Menu Close

இரும்புக் கோடாரியை மிதக்கச் செய்தார்

தீர்க்கதரிசிகளின் புத்திரரின் எண்ணம்:

2 இராஜாக்கள் 6 : 1 – 7 “தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.”

“நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.”

எலிசாவின் காலம் அற்புதத்தின் காலமாக இருந்தது. எலிசா ராஜாக்களோடு பழகிய போதிலும் எளிய சீடர்களோடு தங்கியிருப்பதும் அவர்களின் சாதாரண வேலைகளில் கூட இருப்பதும் தன் கடமை, தன் மகிழ்ச்சி, தன் உரிமை என்று எலிசா கருதினார். எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரோடு தங்கியிருந்தார். அவர்கள் எலிசாவை நோக்கி எலிசாவோடு தங்குமிடம் மிகவும் தங்களுக்கு நெருக்கடியாக இருக்கிறது. எனவே யோர்தானில் போய் மரங்களை வெட்டி தங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்கப் போகிறோம் என்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு என்று கூறுகிறார்களே தவிர எலிசாவையும் சேர்த்துச் சொல்ல வில்லை. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சிம்சோன் மனைவியோடு வாழ்வதை விட்டுவிட்டு வேசிகள் பின்னால் சென்றான். அதனால் தேவன் அவனுக்கு கொடுத்த பலனை இழந்தான். தாவீது தன்னுடைய போர்வீரர் களோடு யுத்தத்துக்குப் போகாமல் உப்பரிகையில் உலாவி பாவத்தில் வீழ்ந்தான். லோத்து ஆபிரகாமோடு இருக்கப் பிரியப்படாததின் விளைவு தன் மனைவியை இழந்தான். பிரியமில்லாத சந்ததி உருவாகக் காரணமானான். கெட்ட குமாரன் தகப்பனோடிருக்கப் பிரியமில்லாமல் போய் பன்றி தின்கிற தவிட்டுக்குக்கூட கஷ்டப்பட்டான். வேதத்தில் 

சங்கீதம் 133 :1,3 ல் “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?”

“…அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.” என்றுள்ளது. 

120 சீஷர்கள் மேல் வீட்டறையில் நெருக்கமாகி ஜெபித்தபோது வல்லமையோடு தேவ ஆவியானவர் இறங்கினார். அதே போல் எலிசாவோடிருந்தவர்கள் எலிசாவின் ஆசீர்வாதத்தை விட்டுப் பிரிந்து போக நினைத்தனர். எலிசா எலியாவுடன் 14 ஆண்டுகள் இருந்து முடிவில் இரட்டிப்பான வரங்களை பெற்றுக் கொண்டார். அவர்கள் நாங்கள் யோர்தா னுக்குப் போய் ஆளுக்கொரு உத்திரத்தை வெட்டி நாங்கள் இருக்க இடத்தை உண்டாக்கப் போகிறோம் என்றனர். உத்திரம் என்பது கூரைக்குப் பயன்படுத்தும் மரமாகும். அதற்கு எலிசா போங்கள் என்றான். அவர்கள் தாங்களாகவே தங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்கத் தீர்மானம் எடுத்தபின்பு எலிசாவிடம் போகவா, வேண்டாமா என்று கேட்கவில்லை. போகப் போகிறோம் என்று தகவல் மட்டும் சொல்கின்றனர். அவர்கள் தேவனுக்கும், எலிசாவுக்கும் முதலிடம் கொடுக்கவில்லை. 

எலிசா சென்றதும், கோடாரி விழுந்ததும்:

2 இராஜாக்கள் 6 : 3 – 5 “அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,”

“அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்த போது மரங்களை வெட்டினார்கள்.”

“ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.”

