சகேயு என்ற ஆயக்காரன்:
லூக்கா 19 : 1, 2 “அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,”
பாலஸ்தீனாவின் முக்கியமான நகரம் எரிகோ. எரிகோ என்றாலே சபிக்கப்பட்ட இடம் என்பதாகும். இயேசு அங்கு சென்றதினால் அந்த இடம் ஆசீர்வாதமாக மாறியது. அந்த எரிகோவின் வழியாக இயேசு பிரயாணம் பண்ணி நடந்து சென்று கொண்டிருந்தார். திரளான ஜனங்கள் அவரோடு சென்றனர். இந்த எரிகோ பட்டணத்தில் வரி வசூலிக்கும் ஆயக்காரர்களின் தலைவனாக ஒருவன் இருந்தான். அவன் பெயர் சகேயு. வரி வசூலிப்பவர்கள் ரோம அரசாங்கத்துக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அதிகமாக வரிகள் கொடுக்கச் சொல்லி மக்களை வருத்தப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகவும் வசதி படைத்த பணக்காரர்களாக இருப்பார்கள்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
சகேயுவின் தாகம்:
லூக்கா 19 : 3, 4 “இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.”
சகேயு இயேசுவைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டிருந்தான். அவர் எப்படிப்பட்டவரோ என்று பார்க்க சகேயு மிகவும் ஆவலாய் இருந்தான். நன்மையானவற்றையும், நல்லவர்களையும் காணும் ஆவலுள்ள சகேயு, தனது ஊரில் இயேசு வருகிறார் என்றதும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எப்படியாவது இயேசுவைக் பார்க்க வேண்டுமென்ற தீர்மானம் எடுத்தான். இவன் ஒரு யூதனாதலால் பழைய ஏற்பாட்டை நன்கு அறிந்திருந்தான். நியாயப்பிரமாணமும் அவனுக்கு நன்றாகத் தெரியும். எருசலேம் தேவாலயத்துக்கும் போய் பலிகளைச் செலுத்தியிருப்பான். ஆனால் அவனுக்கு இயேசு எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற வாஞ்சை இருந்தது. அத்தனை செல்வமும் பதவியும் இருந்தும் அவனுக்குள் நிறைவு இல்லை. அவனுக்குள் குறை இருந்தது. தன்னுடைய குறையை நிவர்த்தி செய்ய மாட்டாரா என்ற ஏக்கம் அவனுக்குள் இருந்தது. நாமும் இதேபோல் இன்னும் அதிகமாய் இயேசுவைத் தேட வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வர வேண்டும். அவன் குள்ளனாக இருந்தபடியால் ஜன நெருக்கடிக்குள் வந்து கொண்டிருக்கிற இயேசுவை அவனால் பார்க்க முடியவில்லை. எனவே வெறியுடன் அவருக்கு முன்னால் ஓடினான். பின் அங்கிருந்த ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். ஒரு அரசாங்க உத்தியோகஸ்தனாக,, பணக்காரனாக இருந்தும் அந்த அந்தஸ்துகளை எல்லாம் விட்டு விட்டு ஓடுகிறான். மற்றவர்கள் தன்னை நோக்கி என்ன நினைத்தாலும் கவலை இல்லை என்று முடிவெடுத்து விடாமுயற்சியுடன் மரத்தில் ஏறி இயேசுவைப் பார்க்க அமர்ந்தான். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவென்றால் ஆண்டவரை சந்திக்க நாம் எதையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
மத்தேயுவின் சாட்சி கடிதம்:
