அருமையான தேவபிள்ளைகளே, நம்முடைய வாழ்வில் எத்தனையோ போராட்டங்கள் தீர்க்க முடியாதவை. எத்தனையோ பிரச்சனைகள் முன்னேறிச் செல்ல முடியாதவை. இஸ்ரவேல் ஜனங்களுக்கு எப்படிக் கர்த்தர் தமது வார்த்தையின் மூலம் தடைகளையும், போராட்டங்களையும் உடைத்தார் எனப் பார்க்கலாம்.
தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் படுகிற உபத்திரவமும், வேதனையும், அவர்கள் இடுகிற கூக்குரலும் கர்த்தரின் சந்நிதியில் எட்டியது. அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுதலையாக்கி கானானியரும், ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும், பெர்சியரும், ஏவியரும் இருக்கிற இடமாகிய பாலும், தேனும் ஓடுகிற கானான் தேசத்துக்கு அழைத்துச் செல்ல மோசேயைத் தேவன் பயன்படுத்தினார்.
மோசே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துச் செல்லும் வழியில், சிவந்த சமுத்திரம் தடையாக இருந்தது. முன்னால் சிவந்த சமுத்திரமும், பின்னால் பார்வோனின் சேனைகளும், ஜனங்களை மரண பயத்திற்கு அழைத்துச் சென்றது. ஜனங்கள் மோசேயைப் பார்த்து குமுறினர். “எகிப்தில் எங்களுக்குப் பிரேதக்குழி இல்லை என்றா இங்கு கொண்டு வந்தீர்” என்று கதறினர். “நாங்கள் வனாந்திரத்தில் சாவதை விட எகிப்தியருக்கு வேலை பார்ப்பது நலமாய் இருக்குமே” என நொந்து போயினர். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமையாய் வாழ்ந்து வந்ததால் யாரும் யுத்த வீரர்கள் அல்ல. அவர்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லை. ஆனால் மோசேக்கோ எந்த பயமும் இல்லை.
ஏனெனில் மோசேக்குத் தெரியும். “அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்.” (2நாளா 32:8) என்பது தான். இதே போல் உங்கள் குடும்பத்திலும், உங்கள் வாழ்க்கையிலும் முன்னேற முடியாதபடி தடைகள் வருகிறது எனக் கலங்கித் தவிக்கிறீர்களா? வேலை பார்க்கும் இடத்தில் முன்னேற முடியாதபடி சிலர் தடையாக இருக்கிறார்கள். எனக் கலங்குகிறீர்களா? கலங்கத் தேவையில்லை. உங்களுக்காகக் கர்த்தர் யுத்தம் பண்ணுவார். கர்த்தரின் கரம் உங்களைக் காக்கும். கர்த்தரின் வார்த்தைகள் உங்களை ஆறுதல் படுத்தும்.
மோசே ஜனங்களை நோக்கி என்ன கூறினார் என்று பாருங்கள். “…பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்று கொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.” (யாத் 14:13) “கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.” (யாத் 14:14) இதில் மோசே ஜனங்களிடம் 1. “பயப்படாதிருங்கள்” என்கிறார். 2. “நீங்கள் நின்று கொண்டிருங்கள். ஒன்றும் பண்ண வேண்டாம்” என்கிறார். 3. “இன்றைக்கு ஆண்டவர் எப்படி உங்களை இரட்சிக்கப் போகிறார் என்று பாருங்கள்” என்கிறார். 4. “இன்றைக்கு உங்களுக்குப் பின்னால் வரும் எதிரிகளை இனி நீங்கள் என்றைக்குமே பார்க்க முடியாமல் கர்த்தர் பண்ணுவார்” என்கிறார்.
யாத் 14 :14ல் “உங்களுக்காகக் கர்த்தரே நின்று யுத்தம் பண்ணப் போகிறார். நீங்கள் சும்மா நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருங்கள்” என்று ஆறுதல் தரும் வார்த்தைகளை மோசே ஜனங்களிடம் கூறுகிறார். மோசேக்குக், கர்த்தரிடம் எத்தனை விசுவாசம், எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். பின்னால் வரும் சேனையைப் பார்த்து சிறிதும் கலங்காமல் நம்பிக்கையூட்டும் ஜீவ வார்த்தைகளைக் கூறுகிறார். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி “…புறப்பட்டு போங்கள்” என்கிறார் (யாத் 14:15). “நீ உன் கோலை ஓங்கி உன் கையை, சமுத்திரத்தின் மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்து விடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போவார்கள்.” (யாத் 14:16) என்று கட்டளை கொடுக்கிறார். கர்த்தரின் வார்த்தையில் எத்தனை வல்லமை பாருங்கள். ஜனங்கள் பயந்து நின்று கொண்டிருப்பதைக் கர்த்தரின் கண்கள் நோக்கியதால்” புறப்பட்டுப் போங்கள் நான் இருக்கிறேன்” எனக் கட்டளை கொடுக்கிறார்.
