வேர் அவர்களுக்குள் ஆழமாகப் போகாததால் பின்னடைகின்றனர்.
ஜனங்கள் இயேசுவுக்குப் பின்னால் சென்றால் என் குடும்பம் என்னை ஏற்றுக் கொள்ளுமோ என்ற பயத்தினாலும், ஜாதிப் பிரச்சினையினாலும் இயேசுவுக்குள் வரப் பயப்படுவார்கள். பவுல் பிலிப்பியர் 1 : 30 ல் “உங்களுக்குப் போராட்டம் உண்டு” என்று எழுதுகிறார். மேலும் அவர் அப்போஸ்தலர் 14 : 22 ல் “நாம் அனேக உபத்திரவங்களின் வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று கூறினார்.” தற்காலத்தில் அந்த உபத்திரங்கள் நமக்குத் துன்பத்தைத் தந்தாலும் பிற்காலத்தில் அது நமக்குச் சந்தோஷத்தை உண்டாக்கும். நாம் துன்பத்தைக் கண்டு பயந்தாலும், வெட்கப்பட்டாலும் வேத வசனமானது நமக்குள் முளைக்காது, வேர் கொள்ளாது.
இதற்கு இஸ்ரவேல் ஜனங்களை உதாரணமாகப் பார்க்கலாம். யாத்திராகமம் 14ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வரும்போது செங்கடலானது அவர்கள் செல்ல முடியாதபடி தடையாக இருந்தது. ஆனால் தேவன் மோசேயின் மூலமாக செங்கடலை வரண்டு போகப் பண்ணி, ஜனங்கள் அதைக் கடக்கும் அற்புதத்தைச் செய்தார். எனவே ஜனங்கள் யாத்திராகமம் பதினைந்தாம் அதிகாரத்தில் மிகுந்த சந்தோஷத்துடன் கர்த்தரை நோக்கி துதித்துப் பாடினார்கள். ஆனால் 15 : 22ல் அவர்களுக்குத் தண்ணீர் இல்லை என்றவுடன் முறுமுறுத்தனர். செங்கடலைப் பிளந்த தேவனால் நமக்குத் தண்ணீரையும் கொடுக்க முடியும் என்ற எண்ணம் அவர்களுக்குள் வரவில்லை. ஆனால் மோசே மன்றாடிய பின் தேவன் அவர்களுக்காக இரங்கி 15 : 27ல் ஏலிமில் 12 நீரூற்றுகளைக் காட்டினார்.
முள்ளுள்ள நிலம்:
மத்தேயு 13 : 7, 22 “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.”
“முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.”
இந்த விவசாயி விதையை விதைக்கும் போது சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது விழுந்தபின் நன்றாக முளைத்தது ஆனால் அந்த நிலத்தில் உள்ள முட்கள் அந்த செடியை நெருக்கியதால் அவைகளால் வளர முடியவில்லை அதேபோல் 1 யோவான் 2 16ல் கூறப்பட்டதைப் போல உலகத்தின் கவலைகளினாலும், ஐஸ்வரியத்தின் மயக்கத்தினாலும் அவைகளால் பலன் கொடுக்க முடியவில்லை. கிறிஸ்தவர்கள் வளராமல் இருப்பதற்குக் காரணம் கவலையும் அவர்களுடைய எதிர்காலத்தைக் குறித்த பயமும் தான் காரணம். பணமானது தேவனுக்கு எதிரியல்ல ஐசுவரியவானாக மாற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். எந்த வகையிலாவது பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் தவறு. அந்தப் பணத்தின் மேல், அந்தப் பொருள்களின் மேல் ஆசை வைப்பது தான் தவறு. அதிகமான ஆசை வருவதினால்தான் கஷ்டப்படுகிறார்கள். பொருட்களின் மேலும் பணத்தின் மேலும் வைக்கிற ஆசைதான் பாவம். பணம் தீமைக்கு வேர் கிடையாது. அதன் மேல் வைக்கிற ஆசைதான் தீமைக்கு வேர் ( 1தீமோத்தேயு 6 : 10). Give the verse நாளை என்ன செய்வோம் என்று கவலைப்படத் தேவையில்லை. நாம் தேவனுடைய பிள்ளைகள். நமக்காகத் தேவன் கவலைப்படுவார். அதனால் தான் இயேசு பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள் என்று கூறினார்.
