யூதா யார், யாருக்காக எழுதினார்:
யூதா இந்த புத்தகத்தில் தன்னை அறிமுகப்படுத்தும் பொழுது இயேசுவின் ஊழியக்காரன் என்றும் யாக்கோபின் சகோதரன் என்றும் தாழ்மையாகத் தன்னை அறிமுகப்படுத்தியதைக் காணலாம். யூதாவும், யாக்கோபும் இயேசுவின் சகோதரர்கள் என்பதை மாற் 6 : 1 – 3லும், கலா 1 : 19 லும் காணலாம். மேலும் யூதா சீஷர்களின் பட்டியலில் உள்ளவர். இதை பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கும், இயேசு கிறிஸ்துவினால் காக்கப்பட்டு அழைக்கப்பட்டவர்களுக்கும் எழுதுகிறார். இதில் பிதா தான் அழைப்பவர்களைப் பரிசுத்தப் படுத்துகிறார். உலகத்திலிருந்து பிரித்தெடுக்கிறார். இயேசு எல்லோருக்கும் பாதுகாப்பளித்தாலும் தனக்கு ஊழியம் செய்பவர்களுக்கு அதிகமாகப் பாதுகாப்பு அளிக்கிறார். (யூதா 1, 2)
அழைக்கப்பட்டவர்களுக்கு ஆசிகள்:
“உங்களுக்கு இரக்கமும், சமாதானமும், அன்பும் பெருகக்கடவது” என்கிறார். இதில் கர்த்தர் காட்டிய இரக்கம் பெற வேண்டுமென்றால், தாவீது பத்சேபாளிடம் தவறு செய்தபோது கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பி அவருக்கு உணர்த்தி தாவீதை அதிலிருந்து விடுதலை கொடுக்க இரக்கம் பாராட்டியதைப் போல, அழைக்கப்பட்டவர்களுக்கு இரக்கம் தேவை. ஊழியர்களுக்கு சமாதானம் மிகவும் தேவை என்பதால் அதைப் பெற வேண்டும் என்கிறார். எந்தவித எதிர்பார்ப்பும் பிரதி உபகாரமும் கருதாத அன்பு பெருக வேண்டும் என்கிறார். உதாரணமாக பேதுரு இயேசுவை தனக்குத் தெரியாது என்று மறுதலித்து, சபித்து, சத்தியம் பண்ணிய பின்பும் அவரிடம் “நீ என்னை நேசிக்கிறாயா” என்று மூன்று தடவை கேட்டு, அவர் ஆமாம் என்று கூறியவுடன் தன் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்று பொறுப்புகளை பேதுருவிடம் ஒப்படைத்ததைப் பார்க்கிறோம். இது பேதுருவிடம் இயேசு காட்டிய அன்பு. (யூதா 2)
பேசவேண்டியது, போராட வேண்டியது:
யூதா இரட்சிப்பைக் குறித்து அதிகமாகப் பேசவேண்டும் என்றும், விசுவாசத்திற்காகத் தைரியமாகப் போராட வேண்டும் என்றும் கூறுகிறார். எதிலெல்லாம் போராட்டம் உண்டு என்று பவுல் எபே 6 ; 12 ல் கூறுகிறார். மாம்சத்தோடும், இரத்தத்தோடும், துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் என்கிறார். யூதா இவைகள் அனைத்தையும் எதிர்க்க நாம் போராடி ஜெபிக்க வேண்டும் என்கிறார். (யூதா 3)
ஆக்கினை அடைகிறவர்கள்:
பக்தியற்ற சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள் என்கிறார். இவர்கள் காமவிகாரத்தைக்கேதுவாக தேவனுடைய கிருபையைப் புரட்டுகின்றனர் என்றும், இவர் பிதாவாகிய தேவனையும், குமாரனாகிய இயேசுவையும் மறுதலிக்கிறார்கள் என்றும், இப்படிப்பட்டவர்கள் பூர்வத்தில் எழுதியிருக்கிறபடி ஆக்கினை அடைவார்கள் என்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக எகிப்தில் இருக்கும் போது அன்னிய