இத்தனை வாஞ்சைக்கும் காரணம் என்னவென்று பார்க்கலாம். ஒரு தேவமனிதன் ரோமுக்குச் சென்று வந்து சொன்ன சாட்சியைப் பற்றி இங்கு கூற விரும்புகிறேன். இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவன் மத்தேயு. இவன் ஒரு வரி வசூலிப்பவன். இவன் சகேயுவுக்கு எழுதிய ஒரு சாட்சி கடிதம் ரோமில் உள்ள ஒரு காட்சிச் சாலையில் வைத்திருப்பதை அந்த தேவ மனிதன் பார்த்திருக்கிறார். எருசலேமிலிருந்து ரோமுக்குத் தான் முதல் முதலாக சுவிசேஷம் போனது. பேதுருவும், பவுலும் இயேசுவின் உயிர்த்தெழுந்த செய்தியை முதன் முதலாக ரோமில்தான் பிரசங்கம் பண்ணினர். அந்த ரோமப் பேரரசை எதிர்த்து அவர்கள் ஜெயித்தார்கள். ரோம தேசமே இயேசுவின் தேசமாக மாறியது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடம் அங்குதான் உள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் இயேசு சுமந்த சிலுவை, அவரை அடித்த ஆணி, மேலும் வேதத்தில் உள்ள அநேக இரகசியங்களை வைத்திருக்கிறார்கள். அங்கு ஒரு சாட்சிக் கடிதமும் இருந்தது. அந்த சாட்சிக் கடிதம் என்னவென்று அந்த தேவ மனிதன் பார்த்தபோது அது மத்தேயு என்ற அப்போஸ்தலன் சகேயுவுக்கு எழுதின கடிதம். அதை வாசிக்கச் சொல்லிக் கேட்டாராம்..
அதில் மத்தேயு என்ன எழுதியிருந்தாரென்றால் தான் வழக்கம்போல் வரி வசூலித்து விட்டு ஆயத்துறையில் அமர்ந்திருந்தபோது, இயேசுவானவர் மத்தேயுவைப் பார்த்தாராம். அப்பொழுது அவரிடம் இருந்த ஒரு ஒளி மத்தேயுவின் மேல் பாய்ந்ததாகவும், ஒரு தேவப்பிரசன்னம் அவர் மேல் இறங்கியதாகவும் உணர்ந்தாராம். அப்பொழுது மத்தேயு தன் பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு அவருடைய பாதத்தில் விழுந்து கிடந்தாராம். அப்பொழுது இயேசுவானவர் “என்னைப் பின்பற்றி வா” என்று கூறியதாக அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இயேசு கூறிய அந்த வார்த்தையில் உயிரிருந்ததை தான் பார்த்ததாகவும், உடனே தான் வசூலித்த பணம் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிச் சென்றதாகவும் கூறியிருந்தார். தன்னுடைய பாவங்களும் அக்கிரமங்களும் மறைந்து, இயேசுவின் சீடராக தன்னை ஒப்புக் கொடுத்ததாகக் கூறியிருந்தார். “இந்த இயேசுவை நீ ஒரு நாள் சந்திப்பாய் என்றால் உன்னுடைய வாழ்க்கையும் மாறும் என்று எழுதிக் கையெழுத்திட்டு சகேயுவுக்கு அனுப்பி இருந்ததைப் பார்த்தாராம்.
இதைப் படித்த சகேயுவுக்கு எப்படியாவது இயேசுவைப் பார்க்க வேண்டும் என்ற தாகத்தோடு இருந்தார். அதற்கு சமயம் வந்ததால் அத்தனை கூட்டத்துக்கு மத்தியிலும் தன்னால் குள்ளமாக இருந்ததால் இயேசுவைப் பார்க்க முடியவில்லை. எனவே வேகமாக ஓடி ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்கிறான். வேதம் கூறுகிறது “ தேவனைக் கண்டடையத் தக்க சமயத்தில் தேடுங்கள்” என்று. மத்தேயுவின் சாட்சி சகேயுவை எவ்வாறு மாற்றி இருக்கிறது என்பதை இதில் நாம் பார்க்கிறோம். அதே போல் நம்முடைய சாட்சியும் நம்முடைய குடும்பத்தாரை, நம்முடைய நண்பர்களை மாற்ற வேண்டும். இன்றைக்கும் சகேயு ஏறியிருந்த மரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் பக்கத்தில் ஒரு கல்லில் இந்த மரத்தின் வயது 2500 என்று செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
சகேயுவுக்கு கிருபையின் அழைப்பு:
லூக்கா 19 : 5, 6, 7 “இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.”