அதேபோல் ஒரு ஐசுவரியவான் இயேசுவிடம் நித்தியஜீவனைச் சுதந்தரிக்க தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். அதற்கு இயேசு உனக்குண்டானவைகளை விற்று, தரித்தருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும் அதன் பின் தன்னைப் பின்பற்றி வா என்றார். ஆனால் அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்ததால் இயேசுவின் வார்த்தையைக் கேட்டு துக்கமாக அங்கிருந்து போய் விட்டான். அப்பொழுது இயேசு மத்தேயு 19 : 24ல் ஐஸ்வரியவான்கள் பரலோகத்தில் பிரவேசிப்பது மிகவும் அரிது என்றார்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
நல்ல நிலம்:
மத்தேயு 13 : 8, 23 “சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.”
“நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.”
விவசாயி விதைத்த விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது. இந்த நிலம் உழப்பட்ட நிலம், பரிசுத்த ஆவியின் மூலமாக மழையைப் பெற்றுக் கொள்ளுகின்ற நிலம். அது 100 ஆகவும் 60 ஆகவும் 30 ஆகவும் பலன் தந்தது. நல்ல இருதயம் உள்ளவர்கள் வசனத்தைக் கேட்கிறார்கள் அதைக் குறித்த உணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள். உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடையும். இருதயத்தில் அதைக் காத்துக்கொண்டு பொறுமையோடு பலன் கொடுக்கிறார்கள் என்கிறார். தேவன் நமக்கு நூறு மடங்கு பலனைத் தர வேண்டுமானால் கர்த்தருடைய வசனத்தைக் கேட்டு, தியானித்து, அதை நம்முடைய வாழ்க்கையில் அப்பியாசப்படுத்த வேண்டும். இயேசுவின் வார்த்தை சமுதாயத்தை மாற்றக் கூடியதாக உள்ளது. விதைக்கிற மனுஷகுமாரன் இயேசு. ஆவியானவர் வசனங்களை ஆவிக்குரிய வசனங்களை நம்முடைய இருதயத்தில் வைக்கிறார். கலாத்தியர் 5 : 22 ல் 9 விதமான கனிகளைப் பார்க்கிறோம். ஒரு விவசாயி விதையை எந்த இனத்திலிருந்து எடுத்து விதைக்கிறானோ அந்த இனத்துக்குரிய காய்களும், பழங்களும் தான் வரும். ஆனால் தேவன் கொடுத்த வசனம் ஒன்பது விதமான கனிகளைக் கொடுக்கிறது. விதை போட்ட உடன் எப்போது காய்க்கும், அது எப்படிப்பட்ட கனியைத் தரும் என்று பார்த்துக்கொண்டே இருப்போம். கிறிஸ்துவுக்குள்ளாகக் கொடுக்கும் கனி நீதியால் நிறைந்த கனியாக இருக்கும். இந்த நல்ல நிலத்தில் விதைத்த விதையும் 100 ஆகவும் 60 ஆகவும் 30 ஆகவும் மாறுகிறது. ஏன் இந்தப் பாகுபாடு 30 ஆனாலும் 60 ஆனாலும் 100 ஆனாலும் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள் தான். ஆனாலும் வரங்களும் கனிகளும் வித்தியாசப்படும். தாலந்துகள், ஆசீர்வாதங்களும் கூட வேறுபடும். விதைகளில் எந்த பிரச்சனையும் இல்லை. இருதயத்தைப் பொறுத்துதான் வசனம் உள்ளே புகுந்து ஆசி பெற முடியும். அந்த நிலத்துக்கு அதிபதியானவன் நூறு மடங்கு பலனைப் பெற பாத்திரவானாய் இருந்தான்.