அவர்களில் ஒருவன் தேவபக்தியுள்ளவனாக, கிருபையுள்ளவனாக இருக்கி றான். அவன் எலிசாவைத் தங்களோடு கூட வரச்சொல்லி அழைத்தான். இவர் கள் தேவனுக்கும், எலிசாவுக்கும் முதலிடம் கொடுக்கவில்லை. தாங்களா கவே தங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்று சொல்லித் தீர்மானம் எடுத்த பின்பு ஒப்புக்காக எலிசாவை ஒருவன் அழைத்தான். எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஊழியக்காரர்களை அழைத்துச் செய்வது நல்லது (உபாகமம் 21 : 5). அன்றைக்குக் கர்த்தர் ஏனோக்கோடு நடந்ததைப் போல (ஆதியாகமம் 5 : 24), நோவாவோடு சஞ்சரித்ததைப் போல (ஆதியாகமம் 6 : 9), எம்மாவூர் சீடரோடு இயேசு நடந்து சென்றதைப் போல (லூக்கா 24 : 13 – 35 ). எலிசா அவனுடைய கூப்பிடுதலுக்குச் சம்மதித்து யோர்தானுக்கு அவர்களு டன் சென்றான். அவர்கள் அனைவரும் மரத்தை வெட்ட ஆரம்பித்தார்கள். அதில் தீர்க்கதரிசி புத்திரரின் ஒருவன் வெட்டும் போது ஓங்கி வெட்டிய இரவல் கோடாரி யோர்தான் ஆற்றில் தெறித்து ஆழத்தில் வீழ்ந்தது. அந்தக் காலத்தில் இரும்புக் கோடாரியானது அபூர்வமான, விலையேறப்பெற்ற ஒரு கருவியாக இருந்தது. கோடாரி என்பது இரண்டு பொருட்களால் ஆனது. மரத்தினால் செய்யப்பட கைப்பிடி ஒரு பக்கமும், வெட்டுகிற இரும்பு மறுபக்கமும் உண்டு. சாதாரணமாக மரம் வெட்டுகிற கோடாரியானது திடீரெண்று தண்ணீரில் விழுந்து விடுவதில்லை. அது பல எச்சரிப்புகளைக் கொடுக்கிறது. முதலில் அதிலுள்ள ஆப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக கழல ஆரம்பிக்கும். பின்பு அது ஆட ஆரம்பிக்கும். அதை அந்தச் சமயத்தில் சரிபடுத்தாவிட்டால் கோடாரியின் இரும்புப் பகுதி கழன்று விழுந்து விடும். ஐயோ என் ஆண்டவனே அது இரவலாக வாங்கப் பட்டதே என்று கூவினான். திரும்பிக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்பு அவனை வேதனைக்குள்ளாக்கியது. 

நமக்குக் கர்த்தர் தந்த இந்த உடலும், ஆத்துமாவும் இரவலாய் தேவனிடமிருந்து பெற்றுக் கொண்டது. அதேபோல் இந்த உலகத்தில் அனுபவிக்கும் எதுவும் நமக்குச் சொந்தமானது அல்ல. இவைகளெல்லாம் உலகத்தில் நாம் அனுபவிக்கத் தேவன் கிருபையாய் இரவலாய்த் தந்த ஈவுகளாகும். கோடாரியின் கைபிடியைப் போல நமக்கு அழிந்து போகக் கூடிய சரீரமும், இரும்பைப் போன்ற அழியாத ஆத்துமாவும் உண்டு. எவ்வாறு கோடாரி கொஞ்சம் கொஞ்சமாகக் கழறுகிறதோ, அதேபோல் ஒரு மனிதனின் ஆத்துமா திடீரென்று முழுவதுமாகப் பாவத்தில் விழுந்து போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பாவத்தில் சிக்குகிறது. முடிவில் அது அவனை பாதாளத்திற்கு அழைத்துச் செல்கிறது. எனவே நாம் இரவலாய் தேவனிட மிருந்து பெற்றுக் கொண்ட இந்த ஆத்துமா, பிள்ளைகள், சொத்து ஆகிய எல்லாவற்றையுங் குறித்துத் தேவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். தேவன் நமக்குக் கொடுத்த சரீரத்தை நாம் பரிசுத்தமாகப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் தேவபிள்ளைகளின் சரீரத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிறார். 

எலிசாவின் மூலம் கர்த்தர் செய்த அற்புதம்: 

2 இராஜாக்கள் 6 : 6, 7 “தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,

அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.”

தேவனுடைய மனுஷனான எலிசா அவனுடைய கூச்சலைக் கேட்டு ஏன் அஜாக்கிரதையாயிருந்தாய் என்று கேட்காமல், அந்தக் கோடாரி எங்கே விழுந்தது என்று கேட்டான். அவன் வேதனையுடன் விழுந்த இடத்தைக் காட்டினான். எலிசா அமிழ்ந்து போன அந்தக் கோடாரியை மிதக்கச் செய்வதற்கு மரணம் என்னும் தண்ணீருக்குள் ஒரு கொம்பை வெட்டி அந்த இடத்தில் எறிந்தார். வெட்டி எறியப்பட்ட அந்தக் கொம்பு இரண்டு வேலை செய்தது. 1. மிதக்கவே முடியாத அந்த இரும்பை மிதக்கப் பண்ணியது. 2. அது கரைக்கு வருவதற்கு உதவி செய்தது. தண்ணீரின் ஆழம்வரை சென்று விழுந்த இரும்பு கோடாரி உயிர்த்தெழுந்ததைப்போல மேலே கொண்டு வந்தது. அமிழ்ந்து கிடந்த கோடாரி மிதந்து வந்தது. எலிசா தான் அதை எடுக்காமல் அவனையே எடுக்கச் சொன்னார். கொம்பினால் ஆழத்தில் கிடக்கும் இரும்பை எடுக்க முடியாது. இது கர்த்தர் செய்த அற்புதம். என்றைக்கும் மனிதன் மரணம் என்னும் தண்ணீரிலிருந்தும், நியாயத்தீர்ப்பிலிருந்தும் எழும்பி வரமுடியும். 

கிறிஸ்துவின் பிள்ளைகள் விழுந்த நிலையில் கிடக்க வேண்டியதில்லை. இயேசு நம்முடைய பாவத்திற்காக சிலுவையில் மரித்த படியினால் அவர்மேல் வைக்கும் விசுவாசத்தினாலே பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி ஓட முடியும். இயேசுவானவர் மீண்டும் நம்மை உயிர்ப்பித்து அவருடைய சித்தத்தைச் செய்ய வைக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். நாம் விசுவாசத்துடன் இயேசுவைப் பற்றிப்பிடித்துக் கொண்டால் போதும். மரித்துக் கிடந்த நம்மை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வார். அவர்மேல் வைக்கும் விசுவாசத்தினாலே இழந்த மனிதன் அதைத் திரும்பப் பெற்றான். அதேபோல் பாவத்தில் செத்துக் கிடந்த நம் ஜீவனை மீண்டும் தந்து பிழைத்துக்கொள் என்கிறார். இயேசு நம்மோடிருந்தால் நமக்கு மரணம் இல்லை. நமது ஆத்துமா நஷ்டப்படாது, வீணாகாது. இயேசுதான் நமது ஆத்துமாவின் அதிபதியாயிருக்கிறார். நமது வாழ்க்கை முற்றுப் புள்ளியாயிருக்கலாம். ஆனால் இயேசு அதைத் தொடரச் செய்வார். தேவன் கைவிடுகிறவர் அல்ல. கைதூக்கி விடுகிற தேவன் இயேசு. 

இரவலாக கோடாரியை வாங்கி வந்தவன் சந்தோஷமாகக் கோடாரியின் இரும்புப் பகுதியை எடுத்துக் கொண்டான். பளுவான இரும்பால் செய்யப்பட கோடாரி மிதந்து வந்தது மிக ஆச்சரியமான காரியம். ஆங்கில வேதாகமத்தில் அந்தக் கோடாரி நீந்தி கரைக்கு வந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு இயற்கையின்மேல் அதிகாரம் உண்டென்பதை இதிலிருந்து அறிகிறோம். இழந்தவன் இழந்தவனாய்ப் போகாமல் பெற்றுக் கொண்டவனாய்ப் போனான். அந்தக் கொம்புதான் கல்வாரியில் நமக்காக ஜீவனைக் கொடுத்த இயேசு என்னும் கொம்பு. ஈசா என்னும் அடிமரத்தின் கொம்பு (ஏசாயா 11 : 1). இரட்சண்யக் கொம்பு (சங்கீதம் 18 : 2). இதுபோன்ற கொம்புதான் மாராவின் கசப்பை மதுரமாய் மாற்றிற்று ( யாத்திராகமம் 15 : 25). 

லூக்கா 15 : 8, 9 ல் யூத குலத்திலுள்ள கன்னிகையானவள் புருஷனுக்கென்று நியமிக்கப்பட்டபோது 10 வெள்ளிக்காசுகளை ஒரு நூலில் கோர்த்து அவளுடைய தலையில் கட்டுவான். அவள் திருமணம் ஆகிறவரை அதை பத்திரமாய் பாதுகாக்கப்பட வேண்டும். அதில் ஒன்று தொலைத்தாலும் அவள் தனக்குத் தகுதியில்லை என்று தள்ளி விடுவான். அப்படி நியமிக்கப் பட்டிருக்கும் போது அந்தப்பெண் ஒரு வெள்ளிக்காசைத் தொலைத்து விட்டாள். அது அவள் வீட்டுக்குள் தானிருந்தது. விளக்கைக் கொளுத்தி வைத்து வீட்டைப் பெருக்கித் தேடினாள். தேவனால் தீர்க்கக் கூடாத எந்தப் பிரச்சனையும் இல்லை. எவ்வளவு ஆழத்தில் எதிரிகளால் புதைத்து வைக்கப் பட்டாலும் மிதந்து வர முடியும். அதேபோல் நாம் நமது வாழ்க்கையில் எதை இழந்திருந்தாலும் தேவனண்டை சென்று அறிக்கையிடும் போது தேவனால் அதைநாம் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். நமக்காகத் தேவ கொம்பாகிய கிறிஸ்து வெட்டி எறியப் பட்டார். அதன் விளைவாக நாம் உயிர்ப்பிக்கப்படுகிறோம். வானத்திற்கு எலியா எடுத்துக் கொள்ளப்படும் போது எல்லோரும் பார்க்கும்படியாக அது நடந்தது. இது இயற்கைக்கு மாறுபட்ட அற்புதம். இன்றைக்கும் ஜனங்கள் கோடாரி வழுக்கி விழுந்ததைப்போல வழுக்கி விழுந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் எந்தப் பயனுமில்லை. 

முடிவுரை:

ஆற்றுத் தண்ணீரில் மூழ்கிய கோடாரியின் இந்த அற்புதம் தேவன் அற்பமாகத் தோன்றும் காரியங்களிலும் அக்கறையும், கவனமுமாயிருக்கிறார் என்பதைப் பார்க்கிறோம். இந்த அற்புதமானது 1. மனிதனின் சிக்கலான நேரங்களில் தேவனுடைய இரக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. 2. தேவனுடைய வல்லமையானது தீர்க்கதரிசியின் மூலம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தியது. இதன் மூலம் எலிசாவின் அதிகாரமும், வல்லமையும் மக்களுக்குத் தெரிய வந்தது. 3. எல்லா தீர்க்கதரிசிகளும் இதைக்கண்டு எலிசாவின் மேல் அதிக விசுவாசம் வைத்தார்கள். அதேபோல் பணக்காரர்களுக்கு மட்டுமல்ல ஏழைகளையும் சந்தித்து ஊழியம் செய்ய வேண்டும். ராஜாக்களுக்குப் போரில் உதவும் கர்த்தர், எளிய இரவல் வாங்கும் ஏழைகளுக்கும் உதவுகிறார். நாம் யாராயிருந்தாலும் கர்த்தர் நேசிப்பார். நம்முடைய சிறிய தேவையையும் கர்த்தர் கவனித்து நமக்கு உதவி செய்வார். 

கம்பிலிருந்து கழன்று விழுந்த கோடாரியைப்போல நீங்களும் விழுந்துபோன நிலைமையில் பின்வாங்கிக் கிடக்க வேண்டிய அவசியமில்லை. இயேசு உங்களுடைய பாவத்திற்காக சிலுவையில் மரித்த படியினாலே அவர்மேல் வைக்கும் விசுவாசத்தினாலே பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி ஓட முடியும். நீங்கள் அர்த்தமற்ற, நோக்கமற்ற வாழ்க்கை வாழ வேண்டிய அவசியமில்லை. அழுக்கான தண்ணீரில் இருக்கிறீர்களா நீங்கள் இருக்கிற இடம் தெரியாமல் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் உங்களுக்காகச் சிலுவையில் தொங்கிய இயேசுவை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்வதினால் உங்களை மரணம் என்னும் தண்ணீரிலிருந்து தூக்கியெடுத்து கர்த்தருடைய திட்டம் என்னும் கணையிலே மீண்டும் பொருத்தி உங்களை எந்த நோக்கத்தோடு உருவாக் கினாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும்படியாக உங்களை நிச்சயமாக பயன்படுத்துவார். ஆமென்.

Related Posts