தெய்வங்களை வணங்கினர். அவர்கள் அறிந்தது ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் உண்டு என்பதுதான். அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப் பத்து வாதைகளை அனுப்பி, சம்மதிக்க வைத்து, பகலில் மேகஸ்தம்பத்தினாலும், இரவில் அக்கினிஸ்தம்பத்தினாலும் அவர்களை பாதுகாத்தார். செங்கடலைப் பிளக்க வைத்தும், யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்தும் மறுபக்கத்திற்கு ஜனங்களை அழைத்துச் சென்றார். வானத்திலிருந்து தூதர்கள் உண்ணும் உணவாகிய மன்னாவை ஜனங்கள் உண்ணும்படி கொடுத்தார். இறைச்சி வேண்டும் என்று கேட்டபோது காடைகளை கொண்டுவந்து குவித்தார். இவ்வாறெல்லாம் செய்து ஜனங்களைப் போஷித்து, பாதுகாத்து, வழி நடத்திய போதும் அவர்கள் விசுவாசியாதபடியால் விசுவாசியாதவர்களை அழித்தார் என்று யூதா கூறுகிறார். (யூதா 4,5)
சோதோம் கொமாரா பட்டணத்தாரின் முடிவு:
கர்த்தரோடு இருந்த மேன்மையை தூதர்கள் காத்துக் கொள்ளாததால், அவர்கள் இருந்த உன்னத வாசஸ்தலத்தை விட்டு நித்திய சங்கிலிகளால் கட்டி அந்தகாரத்தில் நியாயத்தீர்ப்பு நாளுக்கென்று அடைத்து வைத்திருப்பதாக யூதா கூறுகிறார். முன்பு இருந்தபடி அவர்களால் பரலோகம் செல்ல முடியாது. கடைசி நியாயத்தீர்ப்பில் அவர்கள் அக்கினியில் தள்ளப்படுவர். சோதோம் கொமாராவும் அதனைச் சார்ந்த பட்டணங்களும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதால் ஆக்கினைக்குட்பட்டு நித்திய அக்கினியில் தள்ளப்பட்டார்கள் என்கிறார். இந்த பட்டணங்களின் பாவத்தால் தேவன் ஒரு கல்லை அந்தப் பட்டணத்தில் மேல் போட்டதால் அது 19 கனி உப்புகளை உண்டாக்கி அதன் பக்கத்தில் இருந்த எல்லா பட்டணங்களையும் அக்கினியினாலும், சோடியம் குளோரைடினாலும் அழித்தது. (யூதா 6, 7)
கள்ள போதகர்களின் செய்கைகள்:
சொப்பனக்காரர்கள் என்பது கள்ளப் போதகர்களைக் குறிக்கிறது.வேதத்தில் யோசேப்புக்கும், எகிப்தில் பார்லோனுக்கும், பாபிலோனில் நேபுகாத்நேச்சாருக்கும் தூக்கத்தில் சொப்பனத்தைப் பார்க்க வைத்து அது நிறைவேறும்படி செய்தார். பிசாசும் ஜனங்களுக்குச் சொப்பனத்தைக் கொடுத்து ஏமாற்றுவான். இவர்கள் மாம்சத்திற்கேற்றபடி சொப்பனத்தைக் கூறுவார்கள். இவ்வாறிருக்க கள்ளப் போதகர்களாகிய சொப்பனக்காரர்கள் அவர்களது மாம்சத்தை அசுத்தப்படுத்தி கர்த்தருடைய மகத்துவங்களை தூஷித்து கர்த்ததத்துவத்தை அசட்டை பண்ணுகிறார்கள் என்று யூதா கூறுகிறார். (யூதா 8)
மிகாவேல் தூதனும், சாத்தானும்:
கர்த்தர் மோசேயை நேபோ மலைக்கு வரச்சொல்லி கானானைப் பார்க்கச் சொன்னார். அவர் பார்த்த பின் அங்கேயே மோசே மரித்தார். தேவனே மோசேயின் சரீரத்தை அடக்கம் பண்ணினார். எதற்காக அதைச் செய்தார் என்று வேதத்தில் கூறப்படவில்லை. எனவே அதை குறித்து நாம் ஆராய்ச்சி பண்ண வேண்டாம். மிகாவேலுக்கும், சாத்தானுக்கும் இந்த இடத்தில் மட்டுமல்ல, வேதத்தில் வேறு இடங்களிலும் தகராறு வந்திருக்கிறது. மிகாவேல் சாத்தானைத் தூஷணமாக குற்றப்படுத்தவோ, தூஷிக்கவோ துணியாமல் “கர்த்தர் உன்னை கடிந்து கொள்வாராக” என்று மட்டுமே கூறியதைக் காண்கிறோம்.( யூதா 9)
