இயேசு எரிகோவில் பிரவேசித்து அதன் வழியாக நடந்து போகும்போது சகேயு என்ற வரி வசூலிப்பவன் இயேசுவைப் பார்க்க ஆசையாய் மரத்தில் ஏறியிருந்ததைப் பார்த்து அவனுடைய வீட்டில் தங்க இயேசு போனார். ஜனங்கள் பாவியான மனுஷரிடத்தில் தங்கும்படி இயேசு போகிறாரே என்று முறுமுறுத்தனர். அப்பொழுது எருசலேமுக்குச் சமீபமாய் வரும்பொழுது ஜனங்களை நோக்கி இந்த உவமையை இயேசு கூறினார். தாலந்தைக் குறித்த இந்த உவமையானது இயேசுவின் ஊழியக்காரர்களிடம் உண்மையைச் சோதிக்கிறதாயிருக்கிறது. இதுவும் சபை எடுத்துக் கொண்ட பின் இயேசுவின் வருகைக்குக் காத்திருக்கும் மக்களைக் குறித்துச் சொல்லப்பட்டது. இந்த உவமை பரலோகத்தில் நமது இடமும், பணியும், இந்த உலக வாழ்க்கையில் நமது உண்மைத்தன்மையும், ஊழியமும் எப்படி இருக்கிறதோ அதைச் சார்ந்து இருக்கும் என்று உணர்த்துகிறது. இது கடைசி நாட்களுக்கான அடையாளத்தின் பாகமாக இருக்கிறது. இந்த உவமையில் சொல்லியிருக்கிற விஷயங்கள் நம்முடைய இந்தக் காலத்தில் நிறைவேறிக் கொண்டு வருகிறது.
எஜமானின் செயல்:
மத்தேயு 25 : 14, 15 “அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.”
“அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.”
இயேசு இந்த உவமையில் பரலோக ராஜ்யத்தை எஜமான் ஒருவன் தூர தேசத்துக்குப் போகப் புறப்படும் பொழுது தன்னிடம் வேலைபார்த்த ஊழியக்காரர்களிடம் தன்னுடைய ஆஸ்திகளை ஒப்படைத்ததற்கு ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார். ஒரு எஜமான் தூர தேசத்திற்குப் போகப் புறப்பட்டான். புறப்படும்போது தன்னிடம் வேலை பார்த்த ஊழியக்காரரில் 3 பேரை அழைக்கிறான். அவர்கள் மூவரிடமும் அவர்களுக்கு என்ன திறமை உள்ளது என்பதை எஜமான் அறிந்திருந்ததால், அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக, ஒருவனிடம் ஐந்து தாலந்தும், மற்றொருவனிடம் இரண்டு தாலந்தும், இன்னொருவனிடம் ஒரு தாலந்தும் கொடுத்தான். அந்த எஜமானிடமிருந்த பணம் பெரிய தொகையாக இருந்ததால் அது அவனுக்கு மதிப்பைக் கொடுப்பதாக இருந்தது. அதே போல் இயேசுவிடமும் மதிப்புள்ள ஒன்று இருந்தது. அது என்னவென்றால் பூமியிலிருந்தபோது அவர் செய்த ஊழியம்தான். இயேசுவுக்குப் பிரசங்க வேலை மிகவும் முக்கியமானதாக இருந்தது (லூக்கா 4 : 43). அவர் செய்த ஊழியத்தினால் நிறைய பேர் அவருடைய சீடர்கள் ஆனார்கள் பிரசங்கவேலை இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டுமென்பதால் இயேசு பரலோகத்திற்குப் போவதற்கு முன் சீஷர்களிடம் “புறப்பட்டுப் போங்கள் எல்லா தேசத்தாரையும் சீடராக்குங்கள் என்றார் (மத்தேயு 28 : 18 – 20).
