- லூக்கா 1 : 31 ”இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.”
- லூக்கா 1 : 35 “தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்திரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.”
காபிரியேல் தூதன் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரில் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த மரியாள் என்ற பெண்ணிடம் வந்து, அவளை வாழ்த்தி அவள் கிருபை பெற்றவள் என்று கூறினான். மேலும் கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் என்றும், ஸ்திரீகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும் கூறினான். அந்த வாழ்த்துதலைப் பார்த்து மரியாள் கலங்கினாள். அப்பொழுது தூதன் பயப்பட வேண்டாம் என்று கூறி, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அந்தக் குழந்தைக்கு இயேசு என்று பெயரிடு என்றும் கூறினான். அதற்கு மரியாள் தூதனை நோக்கி, இது எப்படி நடக்கும், தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், புருஷனோடு சேரவில்லை என்றும் கூறினாள். அதற்கு தேவதூதன் பரிசுத்த ஆவியானவர் உன்மேல் நிழலிடுவார், அந்த ஆவியானவருடைய பலத்தினால் பரிசுத்தமுள்ள தேவனுடைய குமாரன் பிறப்பார் என்று கூறினான். மரியாள் தூதனிடம், நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்றாள். உடனே தூதன் அவ்விடத்திலிருந்து போய்விட்டான். மரியாள் கர்ப்பம் ஆனாள். ஒரு பெண் கர்ப்பமாகி விட்டால் அது அவளுக்கு மிகுந்த பெருமிதத்தையும் சந்தோஷத்தையும் உண்டாக்கும். ஆனால் மரியாள் கர்ப்பம் தரித்தது ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது. அதற்கு முன் யாருக்கும் அப்படி நடந்ததாகவும் நடக்கும் என்று கேள்விப் பட்டதே இல்லை.