கள்ள போதகர்கள் போகிற வழிகள்:
கள்ளப் போதகர்கள் தங்களுக்குத் தெரியாத ஆவிக்குரியவைகளைப் பேசி தூஷிக்கிறார்கள் என்றும், புத்தியில்லாத மிருகங்களைப் போன்ற சுபாவத்தில் தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளைக் கூறி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இவர்களுக்கு ஐயோ என்றும் கூறுகிறார். காயின் தன் சகோதரனைக் கொலை பண்ணியதைப் போல விட்டுக் கொடுக்கும் எண்ணமில்லை என்கிறார். மோவாபின் ராஜாவாகிய பாலாக் பிலேயாமை இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கக் கூட்டி வந்தான். கர்த்தர் அவனுக்கு அதை அனுமதிக்காததால் அதற்குப் பதில் ஆசீர்வதித்தான். அதன்பின்னும் பாலாக் ராஜா கொடுக்கப் போகிற வெகுமதிகளுக்கு ஆசைப்பட்டு ராஜா கூறியபடி விபச்சாரிகளை இஸ்ரவேலர்களுக்குள் அனுப்பினான். இதேபோல் கள்ளப்போதகர்கள் கெட்டுப் போனார்கள் என்கிறார். வேதத்தில் கோராகின் குடும்பமும் ஆரோனை எதிர்த்து, மோசேயிடம் தர்க்கம் பண்ணியதால் தேவன் அவர்களை பூமியை பிளக்க வைத்து அழித்தார். கள்ளப் போதகர்கள் பிலேயாமைப் போல பேராசை உடையவர்கள் என்றும், காயினைப் போல சமரசத்துக்கு விட்டுக் கொடுக்காதவர்கள் என்றும், கோராகை போல எதிர்த்துப் பேசுகிறவர்கள் என்றும் யூதா கூறுகிறார். (யூதா 10, 11 )
கள்ளப் போதகர்களின் சுபாவமும் முடிவும்:
கள்ளப்போதகர்கள் சபையின் அன்பின் விருந்தில் தங்களுடைய கரைகளை மறந்து பயமில்லாமல் விருந்துண்கிறார்களென்றும், தங்களைத் தாங்களே மேய்த்துக் கொள்கிறார்களென்றும் அவர்களுடைய சுபாவத்தைப் பற்றி கூறுகிறார். இப்படிப்பட்டவர்கள் தண்ணீரில்லாத மேகங்கள் காற்றினால் அங்குமிங்கும் போவதைப் போல, அலைவார்கள் என்றும், இலைகளும், கனிகளுமில்லாமல் இரண்டு தரம் வேரற்ற மரங்களைப் போலிருக்கிறார்கள் என்கிறார். இதன் பொருள் ஒரு காலத்தில் இயேசுவின் விசுவாசிகளாக இருந்து மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருந்தனர். ஆனால் சில காலத்துக்குப் பின் கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்திலிருந்து பிரிந்ததால் சாவுக்குட்பட்டார்கள் என்கிறார். இவர்கள் அலைகள் எவ்வாறு நுரை தள்ளிக் கொண்டு இருக்கிறதோ அதே போல பேசிக்கொண்டிருப்பார்கள் என்றும், நட்சத்திரம் தன்னுடைய மார்க்கம் தெரியாமல் அலைவதைப் போல் கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சித்தம் தெரியாமல் அலைவர் என்றும் கூறுகிறார். கள்ளப் போதகர்கள் முறுமுறுக்கிறவர்களாகவும், முறையிடுகிறவர்களாகவும், இச்சைகளின்படி நடக்கிறவர்களாயும், இறுமாப்பாக