மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் முன்பாக இரண்டு வாசல்கள், இரண்டு வழிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இடுக்கமான வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் நித்தியஜீவனைப் பெறுவர். அடுத்த வாசலும், வழியும் அவனை கேட்டுக்கு அழைத்துச் செல்லுகிறது. இந்த இரண்டில் ஒன்றைத்தான் மனிதன் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இரண்டைத்தவிர மனிதன் கடந்து செல்லக் கூடிய வேறு வாசல்களோ, வழிகளோ வேதத்தில் சொல்லப்படவில்லை.
கிறிஸ்து என்ற வாசல்வழியாக உட்பிரவேசித்த ஒருவன் அவருடைய பாதையில் நிலைநின்று நடக்கும் போது நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியும். கேட்டுக்குப் போகிற வாசலும் விரிவானது, வழியும் விசாலமானது. அதில் பிரவேசிக்க எந்த கட்டுப்பாடும் தடையும் இல்லை. நம்முடைய மனவிருப்பத்தின்படி நடந்து கொண்டே அதற்குள் பிரவேசிக்கலாம். அதனால் தான் வேதம் சொல்லுகிறது “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதி 14:12)
ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் தான் என்று இயேசு போதித்தார். இதன் விளக்கம் ஒரு சிலரே உண்மையாய் மனந்திரும்பி தாழ்மையான இந்த வாசலில் பிரவேசிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகவும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிகிறவர்களாகவும் அவருடைய ராஜ்ஜியத்தையும், நீதியையும் ஆவலுடன் தேடுகிறவர்களாகவும் இருப்பார்கள். உண்மையான விசுவாசத்துடனும், அன்புடனும், தூய்மையுடனும், விடாமுயற்சியோடு முடிவுவரை அதைத் தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்பார்கள் என்றார்.