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
இந்த எஜமான் தன்னுடைய ஊழியர்களுக்கு நிறைய பணம் கொடுத்ததைப் போல இயேசுவும் பரலோக நம்பிக்கையுள்ள சீஷர்களுக்குப் பொக்கிஷமாகிய பிரசங்க வேலையைக் கொடுத்தார் (2கொரிந்தியர் 4 : 7). இதை எஜமான் ஒரு நோக்கத்தோடு தான் அவர்களுக்குக் கொடுக்கிறார். என்ன நோக்கம் என்றால் எஜமான் கொடுத்த பணத்தை வைத்து, அவர்கள் மூவரும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு கடினமாக உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார். ஏனென்றால் அந்தப் பணம் அவர்களுக்குரியதல்ல. எஜமான் வரும்போது அதைக் குறித்து அவர்கள் கணக்கு கொடுக்க வேண்டும். அதேபோல்தான் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் எவ்வளவு முடியுமோ அந்த அளவு கடினமாக உழைக்க வேண்டுமென்று இயேசு எதிர்பார்த்தார் (கொலோசெயர் 3 : 23) பெந்தேகோஸ்தே நாளில் பிரசங்க வேலையை ஆரம்பித்த சீஷர்கள் கடினமாக வேலை செய்தார்கள் (அப்போஸ்தலர் 6 : 7, 12 : 24, 19 : 20). இதில் எஜமான் என்பது இயேசுவைக் குறிக்கிறது. எஜமான் கொடுத்த ஊழியக்காரர்கள் என்பது இயேசுவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளைக் குறிக்கிறது. நம்முடைய தேவனாகிய இயேசு இந்தப் பூமியில் நம்மைக் கொண்டு என்னவெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்திருக்கிறாரோ அதற்காக இயேசு நம்மை அழைத்த அழைப்பின்படி, நமக்கிருக்கிற ஆவிக்குரிய வெளிச்சத்தின்படி நமக்குத் தாலந்துகளை, வரங்களை, கிருபைகளை, பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார். கொடுத்ததின் நோக்கம் அதைப் பெருகப் பண்ண வேண்டும் என்பதுதான்.
நாம் தேவனுடைய இரத்தத்தினால் மீட்கப்பட்டு தேவனுடைய தோட்டமாகிய ராஜ்ஜியத்தில் வேலைக்காரர்களாயிருக்கிறோம். தேவன் கொடுக்கிற இப்படிப்பட்ட வாய்ப்புகளை நாம் தவறவிடக்கூடாது. அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெருகப் பண்ணுவதின் நோக்கம் எழுப்புதலைக் கொண்டுவர வேண்டும் என்பது தான். இந்த உலகத்தில் நமக்கென்று சொந்தம் பாராட்ட எதுவும் கிடையாது. என் திறமை, என் சாமர்த்தியம், என்று யார் நினைத்தாலும் அவர்கள் மதிகேடர்கள். அனைத்தும் ஒரு நாள் நம்மை விட்டுப் போய் விடும். நம்முடைய ஜீவன் கூட நமக்குச் சொந்தமானதல்ல. அது தேவன் நமக்கு கொடுத்த வெகுமதி. விசுவாசிகளாகிய நமக்கு நம்முடைய திறமைக்குத் தக்கதாக தேவனுடைய கிருபையின் அளவின்படி வரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது (ரோமர் 12 : 6). எஜமான் புற தேசத்திற்குப் போனதைப் போல, இயேசுவும் பூமிக்கு வந்து மூன்றரை வருஷங்கள் ஊழியம் செய்து சிலுவையில் அறையப்பட்டு, மரித்து உயிரோடெழுந்து புறதேசமான பரலோகத்திற்குப் போய்விட்டார். அவர் போய் 2000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இயேசுவின் இரண்டாம் வருகையின் போது நாம் அவரிடம் கணக்குக் கொடுக்க வேண்டும்.
தாலந்து:
தாலந்து என்பது தேவன் நமக்குத் தருகிற பொறுப்புகளையும் திறமைகளையும் குறிக்கிறது. சிலருக்கு பாடுகிற தாலந்து, சிலருக்கு இசைக்கருவிகளை மீட்டுகிற தாலந்து, சிலருக்கு உபவாசித்து ஜெபிக்கும் தாலந்து, சிலருக்கு ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணும் தாலந்து, சிலருக்கு பிரசங்கம் பண்ணும் தாலந்து என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாலந்துகளைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அதை வைத்து நாம் ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணவேண்டும். தாலந்துகளைக் கொடுக்காமல் கர்த்தர் ஒருவரையும் சிருஷ்டிப்பவரல்ல. இரட்சிக்கப் படும்போது கர்த்தர் சில தாலந்துகளைக் கொடுப்பார். அபிஷேகிக்கும் போது வேறு சில தாலந்துகளைக் கொடுப்பார். தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகளை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். நம்முடைய அழைப்புக்கு என்ன தேவையோ, அதையே தேவன் நிச்சயமாக நமக்குக் கொடுத்திருப்பார். அதிகத் திறமையுள்ளவனுக்குத் தேவன் குறைவான தாலந்துகளைக் கொடுப்பதில்லை. அதேபோல் குறைவான திறமையுள்ளவர்களுக்கு அதிகமான தாலந்துகளைக் கொடுப்பதும் இல்லை. கர்த்தர் கொடுத்த தாலந்துகள் எதுவாக இருந்தாலும் அதைக் கர்த்தருக்கென்று அர்பணித்து விடுங்கள்.