அடுத்தாற் போல் “உன் கையில் இருக்கும் கோலை சமுத்திரத்தின் மேல் நீட்டு அப்பொழுது சமுத்திரம் பிளக்கும்” என்று ஆணையிடுகிறார். அது மட்டுமல்ல சமுத்திரம் பிளக்கப்படும் போது ஜனங்களும், ஆடு, மாடுகளும் நடந்து செல்வதற்கு ஏற்றபடி கர்த்தரின் இரக்கத்தால் அந்த இடம் வெட்டாந்தரையாகும் என்கிறார். இதில் முதலில் மக்களுக்குத் தைரியம் கொடுத்ததைப் பார்க்கிறோம். இரண்டாவது அதிசயம் நடக்க வைப்பதைக் காண்கிறோம் மூன்றாவது அந்த இடத்தை மக்களுக்கு ஏற்றபடி ஆயத்தப் படுத்தியதைப் பார்க்கிறோம்.
மோசே கர்த்தரின் வார்ததைக்குக் கீழ்படிந்து செயல்பட ஆரம்பிக்கும் போது தேவ தூதனானவரும், மேகஸ்தம்பமும் என்ன செய்ததெனில் அப்பொழுது “இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னால் நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது” (யாத் 14:19) ஏனெனில் பின்னால் வருகின்ற பார்வோனின் சேனைகள், இஸ்ரவேல் ஜனங்களை நெருங்க விடாதபடி, கர்த்தரின் தூதரானவரும், மேகஸ்தம்பமும் காத்தனர்.
சூரியனுக்கும், ஜனங்களுக்கும் நடுவிலே மேக ஸ்தம்பம் வந்து நிற்கிறதைப் போல, கர்த்தராகிய தேவனுக்கும், பாவமுள்ள மனிதனுக்கும் மத்தியிலே இறங்கி வந்து, நம்முடைய பாவங்களை இயேசு தானே சுமந்து, நமக்காகச் சிலுவையில் அறையப்பட்டார். தமது திரு இரத்தத்தை சிந்தினார். மேகஸ்தம்பம் எப்படி இஸ்ரவேலருக்குக் குளிர்ச்சியான நிழலைக் கொடுத்ததோ அதேபோல் இயேசு நமக்குப் பாவமன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் நம்மேல் பொழியப் பண்ணினார். அவரை நோக்கிப் பாருங்கள் பலனைப் பெறுவீர்கள்.
“மோசே தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டு போகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்து போயிற்று” (யாத் 14:21) மோசே தன் கரத்தை தேவனின் நாமத்தால் நீட்டியவுடன் கர்த்தர் அந்த இடத்தில் பலத்த காற்றை கட்டளையிட்டார். காற்றின் வடிவத்தில் வந்த தேவன், 1) ஜலத்தை பிளக்கப் பண்ணினார் 2) ஜலத்தை பிரிந்து போகப் பண்ணினார் 3) சமுத்திரம் ஒதுங்கும்படி செய்தார் 4) அந்த இடத்தை வறண்டு போகப் பண்ணினார்.
எப்படிப்பட்ட அற்புதம் பாருங்கள். மின் விசிறிக் காற்றைத்தான் நம்மால் வரவழைக்க முடியுமே தவிர, கீழ்க்காற்றை எந்த மனித சக்தியாலும் வரவழைக்க முடியாது. அதுவும் எப்படிப்பட்ட பலத்த காற்று என்று சிந்தித்துப் பாருங்கள் சமுத்திரத்தை ஒதுங்க வைக்கும் தேவ காற்று. ஜலத்தை பிளக்க வைக்கும் தேவகாற்று. சிருஷ்டிப்பிலிருந்து தண்ணீர் நின்ற இடத்தை வெட்டாந்தரையாக்கும் தேவ காற்று. அப்படிப்பட்ட தேவ காற்று உங்கள் மேல் வீசும்படி ஜெபியுங்கள்.
