Menu Close

1 யோவான் 4 : 8 – John 4 : 8 in Tamil

“அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1யோவான் 4:8). 

வேதத்தில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம்வரை ஓடுகிற ஒரு தேவ செய்தி உண்டானால் அது, “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதாகும். நம் கையிலே வைத்திருக்கிற வேதாகமம் அன்பின் வேதாகமம். தேவனுடைய அன்பையெல்லாம் விவரிக்கிற வேதாகமம். “தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1யோவான் 4:16).

1867-ம் வருடம் டி.எல். மூடி என்ற பக்தர் இங்கிலாந்துக்குச் சென்றபோது ஒரு இளம் வாலிபரான சுவிசேஷகரை சந்தித்தார். அந்த வாலிபனுடைய பெயர் கேரி மூர்கவுஸ் என்பதாகும். அந்த வாலிபன் மேல் விசேஷமான ஒரு அன்பின் அபிஷேகம் இருப்பதை மூடி பக்தன் கண்டார். ஆகவே அவனிடம், “தம்பி, நீ எப்பொழுதாகிலும் அமெரிக்காவிற்கு வருவதாக இருந்தால் எங்களுடைய சபை ஆராதனையிலே நீ பேசலாம்” என்ற அழைப்பைக் கொடுத்தார்.

அப்படியே அந்த வாலிபன் அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ என்ற பட்டணத்திற்கு வந்து மூடி பக்தனுடைய ஆலயத்திலே பதினான்கு நாட்கள் கூட்டங்களை நடத்தினார். ஒவ்வொரு நாள் கூட்டத்தின் தலைப்பும் “தேவ அன்புதான்.” அதற்கு ஆதாரமாக யோவான் 3:16ஐ வைத்து பிரசங்கித்தார்.

ஒவ்வொருநாளும் தேவனுடைய அன்பைக் குறித்து அதிகமாய்ப் பிரசங்கித்த போது ஜனங்களுடைய உள்ளமெல்லாம் உருகினது. “ஐயோ, இவ்வளவு உச்சிதமான அன்பை அறியாமல் போனோமே” என்று கண்ணீர்விட்டு கதறி அழுதார்கள். பதினான்கு நாட்களும் தேவ அன்பை சொல்லிச் சொல்லி பெரும் அன்பின் எழுப்புதலை அந்த வாலிபன் ஏற்படுத்திவிட்டான்.

மூடி பக்தனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. பாவத்தைக் குறித்தும், தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்தும், நரகத்தைக் குறித்தும் எச்சரித்து பிரசங்கித்த அவர், இப்பொழுது தேவ அன்பைக் குறித்து தெரிந்து கொண்ட போது அவருடைய உள்ளமும் உடைந்தது. அன்று முதல் தேவ அன்பைக் குறித்தே பிரசங்கம் பண்ணுவது என்ற தீர்மானத்திற்கு வந்தார்.

கூட்டத்தின் கடைசி நாளாகிய பதினான்காவது நாள் வந்தது. அன்றைக்கும் அந்த வாலிபன் தேவ அன்பைப் பிரசங்கித்து சொன்னான், “நான் கடந்த பதினான்கு நாளும் கர்த்தருடைய அன்பை கொஞ்சமாகிலும் உங்களுக்கு விவரித்துச் சொல்ல முயன்றேன், முடியவில்லை. ஒருவேளை யாக்கோபின் ஏணி என்னிடத்தில் இருக்குமானால் அதன் மேல் ஏறி பரலோக கதவைத் தட்டி காபிரியேல் தூதனை அழைத்து ஜனங்களுக்கு தேவ அன்பைக் குறித்து சொல்லு என்று கேட்பேன். காபிரியேல் தூதனும் கூட யோவான் 3:16ஐ குறிப்பிட்டு இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் என்பதை தான் மனதுருக்கத்தோடு சொல்லுவான்” என்றார்.

தேவனுடைய பிள்ளைகளே, உங்கள்மேல் ஆண்டவர் எவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்பதை தியானித்துப் பாருங்கள். சின்னஞ்சிறு வயதில் உங்களைத் தெரிந்து கொண்டு இவ்வளவு காலம் அருமையாய் வழி நடத்தின இந்த அன்புக்கு ஈடு இணை ஒன்றுமில்லை.

Related Posts