இரட்சிக்கப்படாதவர்களிடம் தாலந்துகள் இருப்பதைப் பார்க்கிறோம் (ஆதியாகமம் 21 : 20, 25 : 27, யாத்திராகமம் 18 : 21, நியாயாதிபதிகள் 20 : 16, 2 சாமுவேல் 23 : 20). ஆனால் வரங்கள் மட்டும் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்களுக்கு மட்டுமே கொடுக்கப் படுகிறது. தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற தாலந்து என்னவென்று கண்டுபிடியுங்கள். தேவனிடம், ஆண்டவரே நீர் எனக்கு கொடுத்திருக்கிற தாலந்தை எனக்குக் காட்டும் என்று கேளுங்கள். அவைகளை உண்மையாகப் பயன்படுத்துவேன் என்று ஆண்டவரிடம் ஒப்புக்கொடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் தாலந்தைப் புதைத்து விடாதீர்கள். கர்த்தரிடத்தில் தாலந்தைக் குறித்து நிச்சயமாகக் கணக்கு கொடுக்க வேண்டும். உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும். இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார் (லூக்கா 19 : 26). தாவீதின் தாலந்தும், திறமையும் அவனுடைய தகப்பனுக்குத் தெரியவில்லை. அவ்வளவு திறமையுள்ளவனை ஆடு மேய்க்க அனுப்பினார். ஆனால் சவுல் ராஜாவின் வேலைக்காரன் அதை அறிந்தவனாக தாவீது பராக்கிரமசாலி, யுத்த வீரன், காரிய சமர்த்தன், சவுந்தரியமுள்ளவன், கர்த்தர் அவனோடிருக்கிறார் என்றெல்லாம் 1 சாமுவேல் 16 : 18ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். தாவீது ஆடுகளை மேய்க்கும்போதே தேவன் கொடுத்த தாலந்துகளை தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த சுரமண்டலத்தால் பாட்டுக்களைப் பாடுவான்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
அதேபோல் பவுல் தனக்கு தேவன் கொடுத்த பிரசங்கம் பண்ணும் ஞானத்தினால் துரோவா பட்டணத்தில் நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான் (அப்போஸ்தலர் 20 : 7). பவுலைக் கடைசியில் ரோமாபுரியில் வெளியே பிரசங்கம் பண்ணவோ, ஊழியம் செய்யவோ விடாததால் இரண்டு வருடங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தான். அங்கு வந்தவர்களோடு தைரியமாக இயேசுவைக் குறித்துப் பேசி அவர்களை இரட்சிப்பின் பாதையில் வழிநடத்தினான் (அப்போஸ்தலர் 28 : 30, 31). பவுல் தன்னுடைய கடைசி இரண்டு வருடங்களில் எத்தனையோ நிருபங்களை எழுதினான். ஓரு தாலந்து என்பது 6,000 தினார். இது ஒருவனுடைய 20 ஆண்டு சம்பளம் இந்த உவமையில் ஐந்து தாலந்தை வாங்கினவனுக்கு நூறு ஆண்டு உழைத்ததைப் போன்ற சம்பளத்தைக் கொடுத்திருக்கிறார். இரண்டு தாலந்தை கொடுத்தவனுக்கு 40 ஆண்டு உழைத்ததைப் போன்ற சம்பளத்தைக் கொடுத்திருக்கிறார். ஒரு தாலந்தை வாங்கினவனுக்கு 20 ஆண்டு உழைத்ததைப் போன்ற சம்பளத்தைக் கொடுத்திருக்கிறார்.
ஊழியக்காரர்களின் செயல்:
மத்தேயு 25 : 16 – 18 “ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.”
“அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.”
“ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.”