இஸ்ரவேலர் கர்த்தரின் அந்த வல்லமையால், செங்கடலின் நடுவாக வெட்டாந்தரையாக இருந்த அந்த இடத்தின் வழியாக கடந்து போனார்கள். அதுமட்டுமல்ல தேவன் அவர்களுடைய இரண்டு பக்கங்களிலும் ஜலத்தை மதிலாக நிறுத்தினார். ஜலம் மதிவாக நிற்பது என்பது யாரும் இதுவரை நடத்தாத , நடத்த முடியாத ஒரு அற்புதம். அதைத் தேவன் நடத்திக் காட்டினார். (யாத் 14:22)
மேலும் கர்த்தர் அக்கினியும், மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவைகளைக் கலங்கடித்தார். இரதங்களிலுள்ள உருளைகளைக் கழன்று போகப் பண்ணினார். எகிப்தியர் ஒவ்வொருவரும், “..கர்த்தர் அவர்களுக்குத் துணை நின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறார் என்றார்கள்” (யாத் 14:25) என்று கூறி ஓடிப்போனதைப் பார்க்கிறோம். உடனே மோசே தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டினான். சமுத்திரம் திரும்பப் பலமாய் வந்தது.
கர்த்தர் எகிப்தியரைக் கடலின் நடுவே கவிழ்த்துப் போட்டார். அவர்கள் சேனைகள் அனைத்தையும் மூடிப்போட்டார். அவர்களில் ஒருவர்கூட தப்பவில்லை. “இன்றைக்குக் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்” என்ற கர்த்தரின் வார்த்தை நிறைவேறிற்று. எனக்கன்பான சகோதர சகோதரிகளே இஸ்ரவேல் ஜனங்களைக் காத்த தேவனின் வல்லமை உங்களையும் காக்கும். நீங்கள் செய்ய வேண்டியது. (சங் 50:15)ல் கூறியது போல,
“ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்”
கர்த்தரை நோக்கிக் கூப்பிட வேண்டும். நீங்கள் கூப்பிட்டவுடன் தேவன் தமது தூதர்களை அனுப்பி உங்களைக் காப்பாற்றுவார். தேவ மனிதர்களை அனுப்பிக் காப்பாற்றுவார். இயற்கையின் மூலம் காப்பாற்றுவார். வாக்குத்தத்தம் பண்ணின கர்த்தர் உங்களோடிருக்கிறார் சிங்கக் கெபியிலிருந்தும் தப்புவித்த யூதசிங்கம் உங்களோடிருக்கிறார். நெறிஞ்சிமுள் போன்ற பகைவர்கள் வந்தாலும், லீலி புஷ்பமான சாரோனின் ரோஜா உங்களைக் காப்பாற்றுவார். ஏனெனில் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம்
“நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடிருப்பேன். நீ ஆறுகளைக் கடக்கும் போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜ்வாலை உன் பேரில் பற்றாது” (ஏசா 43:2)
என்ற வேதவசனத்தை திரும்ப திரும்ப உங்கள் வாயினால் அறிக்கையிடுங்கள். தேவன் உங்களைக் காக்க அந்த நிமிடமே விரைந்தோடி வருவார்.
ஒரு சிறுகதையை உங்களுக்கு கூற விரும்புறேன் நெப்போலியன் ஒரு தடவை ஒரு கிராமத்தைக் கைப்பற்ற தமது போர்வீரர்களை அனுப்பி வைத்தான். கிராமத்தைக் கைப்பற்றியதும், தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டு, ஒருகுன்றின் மேல் காத்திருந்தான். நேரம் இருட்டும் பொழுது, குதிரைவீரன் வேகமாக வந்து, நெப்போலியனை வணங்கி “ஐயா போரில் வெற்றி பெற்று விட்டோம்” என்றான். அவனுடைய வார்த்தைகளில் பெருமிதம் காணப்பட்டது. மறுவினாடி அவன் வாயிலிருந்து இரத்தம் வழிந்தது. அந்த வீரன் தன்னைத் தாக்கிய குண்டுடன் ஓடி வந்திருந்தான். அதைக் கண்டு திடுக்கிட்ட நெப்போலியன் “உனக்கு பெரிய காயம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்” என்றான். இல்லை நான் கொல்லப்பட்டு விட்டேன் என்று கூறி தன் உயிரை விட்டான். அவனுடைய ஒரே இலக்கு தனது தலைவனிடம் போரில் பெற்ற வெற்றியைக் கூற வேண்டும் என்பது தான்.
அருமையான தேவனுடைய பிள்ளையே, நீ கடந்து செல்லும் பாதை எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, பாடுகளையும், கஷ்டங்களையும், உபத்திரவங்களையும் நோக்கிப் பாராமல், முடிவில் நீ பெறப் போகிற ஆசீர்வாதங்களையும், மகிமையையும், சந்தோஷத்தையும் நோக்கிப் பார்த்து, அந்த வீரனின் இலக்கைப் போல, தேவன் உங்களை அழைத்த இலக்கை நோக்கி, உங்கள் பணியைத் தொடருங்கள் (பிலி 3:14). ஆமென்