லூக்கா 2 : 36 – 38 “ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள். ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள். அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.”
ஆசேர் கோத்திரத்தில் பானுவேலின் மகள் அன்னாள். இந்த ஆசேர் கோத்திரம் 12 கோத்திரங்களில் மிகச் சிறியது. இந்தச் சாதாரணமான கோத்திரத்திலுள்ள அன்னாளைத் தேவன் தீர்க்கதரிசியாக்கினார். இவள் திருமணமாகி ஏழு வருடம் மாத்திரமே புருஷனுடன் வாழ்ந்தவள். எண்பத்து நாலு வயதான அந்த விதவை, கணவனுடைய மரணத்தில் நம்பிக்கையை இழக்காமல், இரவும் பகலும் தேவாலயத்தில் அமர்ந்து தேவனை ஆராதித்தாள். உபவாசித்து ஜெபம் பண்ணினாள். இவ்வளவு தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்த அன்னாளுக்கு தேவன் தம்மை வெளிப்படுத்தினார். இயேசு கிறிஸ்துவைப் பிரதிஷ்டை பண்ணப்படும் நாளில், நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த அவளுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அதனால் அன்னாளுக்கு இயேசுவைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அன்னாள் என்ற விதவையிடம் இயேசு. ஆசீர்வாதம் பெற்றார். எருசலேமில் மீட்புக்காகக் காத்திருந்த அனைவருக்கும் இயேசுவைக் குறித்துப் பேசினாள்.