கற்றுக்கொள்ளும் பாடம்:
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கர்த்தரையே சார்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது அவர் முன்மாரியும், பின்மாரியும் நமக்குப் பொழியப் பண்ணுவார். அப்பொழுது நிலத்தில் விதைக்கும் நம்முடைய விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார். இதைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி,
ஏசாயா 30 : 23 அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும். “
ஏசாயா 55 : 10, 11 ல் “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,”
“அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”
என்றார். எனவே எப்பொழுதும் நாம் கர்த்தரின் வார்த்தைகளையும், கட்டளைகளையும் கைக்கொண்டு கர்த்தரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெறுவோம். பிதாவாகிய தேவன் 2000 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய ஒரே குமாரனை விதைக்கிறவராக அனுப்பினார். குமாரனும் தன்னுடைய ரத்தத்தைத் தாராளமாய் விதைத்தார். இந்த உலகத்தில் இயேசு பிதாவின் வார்த்தைகளை நல்லவர்களுக்கு மட்டும் அறிவிக்காமல் பாவிகளுக்கும், கெட்டவர்களும், படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வேறுபாடு இல்லாமல், அறிவித்தார். அதேபோல் நாமும் படித்தவர்களுக்கும், ஐஸ்வரியவான்களுக்கும், சன்மார்க்கருக்கும் போய் மட்டும் சுவிசேஷத்தைச் சொல்லாமல் ஒதுக்கப்பட்டவர்களிடமும், கைவிடப்பட்டவர்களிடமும், ஏழைகளிடமும், திக்கற்றவர்களிடமும் எல்லா மக்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும். இயேசு பிறந்தவுடன் தேவதூதன் “எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறியது போல இந்த நற்செய்தியை நாம் எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும். அது இன்றுவரை கோடிக்கணக்கான மக்கள் இரட்சிக்கப்பட வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.
சீஷர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக, பாமர மக்களாக, மீன் பிடிக்கிறவர்களாக, வரி வசூலிப்பவர்களாகத் தான் இருந்தனர். அவர்கள் தான் உலகத்தைக் கலக்குகிறவர்களாக மாறினார்கள். அதே போல் எவரும் படிப்பில்லையே,, தைரியம் இல்லையே என்று நினைக்காமல் தேவனுடைய ராஜ்யம் கட்டப்படும் பணியில் இறங்கி பாடுபடுவோம். நாமும் நாம் இருக்கிற பட்டணத்திலே, சுற்றியிருக்கிற கிராமங்களிலே தாராளமாக சுவிசேஷ விதைகளை விதைப்போம். ஆத்மாக்களை அறுவடை செய்வோம். வீட்டுக் கூட்டங்களை ஆரம்பிப்போம். மரணத்தை ஜெயித்தவர் நமக்குள் இருக்கிறார். நம்மை கொண்டு திரளான ஜனங்களைக் கொண்டு வருவார். உன்னுடைய வாழ்க்கை பாவத்தில் அடிமையாய் இருந்த நேரத்தில், நாம் இழந்துவிட்ட சக்தி, தாலந்து அனைத்தையும் நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்போது, நமது உள்ளத்தை நல்ல நிலமாக தேவனிடம் அர்ப்பணிக்கும் போது, நம்மிடத்தில் மீதம் என்ன இருக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஆண்டவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார். பாவத்தில் விளைவுகள் நம்மை அணுகாதபடி நல்ல நிலமாக நமது இருதயத்தை தேவனிடத்தில் கொடுத்தால் தேவன் அதில் 100 மடங்கு ஆசீர்வாதத்தைத் தருவார். ஆமென்.