- அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் இருளடைந்து:
வெளிப்படுத்தல் 16 : 10 “ ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,”
ஐந்தாம் தூதன் தன்னுடய கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தில் மேல் ஊற்றினான் என்றுள்ளது. அதின் விளைவாக மிருகத்தின் இராஜ்ஜியம் இருளடைந்து என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எகிப்தின் ஒன்பதாவது வாதையின் போது “தடவிக்கொண்டிருக்கத் தக்கதான இருள் (யாத்திராகமம் 10 : 21) தேசமெங்கும் உண்டானது.” என்று பார்க்கிறோம். இதற்கு முந்தின கோபக்கலச வாதையில் சூரிய பிரகாசத்தினாலும், அக்கினியினாலும் பாதிக்கப்பட்டவர்கள், இதில் இருள் என்ற எதிர்மறையான வாதையை உடனடியாக சந்திக்கிறார்கள். எகிப்தின் இருளினால் இஸ்ரவேலர் பாதிக்கப் படவில்லை என்பதை யாத்திராகமம் 10 : 23 ல் பார்க்கிறோம். மேலும் அந்த இருள் மூன்று நாட்கள் மட்டுமே நீடித்தது. வெளிப்படுத்தல் 2 : 13 ல் சாத்தானுடைய சிங்காசனம் இருக்கும் இடமாக பெர்கமு சொல்லப்பட்டது. பாபிலோனின் அழிவுக்குப் பின் சாத்தானுடைய தலைநகரமாக பெர்கமு, ரோம் ஆகிய பட்டணங்கள் செயல்பட்டாலும் இறுதி நாட்களில் பாபிலோன் பட்டணம் கட்டப்படும் என்பதை பல தீர்க்கதரிசனங்கள் அறிவிக்கின்றன. உபத்திரவ காலத்தில் இந்தப் பட்டணம் கட்டி முடிக்கப்படும். ஐந்தாவது கோபக்கலசம் அந்திகிறிஸ்துவின் தலைநகரத்தை இருட்டடிப்புச் செய்கிறது. முந்தின வாதைகளினால் உண்டான அழிவுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உலகரீதியான முயற்சிகளில் அந்திகிறிஸ்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சற்றும் எதிர்பாராதபடி அவனுடைய ராஜ்ஜியத்தில் இருள் உண்டாகிறது. நான்காம் எக்காளம் ஊதப்பட்ட போது, “உலகமெங்கும் மூன்றிலொரு பங்கு இருள் உண்டானது.” (வெளிப்படுத்தல் 8 : 12). ஐந்தாவது எக்காளம் ஊதப்பட்டபோது பாதாளக்குழியிலிருந்து எழும்பின பெருஞ்சூளையின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது என்று வெளிப்படுத்தல் 9 : 2 ல் பார்க்கிறோம். வரப்போகிற இருளைக் குறித்து,
யோவேல் 2 : 1, 2 ல் “ சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்;” என்றும்,
நாகூம் 1 : 8 ல் “ இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.” என்றும்,
ஆமோஸ் 5 : 18 ல் “கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயி ருக்கும்.” என்றும்,
செப்பனியா 1 : 15 ல் “ அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். “
மாற்கு 13 : 24 “அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும்;” என்றும் கர்த்தருடைய நாளை பற்றி கூறப்பட்டுள்ளது.
- தேவனைத்தூஷித்தனர்:
வெளிப்படுத்தல் 16 : 11 “தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.”
ஏழாவது கோபக்கலசம் ஊற்றப்படும்போதும் உலகத்து மனிதர்கள் தேவனைத் தூஷிக்கிறார்கள் என்றாலும் அவர்கள் மனதிரும்பாததைக் குறித்து,
வெளிப்படுத்தல் 2 : 21 ல் “ அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்த்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை”
வெளிப்படுத்தல் 9 : 20, 21 ல் “ அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவை களாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காத படிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை;”
வெளிப்படுத்தல் 16 : 9 “ அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வார்த்தைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை”
ஏசாயா 8 : 22 ல் “ அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.”
முதலாம் கோபக்கலசம் ஊற்றப்பட்டபோது உண்டான பொல்லாத கொடிய புண் இன்னும் குணமாகாமல் அடுத்த நான்கு கோபக்கலசங்களிலும் பூமி, சமுத்திரம், நதிகள், அந்திகிறிஸ்துவின் ராஜ்ஜியம் ஆகியவை பாதிக்கப்பட்டு, அதனால் உண்டாகும் வருத்தங்கள் இன்னும் அவர்களை விட்டு அகலவில்லை. கோபக்கலசங்கள் அதிக இடைவெளியில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றப்படுகிறது.