Menu Close

2 கொரிந்தியர் 1 : 3; 2 Corinthians 1 : 3 in Tamil

“நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்” (2 கொரிந்தியர் 1:3). 

இயேசுவே, நீரே என்னுடைய ஆறுதலின் தேவன்! நீரே என்னுடைய இரக்கங்களின் தேவன்! நீரே என்னை ஆற்றித் தேற்றுகிறவர்! நீரே உம்முடைய பொற்கரத்தினால் என்னுடைய கண்ணீர் யாவையும் தொட்டுத் துடைக்கிறவர்!

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார், “தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற, ஆறுதலினாலே எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.” (2 கொரிந்தியர் 1:4).

பல சூழ்நிலைகளில் நாம் ஆறுதலற்றவர்களாய் திகைக்கிறோம். மற்றவர்கள் எவ்வளவுதான் ஆறுதல் படுத்தினாலும் நம்முடைய உள்ளம் அந்த ஆறுதலுக்கு இடங்கொடாமல் தேம்பித் திகைத்துக் கொண்டேயிருக்கிறது. அதுபோலவே மற்றவர்களையும் நாம் சில சந்தர்ப்பங்களிலும், சூழ்நிலைகளிலும் ஆறுதல் படுத்த முடியாமல், ஆறுதல்படுத்த வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்: “தேவனே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.” தேவபிள்ளைகளே, இந்த அருமையான வேளையிலும் கர்த்தரே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் என்பதை மறந்து போகாதிருங்கள்.

வனாந்தரத்தில் ஆகாரைப் பாருங்கள். அவள் ஆறுதலற்ற நிலையிலே தன்னந் தனியளாய்த் தவிக்கிறாள். அவளுடைய பிள்ளை தாகத்தினால் சாகப்போகிறது. அவள் கைவிடப்பட்டவள். எஜமாட்டியால் துரத்திவிடப்பட்டவள். புகழ் பெற்ற ஆபிரகாம் அவளை அனுப்பிவைத்தபோது அவளுக்குக் கொடுத்தனுப் பியதெல்லாம் ஒரு துருத்தித் தண்ணீரும், சில அப்பங்களும்தான். துருத்தியிலுள்ள தண்ணீரும் அப்பங்களும் செலவழிந்தபோது அவளோ தத்தளித்தாள். வனாந்தரத்தில் அவள் எங்கே செல்வாள்? பிள்ளையை எங்கே கொண்டு போவாள்? ஆறுதலற்ற நிலையில் அவள் சத்தமிட்டு அழுதாள்.

என் அருமை ஆண்டவர் அவளை கைவிடவில்லை. அடிமைப் பெண்தானே என்று அலட்சியம் செய்யவில்லை. கர்த்தர் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவள் தண்ணீர்த் துரவைக் கண்டு துருத்தியிலே தண்ணீர் நிரப்பி பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். வேதம் சொல்கிறது: “தேவன் பிள்ளையுடனே இருந்தார்” (ஆதி. 21:20).

ஆறுதலற்ற அன்னாளுக்கு “ஆறுதலின் மகனாக” சாமுவேலைக் கர்த்தர் கொடுக்கவில்லையா? விசுவாசத்தோடு காத்திருந்த சாராளுக்குக் கர்த்தர், “புன்னகையான” ஈசாக்கை கொடுத்து ஆறுதல் படுத்தவில்லையா? தேவபிள்ளை களே, அற்புதங்களைச் செய்கிற தேவனுடைய கரம் இப்பொழுதே உங்களை ஆறுதல்படுத்துகிறது.

கர்த்தர் உங்களை ஆறுதல் படுத்துகிறவர் மட்டுமல்ல, அவருடைய அருமையான வார்த்தைகளும், வாக்குத்தத்தங்களும், நம்மை மிகவும் ஆறுதல் படுத்துகின்றன. நான் ஆறுதலற்ற நேரங்களில் எல்லாம் ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் பல அதிகாரங்களைத் திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு. ஆ! அந்த வார்த்தைகள் எல்லாம் எவ்வளவு ஆறுதலானவை!

Related Posts