இயேசு அந்த மரத்தின் பக்கத்தில் வந்த போது பரிசுத்த ஆவியின் உந்துதலால் நின்றார். அண்ணாந்து அந்த மரத்தின் மேல் இருக்கிற சகேயுவைப் பார்த்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர் இயேசு அப்பொழுது சகேயுவின் உள்ளத்தில் உள்ள தாகத்தைப் பார்த்தார். திரளான ஜனங்களின் மத்தியிலும் தனிப்பட்ட முறையில் பெயர் சொல்லி அழைத்து “கீழே இறங்கி வா” என்றார். முழு உலகத்திற்கும் ஆண்டவரானவர் சகேயுவின் தகுதியை வைத்து அழைக்கவில்லை. தேவனுடைய கிருபையே சகேயுவை சந்திக்க வைத்து பரத்திலிருந்து அழைப்பு கொடுத்தது. பழைய ஏற்பாட்டில் நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. அந்தக் கிருபையினால் நோவாவைக் கர்த்தர் நீதிமானாகக் கண்டார். கிருபையினால் பேழையில் ஏற்றிப் பாதுகாத்தார். . இது எதைக் காட்டுகிறதென்றால் நாமும் நமது பெருமையிலிருந்து, அகங்காரத்தில் இருந்து உலக ஆசைகளில் இருந்து இறங்கி வரவேண்டும்.
ஏசாயா 9 : 9ல் காட்டத்திமரங்களை வெட்டி அதற்குப் பதில் கேதுரு மரங்களை வைப்போம் என்று கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். லூக்கா 17 : 6 ல் காட்டத்தி மரங்கள் பிடுங்கப் படுவதற்கு ஆயத்தமாயிருப்பதால், இயேசு சகேயுவிடம் அந்த மரத்தை விட்டு சீக்கிரமாய் இறங்கி வா என்கிறார். சகேயு தன்னைப் பார்த்தது மட்டுமல்லாமல், இயேசு அத்தனை ஜனங்களுக்கும் மத்தியில் தனிப்பட்ட முறையில் தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததால் வியப்படைந்தார். அதைத்தான் வேதம் ஏசாயா 43 : 1ல் “… உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன் ; நீ என்னுடையவன்.” என்று கர்த்தர் கூறியதைப் பார்க்கிறோம். அதேபோல் நம்முடைய பெயர் மட்டுமன்றி, நம்முடைய வாழ்க்கையில் நடக்கப்போகிற ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஆண்டவருக்கு தெரியும். மேலும் தம்மை ஆவலாய்த் தேடுகின்ற ஒவ்வொரு மனிதனையும் நிச்சயமாகவே அவர் சந்தித்து அவனோடு உறவு கொள்வார். இரட்சிக்கப்பட இறங்கி வந்தேயாக வேண்டும். தாழ்மையில்லாமல் கிருபையில்லை. கிருபையில்லாமல் இரட்சிப்பில்லை.. இயேசுவானவரும் நமக்காகப் பரலோகத்தைத் துறந்து அடிமையின் ரூபமெடுத்து பூமிக்கு மனுஷகுமாரனாக வந்தார்.