தாலந்தைப் பெற்ற மூன்று பேர்களையும் உண்மை உள்ளவர்கள், உண்மை இல்லாதவர்கள் என்று இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். ஐந்து தாலந்தை வாங்கினவனும், இரண்டு தாலந்தை வாங்கினவனும் உண்மை உள்ளவர்கள். ஒரு தாலந்தை வாங்கினவன் உண்மை இல்லாதவன். ஐந்து தாலந்தை வாங்கினவன் பிரயாசப்பட்டு, கடினமாக உழைத்து, வியாபாரம் பண்ணி சம்பாதித்து அந்த தாலந்தைப் பத்தாக மாற்றினான். இரண்டு தாலந்தை வாங்கினவனும் பிரயாசப்பட்டு, கடினமாக உழைத்து இன்னும் இரண்டு தாலந்தை சம்பாதித்தான். இயேசு தம்முடைய சீஷர்கள் எல்லோருமே அதிகமான நபர்களை சீஷர்களாக்க வேண்டுமென்றும், அதற்காக கடினமாக உழைக்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு நிறையபேர் சீடர்களாக ஆகியிருக்கிறார்கள். பிரசங்க வேலையிலுள்ளவர்களும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் ஒரு தாலந்தை வாங்கினவன் உழைக்கவும் இல்லை, வியாபாரம் செய்யவும் இல்லை, அதிகமாகப் பணத்தைச் சேர்க்கவும் இல்லை. அதற்குப் பதில் அந்தத் தாலந்தை அப்படியே குழி தோண்டிப் பத்திரமாகப் புதைத்து வைத்தான். உண்மை உள்ளவர்கள்தான் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறமுடியும் என்று வேதம் கூறுகிறது. அவர்கள் நித்தியத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெறுவார்கள்.
எஜமானின் கேள்வியும் ஊழியக்காரர்களின் பதிலும்:
மத்தேயு 25 : 19, 20, 22, 24, 25 “வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்.”
“அப்பொழுது ஐந்து தாலந்தை வாங்கினவன் வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.”
“இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.”
“ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.”
“ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.”
எஜமான் எவ்வளவு நாள் கழித்து வந்தார் என்று கொடுக்கப்படவில்லை. அவர் திரும்பி வந்த பின்பு தாலந்துகளைக் கொடுத்த ஊழியக்காரரை அழைத்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். எஜமான் தனித்தனியாக 5 , 2, 1 என்று கொடுத்தாலும் அவ்ர்கள் அதைக் கொண்டு என்ன செய்தான், எப்படிப் பெருக்கினார்கள் என்பதைக் கொண்டுதான் கணக்கிடுவார். இதைத்தான்
எபிரேயர் 4 : 13 “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.”
என்று வேதத்தில் கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஐந்து தாலந்தைக் கொடுத்த ஊழியக்காரன் எஜமானுக்கு முன்னால் வந்து, தான் எஜமான் கொடுத்த ஐந்து தாலந்தைக் கொண்டு வியாபாரம் பண்ணி, சம்பாதித்து வேறு ஐந்து தாலந்தை லாபமாகப் பெற்றதாகவும் இப்பொழுது பத்து தாலந்து தன்னிடம் இருப்பதாகவும் கூறினான். இரண்டு தாலந்தைப் பெற்ற ஊழியக்காரன் எஜமானுக்கு முன்னால் வந்து, தான் எஜமான் கொடுத்த இரண்டு தாலந்தைக் கொண்டு வியாபாரம் பண்ணி சம்பாதித்து வேறு இரண்டு தாலந்தை லாபமாகப் பெற்றதாகவும் இப்பொழுது தன்னிடம் 4 தாலந்து இருப்பதாகவும் கூறினான். ஐந்து தாலந்தைப் பெற்றவனும், இரண்டு தாலந்தைப் பெற்றவனும் வேறு எதுவும் எஜமானிடம் பேசியதாகக் கூறப்படவில்லை. ஒரு தாலந்தைப் பெற்றவன் எஜமானை நோக்கி எஜமான் மிகவும் கருமி என்பதைச் சொல்லாமல், ஆண்டவனே என்று உயர்த்திக் கூப்பிட்டு நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் என்பதை அறிவேன் என்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவர் என்றும், கடின இதயமுள்ள மனுஷன் என்றும் அறிவேன் என்றான். ஆதலால் தான் எஜமானின் பொருளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து அதில் இழப்பு உண்டானால் தண்டனை தருவீரென்று பயந்து உமது பொருளைப் பத்திரமாக புதைத்து வைத்துள்ளேன் என்று சோம்பேறியான அந்த ஊழியக்காரன் கூறி, உம்முடைய தாலந்தை வாங்கிக் கொள்ளும் என்றும் கூறினான். தான் வாங்கின பணத்தைப் பெருக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, உழைக்கவில்லை, தனக்குத் தந்த பொறுப்புகளை நிறைவேற்ற எந்த உத்தரவாதமும் எடுக்கவில்லை. தன்னுடைய எஜமானைப் புரியாதவனாக இருக்கிறான். எஜமானைப்பற்றிய நல்ல எண்ணமும் அவனிடம் இல்லை. எஜமானைக் கொடூரமானவனாகப் பார்க்கிறான். அதேபோல் இயேசு நல்லவர் என்ற எண்ணம் நமக்கு இல்லையென்றால் இயேசுகிறிஸ்து நல்லவர் என்று நாம் போதிக்க முடியாது.
