Menu Close

யாத்திராகமம் 3 : 14 – Exodus 3 : 14 in Tamil

“அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்” (யாத்திராகமம் 3:14). 

நம்முடைய ஆண்டவருடைய பெயர், “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்பதாகும். ஒரு ஆச்சரியமான பெயர். யாருக்கும் ஒருபோதும் வைத்திராத ஒரு பெயர். இதனுடைய அர்த்தம் என்ன? இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பதற்கு மாறாதவராக இருக்கிறார் என்பது அர்த்தமாகும். அவர் இருந்தவர், இருக்கிறவர், வரப்போகிறவர். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். நம்முடைய முற்பிதாக்களோடும் இருந்தவர் நம்மோடும் இருக்கிறார். கர்த்தருடைய நாமம் எவ்வளவு அதிசயமானது!

“இருக்கிறேன்” என்று சொல்லுகிற ஆண்டவர் பழைய ஏற்பாட்டு புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களோடு இருந்து அவர்களை ஆசீர்வதித்தது போல நம்மோடும் இருக்கிறார். அவருடைய அன்பு, காருண்யம், மனதுருக்கத்தை இன்றும் அளவில்லாமல் ருசிக்கிறோம். அவர் நம்மோடு இருப்பதுதான் நம்முடைய பெலன், நம்முடைய சத்துவம். அவர் நம்மோடு இருப்பதுதான் நமக்கு மிகுந்த மனமகிழ்ச்சி, சந்தோஷம். அவர் உங்களோடு இருந்தால் நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். ஐசுவரியமும், கனமும், மகிமையும் உண்டாகும்.

கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் காரிய சித்தியுள்ளவனானான். கர்த்தர் அவனோடு இருக்கிறார் என்றும் அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும் அவன் எஜமான் கண்டார் (ஆதி. 39:2,3). தேவனுடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களோடு இருக்கிறாரா? என்பதை அவ்வப்போது ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள். யோசேப்போடு இருந்து அவனை காரிய சித்தியுள்ளவனாய் மாற்றினவர் நிச்சயமாகவே உங்களோடு இருப்பார். இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று வாக்குப்பண்ணினவர் பட்சபாதமுள்ள தேவன் அல்ல. தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோம.8:31).

மட்டுமல்ல, கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன் மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படிச் செய்தார்” (ஆதி.39:21). எனக்கு உதவி செய்ய யாரும் இல்லையே, எனக்கு தயவு பண்ணுவார் ஒருவருமில்லையே, என்னை விசாரிப்பார் என்மேல் அக்கறை கொள்ளுவார் ஒருவருமேயில்லையே என்று ஒருவேளை நீங்கள் ஏங்கலாம். இருக்கிறவராகவே இருக்கிறவர் அநேக பெரியவர்கள் கண்களிலே உங்களுக்கு – தயவு கிடைக்கச் செய்வார்.

கர்த்தரில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்று யோசேப்பு அறிந்து மன மகிழ்ச்சியுடையவராக இருந்தார். இதைக்கண்ட கர்த்தர் யோசேப்பின்மேல் கிருபை பாராட்டினார். அந்தச் சிறைச்சாலையிலும் யோசேப்பு தேவனையே உயர்த்திப் பேசினார் (ஆதி.40:8). ஆகவே கர்த்தர் யோசேப்பை நேரடியாக எகிப்தின் அதிபதியாக கர்த்தர் உயர்த்தி மேன்மைப்படுத்தினார். இருக்கிறவராகவே இருக்கிறவர் உங்களை நிச்சய மாகவே உயர்த்துவார். அவர் ஏற்றக் காலத்தில் உங்களை உயர்த்தும்படி அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி இருங்கள்.

Related Posts