- சூரியனும் சந்திரனும் சேதப்படல்:
வெளிப்படுத்தல் 8 : 12 “ நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங் களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று. “
நான்காம் தூதன் எக்காளம் ஊதியவுடன் சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றில் ஒரு பங்கும் நட்சத்திரங்களின் மூன்றில் ஒரு பங்கும் சேதமுண்டானது. மத்தேயு 24 : 29, மாற்கு 13 : 24, லூக்கா 21 : 25 ஆகிய வசனங்கள் கடைசி நாட்களில் சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் பௌதீக மாற்றங்கள் தோன்றுமென்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இந்த மூன்று வசனங்களுமே உபத்திரவ காலத்தின் முடிவில் கிறிஸ்துவினுடைய பகிரங்க வருகையின் போது சூரியன், சந்திரன், நட்சந்திரங்கள் தங்கள் ஒளியை இழப்பதையே அறிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சி நான்காவது தூதன் எக்காளம் ஊதி, குறைந்த பட்சம் மூன்றரை ஆண்டுகள் கழித்துத்தான் நடக்கும்.
ஏசாயா 13 : 10 ல் “வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.” என்றும்,
யோவேல் 2 : 31 ல் “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.”
ஆனாலும் நான்காவது எக்காளம் ஊதப்படும்போது பகலிலும், இரவிலும் பிரகாசம் மூன்றில் ஒரு பங்குதான் பாதிப்படைகிறது. இதனால் மிருக இனங்களும், தாவர இனங்களும் பாதிப்புண்டாகும். மோசே எகிப்தில் தன்னுடைய கையை நீட்டின போது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் காரிருள் உண்டானதை யாத்திராகமம் 10 : 22 ல் பார்க்கிறோம். ஆனால் நாலாவது எக்காளம் ஊதும்போது உண்டாகும் இருளானது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்லப்படவில்லை. கர்த்தர்,
எரேமியா 31 : 35 ல் “ சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவர்” என்றும்,
யோபு 9 : 7 ல் “ அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.” என்றுமுள்ளது.
- வானத்தில் பறந்து வந்த தூதன்:
வெளிப்படுத்தல் 8 : 13 “பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.”
நான்கு எக்காளங்கள் ஊதப்பட்டதும், அடுத்த எக்காளங்கள் ஊதப்படுவதற்கு முன்பும் வானத்தின் மத்தியில் ஒரு தூதன் பறந்து வருவதைப் பார்க்கிறார். மீதியுள்ள மூன்று எக்காளங்களின் மூலமாக பூமியின் ஜனங்களுக்கு ஆபத்து வரும் என்பதற்கு “ஐயோ” என்று குறிப்பிடுகிறது. இது ஜனங்கள் மிகுந்த வேதனையையும், தாங்கிக்கொள்ள முடியாத ஆழ்ந்த துக்கத்தையும் குறிப்பிடுகிறது. தூதன் ஐயோ ஐயோ ஐயோ என்று மூன்று முறை சொல்லுவது வரப்போகிற மூன்று எக்காளங்களும் ஊதப்படும்போது உண்டாகும் நியாயத்தீர்ப்பு தனித்தனியாக கொடூரமானதாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. இவை மூன்றுமே நேரடியான பாதிப்பை உண்டாக்கப் போகின்றன. அவைகளில் தேவன் வஞ்சிக்கப்பட்ட பிசாசின் ஆவிகளை நியாயந்தீர்க்கும் கருவியாகப் பயன்படுத்தப் போகிறார் என்பதினால் ஆபத்தானது உண்மையிலே பயங்கரமாக இருக்கும். தூதன் அறிவிக்கும் மூன்று பெரிய ஆபத்துகள் எவைகளென்றால்,
- பாதாளக்குழியிலிருந்து வெளிப்படும் வெட்டுக்கிளிகள் (9 : 1 – 12).
- ஐப்பிராத்து நதியருகிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட நான்கு தூதர்களின் குதிரை சேனை (9 : 13 – 21).
- சாத்தான் புயல் நேரடியாக செயல்படுதல் (12 : 4 – 13 : 18).
மிகப்பெரிய ஆபத்து பூமியெங்கும் உருவாகவிருப்பதை சங்கீதக்காரன்,
சங்கீதம் 75 : 8 ல் “கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.”
என்றார். இதிலிருந்து யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, அவரை நம்முடைய இரட்சராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு, பாவ அறிக்கையிட்டு, மனந்திரும்பி, வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிய ஒப்புக்கொடுப்போமானால் இந்தக் கொடூரமான உபத்திரவ காலத்துக்குள் பிரவேசிக்காமல் தப்பிப்போம். . இயேசுகிறிஸ்து நம்மை இரகசிய வருகையில் எடுத்துக் கொள்வார். “இதோ இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சண்ய நாள்” (2 கொரிந்தியர் 6 : 2).