அதோடு விடாமல் “இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” என்று இயேசு கூறினார். இதைக் கேட்ட சகேயுவுக்கு ஒரே ஆச்சரியம். இயேசுவின் வாயிலிருந்து வார்த்தை வந்தவுடன் அவனுக்குள் அபிஷேகம் இறங்கியிருக்கும். அவனோ இயேசுவைப் பார்க்க மட்டும்தான் அமர்ந்திருந்தான். தன் வீட்டுக்கு அவராகவே வருவேன் என்று கூறியது அவனால் நம்ப முடியவில்லை. எனவே ஆச்சரியப்பட்டான். சகேயு உடனே கீழே இறங்கி வந்தான். இதேபோல்தான் பேதுருவும் மற்றவர்களும் “என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு அழைத்தவுடன் தங்களுடைய படகையும் வலைகளையும் அப்படியே போட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். வேதத்தில் இன்னுமொரு ஆயக்காரன் தன்னைத் தாழ்த்தி தன் கண்களைக்கூட வானத்திற்கு ஏறெடுக்கத் துணியால் , பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று சொல்லி தன் மார்பில் அடித்து மன்றாடி ஜெபம் பண்ணியதைப் பார்க்கலாம். இயேசு சகேயுவை சீக்கிரமாய் இறங்கி வா என்று துரிதப்படுத்தினார். கர்த்தரிடத்தில் வரும்போது துரிதமாய் வர வேண்டும்.
அன்றைக்கு சோதோமுக்கு அழிவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, லோத்துவுக்குத் தெரியவில்லை. அவன் தாமதித்தபோது தேவதூதர்கள் அவன் கையைப் பிடித்து துரிதமாய் வெளியே கொண்டு வந்து விட்டார்கள். சகேயு சந்தோஷத்துடன் இயேசுவைத் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான். ஒரு பாவியின் வீட்டுக்கு நீதிமானாகிய இயேசு சென்றதைப் பார்க்கிறோம். நாமும் இயேசுவைத் தாகத்தோடும், ஆர்வத்தோடும் அழைத்தால் நம்முடைய வீட்டிற்கும் இயேசு கண்டிப்பாக வருவார். சகேயுவின் இல்லத்தில் வந்து தங்கிய இயேசு நம்முடைய உள்ளத்திலும், இல்லத்திலும் வந்து தங்க மகிழ்ச்சியோடு இடமளிக்க வேண்டும். இயேசு நம்முடைய வீட்டிற்கு வந்தால், நம் வீட்டிலுள்ள சாபங்கள், குறைகள் மாறும். நம்மை ஆசீர்வதிக்க, அபிஷேகிக்க இயேசுவை அழைக்கவேண்டும்.
வெளிப்படுத்துதல் 3 : 20 “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.”
இதேபோல் ஆபிரகாமை தேவன் அழைத்தார். ஆபிரகாம் இருந்த ஊர் என்ற தேசம் விபச்சாரமும், விக்கிரக ஆராதனையும் நிறைந்த ஒரு தேசமாக இருந்தது. ஏன் அந்த இடத்திலிருந்து ஆபிரகாமை வெளியே வரச் சொன்னார் என்றால், (ஆதியாகமம் 12 : 1, 2) அவர்கள் தேவனை அறியாதவர்கள், அநேக சடங்காச்சாரங்களைப் பின்பற்றுபவர்கள். எனவே ஆபிரகாமை அந்த இடத்தை விட்டு கர்த்தர் வெளியே வரச் சொன்னார். ஒருவன் இரட்சிக்கப்பட்ட பின்பு தேவன் சொல்வதைத் தான் கேட்க வேண்டும். ஏனெனில் நாம் அவருடைய ஜனங்களான பின்பு, அவருடைய பிள்ளைகளாக ஆனபின்பு புறஜாதியருடைய மார்க்கத்தைக் பின்பற்றாதிருங்கள் என்று எரேமியா 10 : 2 ல் வேதத்தில் கூறியதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஜனங்களின் மத்தியில் நாம் வாழ்ந்தாலும் அவர்களைப் பின்பற்றக் கூடாது. இயேசு சகேயுவுடன் போவதைக் கண்ட அனைவரும் பாவியான மனுஷனுடைய வீட்டில் தங்கும்படி போகிறாரே என்று முறுமுறுத்தனர்.