பேசுகிறவர்களாயும், முகஸ்துதி செய்பவர்களாயும், துன்மார்க்கமாக நடக்கிறவர்களாயும், பரியாசம் பண்ணுகிறவர்களாயும், ஜென்ம சுபாவம் உள்ளவர்களாயும், பிரிவினையை உண்டு பண்ணுகிறவர்களாயும், ஆவியில்லாதவர்களாயும் இருப்பார்கள் என்றும், இவர்களின் முடிவு அவர்களுடைய வாழ்கையிலும், ஊழியத்திலும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் யூதா எச்சரிக்கிறார். (யூதா 12, 13, 16, 18, 19)
ஏனோக்கின் தீர்க்கதரிசனம்:
இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி முதல்முதலாக தீர்க்கதரிசனம் உரைத்தவர் ஏனோக்கு. “இதோ எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய் செய்து வந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,” “தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகள் எல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங் கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தார்.” இந்த ஏனோக்கு நோவாவுக்கு முன்பு வாழ்ந்தவர். ( யூதா 14, 15)
நினைவு கூற, காத்திருக்க, தள்ள வேண்டியவைகள்:
இயேசுவோடிருந்த அப்போஸ்தலர்களின் வார்த்தைகளை நினைவு கூற வேண்டுமென்கிறார். மகா பரிசுத்தமான விசுவாசத்தில் உறுதிப்பட தேவனுடைய வார்த்தையின்படி தேவனோடு வாழ வேண்டும் என்றும், பரிசுத்த ஆவிக்குள் ஒரே சிந்தையோடும், ஒரே ஆவியோடும் ஜெபம் வேண்டுமென்றும் கூறுகிறார். தேவ அன்பில் நிலைத்திருந்து இயேசுவின் இரக்கத்தைப் பெறக் காத்திருக்க வேண்டுமென்கிறார். தேவனுடைய அன்பிலே நிலைத்திருக்கிறவன் தேவனுடைய விருப்பத்தை மட்டுமே செய்வான் என்றும் இப்படிப் பட்டவர்கள் பகுத்தறிவுள்ளவர்களாக, சிலரிடம் இரக்கம் காண்பித்து அவர்களை அக்கினியிலிருந்து இழுத்து இரட்சிக்க வேண்டுமென்கிறார். மாம்சத்தில் கரைபட்டிருக்கிறவர்களை அதாவது பாவத்திலிருக்கிறவர்களை அந்தப் பாவத்திலிருந்து இழுத்து விடுங்களென்கிறார். இவர்களை வழுவாதபடி தேவன் காப்பதற்கும் அவரது மகிமையுள்ள சமூகத்தில் குற்றமற்றவர்களாக நிறுத்தவும் வல்லமையுள்ள, ஞானமுள்ள, இரட்சகராகிய தேவனுக்கே மகிமையும், கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும் செலுத்த வேண்டும் என்று யூதா கூறுகிறார். (யூதா 20 – 25)
முடிவுரை:
யூதா தன்னுடைய புத்தகத்தில் கள்ளப்போதகர்கள் அசுத்தமானவர்கள் என்றும், பிலேயாமைப் போல பேராசையுடையவர்கள் என்றும், காயினைப் போல சமரசத்துக்கு விட்டுக் கொடுக்காதவர்களென்றும், கோராவைப் போல எதிர்த்துப் பேசுகிறவர்கள் என்றும், இறுமாப்புடையவர்கள் என்றும், ஏமாற்றுக்காரர்கள் என்றும், சிற்றின்பப் பிரியர்கள் என்றும், பிரிவினையே உண்டாக்குகிறவர்கள் என்றும் கூறுகிறார். இந்த சாபங்கள் மறைய சிலரையாவது இரட்சிப்படைய வைத்து, பாவத்திலிருந்து இழுத்து தேவனுடைய இரக்கம் பெற மன்றாடுங்கள் என்று யூதா எச்சரிக்கிறார்.