Menu Close

Category: எலிசாவின் அற்புதங்கள்

எலியா இஸ்ரவேலிலே வல்லமையாக ஊழியம் செய்தவர். ராஜாக்களை கதிகலங்க வைத்தவர். வானத்திலிருந்து அக்கினியை இறங்கப் பண்ணியவர். பாகாலின் தீர்க்கதரிசிகளைக் கொன்று குவித்தவர். ஜனங்களின் இடையே வராமல் தனித்து வாழ்ந்தவர். நியாயத்தீர்ப்பைக் கூவியுரைத்து மனந்திரும்ப அழைப்புக் கொடுத்தவர். எலியாவைக் கர்த்தர் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக அவனுடைய ஸ்தானத்தில் ஒருவனை உருவாக்க தேவன் அவனோடு கூட பேசினார். எலியாவின் நாட்களில் அவரோடு கூட அனேக தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் சீடர்களாக தேவனால் அழைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவர்கள். இயேசு அப்போஸ்தலர்களாக 12 பேரைத் தேர்ந்தெடுத்து, சீடர்களாக 70 நபர்களை ஆயத்தப்படுத்தியதைப் போல, எலியாவும் இவர்களை ஆயத்தப்படுத்தியிருந்தார். 

1 இராஜாக்கள் 19 : 19ல் எலியா தன்னுடைய சால்வையை ஏர் பூட்டி உழுது கொண்டிருந்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைத் தன்னைப் பின்பற்றி வரும்படி, எலிசாவின் மேல் போடுகிறான் (1இராஜாக்கள் 19 : 19). கர்த்தர் அவனை அழைக்கிறார் என்பதற்கு அடையாளமாக அந்த சால்வை எலிசாவின் மேல் விழுந்தது. அந்த சால்வையில் அபிஷேகத்தின் அழைப்பும், தீர்க்கதரிசனத்தின் அழைப்பும் இருந்தது. உடனே எலிசா தகப்பனையும், தாயையும் முத்தம் செய்துவிட்டு வருகிறேன் என்று கூறி, தன்னுடைய ஏர் மாட்டை துண்டு துண்டாக்கி ஏரை விறகாக்கி அங்குள்ள அனைவருக்கும் விருந்தாக்கிப் போட்டான். இது எதைக் குறிக்கிறது என்றால் எலிசா எலியாவின் அழைப்பை சந்தோஷமாக மனப்பூர்வமாக தேவனுக்குப் பயந்து ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. அவர் கூப்பிட்டவுடன் எந்த சாக்குப்போக்கும் சொல்லிக் காலத்தை வீணடிக்கவில்லை உலக வேலைக்குத் திரும்ப வந்து விடக்கூடாது என்பதற்காக அவைகள் எல்லாவற்றிற்கும் முற்றுபுள்ளி வைத்தான். தன்னுடைய சந்தோஷத்தை தெரிவித்துவிட்டு எலியாவோடு கூட பிரயாணப்பட்டு போனான். அதனால்தான் எலியாவின் கைக்கு தண்ணீர் வார்த்த எலிசா என்று எலிசா அழைக்கப்படுகிறான் (2இராஜாக்கள் 3 : 11). 

ஏசாயா 61 : 10 ல் இயேசு நமக்கு இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவிக்கிறார். இது எலிசாவின் சால்வையை விட மேலானது. நீதியின் சால்வையைத் தரிக்க வைக்கிறார். இது நமக்கு விஷேசமாகும். இயேசுவைத் தன்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரின் மேலேயும் போடுகிறார். இதேபோல் நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு ஆசாரியராக, ஊழியக்காரர்களாக, அவருடைய தோட்டத்தில் வேலை செய்கிறவர்களாக, ஆத்தும ஆதாயம் பண்ணுகிறவர்களாக செயல்பட வேண்டும். எலியா சுழல்காற்றில் எடுத்துக்கொள்ளப்படும் முன்பு ஒரு நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்கிறார். கில்கால், பெத்தேல், எரிகோ, யோர்தான் என்று ரூத் நகோமியைப் பற்றிக் கொண்டதைப் போல ஒவ்வொரு இடத்திற்கும் சென்றபோது எலிசாவும் கூடவே சென்றான். மோசேயின் பணிவிடைக்காரனாக யோசுவா இருந்ததைப் போல எலிசாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்தவனாக எலிசா இருந்தான். இதேபோல்தான் பேதுரு மாற்குவை 1பேதுரு 5 : 13 ல் தன்னுடைய குமாரன் என்று கூறினான். 2 தீமோத்தேயு 2 :1 ல் தீமோத்தேயுவைப் பவுல் தன்னுடைய குமாரன் என்றான். தகப்பன் தன்னுடைய புத்திரரை விட்டுப் பிரியாதிருக்கிறதைப் போல, சிஷ்யன் குருவை விட்டுப் பிரியாதிருக்கிறதைப் போல எலியா, எலிசாவின் நட்பு தகப்பன் பிள்ளையைப் போலவும், குரு சிஷ்யனைப் போலவும், நல்ல நண்பனைப் போலவும் உறவு இருந்ததைப் பார்க்கிறோம். 