தங்களால் பாவியென்று கருதப்படும் ஒருவன் மனந்திரும்பினதை நம்புவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் மக்கள் தயங்குகின்றனர். இயேசு அவ்வாறு தயங்குவதில்லை. எந்தப் பாவியையும் தள்ளமாட்டேன் என்று யோவான் 6 : 37 ல் இயேசு வாக்களித்திருக்கிறார். ஜனங்கள் அவனுக்கு வைத்த பெயர் பாவி (லூக்கா 19 : 6). தாய்தகப்பன் அவனுக்கு வைத்த பெயர் சகேயு. இயேசு அவனுக்கு வைத்த பெயர் ஆபிரகாமின் குமாரன் ( லூக்கா 19 : 9). ரூத் 3 : 1 ல் போவாஸ் ரூத்துக்கு வைத்த பெயர் குணசாலி. அப்போஸ்தலர் 22 : 12ல் அனனியா நல்லவன் என்று சாட்சி பெற்றிருந்தான். மோசே கர்த்தரின் வாயால் நல்ல குணமுள்ளவன் என்றும் (எண்ணாகமம் 12 : 3), யோபு கர்த்தரின் வாயால் தேவதாசன் என்றும் (யோபு 1 : 8, 42 : 7, எபிரேயர் 11 : 5), ஏனோக்கை தேவன் தனக்கு பிரியமானவன் என்றும் (அப்போஸ்தலர் 13 : 22), கர்த்தர் தாவீதை தன்னுடைய இருதயத்திற்கு ஏற்றவன் என்றும் (அப்போஸ்தலர் 13 : 22), ஏசாயா 41 : 8 ல் யாக்கோபை தான் தெரிந்து கொண்ட யாக்கோபு என்றும், தன் தாசன் என்றும் அழைத்திருப்பதைப் பார்க்கிறோம்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
சகேயுவின் தாழ்மை:
லூக்கா 19 : 8, 9 “சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.”
சகேயு தன்னுடைய வீட்டிற்கு முன்பாக வந்த போது நின்று கர்த்தரை நோக்கி ஆண்டவரே என்றான். ஏராளமான ஜனங்களை ஏமாற்றி அந்த அநீதியான பணத்தினால் கட்டின வீட்டிற்குள் இயேசு வர இருக்கிறாரே என்று சகேயு வியந்திருப்பான். இயேசு அந்த இடத்தில் ஒரு பிரசங்கம் கூடபண்ணவில்லை. ஆனால் இயேசுவிடம் புறப்பட்டுச் சென்ற ஒளி சகேயுவுக்குள் ஊடுருவி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தது. இயேசுவைப் பார்த்து சகேயு போதகர் என்றோ குரு என்றோ அழைக்காமல் ஆண்டவரே என்று அழைத்ததைப் பார்க்கிறோம். அவனுக்கு இயேசு ஒருவரே மீட்பர் என்றும், இரட்சகர் என்றும் தெரிந்திருந்தது. சங்கீதம் 118 : 8, 9 ஐ படித்திருப்பான். அதில் மனுஷனை விட, பிரபுக்களை விட கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம் என்றுள்ளதை அறிந்திருந்தான். இயேசு அவனைப் பார்த்து இவன் ஆபிரகாமின் குமாரனாக இருக்கிறான் என்றார். இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்றும் கூறினார். ஏன் ஆபிரகாமின் குமாரன் என்று கூறினாரென்றால் சகேயுவின் வாழ்க்கை ஆபிரகாமின் வாழ்க்கையைப் போலிருந்தது. இருவரும் வசதி படைத்தவர்கள். ஆபிரகாமைத்தேடி மூன்று புருஷர்கள் வந்தபோது அவர்களை வரவேற்க வீட்டுக்கு கூட்டிக் கொண்டுபோய் ஆகாரம் கொடுத்தான். சகேயுவும் இயேசுவைத் தன் வீட்டுக்கு கூட்டிக் கொண்டுபோய் விருந்து பண்ணினான்.
பவுல் கலாத்தியேர் 3 : 7ல் விசுவாச மார்க்கத்தார் அனைவரும் ஆபிரகாமின் பிள்ளைகளென்று கூறினான். ஏசாயா 41 : 8 ல் ஆபிரகாமின் சந்ததி என்றார். கலாத்தியர் 3 : 29 ல் “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததி என்றும் கூறியதைப் பார்க்கிறோம். சகேயு தேவனைத் துக்கப்படுத்தும் எந்த செயலையும் தன்னுடைய ஜீவியத்தில் இருந்து அகற்றத் தீர்மானித்தான். எனவே தன்னுடைய வாயால் மனம் திரும்பி பாவ அறிக்கையிட்டான். உண்மையான பாவ அறிக்கையும், கிறிஸ்துவின்மேல் உண்மையான விசுவாசமும் ஒருவனிடம் இருந்தால் நிச்சயமாக அவன் தன் வெளிப்படையான வாழ்க்கையைப் பக்திக்குரியதாக மாற்றத் தீர்மானித்து விடுவான். ஒருவன் இயேசுவுடன் அன்புடன் பழகி அவர் தரும் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு அதன்பின் அவனால் பாவத்தில் நிலைத்திருக்கவும், நேர்மை அற்றவனாயிருக்கவும், மற்றவர்கள் மேல் இரக்கம் கொள்ளும் தயாளகுணம் இல்லாதவனாயிருக்க முடியாது. அதனால் சகேயு தன்னுடைய ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன் என்றான். அது போக யாரிடமாவது அநியாயமாய் வாங்கினதுண்டானால் அதற்கு நாலத்தனையாக திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
யாத்திராகமம் 22 : 1ல் களவு செய்தால் 4 மடங்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்றிருந்தது. சகேயு தேவனுடைய கிருபையைப் பெற்றபோது எதையும் அளந்து கொடுக்கவில்லை. தாராளமாகக் கொடுத்தான். ஏனென்றால் பல ஆண்டுகளாய் ஜனங்களை ஏமாற்றி பெற்ற பணத்தை அப்போது வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க நினைத்தான். சகேயுவுக்குப் பண ஆசையிருந்தது. இயேசுவை ஏற்றுக்கொண்டதும் அவனுடைய வாழ்க்கை முறை மற்றும் மாற்றமடைந்தது. அத்தனையும் இழந்து இயேசுவை மட்டும் தனதாக்கிக்கொள்ளத் தீர்மானித்தான். ஆனால் பரிசேயனும், சன்மார்க்கனும் எதையும் இழக்காமல் கிறிஸ்துவை அடைய முயன்று தோற்றனர் (லூக்கா 18 : 8 – 24). சகேயு கூறிய வார்த்தைகளை இயேசு கேட்டவுடன் “இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது” என்று அறிவித்தார். சகேயுவுக்கு மட்டும் இயேசு இரட்சிப்பைக் கொடுக்க நினைத்திருந்தால் அந்த மரத்தடியிலேயே கொடுத்திருப்பார். அவனுடைய வீட்டாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதால் அவனுடைய வீட்டிற்கு இயேசு சென்றார். நாமும் சகேயு செய்ததைப் போல செய்ய முன் வந்தால் நாம் இரட்சிக்கப்படுவது உறுதி.
தாவீது பாவம் செய்தபோது நாத்தானிடம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு பதில் 4 மடங்காகத் திருப்பித் செலுத்தவேண்டும் என்றான். பாவ உணர்வடைந்த அவனது உள்ளத்தை இயேசு கண்டார். தேவனுக்கேற்ற பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். நொறுக்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை அவர் புறக்கணிப்பதில்லை. கர்த்தர் என்றென்றைக்கும் கிருபையின் வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். எல்லா சுவிசேஷ கதவுகள் பூட்டப்படும் முன்னே, பேழையின் வாசல்கள் அடைக்கப்படும் முன்னே இயேசுவண்டை வாருங்கள். நினையாத நாழிகையிலே மரணம் வரும். கர்த்தருடைய வருகையும் நினையாத நாழிகையிலே இருக்கக்கூடும். இன்றைக்கே அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்போஸ்தலர் 4 : 12 அவராலேயன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை. எபிரேயர் 13 : 8, மல்கியா 3 : 6 ல் கூறியதுபோல அவருடைய அன்பு மாறாதது. காருண்யம் மாறாதது. வல்லமையும் மாறாதது. ஏனெனில் யாத்திராகமம் 3 : 14 ல் உம்முடைய நாமம் என்ன என்று கேட்டபோது இருக்கிறவராக இருக்கிறேன் என்று சொன்னவர், இரண்டாவதாகக் இருக்கிறேன் என்றார். ஏசாயா 43 : 18, 19 ல் “முந்தினவைகளை நினைக்கவேண்டாம் பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம்” என்று வாக்களித்த தேவன் உங்களுக்கும் ஒரு புதிய காரியத்தை செய்வார்.
இயேசு பூமிக்கு வந்ததன் நோக்கம்:
லூக்கா 19 : 10 “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.”
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருந்த போதிலும் இழந்து போனதைத் தேடிக்கொண்டேயிருந்தார். பிதாவின் உறவை இழந்துபோன ஆதாமின் வம்சத்தைத் தேடி இரட்சித்து அவரோடு இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற பரம இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு கிறிஸ்துவானவர் இந்த உலகத்திற்கு வந்தார். இயேசு இந்த சகேயுவிடம் கரிசனை காட்டியது போல நாமும் சமுதாயத்தில் விரும்பப் படாதவர்கள், வெறுத்து ஒதுக்கப் பட்டவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுடைய ஆத்தும இரட்சிப்புக்காகவும், மீட்புக்காகவும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். மேலும் இயேசு பாவிகளாகிய நம்மை இரட்சிக்கும் படியாகவும், பிசாசின் கிரியைகளை அழிக்கும்படியாகவும் தொலைந்து போனதைத் தேடும்படியாகவும் வந்தார். பாவத்தில் இருப்பவர்களுக்கு இந்த நற்செய்தியைச் சொல்வதற்கு நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் (மாற்கு 16 : 15). அந்தப் பொறுப்பை நிறைவேற்ற நாம் முழுமூச்சுடன் பாடுபடுவோம். ஆதாம் பாவம் செய்தபோது தேவனைப் பார்க்க முடியாமல் ஒளிந்து கொண்டான். ஆனால் தேவனோ ஆதாமே எங்கிருக்கிறாய் என்று மனதுருக்கத்தோடு தேடினார். நமக்காகப் பாடுகளைச் சகித்த இயேசு, சிலுவையில் அறையப்பட்ட இயேசு ஒருபாவி மனந்திரும்புவதைப் பார்த்து மிகுந்த சந்தோஷம் அடைவார். பரலோகத்திலும் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் (லூக்கா 15 : 7). வாழ்க்கையையே இழந்துபோன ஒரு சமாரிய ஸ்திரீயைத்தேடி மத்தியான வெயிலில் இயேசு சமாரியாவுக்கு வந்தார். 38 வருட வியாதியாயிருந்த திமிர்வாதக்காரனைத் தேடி பெதஸ்தா குளத்திற்கு வந்தார். சகேயுவைத்தேடி காட்டத்தி மரத்தை ஆவலோடு பார்த்தார். நம்மைத்தேடி இரட்சிக்க வந்த அவருக்கு நமது வாழ்க்கையை அர்பணிப்போமாக. ஆமென்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates