இயேசு அனைத்து மக்களுக்கும் தேவ வார்த்தையைப் போதிக்கும்போது மக்கள் எளிதாகப் புரியும்படி உதாரணங்களோடும், உவமைகளோடும் விவரித்துக் காட்டினார். எனவே அவரது செய்திகள் பாமர மக்கள்கூட எளிதில் புரிந்து கொண்டனர். ஒவ்வொரு உவமையின் பின்னணியிலும் ஒவ்வொரு செய்தி அடங்கியிருக்கும். இயேசுவானவர் தேவராஜ்ஜியத்தின் இரகசியங்களை நாம் புரிந்து கொள்ளும்படி பூலோக உதாரணங்களைக் கூறி செய்திகளை விவரித்தார். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது உரையாடல் காட்டி விடுகிறது. ஆனால் ஒருவர் எதை உணர்த்துகிறார் என்பதை அவரது உதாரணங்கள் கூறிவிடுகின்றது. இயேசு தம்மையும் வெளிப்படுத்தினார், தமது செய்தியையும் வெளிப்படுத்தினார். அவரை அறிந்து கொள்வோர் எவரும் அவரின் செய்திகளையும் புரிந்து கொள்வர். அவரின் செயல்களையும் புரிந்து கொள்வர். இங்கு ஒருவன் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தால் எங்கு இருக்க வேண்டுமென்று கூறுகிறார். இயேசு ஒரு பரிசேயன் வீட்டில் போஜனம் பண்ணும்படி சென்றார். அங்கு நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதனைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். ஓய்வு நாளில் இயேசு அந்த மனிதனை சுகமாக்கினால் குற்றம் கண்டு பிடிக்கலாம் என்ற நோக்கத்தோடு அனேகர் அமர்ந்திருந்தனர். இயேசுவோ அவர்களுக்கு ஓய்வு நாளில் நன்மை செய்வது, குணமாக்குவது சரியான செயலே என்று கற்றுக் கொடுத்து, நீர்க்கோவை வியாதி உள்ள அந்த மனிதனை சுகமாக்கி அனுப்பினார். அதன்பின் இயேசு இந்த உவமையைக் கூறினார். இதை லூக்கா 14 : 7 – 10ல் பார்க்கிறோம்.
விருந்தினரால் கனம் உண்டாக:
லூக்கா 14 : 7 – 10 “விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:”
“ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.”
“அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.”
“நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.”
விருந்துக்கு அந்நாட்களில் அழைக்கப்பட்டவர்கள் தாழ்மையான இடத்தில் அமர்ந்து தான் உணவருந்துவர். விருந்து ஆயத்தமாயிருக்கிறதென்று சொன்னவுடன் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் முண்டியடித்துக் கொண்டு செல்வதை இயேசு பார்த்துக்கொண்டிருந்தார். சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த இடம் பிடிக்கும் போட்டியில் ஈடுபட்டிருந்தனர். இயேசு இந்த தவறான நோக்கத்தைக் கண்டித்து இந்த உவமையில் திருத்துவதைப் பார்க்கிறோம். விருந்துக்கு அழைக்கும் போது எப்போதும் தாழ்ந்த இடத்தில் சென்று உட்கார வேண்டும் என்கிறார். அதனால் எந்த பிரச்சனையும் வராது என்பதை வலியுறுத்துகிறார். ஏனென்றால் யாருமே தாழ்ந்த இடத்திற்குப் போட்டி போட மாட்டார்கள். மேலும் அவ்வாறு உட்கார்ந்திருக்கும் போது நம்மை அழைத்தவன் நம்முடைய அருகில் வந்து நீங்கள் அந்த உயர்ந்த இடத்திற்கு வாருங்கள் என்று அழைத்துச் செல்லும் பொழுது, அது நமக்கு மரியாதையாய், கனமானதாக இருக்கும் என்பதை நினைவுபடுத்துகிறார். மேலும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து நம்மை விட மதிப்பிற்குரியவன் வந்தால், அவனுக்கு நாம் இருக்கிற இடத்தைக் கொடுக்க நினைத்து நம்மை வேறு இடத்துக்குப் போகச் சொன்னால் அவன் அந்த இடத்திலிருந்து எழுந்து செல்ல வேண்டியதாயிருக்கும். இது எல்லோருக்கும் முன்பாக அவனுக்கு தலைகுனிவைக் கொண்டு வரும். இது அந்த நாட்களில் இருந்ததற்கு எதிராக இயேசு கூறியதாயிருக்கிறது. விசுவாசிகளாகிய நாம் உயர்ந்த இடத்தில் (பதவியில்) இருப்பதைவிட கர்த்தருக்கு மற்றவர்களுக்கும் உழைக்கும் பொறுப்பில் இருப்பதை நாடுவோமாக. இதேபோல் விசுவாசிகளாகிய நாம் ஒவ்வொருவரும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
விருந்துக்கு அழைக்கப்பட வேண்டியவர்கள்:
லூக்கா 14 : 11 – 14 “தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.”
“அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.”
“நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.”
“அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.”
இவ்வுலக வாழ்வில் தன்னைத்தான் உயர்த்துகிறவன் பின்னால் வரப்போகும் பரலோக வாழ்வில் தாழ்த்தப்பட்டு, வெட்கத்துக்கு உட்படுத்தப்படுவான். இவ்வுலக வாழ்க்கையில் நாம் பெறும் உயர் பதவியையும், அந்தஸ்தையும் விட தேவனுடைய சமூகத்தில் நமக்குக் கிடைக்கும் கௌரவமே பெரியது. இந்தக் கௌரவம் நம்மைநாமே உயர்த்திக் கொள்வதினால் கிடைக்கக் கூடியது அல்ல. பதிலாக நம்மை நாமே தாழ்த்துவதிலும், ஊழியம் செய்வதிலும், தேவனால் மாத்திரம் வருகிற மகிமையைத் தேடுவதிலும் (யோவான் 5 : 44) உள்ளது. இங்கு விருந்து என்பது சத்தியங்கள் பரிமாறக்கூடிய இடத்தைக் குறிக்கிறது. அந்த இடத்துக்குப் போகும்போது நம்முடைய நினைவுகள் எவ்வாறிருக்க வேண்டுமென்று கூறுகிறார். நம்முடைய மனதைத் தாழ்த்தி, ஒருமனப்படுத்தி சத்தியத்தைக் கேட்க வேண்டும். தேவனால் அழைக்கப்பட்டவர்கள் தாழ்மையாக இருக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். பதவி வேண்டும், பொறுப்பு வேண்டும் என்று அலையக் கூடாது. இவ்வுலக வாழ்வில் தன்னைத்தானே உயர்த்துகிற அனைவரும் தாழ்த்தப் படுவார்கள் என்றும், தன்னைத் தாழ்த்துகிற அனைவரும் உயர்த்தப் படுவார்களென்றும் வேதத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. சாலமோன் ராஜா,
நீதிமொழிகள் 25 : 6, 7ல் “ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.”
“உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.”
என்று எச்சரிப்பதைப் பார்க்கிறோம். தேவனுடைய சமூகத்தில் நாம் மேன்மை பாராட்டக் கூடாது. நம்மைவிட பெரியவர்களின் ஸ்தானத்தில் நாம் போய் நிற்கக்கூடாது. நம்மை நாமே உயர்த்துவதற்கு முயற்சி எடுக்கக் கூடாது. நாம் அவ்வாறு செய்தொமானால் அது நமக்கு கனவீனத்தைக் கொண்டு வரும். நம்முடைய உண்மை நிலையை உணர்ந்தால் நாமாக நம்மைத் தாழ்த்துவோம். நமக்கு இருக்கும் யாவுமே கர்த்தருடைய கிருபையால் கிடைத்தன என்பதை உணர்ந்தால், நமக்குப் பெருமை வராது,
நாம் நம்முடைய குடும்பத்தில் நடக்கும் திருமணத்திற்கோ, பண்டிகைக்கோ விருந்துக்கு அழைக்கும் பொழுது நம்முடைய உறவினர்களையும் தெரிந்தவர்களையும், நண்பர்களையும் மட்டுமே அழைக்கிறோம். அவர்களே மறுபடியும் மறுபடியும் வருகின்றனர். அவர்கள் பதிலுக்குப் பதில் செய்து விடுவார்கள். இது தவறல்ல. ஆனால் ஏழைகளையும் நினைக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். இப்படிப்பட்டவர்களை அழைக்கும் போது அவர்கள் நல்ல வயிறார சாப்பிடுவார்கள். ஆனால் பதில் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் பதில் செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. தேவன் முதன்முதலில் ஏழைகளை, தரித்திரரை, திக்கற்றவர்களை, விதவைகளை பார்க்கிறார். இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கணும் .சத்தியம் தெரியாதவர்களுக்கு சத்தியத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை அழைக்கும் போது பாக்கியவானாயிருப்பாய் என்று இயேசு கூறுகிறார். உறவினர்களை அழைப்பது தவறில்லை. நமது நிலையிலும் நம்மைவிட உயர்வான நிலையிலும் இருப்பவர்களை உபசரிக்கக் கூடாது என்றும் கர்த்தர் கூறவில்லை. ஆனால் ஒன்றுமில்லாதவர்களை நினையாமலிருப்பதுதான் தவறு என்றும், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையே கர்த்தர் இங்கு வலியுறுத்துகிறார். ஒவ்வொருவரின் ஊழியமும் இறுதியில் பரிசோதிக்கப்படும். எனவே கவனமாகவும், சரியாகவும், பயனுள்ளதாகவும் ஊக்கத்தோடும் ஊழியம் செய்வோமாக. ஊழியத்தின் தரத்துக்கேற்றவாறு வெகுமதி கிடைக்கும். கர்த்தருடைய மக்களுக்கு வெகுமதி அளிக்கும் நியாயத்தீர்ப்பு நீதிமான்களின் உயிர்த்தெழுதலின்போது, அதாவது இரகசிய வருகையின்போது நடைபெறும். சாலமோன்,
நீதிமொழிகள் 19 : 17 “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.”
நீதிமொழிகள் 28 : 27 “தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.”
நாம் எதைச் செய்தாலும் நாம் செய்தவர்கள் திருப்பித் தரவேண்டாம் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும். பிரதிபலன் எதிர்பார்க்காமல் நன்மை செய்ய நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நீதிமானின் உயிர்த்தெழுதல் இயேசு வருகிற நாட்களில் நடக்கும். ஊழியமானது பதில் செய்யக்கூடாத அளவுக்கு இருக்க வேண்டும். அவ்வாறு தியாகம் பண்ணும் போது பயனடைவார்கள். இங்கு செய்யக்கூடிய தியாகம் ஒவ்வொன்றும் பரலோகம் செல்வதற்கு வழியாகும். உயிர்த்தெழுவதற்கும் வழிவகுக்கும். எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் சத்தியத்தைச் சொல்ல வேண்டும்.
கிறிஸ்துவின் தாழ்மை:
தாழ்மையென்பது நமது மரணம் வரை இருக்க வேண்டியதென்பதால் , மரணம் வரைத் தன்னைத் தாழ்த்திய கிறிஸ்துவினிடமிருந்து அந்தத் தாழ்மையைக் கற்றுக் கொள்வோம். இயேசுவானவர் தேவனுடைய ரூபமானவராக, தேவனுக்கு சமமாயிருந்தவர். இதைப் பவுல்,
பிலிப்பியர் 2 : 6, 7 “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,”
“தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.”
என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இயேசு பிதாவுக்குச் சமமானவர் என்பதை இவ்வசனம் உணர்த்துகிறது. அப்படியிருந்தும் இயேசு தமது பரலோக மகிமையை ஒதுக்கித்தள்ளி (யோவான் 17 : 4), தமது பதவியை விட்டு (யோவான் 5 : 30), தன் ஐசுவரியத்தை விட்டு (2கொரிந்தியர் 8 : 9), தமது உரிமைகளை விட்டு (லூக்கா 22 : 27), தம்மை வெறுமையாக்கினார். அதனால் பிதா அவரை வானத்திலுள்ளோர் யாவரும் வணங்கும்படியும், பூலோகத்தார் யாவரும் வணங்கும்படியும், பூமியின் கீழானோர் யாவரும் வணங்கும்படியும் உயர்த்தினார். பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று எல்லா நாவுகளும் அறிக்கை பண்ணும்படி எல்லா நாமத்திற்கும் மேலான நாமமாக இயேசுவின் நாமத்தை உயர்த்தினார் ( பிலிப்பியர் 2 : 9 – 11). இயேசுவின் சகோதரனான யாக்கோபு தரித்திரரையும், தேவனிடம் அன்பு கூறுகிறவர்களையும் என்ன செய்வார் என்று தன்னுடைய நிருபத்தில்.
யாக்கோபு 2 : 5 “என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
கருத்து:
இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே தாழ்த்தினபடியால் உயர்த்தப்பட்டார். தன்னைத்தான் உயர்த்தின சாத்தான் தாழ்த்தப்பட்டான். கிறித்துவைப் போல நாம் தாழ்மையோடு நடந்தால் கிறிஸ்துவைப் போல உயர்த்தப்படுவோம். சாத்தானைப்போல நம்மைநாமே உயர்த்தினால் சாத்தனைப்போல நாம் தாழ்த்தப்படுவோம் (ஏசாயா 14 : 13, 14). பேதுரு,
1 பேதுரு 5 : 6 ‘ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.”
அவ்வாறிருந்தால், நீதியின் கிரீடத்தை நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் என்று பவுல் 2 தீமோத்தேயு 4 : 8ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். நம்மைத் தாழ்த்தி கிறிஸ்துவைப் போல இருக்க முயற்சிப்போம். நம்மை உயர்த்த தேவன் ஒரு காலம் வைத்திருக்கிறார். அந்தக் காலம்வரை தேவனுடைய சித்தத்துக்கு அடங்கியிருக்க வேண்டும். தேவன் தான் நம்மை உயர்த்த வேண்டும். கர்த்தராகிய இயேசுவே வாரும் ஆமென்.