கடைசியாக யோர்தானுக்கு இருவரும் சென்று எலியா தன் சால்வையை எடுத்து தண்ணீரை அடித்ததால் யோர்தான் இருபக்கமாகப் பிரிந்தது. இருவரும் அக்கரைக்குப் போனார்கள். எலியா ஏதோ ஒரு காரியத்துக்காக தன்னை எலிசா பின்தொடருகிறான் என்று தெரிந்தது. எனவே எலியா எலிசாவை நோக்கி “நான் உன்னைவிட்டு எடுத்துக் கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன, கேள்” என்றான் அதற்கு எலிசா “உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன்” என்றான். எலியா எலிசாவிடம் அரிதான காரியத்தைக் கேட்டாய் என்று கூறிவிட்டு “உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது” என்றான். அவர்கள் பேசிக்கொண்டி ருக்கையில் எலியா சுழல்காற்றில் பரலோகத்துக்கு ஏறிப்போனான். அதை எலிசா பார்த்ததாள் இரட்டிப்பான வரங்களை பெற்றான் (2 இராஜாக்கள் 2 : 8 – 11). எலியா சபைக்கு அடையாளமாகவும், எலிசா திரள் கூட்டத்துக்கு அடையாளமாகவும் இருந்ததைப் பார்க்கலாம். இஸ்ரவேலரின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகித்தவர் எலிசா. 

எலிசா என்ற பெயருக்கு கர்த்தர் இரட்சிப்பாயிருக்கிறார் என்று பொருள். எலிசாவின் வாழ்க்கை அற்புதமான வாழ்க்கை. எலிசாவின் ஊழியத்தில் இயேசுவின் நிழலைக் காணமுடியும். யோவாஸ் ராஜா எலிசாவைப் பார்த்து “இரத்தமும் குதிரையுமாயிருந்தவரே” என்று புலம்புவதைப் பார்க்கிறோம். யோராம், யெகூ, யோவாகாஸ், யோவாஸ் என்னும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஜனங்களின் நடுவே அனாதைகளையும், ஏழைகளையும் பராமரித்தார். சிறப்புமிக்க தேசியத்தலைவராக சுமார் 50 ஆண்டுகள் அறியப்பட்டார். மரணப்படுக்கையில் கிடைக்கும் போதும் இஸ்ரவேல் ராஜா அவரது ஆலோசனைக்காக முழங்காலில் நின்றான். இயேசு கிறிஸ்து நமக்கும் யோவான் 14 : 12 ல் இரட்டிப்பான வரங்களைத் தருவதாக வாக்களித்துள்ளார். எனவே நாமும் எலிசாவைப் பின்பற்றி இரட்டிப்பான வரங்களுடன் ஊழியம் செய்ய மன்றாடுவோம்.

பள்ளத்தாக்கைத் தண்ணீரால் நிரப்பச் செய்தார்

மூன்று ராஜாக்கள் மோவாபியரோடு யுத்தத்துக்குப் புறப்படல்: 2 இராஜாக்கள் 3 : 9 – 12 “அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும்…

எலிசா சபித்தான் கரடிகள் பீறிப்போட்டது

பெத்தேலிலுள்ள ஜனங்களின் குணங்கள்: எலியா கடந்து சென்றபின் எலிசா அந்த பொறுப்பை எடுத்தவராய்த் திரும்ப வருகிறார். அந்த செய்தி ஏற்கெனவே ஊருக்குள் பரவி…

விஷ தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றினார்

தீர்க்கதரிசிகளின் சந்தேகம்: எலிசா இக்கரைக்கு வந்ததைப் பார்த்து நின்று கொண்டிருந்த தீர்க்கதரியின் புத்திரர்கள் எலியாவின் ஆவி எலிசாவுக்குள் இறங்கியிருக்கிறதென்று அவனுக்கு எதிர் கொண்டு…