இயேசு தன் பெற்றோர்களுடன் 30 வயதுவரை இருந்து அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தார். இந்த 33 வயதுவரை இயேசு தனது பெற்றோருடன் பேசியது மூன்று முறை மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது (லூக்கா 2 : 49, யோவான் 2 : 4, 19 : 26). மனுக்குலத்தின் பாவங்களுக்காக பூமியில் வந்து பிறந்து 30 ஆண்டுகள் குடும்பத்துடன் வாழ்ந்து நம் எல்லோருக்காகவும் பிதா தன்னை அனுப்பிய சித்தம் நிறைவேற தன்னையே சிலுவை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்து பாவமன்னிப்பையும், இரட்சிப்பையும் அளித்தார்.
யோவான் 19 : 26, 27 “அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.”
எது இயேசு சிலுவையில் கூறிய மூன்றாவது வார்த்தை. மரியாள் இயேசு பிறப்பதற்கு தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரம். ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள். மரியாள் பெற்ற கிருபை வேறு யாருக்கும் கிடைக்காது. இரட்சகராகிய கர்த்தரைத் தனது வயிற்றில் சுமந்து குழந்தையாகப் பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றவள். இந்தச் செய்தி பராமரிக்கும் ஒரு செய்தியாகும். இயேசுவின் தாயாகிய மரியாள் பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்கு போயிருந்தாள். அங்கு தன்னுடைய மகன் பரிதாபமாக சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் நிலமையில் இருப்பதைக் கண்டு தாங்க முடியாத துக்கத்துடனும், பாரத்துடனும், சிலுவையின் அருகில் நின்று கொண்டிருந்தாள். இயேசுவானவர் பிறந்த எட்டாம் நாளில் நியாயப்பிரமாண முறையின்படி விருத்தசேதனம் பண்ணுவதற்கு காணிக்கையோடு எருசலேம் சென்றனர். அப்பொழுது அங்கு இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருந்த பரிசுத்த ஆவியால் நிறைந்த சிமியோன் என்ற தீர்க்கதரிசி இயேசுவைக் கைகளில் ஏந்தி “உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்.” என்று லூக்கா 2 : 35 ல் தீர்க்கதரி சனம் உரைத்தார். அந்த இடத்தில் மரியாள் சிமியோன் கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை நினைத்திருப்பாள். மரியாளின் ஆத்துமாவை உருவக் குத்தும்படி சிலுவைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கலிலேயாவிலிருந்து இயேசுவோடு வந்திருந்த ஸ்திரீகள், யோவானைத் தவிர மற்ற சீஷர்கள் எல்லோரும் ஓடி விட்ட நிலையில் சீஷர்களைக் காட்டிலும் அதிக உண்மை உள்ளவர்களாக, அர்ப்பணம் உள்ளவர்களாக, சிலுவையின் அருகில் இயேசு மரிப்பதை நின்று மிகுந்த மனவேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கே நின்ற பெண்களில் இயேசுவின் தாயாரின் சகோதரியும் ஒருவள். இந்த சகோதரி தான் யாக்கோபு, யோவானின் தாயாகிய சலோமே என்பவள். இதனால் யோவான் இயேசுவின் உறவினராக இருந்திருக்க வேண்டும் மூன்றாவது பெண் கிலேயோப்பாவின் மனைவியாகிய மரியாள் (லூக்கா 24 : 18) இவள் சின்ன யாக்கோபுக்கும், யோசேக்கும் தாயானவள் (மாற்கு 15 : 40) சிலுவையில் அடியில் நின்ற நான்காவது பெண் மகதலேனா மரியாள். இவளைக் குறித்து மற்ற மூன்று சுவிசேஷங்களிலும் காணலாம் (மாற்கு 15 : 40, 47, லூக்கா 8 : 2, யோவான் 20: 11). இவளிடமிருந்து இயேசு 7 பிசாசுகளைத் துரத்தியதாக லூக்கா 8 : 2 ல் பார்க்கிறோம். இயேசு சிலுவையில் அறையப்பட்ட போதும் பின்பு உயிர்த்தெழுந்த பின்பும் இயேசுவுடன் காணப்பட்டவள் இந்த மரியாள் தான்.
இயேசுவின் தாயாகிய மரியாள் இயேசு ஊழியத்தை ஆரம்பித்தபின் நான்கு இடத்தில் மட்டுமே அவர்களைப் பற்றிய செய்தி உள்ளது. 1. கானாவூர் திருமண வீட்டில் மரியாள் இயேசுவிடம் பேசியதைப் பார்க்கிறோம். 2. கப்பர்நாகூமில் ஒரு வீட்டில் இயேசு பிரசங்கம் பண்ணிக்க கொண்டிருந்த போது இயேசுவைப் பார்க்க மரியாள் வந்ததை மத்தேயு 12 : 46 – 50ல் பார்க்கிறோம். 3. மரியாள் சிலுவையின் அருகில் தன்னுடைய மகன் பட்டபாடுகளைத் தாங்க முடியாமல் மிகுந்த வேதனையுடன் நின்று கொண்டிருந்தாள். காபிரியேல் தூதன் லூக்கா 1 : 32, 33 ல் உன்னதமானவருடைய குமாரன் என்றாரே, தாவீதின் சிங்காசனத்தைத் தன் மகனுக்குக் கொடுப்பார் என்றாரே, தன் மகனின் ராஜ்ஜியத்துக்கு முடிவிராது என்று சொன்னாரே, இப்பொழுதோ தன் பிராணனை முடிக்கப் போகிறானே என்றும், சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டியவன் சிலுவையில் நின்று கொண்டிருக்கிறான் என்றும் துடிதுடித்துக் கொண்டிருந்தாள் 4. இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றபின் எருசலேமில் பெந்தேகோஸ்தே நாளன்று தூய ஆவியானவரின் வருகையை எதிர்நோக்கிய போது சீஷர்களுடன் மரியாளும் இருந்தாள்.
மரியாள் இயேசுவைக் கர்ப்பத்தில் சுமந்தத்திலிருந்த்தே பாடுகளைத் தான் அனுபவித்துக் கொண்டிருந்தாள். கணவனோடு சேராமல் கர்ப்பம் தரித்ததால் பலரின் பேச்சுக்கு உள்ளாளானாள். ரோம அரசாங்கத்தால் குடிமதிப்பெழுதப் படவேண்டுமென்ற போது, கர்ப்பமாக இருக்கும் போது பல மைல்கள் பிரயாணம் பண்ணி பெத்தலகேமுக்குச் சென்றாள். அங்கும் பிள்ளைபேற்றுக்கு இடமில்லாமல் தவித்தாள். ஏரோது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொல்லச் சட்டம் இயற்றியதால் இயேசுவுடன் எகிப்துக்குச் சென்றனர். இவ்வாறு இயேசுவைக் காப்பாற்ற மரியாள் பட்ட பாடுகள் அநேகம். இயேசு சிலுவையில் மரிக்கும் நேரத்திலும் தன்னைக் குறித்து அக்கறை எதுவும் படாமல், தன்னுடைய தாயின் மேல் கரிசனையும், அக்கறையும் உடையவராக இருந்தார். தன்னுடைய வேளை முடிந்து விட்டதால் தான் இனி பூமியில் இருக்கப் போகாததால் தான் நேசித்த சீஷனாகிய யோவானிடம் தன் தாயைக் கவனிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார். இனி அவன் தான் உன் மகன் போல் இருப்பான் என்கிறார். ஒருவேளை மரியாளின் கணவர் முன்னரே மரித்திருக்கலாம். மரியாளின் மூலம் பிறந்த மற்ற சகோதரர்களிடமும் தன்னுடைய தாயைக் கவனிக்கும் பொறுப்பைக் கொடுக்கவில்லை. காரணம் அவர்கள் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளவோ, விசுவாசிகளாக மாறவோ இல்லை (யோவான் 7 : 5).
ஏசாயா 52 : 13 ல் “இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார்” என்றதைப்போல இயேசு தன்னுடைய கடைசி நிமிடத்திலும் மிகவும் பொறுப்புள்ளவராகத் தம்முடைய பூமிக்குரிய தாயை சரியாகப் பராமரிக்கும் பொறுப்பை தன்னுடைய அன்பின் சீடனிடம் ஒப்புக் கொடுத்ததின் மூலம் எவ்வளவு ஞானமுள்ளவர் என்று அறிகிறோம். யோவானின் தாய் இயேசுவின் தாயான மரியாளின் சகோதரி. இவர்களும் பேதுருவும் நெருங்கிய நண்பர்கள். இயேசு தெரிந்து கொண்ட 12 பேரில் பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரும் மிகவும் முக்கியமானவர்கள். யோவான் இயேசுவை அதிகமாக நேசித்தபடியால் அவருடைய மார்பில் சாய்ந்து கொண்டு பேசும் அளவுக்கு அவர்மேல் அன்பாயிருந்தான் (யோவான் 19 : 35). யோவான் பிற்பாடு ஒரு சுவிசேஷ புத்தகத்தையும், 3 நிருபங்களையும், வெளிப்படுத்தின புத்தகத்தையும் எழுதினான். நேற்று நடந்ததை சுவிசேஷமாகவும், இன்று எப்படி நடக்க வேண்டுமென்பதை நிருபமாகவும் நாளை எப்படி நடக்கப் போகிறது என்பதை வெளிப்படுத்தின விசேஷமாகவும் எழுதினான்.
இயேசு தாயின் மீது கரிசனையுள்ளவராக இருந்ததை இங்கு பார்க்கிறோம். தவிக்கின்ற தன்னுடைய தாய்க்கு ஆறுதல் பரிசாக யோவானையும், நின்ற சீடனுக்கு ஆறுதல் பரிசாகத் தன்னுடைய தாயையும் கொடுத்தார். அந்நாள் முதல் யோவான் மரியாளைத் தன்னுடைய தாயாக ஏற்றுக்கொண்டு பராமரித்து வந்தான். பழைய ஏற்பாட்டில் வேதபாரகரும், பரிசேயரும் கொர்பான் காணிக்கையைப் பிள்ளைகள் செலுத்தினால் போதும் அது தந்தையையும், தாயையும் கனம் பண்ணியதற்குச் சமம் என்ற ஒரு பாரம்பரியத்தை ஏற்படுத்தி வைத்திருந்தனர். பெற்றோரைத் தள்ளிவிட நினைக்கிறவர்கள் ஆசாரியனிடம் இந்தக் காணிக்கையைக் கொடுத்தபின் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் பார்க்கவில்லை என்று புகார் கொடுக்க முடியாது. இதைத் தேவன் சொல்லவில்லை. அவர்கள் தங்களுடைய சுய லாபத்துக்காக இதைக் கொண்டு வந்தனர். அதை இயேசு மாற்றினார்.
இயேசு ஊழியம் செய்தபோது அவரைச் சுற்றி அத்தனை கூட்டம் சென்றது ஆனால் அவரைக் கைது செய்த போது ஒருவரையும் காணவில்லை. இயேசுவோடிருந்த பேதுரு கூட “நான் உம்மோடே மரிக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலிக்க மாட்டேன்” என்று வீர வசனம் பேசியவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது ஒளிந்து நின்று பார்த்தார். யோவான் மட்டுமே நின்றார். இயேசு மரித்தபின்பும் 11 வருடங்கள் மரியாள் மரிக்கிற வரை யோவான் பாதுகாத்தார். மற்ற எல்லோரும் இயேசுவை விட்டுப் போனாலும் யோவான் 6 மணி நேரங்கள் வைராக்கியமாக சிலுவையடியில் நின்றதால் பத்மு தீவில் யோவான் இருக்கும் போது எதிகாலத்தைக் குறித்த இரகசியங்களை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் பரலோகத்தைப் பார்க்கும் பாக்கியமும், அங்கு இயேசுவையும் அங்கு நடப்பவைகளைப் பார்க்கும் பாக்கியமும் பெற்றான். யோவானைத் தவிர மற்ற எல்லா சீஷர்களும் இரத்த சாட்சியாய் மரித்தனர். யோவானோ வயது சென்று இயற்கை மரணமடைந்தார். எபேசு பட்டணத்தில் வல்லமையாக ஊழியம் செய்தார். எருசலேமைப் போல் எபேசுவும் கிறிஸ்தவர்களுக்கு முக்கிய இடமாக இருந்தது. மரியாளின் கல்லறையும், யோவானின் கல்லறையும் எபேசுவில் உள்ளது. பவுலும் அங்கிருந்தார். எபேசுவில் வைத்துத் தான் வெளிப்படுத்தல் புத்தகத்தை எழுதினார். தேவகுமாரனான இயேசு மனுஷ குமாரனாக பூமிக்கு வந்தார். அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தன்னுடைய பெற்றோரைக் கனம் பண்ணும் பிள்ளையாக வாழ்ந்தார்.
யாத்திராகமம் 20 : 12ல் “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.”
எபேசியர் 6 : 2, 3ல் பவுல் “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.”
உபாகமம் 5 : 16 “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” என்றும் இதைத்தான் சாலமோன் ஞானி
நீதிமொழிகள் 19 : 26 “தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.”’ என்றும்
நீதிமொழிகள் 20 : 20 “தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்.” என்றும் நீதிமொழிகள் 23 : 22 “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.”
என்றும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இயேசு நமக்குக் காண்பித்த மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும். பழைய ஏற்பாட்டில் இயேசுவுக்கு நிழலான யோசேப்பு தன் உடன்பிறப்புகளிடம் காட்டிய அன்பையும், அவர்களைப் போஷித்துப் பராமரித்த விதத்தையும் அவன் தன் பெற்றோருக்குச் செய்த கடமையையும் பார்த்தோம். நாமும் இயேசுவைப்போல பெற்றோரை ஆதரித்து, கனம் பண்ண வேண்டுமென்று அறிகிறோம். ஆனால் இயேசு உயித்தெழுந்து பரலோகம் போனபின்தான் இயேசுவின் சகோதரர்கள் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்ததாக அப்போஸ்தலர் 1 : 14 ல் பார்க்கிறோம். மரியாள் தனது முத்த மகன் உயித்தெழுந்த பின், பெந்தேகோஸ்தே நாளுக்குப் பின் தன்னுடைய எல்லாப் பிள்ளைகளும் இரட்சிக்கப்பட்டதைக் காணும் பேறு பெற்றாள். அவர்களோடு காத்திருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றாள். சபையின் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல், தலைமை தங்காமல் தாழ்மையுடன் சாதாரண விசுவாசியாக இருந்தாள். இயேசுவானவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு அவமானத்தை எண்ணாமல் சகித்ததைப் போல, நாமும் சிலுவையை சகித்து ஓட வேண்டும் (எபிரேயர் 12 : 2). இதற்கு உதாரணமாக இயேசுவின் தாயாகிய மரியாளைப் பார்க்கிறோம். ஆமென்.