தீர்க்கதரிசிகளின் சந்தேகம்:
எலிசா இக்கரைக்கு வந்ததைப் பார்த்து நின்று கொண்டிருந்த தீர்க்கதரியின் புத்திரர்கள் எலியாவின் ஆவி எலிசாவுக்குள் இறங்கியிருக்கிறதென்று அவனுக்கு எதிர் கொண்டு தரை மட்டும் குனிந்து அவனை வணங்கினர் (2 இராஜாக்கள் 2 : 15). எலியா உண்மையிலே எடுத்துக் கொள்ளப்ப்பட்டாரா இல்லையா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. ஒரு வேளை எலியாவை எடுத்து வேறு எங்கேயாவது கொண்டு போயிருப்பார் என்றெண்ணினார்கள். ஆனால் உண்மையில் எலியா தேவனால் எடுத்துக் கொள்ளப்பட்டார். இதைக் குறித்து எந்த ஆராய்ச்சியும் நடத்தத் தேவையில்லை. எலியா எடுத்துக் கொள்ளப்படுவதை எலிசா நேரில் பார்த்தான் அவர்கள் எலிசாவை தேடப்போய் மூன்று நாள் கழித்து வந்தனர். எலிசா போக வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. எரிகோ பட்டணம் மூன்றாவது நாளில் இடிக்கப்படுமென்று கர்த்தர் உரைத்தார். அதன்படி நடந்தது. இயேசுவானவர் மூன்று நாட்களுக்குப் பின் உயிர்த்தெழுந்தார். இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடந்தபின் மூன்றுநாள் தண்ணீரைத்தேடி அது கிடைக்காமல் அலைந்தனர் (யாத்திராகமம் 15 : 22). .
எரிகோ ஜனங்களின் பிரச்சனை:
2 இராஜாக்கள் 2 : 19 “பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.”
எரிகோ பட்டணத்தின் மனிதர்கள் எலிசாவிடம் ஒரு பிரச்சனையோடு வருகிறார்கள். எரிகோ பட்டணம் சாபக்கேடான பட்டணம். அவர்கள் எலிசாவிடம் எரிகோ பட்டணம் குடியிருப்புக்கு நல்லதாயிருக்கிறது என்றும், ஆனால் அங்குள்ள நிலம் ஒன்றும் செய்ய முடியாதபடி பாழ்நிலமாக இருக்கிறது என்றனர். மேலும் அங்குள்ள தண்ணீரும் மிகவும் கெட்டது என்று கூறினர். வேதத்தில் நல்லது என்பதற்கு அநேக வசனங்கள் உண்டு. கெட்டது என்பதற்கு ஒன்றிரண்டு வசனங்கள் மட்டுமே உண்டு. தேவன் உலகத்தைப் படைக்கும் போது தான் படைத்த எல்லாவற்றையும் நல்லது என்று கண்டார். மனிதனைப் படைத்ததற்கு மட்டுமே மனஸ்தாபப்பட்டார். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாததால் கெட்டுப்போனான். நிலம் நல்லது, தண்ணீரோ கெட்டது என்பதுபோல மனிதன் நல்லவன் தான் ஆனால் அவனுடைய குணம் கெட்டது ஆண்டவர் தன்னைத் தேடும்படி கூறினார். ஆனால் மனிதன் அவரைத் தேடாதபடி அவர் உண்டு பண்ணின சிருஷ்டிகளைத் தேடிக் கொண்டிருக்கிறான். அதனால் அவனுடைய வாழ்க்கையும் மாறி நிலமும் பாழ்நிலமாகி விட்டது. லூக்கா 19 : 10 ல் “இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்தார்” என்று பார்க்கிறோம். யாத்திராகமம் 15 : 22 ல் இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலைக் கடந்தபின் 3நாள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டனர். கர்த்தர் அங்கு நின்ற ஒரு மரத்தை வெட்டிப் போடச் செய்து அந்தத் தண்ணீர் மதுரமாயிற்று. மரம் இயேசுவின் பலியைக் குறிக்கிறது. இது மோசே யூதர்கள் மத்தியில் செய்த அற்புதம்.
எலிசா செய்த அற்புதம்:
2 இராஜாக்கள் 2 : 20 – 22 “அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.
உடனே எலிசா அவர்களிடம் ஒரு புதுத் தோண்டியை எடுத்து அதில் உப்பைப் போட்டு கொண்டு வரச் சொன்னார். அவர்களும் எலிசா சொன்னபடியே கொண்டு வந்தனர். எலிசா நீரூண்டைக்குப் போய் அவர்கள் கொண்டு வந்த உப்பை அதில் போட்டான். அந்தத் தண்ணீர் அதனால் ஆரோக்கியமாயிற்று என்றும் இனிமேல் இந்தத் தண்ணீரினால் சாவோ, நிலப்பாழோ வராது என்று கர்த்தர் சொல்லுகிறாரென்று அவர்களிடம் கூறினான். கர்த்தர் எலிசாவின் மூலம் கூறினபடி அந்தத் தண்ணீரைக் குடிக்கும் போது சாவு வரவில்லை. இன்றைக்கும் எரிகோவின் பள்ளத்தாக்கிலே இந்தத் தண்ணீரைக் குடித்துப் பார்க்க முடியும். இதேபோல் நாமும் குடியிருக்கிற இடம் நல்ல இடமாக இருக்கலாம். ஆனால் நிலமோ பாழ்நிலமாக குடியிருப்புக்கு ஏற்ற நிலமாக இல்லாமலிருக்கலாம். அவ்விடத்தில் இயேசுவின் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும். இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இடத்தில் இயேசுவின் வல்லமை இறங்கி வரும். அந்த இடம் நல்ல இடமாக மாறும். கண்ணீரில் மூழ்கியிருந்தாலும் அதைக் களிப்பாக மாற்றுவார். கடன்தொல்லையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் கர்த்தர் ஒரு தூதனை அனுப்பி அதை தீர்த்து வைப்பார். பிசாசினால் கட்டப்பட்டிருந்தாலும் அந்தக் கட்டுகளைக் கழற்றியெறிவார். வியாதி படுக்கையிலிருந்தாலும் வியாதி படுக்கையை மாற்றிப் போடுவார். இயேசு வாழ்ந்த ஊர் நாசரேத். அந்த ஊர் நனமை எதுவும் வர முடியாத ஊர். இதைத்தான் நாத்தான்வேல் இயேசுவைப் பார்த்து யோவான் 1 : 46 ல் “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமோ” என்று கேட்டதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட இடத்தில் இயேசு அங்கு வாழ்ந்ததால் பெயர் பெற்றது. ஆமென்