எஜமான் முதல் இருவருக்கும் கொடுத்த பரிசுகள்:
மத்தேயு 25 : 21 “அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.”
5 தாலந்தைப் பெற்றவன் எஜமானிடம் 10 தாலந்தை சம்பாதித்தேன் என்று கூறியதை எஜமான் கேட்டவுடன் மிகவும் சந்தோஷம் அடைகிறான். எஜமான் தன்னுடைய வாயால் அவனைப் பாராட்டி உத்தமும், உண்மையுமான ஊழியக்காரனே என்றழைத்து அவனை அநேகத்துக்கு அதிகாரியாக்கி, பொறுப்புகளை அளித்து தன்னுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசிக்கச் செய்தார். இரண்டு தாலந்தைப் பெற்றவன் எஜமானிடம் 4 தாலந்தை சம்பாதித்தேன் என்று கூறியதைக் கேட்டவுடன் எஜமான் மிகவும் சந்தோஷமடைந்து தன்னுடைய வாயால் பாராட்டி அவனையும் அநேகத்துக்கு அதிகாரியாக்கி, பொறுப்புகளை அளித்து தன்னுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசிக்கச் செய்தார். இதில் எஜமானனாகிய இயேசு இவர்களை உண்மையுள்ளவர்களென்றும், உத்தமர்களென்றும், பெருகப் பண்ணியவர்கள் என்றும், சரியாய் கணக்கு ஒப்புவித்தவர்களென்றும் கூறியதைப் பார்க்கிறோம். உண்மையாக ஊழியம் செய்பவர்களுக்குக் கிருபைகள் பெருகும், புதிய வழிகள் திறக்கும், ஊழியம் சிறக்கும், பல ஆசீர்வாதங்கள் கிடைக்கும். யோசேப்பு உண்மையுள்ளவனாக இருந்ததால் எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியானான். இந்த உலகத்தில் நமக்குக் கொடுக்கப்பட்ட சிறிய பொறுப்புகளில் திறமையாகச் செயல்பட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பெரிய பொறுப்பை நமக்களிப்பார். கர்த்தர் நமக்குக் கொடுத்த ஊழியத்தில் நாம் முழுமையாய் இருக்கிறோமா? கர்த்தர் நம்மைப் பார்த்து உத்தமமும், உண்மையுள்ள ஊழியக்காரன் என்று சொல்வாரா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
எஜமான் மூன்றாவது ஊழியக்காரனுக்குக் கொடுத்த தண்டனை:
மத்தேயு 25 : 26 – 30 “அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.”
“அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,”
“அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.”
“உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.”
“பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.”
