2 இராஜாக்கள் 2 : 12 – 15 “அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். பின்பு அவன் எலியாவின் மேலிருந்துகீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான். எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர் கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:”
எலியா எலிசாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது சுழல் காற்றிலே பரலோகத்துக்கு ஏறிப் போவதைப் பார்த்த எலிசா தாங்க முடியாமல் அழுதான் புலம்பினான். எலியாவை விட்டுப் பிரிய முடியாதவனாக “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாயிருந்தவரே” என்று கதறுகிறான். தாங்க முடியாமல் தன்னுடைய வஸ்திரத்தை இரண்டு துண்டாகக் கிழித்தான். எலியாவின் அற்புதமான வாழ்க்கையின் முடிவு காட்சி இது. அப்பொழுது எலியாவின் மேலிருந்து சால்வை கீழே விழுந்தது. உடனே எலிசா கீழே விழுந்த எலியாவின் சால்வையை எடுத்துத் திரும்பி யோர்தானுக்குச் சென்று அதன் கரையிலே நின்றான். யோர்தான் நதி எர்மோன் மலையிலே உற்பத்தியாகி கீழே சவக்கடலை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து ஓடும். யோர்தானை பாடுகளுக்கும், துயரங்களுக்கும் ஒப்பிடலாம். யோர்தான் நதியைத் தாண்டி கானான் இருப்பதைப் போல நம்முடைய மரணத்தைத் தாண்டி பரம கானான் இருக்கிறது.
எலிசாவின் கையிலே எலியாவின் சால்வையும், உள்ளத்திலே எலியாவின் தேவன் மேல் விசுவாசமும் இருந்தது. எலியாவைக் கொண்டு அற்புதம் செய்தவர் தன்னைக் கொண்டும் அற்புதம் செய்வார் என்ற நம்பிக்கையோடு “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே” என்று சத்தமிட்டுத் தண்ணீரை அடித்தான். அப்பொழுது தேவனுடைய வல்லமை வெளிப்பட்டது. யோர்தானின் தண்ணீர் இருபக்கமாகப் பிரிந்தது. எலிசா மறுகரைக்குப் போய்ச் சேர்ந்தான். கர்த்தர் தம்முடைய பெயரைப் தம்முடைய பிள்ளைகளுடைய பெயரோடு இணைத்துத்தான் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்று கூறினார். நேபுகாத்நேச்சார் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் தேவனே என்றழைத்தார் (தானியேல் 3 : 28). தானியேலின் தேவனே என்று தரியு ராஜா அழைத்தார் (தானியேல் 6 : 26). இங்கு எலிசா எலியாவின் தேவனே என்றழைக்கிறார். எலியாவின் தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர் (1 இராஜாக்கள் 17 : 1), அற்புதமாய்ப் போஷிக்கிறவர் (1 இராஜாக்கள் 17 : 6), மரித்தோரை உயிர்ப்பிக்கிறவர் (1 இராஜாக்கள் 17 : 22), அக்கினியால் உத்தரவு அருளுகிறவர் (1 இராஜாக்கள் 18 : 24).
இதற்கு முன் 2 இராஜாக்கள் 2 : 8 ல் எலியா தன்னுடைய சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான். யோர்தானின் தண்ணீர் இரு பக்கமாகப் பிரிந்தது. இக்கரையில் நின்று கொண்டிருந்த எலியாவும், எலிசாவும் உலர்ந்த தரை வழியாக அக்கரைப் பட்டனர். கர்த்தர் இந்த அற்புதம் நடப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்களுக்காகவும் யோசுவாவுக்காகவும் யோர்தான் நதியைப் பிரிந்து போகச் செய்தார். இப்பொழுது அதை எலியாவுக்காகவும், எலிசாவுக்காகவும் பிரிந்து போகப் பண்ணினார். எலிசாவின் ஊழியம் அற்புதங்களோடும், அடையாளங்களோடும் தொடங்கியது. எலிசா புதியதொரு அத்தியாயத்திற்குள் நுழைந்தான். எலிசா இப்பொழுது எலியாவின் இடத்தை எடுத்துக் கொள்கிறான். எலியாவைவிட இரண்டு மடங்கு ஆவியை அவனுடைய தாகத்தால் பெற்றுக் கொண்டான். இந்த வல்லமையானது எலிசாவிலும் இல்லை. அவன் அடித்த சால்வையிலும் இல்லை. கர்த்தரிடமிருந்துதான் வந்தது. இதை எலிசாவும் அறிந்திருந்தார். இது எந்தக் கடவுளும், எந்த மனிதரும் செய்ய முடியாத அற்புதம். எலியா கர்த்தர் மேல் வைத்திருந்த விசுவாசத்தைப் போல் எலிசாவும் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்திருந்தார். அதனால்தான் எலியாவின் தேவன் எங்கே என்று சொல்கிறார். இதேபோல் நாமும் நமது நெருக்கடியான நேரங்களில் மனிதர்களை நாடிச் செல்வதை விட்டு விட்டு அற்புத தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து நமது வாழ்க்கையிலும் அற்புதங்களைப் பெற்றுக் கொள்வோம்.
எரிகோவில் எலிசாவைப் பார்த்து நின்று கொண்டிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவைக் கண்டவுடனே எலியாவின் ஆவி எலிசாவுக்குள் இறங்கியிருப்பதை உணர்ந்தனர். எனவே தங்களுடைய வாயால் அதை அறிக்கையிட்டு எலிசாவுக்கு முன் சென்று தரை மட்டும் குனிந்து அவனை வணங்கினர். இதற்கு முன் கர்த்தரின் கட்டளையின்படியே மோசே கோலை ஓங்கி தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டினார். தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது. 25 முதல் 30 மீட்டர் ஆழமுள்ள சுமார் 18 கிலோமீட்டர் துரத்தைக் கடக்கிறவரை கர்த்தர் தம் காற்றினால் தண்ணீரை ஒதுங்கச் செய்து வெட்டாந்தரையாக்கினார். காற்றினால் ஒதுங்கின தண்ணீரின் ஓரம் உறைந்து பனிக்கட்டியானதால் அது உயரமான மதிலாக நின்றது. இதைத்தான் தாவீது சங்கீதம் 33 : 7 ல் கர்த்தர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்ப்பவர் என்றும், 65 : 7ல் சமுத்திரங்கள் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும் அமர்த்துகிறவர் என்றும் கூறினான்.
சாலமோன் தன்னுடைய நீதிமொழிகள் 8 : 29ல் சமுத்திர ஜலமானது தன்னுடைய கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கர்த்தர் கட்டளையிட்டு வைத்திருக்கிறார் என்றான். எரேமியா 5 : 22 ல் அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும் கடக்கக் கூடாத நித்திய பிராமணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய்க் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார் என்றான். நம்முடைய தேவன் பட்சபாதமுள்ள தேவன் அல்ல (அப்போஸ்தலர் 10 : 34). எலியாவைக் கொண்டும் எலிசாவைக் கொண்டும் யோர்தானின் சவாலை முறித்தவர் நமக்கு விரோதமாக இருக்கும் எல்லாப் பிரச்சனைகளையும் முறியடித்து ஜெயத்தைத் தருவார். ஏனெனில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஜெபத்தைக் கேட்கிறவர், அற்புதங்கள் செய்கிறவர். மரித்தோரை உயிர்ப்பிக்கிறவர். தாவீது கோலியாத்தின் சவாலை வைராக்கியமாக நின்று முறியடித்ததைப் போல நாமும் கர்த்தருக்கென்று வைராக்கியமாக எழும்புவோம். ஆமென்.