Menu Close

பள்ளத்தாக்கைத் தண்ணீரால் நிரப்பச் செய்தார்

மூன்று ராஜாக்கள் மோவாபியரோடு யுத்தத்துக்குப் புறப்படல்:

2 இராஜாக்கள் 3 : 9 – 12 “அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற் போயிற்று. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான். அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான். அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்.”

ஆகாபின் குமாரனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி 12 வருஷம் ராஜ்ஜியபாரம் பண்ணினான். அவனது காலத்தில் தன்னுடைய தகப்பன் பண்ணுவித்த பாகால்களின் சிலைகளை அகற்றி விட்டான். ஆனால் யெரொபெயாமின் பாவங்களை அவனை விட்டு நீக்கவில்லை. மோவாப் ராஜா இஸ்ரவேல் ராஜாவுக்கு கப்பம் கட்டி வந்தான். ஆனால் ஆகாப் ராஜா மரித்தபின் மோவாபிய ராஜாவான மேசா கப்பம் கட்டவில்லை. இதனால் யோராம் ராஜா (ஆகாப், யெசபேலின் மகன்) யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைத் தன்னோடு யுத்தத்துக்கு வரக் கூப்பிட்டான். யூத ராஜாவும், சம்மதித்து ஏதோம் ராஜாவையும் கூட்டிக்கொண்டனர். யோசபாத் ஆகாபின் குடும்பத்தோடு சம்பந்தம் செய்தவன். அதனால் யோசபாத்துக்குப் பலவித சிக்கல்கள் ஏற்பட்டது. ஆனாலும் இவர்கள் கூப்பிடுகிற இடங்களுக்குப் போக வேண்டியதிருந்தது. 

யோசபாத் யோராம் ராஜாவிடம் வருகிறேன் என்றதோடு நில்லாமல் “நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் “ என்றான் (2 இராஜாக்கள் 3 : 7).யெகூ தீர்க்கதரிசி துன்மார்க்கனுக்குத் துணை நின்று கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் (ஆகாபை) சிநேகிக்கலாமா என்று யோசபாத்தைப் பார்த்துக் கேட்டான். அவர்கள் மூவரும் ஏதோம் வழியாகப் போகலாம் என்று முடிவெடுத்தனர். இஸ்ரவேல் ராஜாவும், ஏதோம் ராஜாவும், யூதா ராஜாவும் கூட்டுப்படையாகச் சேர்ந்து மோவாபின் ராஜாவான மேசாவுக்கு எதிராகப் புறப்பட்டனர். அந்தப் பயணம் நீண்ட பயணமாக இருந்தபடியால் தண்ணீரற்ற இடத்திலே அகப்பட்டுக் கொண்டனர். அதனால் அவர்களால் தொடர்ந்து படைகளை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இராணுவத்தினருக்கும், மிருகஜீவன்களுக்கும் தாண்ணீர் இல்லாமல் போயிற்று. அதனால் மோவாபியர் மேற்கொள்ளும் நிலைமையில் பயந்தனர். 

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா கர்த்தர் மூன்று ராஜாக்களும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தார் என்றான். யோசபாத் தேவனுக்குப் பயந்த ஒரு மனிதனாக இருந்ததால் ஒரு தீர்க்கதரிசியை அழைத்துச் செய்ய வேண்டியதை அறிந்து கொள்ள கர்த்தரிடம் விசாரிக்க விரும்பினான். ஆனால் யோசபாத் யோராமோடு யுத்தத்திற்கு புறப்படுவதற்கு முன் கர்த்தரிடம் கேட்டிருக்க வேண்டும். அதை இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரிடம் விசாரித்தான் அவன் “எலிசாவின் கைக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான்” என்றான். அப்போது எலிசாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரண்டை வந்தனர். யோசபாத் கர்த்தருடைய வார்த்தை எலிசாவினிடத்தில் இருக்கிறது என்றான். நம்மோடிருப்பவர்கள் கர்த்தரை ஏற்றுக்கொள்ளாதவர்களாயினும் நம்முடைய சாட்சியை விட்டு விடக் கூடாது. நம்முடைய வாழ்க்கையாலும், சொற்களாலும், அவர்கள் நடுவில் கர்த்தரை மகிமைப் படுத்த வேண்டும். 

எலிசாவின் கோபமான பதிலும், ஆவிக்குள்ளானதும்:

2 இராஜாக்கள் 3 : 13 – 15 “எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான். அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,”

இஸ்ரவேலின் ராஜாவை எலிசா உம்முடைய தகப்பனாகிய ஆகாபின் தீர்க்கதரிசிகளிடமோ, தாயாரின் தீர்க்கதரிசிகளிடமோ போகச் சொல்லி கடிந்து கொண்டார். அப்பொழுதும் இஸ்ரவேல் ராஜா கர்த்தர் மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக் கொடுப்பதற்கு வரவழைத்தார் என்று இரண்டாவது தடவையாகக் கர்த்தரைக் குறை கூறினான். கர்த்தரைப் பின்பற்றுகிறவரான யோசபாத்திற்காகவே எலிசா உதவி செய்ய முன் வந்ததாக சேனைகளுடைய கர்த்தருக்கு முன் நிற்கிற தான் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுவதாகக் கூறினான். ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை எலிசாவிடம்தான் இருந்தது. ஒரு ஊழியக்காரன் எதனால் அறியப்படுகிறானென்றால் கர்த்தருடைய வார்த்தை அவனிடமிருந்து வெளிப்படுவதால். நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நம்மைச் சரியாய் நடத்துவது கர்த்தருடைய வார்த்தை மட்டுமே. கர்த்தருடைய வார்த்தை மட்டும் நமக்குள் வந்துவிட்டால் நாம் எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை. புதிய ஏற்பாட்டில் யோவான்ஸ்நானகனுக்குத் தோற்றம் கூட சரியாக இல்லை. ஆனால் அவனிடம் தேவனுடைய வார்த்தையிருந்ததால் வனாந்தரத்தில் அவனுடைய வார்த்தையைக் கேட்க யூதேயா தேசத்தார் அனைவரும் சுற்று வட்டாரத்திலிருந்த அனைவரும் ஞானஸ்நானம் எடுக்கச் சென்றனர். ராஜாக்களும் அவனைத் தேடித் சென்றனர். கர்த்தருடைய வார்த்தை நம்மைத் தேற்றும், உயர்த்தும், கனப்படுத்தும், வெளிச்சத்தைக் காட்டும். எலிசா அவர்களைப் பார்த்து ஒரு சுரமண்டலக்காரனை அழைத்து வரச் சொன்னார். பழைய ஏற்பாட்டின் காலத்தில் இசைக்கருவிகள் வாசித்துத் தீர்க்கதரிசனம் கூறுவது உண்டு. சுரமண்டலம் வாசிக்கும்போது ஏற்பட்ட இசை சுற்றிலுமுள்ள வெளி ஒலிகளினால் கவனச் சிதறல் ஏற்படாமலும் அவநம்பிக்கையுள்ள குரல்கள் கேட்காமலும் இருப்பதற்காக அழைப்பர். எலிசாவின் உள்ளம் ஒருமனப்பட்டு ஆண்டவரின் செய்தியைக் கேட்கும் சூழ்நிலை உருவாகி கர்த்தருடைய கரம் அவன் மேல் இறங்கியது. அதன்பின் கர்த்தர் இவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்படியாக இரக்கம் பாராட்டினார். ஆகாபுக்கும் தேவன் இரக்கம் காட்டினார். அவன் மனந்திரும்பவில்லை. அகசியாவும் அதேபோல் கட்டிலிலிருந்து இறங்காமல் செத்தான். இப்பொழுது யோராமுக்கு இரக்கம் காட்ட விரும்புகிறார். 

 எலிசாவின் தீர்க்கதரிசனம்:

2 இராஜாக்கள் 3 : 16 — 19 “அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார். நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.”

எலிசா அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருந்தாலும் கர்த்தருடைய கரம் இறங்குகிறவரை ஒன்றும் சொல்லவில்லை. கர்த்தருடைய கரம் இறங்கினபின்தான் தேவ வார்த்தைகளைக் கூறினான். எலிசா தீர்க்கதரிசனமாக அங்கிருக்கும் பள்ளத்தாக்கில் வாய்க்கால்களை வெட்டச் சொன்னார். 

  1. காற்றும், மழையும் இல்லாமலே அந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் அதனால் உங்கள் ஆடுமாடுகளை, மிருக ஜீவன்களும் குடிக்கும்படிக்கு தண்ணீர் கிடைக்கும் என்றார். அவ்வாறு செய்வது கர்த்தருக்கு அற்பமான காரியம் என்றார். 
  2. கர்த்தர் மோவாபியரை அவர்கள் கையில் ஒப்புக் கொடுப்பார் 
  3. மோவாபியரின் சகல கோட்டைகளையும், சகல சிறந்த பட்டணங்களையம் தகர்த்தெரியச் செய்வார். 
  4. அங்குள்ள நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப் போடுவீர்கள். 
  5. அவர்கள் உபயோகப்படுத்துகிற நீரூற்றுகளையெல்லாம் அடைத்துப் போடுவீர்கள். 
  6. அவர்களின் நல்ல நிலங்களையெல்லாம் கல்மேடுகளாக்கி உபயோகப் படுத்த முடியாமல் பண்ணுவீர்கள் என்றும், கூறினார். இந்தத் தீர்க்கதரிசனம் அவர்களால் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. பெரிய அற்புதங்களை செய்வதும், தனது மக்களின் தேவைகளைச் சந்திப்பதும் கர்த்தருக்கு மிகவும் எளிதாகும். நம்முடைய தேவை எதுவானாலும் நாம் கேட்பதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக அதைச் தீர்க்கக் கர்த்தரால் முடியும். நம்பிக்கையோடு ஜெபித்துப் பெற்றுக்கொள்வோமாக. அவர்கள் எலிசா சொன்னதை நம்பினர், விசுவாசித்தனர், வாய்க்கால்களை எலிசா சொன்னபடி வெட்டினார்கள் 

இஸ்ரவேலரின் வெற்றி:

2 இராஜாக்கள் 3 : 20 – 24 “மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று. தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல் தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக்கொண்டு வந்து எல்லையிலே நின்றார்கள். மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின் மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது. அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து,”

தேவ வார்த்தை அவ்வாறே நிறைவேறியது. காற்றுமில்லாமல், மழையும் இல்லாமல் தண்ணீர் பாய்ந்து வந்தது. ஏதோம் தேசத்தின் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து தேசமே தண்ணீரால் நிரம்பியது. மனுஷர்களும், மிருகஜீவன்களும் குடிக்கத் தண்ணீரும் அவர்களுக்கு கிடைத்தது. மோவாபியர்கள் மூன்று ராஜாக்களும் யுத்தம் பண்ண வருகிறதை அறிந்த போது அவர்களும் படைகளை ஆயத்தப்படுத்தி எல்லையில் நின்றார்கள். மோவாபிய எதிரிகள் தண்ணீரின் நிறம் சிவப்பாக இருந்ததைப் பார்த்துப் பயந்தனர். அது இரத்தம் கலந்த தண்ணீர் என்றெண்ணினர். மூன்று ராஜாக்களும் ஒருவருக்கொருவர் வெட்டி மாண்டு போனதாக நினைத்தனர். தண்ணீரின் நிறமாற்றத்துக்குக் காரணம் நிலத்தின் நிறமோ, சூரியக் கதிர்களின் ஒளியின் பிரதிபலிப்போ இருக்கலாம். அதனால் மோவாபியர் ஏமாந்து தங்கள் ஜெயித்துவிட்டதாக நினைத்து துணிவுடன் இஸ்ரவேலின் பாளையத்துக்குப் போய் கொள்ளையடிக்கச் சென்றனர். உடனே இஸ்ரவேலர் எழும்பி மோவாபியரை முறியடித்தனர். மேசா ஒழுங்கைக் கடைப்பிடிக்காமல் கொடுக்க வேண்டிய கப்பத்தை ஏமாற்றினான் அதற்குத் தண்டனையைக் கர்த்தர் கொடுத்தார். தண்ணீரின் நிறத்தைப் பார்த்து அவர்களை ஏமாறச் செய்தது கர்த்தர். நாமும் யாரையும் ஏமாற்ற நினைக்கக் கூடாது. 

இதன் மூலம் தாகம் தீர்ந்தது மட்டுமல்ல வெற்றியும் கிடைத்தது. அவர்களால் புரிந்து கொள்ள இயலாத தீர்க்கதரிசனமாக இது அமைந்தது. நம்முடைய தேவைகள் அதிகமாக இருக்கலாம். அதனால் அதற்கான சூழ்நிலைகளாக இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. தேவனால் காற்றும் மழையும் இன்றி தண்ணீரைக் கொண்டு வந்தது போல நமது தேவைகளையும் கர்த்தரால் சந்திக்க முடியும். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுமையாக விசுவாசித்து அவரது வார்த்தைக்கு ஏற்ப நடக்க வேண்டும். நமது தேவைகளை சந்திப்பது அவருக்கு அற்பமான காரியம். ஐந்து அப்பம், இரண்டு மீன்களைக் கொண்டு 5000 பேருக்குப் போஷிக்கிற வல்லமையும், ஏழு அப்பங்களை 4000 பேருக்கு பகிர்ந்து கொடுக்கும் வல்லமையும் இயேசுவுக்கு மாத்திரமே உண்டு. எனவே இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றி நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போம்.

Related Posts