எஜமான் ஒரு தாலந்து கொடுத்தவனைப் பார்த்து கோபத்துடன் பொல்லாத சோம்பலான ஊழியக்காரனே என்று அழைக்கிறார். இதன் பொருள் அவன் எஜமானுடைய சித்தத்தை, திட்டத்தை, நோக்கத்தை, ஆர்வத்தை அறிந்தும் அதன்படி செய்யாதவன் என்பதாகும். மேலும் அவனைப் பார்த்து “நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவன் என்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவன் என்றும், நீ அறிந்திருந்தால் என் பணத்தை உன்னால் வியாபாரம் பண்ணி உழைத்து பெருக்க முடியாவிட்டாலும் அதைக் காசுக்காரரிடம் கொடுத்து வைத்திருந்தால், அதை நான் இப்பொழுது வட்டியோடு வாங்கியிருப்பேன்.” என்று கூறினார். வேதத்தில் ஒரு யூதன் மற்றோரு யூதனுக்கு வட்டிக்கு கொடுக்கக் கூடாது. ஆனால் யூதன் புறஜாதியாருக்கு வட்டி கொடுக்கலாம் (யாத்திராகமம் 22 : 25, லேவியராகமம் 25 : 36, உபாகமம் 23 : 19, 20) என்றுள்ளது. எஜமான் கோபத்துடன் அவனிடத்திலுள்ள தாலந்தை எடுத்து பத்து தாலந்து உள்ளவனிடம் கொடுத்தார். ஒன்றை வைத்திருந்தவன் அதை இழந்து போனான். அதிகமாக சம்பாத்தியம் பண்ணினவன் இன்னும் அதிகமாகப் பெற்றான். உண்மையுள்ளவர்களுக்கு இன்னும் கொடுப்பார். உண்மையில்லாதவர்களிடம் உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும். உண்மைத் தன்மை அநேக ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். உண்மையற்ற தன்மை இருக்கிற ஆசீர்வாதங்களையும் இழக்கச் செய்யும். கொடுத்ததும் எடுத்துக் கொள்ளப்படும். இவனைப் போன்றவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை அபிவிருத்தி பண்ணி, பெருக்கமடைய பயன்பட மாட்டார்கள். எழுப்புதல் வருவதற்கும் இவனைப் போன்றவர்கள் தடையாக இருப்பார்கள். ஓரு தாலந்தைப் பெற்றவனுக்கு எஜமான் கொடுத்ததில் திருப்தி இல்லை. நாமும் தேவன் நமக்குக் கொடுத்திருப்பதில் திருப்தி இல்லாவிட்டால் நம்மால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது. தேவன் நமக்குக் கொடுத்ததில் திருப்தியடைந்து அதை பெருக்கப் பிரயாசப்பட வேண்டும்.
இவன் தன்னுடைய சோம்பேறித் தனத்திற்கு எஜமானைக் குறை கூறுகிறான். இதேபோல் ஆலயத்துக்கு வராமல், தேவனுக்கென்று பிரயாசப்படாமல் இருப்பதற்கு அனேக காரணங்களைச் சொல்லக்கூடியவர்கள் உண்டு. கர்த்தரைக் குறை சொல்கிற தன்மை மாற வேண்டும். இவன் எஜமானிடம் பயத்தினால் பணத்தைப் புதைத்து வைத்தேன் என்று கூறுகிறான். இவனுக்கு எஜமானைக் குறித்த பயம் இல்லை. எதில் இவனுக்குப் பயமென்றால் எதையும் துணிந்து செய்வதற்குப் பயம். எஜமான் தன்னிடம் உண்மையில்லாத பிரயோஜனமில்லாத அந்த ஊழியக்காரனை புறம்பான இருளிலே போடச்சொல்லிக் கட்டளையிடுகிறார். அந்த இருளுக்குள் அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்கிறார் (மத்தேயு 8 : 12, 13 : 42, 50, 22 : 13).. சரியாகப் பணி செய்யாத புதிதாக ஒரு ஆத்துமாவையும் கர்த்தரிடம் வழி நடத்தாத ஊழியரின் இறுதி நிலையும் இந்த ஊழியக்காரனைப் போன்றதாகும். கவனமாக ஊழியம் செய்ய வேண்டும்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
உவமையின் கருத்து:
கர்த்தர் நம்மை நம்பிக் கொடுத்திருக்கிற தாலந்துகளை சோம்பேறியாக இல்லாமல் முழு ஆர்வத்தோடும் பலத்தோடும் செய்வோம். ஏனெனில் சோம்பற்காரனின் வயல் முள் காடாயிருக்குமென்றும் (நீதிமொழிகள் 24 : 30), சோம்பேறியின் வழி முள் வேலிக்குச் சமானமென்றும் (நீதிமொழிகள் 15 : 9)ல் பார்க்கிறோம். இந்த உவமையில் மூன்றாவது நபரின் சோம்பேறித்தனத்தினால் ஒன்றும் கிடைக்காமல் வெறுமையானான் (நீதிமொழிகள் 20 : 4, 13 : 4) என்று பார்க்கிறோம். மோசேயிடம் தேவன் உன் கையில் என்ன இருக்கிறது என்று கேட்டதைப் போல நம்மைப் பார்த்தும் கேட்கிறார். நம்மிடம் என்ன தாலந்து இருக்கிறதோ அதைக் கொண்டு தேவனுக்குத் தொண்டு செய்வோம். நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோமென்று தெரியாது,. இயேசு எப்பொழுது வருவாரென்று தெரியாது. நாளை என்ன நடக்கப் போகிறதென்று தெரியாது. ஆனால் நாம் நம்மிடமுள்ள தாலந்துகளை தேவனுக்கென்று ஒப்புக்கொடுக்கத் தீர்மானமெடுத்து இன்றே அதை செயல் படுத்துவோம். ஏனென்றால்,
2 கொரிந்தியர் 5 : 10ல் “சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.”
கற்றுக்கொள்ள வேண்டியது:
மனுஷன் முகத்தைப் பார்க்கிறான் தேவனோ நம்முடைய இருதயத்தை பார்க்கிறார். இந்த உவமையில் இருவர் உழைக்கிறார்கள் உண்மையாய் இருக்கிறார்கள் எஜமான் இந்த இருவருக்கும் ஒரே பலனைக் கொடுத்தார். ஒரே வார்த்தையில் உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரன் என்று பாராட்டி அவர்களை அதிபதிகளாக்குகிறார். இன்னும் ஏன் கூட சம்பாதிக்கவில்லை என்று கேட்கவில்லை. இன்னொருவன் உழைக்கவில்லை சோம்பேறியாயிருக்கிறான். சோம்பேறியை என்றைக்குமே ஆண்டவர் எடுத்துப் பயன்படுத்த முடியாது. ஆகவே எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். நாம் தேவனுக்குப் பிரயோஜனம் உள்ளவர்களாக தேவனுடைய ராஜ்ஜியத்தில் எழுப்புதலைக் கொண்டு வருகிறவர்களாக இருக்க வேண்டும். தேவன் நம்மை அழைத்த அழைப்பின்படி நம்முடைய திறமையின் படி ஊழியத்தில் ஆத்மாக்களைக் கொடுத்திருக்கிறார். இந்த நியாயத்தீர்ப்பு ஒருவன் தனக்கு ஒப்புவிக்கப்பட்டதைப் பயன்படுத்தத் தவறியதால் உண்டானது.
தேவனுடைய ராஜ்ஜியத்தில் அதிகமான பணி செய்ய வேண்டுமானால் இராஜ்ஜியத்தைக் குறித்த அறிவிலும், உக்கிராணத்துவத்திலும் வளர வேண்டியது அவசியம். நம்முடைய எஜமானாகிய தேவன் எழுப்புதலை உண்டு பண்ணுகிறவர்களுக்கு நிச்சயமாகப் பலனளிப்பார். இந்த வருடத்தில் அதிகமான ஆத்தும ஆதாயம் செய்ய, உயிர் மீட்சியைக் கொண்டுவர பிரயாசப்படும் போது நம்மைத் தேவன் பலவிதங்களில் ஆசியளிப்பார். தேவன் நம்மிடம் கொடுத்ததைப் பெருகப் பண்ண பாடுபடுவோம். உன்னதத்திலிருந்து ஆவி ஊற்றப்படும் வரை வனாந்திரம் செழிப்பாகும் வரை கர்த்தருடைய ராஜ்யத்திற்கென்று உழைப்போம். அப்பொழுது வானத்தில் வாசல்கள் திறக்கப்படும். சாட்சியுள்ள வாழ்க்கை வாழ, எஜமானின் வருகைக்கு ஆயத்தமாயிருக்க நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையாயிருக்க முயற்சி எடுப்போம். தேவன் வரும்போது அவரிடம் கணக்குக் கொடுக்கவேண்டும். நித்தியத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெறுவோம்..
பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் தேவன் கொடுத்துள்ள பொறுப்பை நிறைவேறற கடினமாக உழைக்க வேண்டுமென்று சொன்னார். இதிலிருந்து நாம் இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். ஒன்று பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு விலைமதிக்க முடியாத பொக்கிஷமான சுவிசேஷத்தைப் பிரசங்கித்து சீஷராக்கும் முக்கிய பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்தார். இரண்டு ஊழியத்தில் நாம் எல்லோரும் கடினமாக உழைக்க வேண்டுமென்று இயேசு எதிர்பார்க்கிறார். அவருக்கு உண்மையாயிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்கு அளவில்லா ஆசீர்வாதம் கிடைக்கும். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates