இயேசு இந்த உவமையின் மூலம் தெரிந்த காரியத்திலிருந்து தெரியாத ஒரு காரியத்திற்கு அழைத்துச் செல்கிறார். கிறிஸ்து பூலோகத்தில் இருந்த காலகட்டத்தில் மக்கள் உலகத்துக்குரிய காரியங்களுக்கு முக்கியத்துவம் செலுத்தி, நித்தியத்துக்குரியவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தனர். மேலும் அவர்கள் நிஜத்தை கற்பனை என்றும் கற்பனையை நிஜமென்றும் நினைத்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களின் மனநிலையை மாற்றுவதற்கும், பரலோகத்தின் எதிர்பார்ப்பு என்னவென்று சொல்லவும், நித்தியத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கவும் இந்த உவமையைக் கூறினார். இந்த உவமையை இயேசு தம்முடைய சீஷர்களைப் பார்த்துக் கூறினார். இதில் இயேசு தன்னுடைய சீடர்களிடம் ஐசுவரியவானாகிய ஒருவனைப் பற்றியும் அவன் வேலைக்கு வைத்த உக்கிராணக்காரன் தன்னுடைய வேலைகளில் செய்த அநீதியைப் பற்றியும் கூறுகிறார். சீஷர்களோடு பரிசேயரும், வேதபாரகரும், ஆயக்காரர்களும், பாவிகளும் இன்னும் அநேக ஜனங்களும் அங்கிருந்தனர். இதை லூக்கா 16 : 1 – 14ல் பார்க்கலாம்.
உக்கிராணக்காரனிடம் கணக்கைக் கேட்ட எஜமான்:
லூக்கா 16 : 1 – 14 “பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.”
“அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.”
ஐசுவரியவானாகிய ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு அதிகமான ஆஸ்திகள் இருந்தது. எனவே அவன் தன்னுடைய சொத்துக்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஒரு உக்கிராணக்காரனை நியமித்திருந்தான். உக்கிராணக்காரனென்பவன் தன்னுடைய எஜமானின் சொத்துக்களுக்குப் பொறுப்பாக இருப்பவன். இவன் எஜமானின் நிலங்களை குத்தகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தைத் தன்னுடைய எஜமானுக்குக் கொடுக்கக் கூடியவன். எஜமானின் அதிகாரத்தைச் செயல்படுத்துகிறவன். ஆபிரகாமுக்கு எலியேசர் என்ற உக்கிராணக்காரன் இருந்தான். அவன் ஆபிரகாம் வீட்டிலுள்ள எல்லாவற்றிற்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தான் (ஆதியாகமம் 24: 2). இந்த உக்கிராணக்காரன் எஜமானின் சொத்துக்களையும், பணத்தையும் தவறாகப் பயன்படுத்தினான். தன்னுடைய எஜமானின் சொத்துக்களை வீணாக்கி தப்பான கணக்குகளை எழுதி வைத்திருந்தான். பவுல் 1 கொரிந்தியர் 4 : 2ல் உக்கிராணக்காரன் உண்மை உள்ளவன் என்று காணப்படுவது அவனுக்கு அவசியம் என்று கூறுகிறான். எஜமானிடம் உண்மையுள்ள ஒருவன் போய் “நீர் வைத்திருக்கிற உக்கிராணக்காரன் உம்முடைய ஆஸ்திகளை அழித்துப் போட்டுக் கொண்டிருக்கிறான்” என்று தெரிவித்தான். இந்த உலகத்தில் ஒருவன் தான் குற்றவாளியென்று நிரூபிக்கப்படாத வரையில் அவன் குற்றமற்றவனாகவே காணப்படுகிறான். ஆனால் தேவனுடைய வார்த்தையின் அணுகுமுறை வேறு .
ஒருவன் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்படாதவரை அவன் குற்றவாளி என்று தேவன் சொல்லுகிறார் (ரோமர் 3 : 23). ஒரு மனிதன் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாக இருக்க முடியாது. ஆனால் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்பட வழியிருக்கிறது (ரோமர் 8 : 1). ஒருவன் இயேசுவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கும்போது தன் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறான். இந்த ஒரு வழியில் மாத்திரமே மனிதன் நீதிமானாக முடியும். ஒவ்வொரு எஜமானனும் தன்னிடம் உன்மையுள்ளவர்களிடம்தான் இப்படிப்பட்ட பொறுப்பை ஒப்படைத்திருப்பார்கள். எனவே எஜமான் அவனது செயலைக் கேள்விப்பட்டுக் கலக்கம் அடைந்திருப்பான். எஜமான் தன்னுடைய உக்கிராணக்காரணை வரவழைத்து அதைப் பற்றி விசாரிக்கிறான். “நான் உன்னிடம் என்னுடைய ஆஸ்தியைப் பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும்தான் கொடுத்தேன். ஆனால் அதை நீ அழித்துப் போடுவதாகக் கேள்விப்படுகிறேன். எனவே எனக்கு அதற்குரிய கணக்கை ஒப்புவி” என்றான். இனி நீ எனக்கு உக்கிராணக்காரனாய் இருக்கக் கூடாது என்றும் கூறிவிட்டான்.
உக்கிராணக்காரனின் தந்திரமான செயல்:
லூக்கா 16 : 3 – 7 “அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.”
“உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;”
“தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.”
“அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.”
“பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான்.”
அந்த உக்கிராணக்காரனின் நடவடிக்கைகளுக்கும், அவனுடைய வேலைக்கும் முடிவுகாலம் நெருங்கி வந்துவிட்டதால் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பின் கணக்கை ஒப்புவிக்க வேண்டும். தான் கணக்குகளை ஒப்புவித்தால் கண்டிப்பாகப் பிடிபட்டு விடுவோம் என்று நினைத்தான். அதனால் தற்போது கணக்கை ஒப்புவிக்க தயாராக இல்லாமல், தற்காத்துக் கொள்ள வேண்டுமென்று தன்னையும் தன் நிலைமையை காத்துக் கொள்ள முடிவு செய்தான். தன்னுடைய எதிர்காலத்திற்காகத் தான் ஒன்றும் சேமித்து வைக்கவில்லையே என்றெண்ணுகிறான். இதுவரை எஜமானுடையதை எடுத்து வாழ்ந்து விட்டான். இனி அவ்வாறு வாழ முடியாது. அவனால் பிச்சை எடுக்கவும் முடியாது. அது அவனுக்கு கவுரவக் குறைச்சல். உழைத்து வேலை செய்யவும் அவனுக்கு விருப்பமில்லை. பசியில் மரித்துப் போவனா என்று நினைத்தான். ஆனால் திருடுவதற்கு அவன் வெட்கப்படவில்லை. இது நமக்கு எச்சரிப்பைக் கொண்டு வருகிறது. இவன் மனந்திரும்பவோ, தான் செய்த தீய செயல்களுக்காக வருத்தப்படவோ இல்லை. இவன் மோசடி செய்கிறவன். உலகத்தாரால் ஞானவான் என்று அழைக்கப்படுகிறவன். வேறு வேலைகளில் இவனுக்கு பயிற்சியில்லை. ஏதாவது செய்யவேண்டும் என்று சிந்தித்தான். எஜமானின் வேலை இப்பொழுது தன்னிடம் இருப்பதால் உலகத்தின் பார்வையில் தந்திரமான ஒரு காரியத்தை செய்யத் தீர்மானம் எடுத்கிறான். எஜமானிடம் கடன் வாங்கினவர்கள் தனக்குத் தயவு பாராட்ட வேண்டுமென்று நினைத்தான். தன்னை ஏற்றுக்கொள்ள சிலராவது வேண்டுமென்று அவர்களுக்குச் சலுகைகளைச் செய்கிறான்.
எஜமானிடம் கடன்பட்ட ஒரு நபரை கூப்பிட்டு அவன் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்று கேட்டான். அதற்கு அவன் நூறு குடம் எண்ணை என்றான். உடனே உக்கிராணக்காரன் அவனிடம் அவனுடைய சீட்டை வாங்கி ஐம்பது என்று அடித்துத் திருத்தி எழுதவைத்தான். இவன் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணியதற்குக் காரணம் மீதி பாதிக்குத் தன்னைக் கவனித்துக்கொள் என்று மறைமுகமாகச் சொல்கிறான். கடன்காரன் கொடுக்க வேண்டியதில் தனக்கு வரவேண்டியதைத் தள்ளுபடி செய்தான். எஜமானுக்கு அவன் நஷ்டப்படுத்தவில்லை. எனவே எஜமானுக்குச் சந்தோஷம். கடன் வாங்கினவனுக்கு லாபம் வந்ததால் சந்தோஷம். அதன் பின் மற்றொருவனை நோக்கி நீ பட்ட கடன் எவ்வளவு என்று கேட்டான். அதற்கு அவன் நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவனுடைய சீட்டை வாங்கி எண்பது என்று எழுத வைத்தான். இவன் மற்றவனுக்கு கொடுத்த ஐம்பது சதவிகித தள்ளுபடியை இந்த மனிதனுக்குக் கொடுக்காதது ஏனென்று புரியவில்லை. இவன் முதலில் பண்ணிய மோசடியைப் போலவே இறுதியிலும் பண்ணுகிறான். கடன் வாங்கின ஒவ்வொருவருக்கும் சலுகை கொடுக்கிறான். தன்னுடைய எதிர்காலத்திற்காக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டதாக நினைத்தான். ஏனென்றால் எஜமான் தன்னை வெளியே அனுப்பி விட்டதால், இவர்கள் எல்லோரும் தன்னை நண்பராக ஏற்றுக் கொள்வார்கள். இவர்கள் மூலம் நாம் பிழைத்துக் கொள்ள முடியும் என்று சிந்தித்து இவ்வாறு செயல்பட்டான்.
எஜமான் மெச்சினதும் அதன் விளக்கமும்
லூக்கா 16 : 8 -10 “அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.”
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.”
“கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.”
அதைப் பார்த்த எஜமான் அவனைத் திட்டாமல், புத்தியாய் நடந்து கொண்டான் என்று மெச்சினதைப் பார்க்கிறோம். இந்தக் காரியம் நல்ல முன்னுதாரணமாக இல்லை. இது எங்கும் நடக்காதது. கேட்க அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் இயேசு சொல்ல வந்த காரியத்தைச் சரியாய்ப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அநீதியுள்ள உக்கிராணக்காரன் தப்பாகத் திருத்தியெழுத்தினதை இயேசு கிறிஸ்து சரியென்று கூறவில்லை ஆனால் இயேசு அதை வெறுத்துத் தவறு என்று உணர்த்துகிறார். அநீதியுள்ள பொருட்களை அவன் எவ்வளவு புத்தியாகப் பயன்படுத்துகிறானென்றும், உக்கிரணத்துவப் பணியில் அவனது செயல்பாடு எவ்வளவு ஞானம் நிறைந்ததாக இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டுகிறார். உலகத்திலிருந்து வரப்போகிற எதிர்காலத்தைக் குறித்து இவன் சிந்திக்கும்போது நாம் நித்திய எதிர்காலத்தைக் குறித்து எவ்வளவாய் (evvalavaai) சிந்திக்க வேண்டுமென்கிறார். ஒருவேளை இந்த எஜமான் இந்த உக்கிராணக்காரன் பயன்படுத்திய வழியைத் தானும் பயன்படுத்திப் பணக்காரனாயிருக்கலாம். உலகத்தின் கோட்பாட்டின்படி அவன் புத்தியாய் செயல்பட்டான். உலக எஜமான் உலகப்பிரகாரமான உக்கிராணக்காரனை உலக வழக்கப்படி மெச்சிக்கொண்டான். இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர்களை ஒளியின் பிள்ளைகள் என்கிறார் (1தெசலோனிக்கேயர் 5 : 5). உலக மக்களை இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் என்கிறார். இயேசு ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள் என்கிறார்.
இந்த உலகத்தின் பிள்ளைகள் இந்த உலகத்துக்காக மட்டும் வாழ்கிறார்கள். இவர்கள் தேவனுடைய பிள்ளைகளைக் காட்டிலும் தங்கள் பணத்தை மிகவும் புத்திசாலித்தனமாக, நீதி செய்தோ, அநீதி செய்தோ எப்படியாகிலும் தங்கள் எதிர்காலத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். மரணத்திற்குப் பின் நம்மை நித்தியாமான வீட்டில் நம்மை ஏற்றுக்கொள்ளும்படி அநீதியான உலகப் பொருளால் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் என்கிறார். கொஞ்சத்திலே உண்மையுள்ளவனாக இருப்பவன் அநேக காரியங்களிலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதி செய்பவன் அநேகத்திலும் அநீதி செய்கிறான் என்கிறார். அநீதியான உலகப் பொருளுக்கும் விசுவாசிக்கும் இருக்க வேண்டிய உறவைக் குறித்து இங்கே கூறுகிறார். அநீதியான உலகப் பொருளென்பது செல்வத்தைக் குறிக்கிறது. மரணத்திற்குப் பின் இவைகள் நமக்கு உதவி செய்யாது. நாமும் உலகப் பொருள்களின் மீது உக்கிராணக்காரனாக இருக்கிறோம். விசுவாசிகளான நமக்கு எதுவுமே இந்த உலகத்தில் சொந்தமானதல்ல. எல்லாமே தேவனுடையது. நாம் தேவனுடைய பொருள்களை, பணத்தை, சொத்தை, அனுபவிக்கிறோம். அதற்கு அவர் நமக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். நாம் அதற்குப் பொறுப்புடையவர்கள். அவற்றை நாம் ஞானமுடன் பயன்படுத்த வேண்டும். தேவன் நமக்குக் கொடுத்த பணத்தை ஞானமுடன் தீமைக்குப் பயன்படுத்தாமல், நன்மைக்காக மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.
இயேசுகிறிஸ்துவின் விளக்கம்
லூக்கா 16 : 11 – 13 “அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?”
“வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?”
“எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.”
இயேசு இங்கு அநீதியான உலகப்பொருள், மெய்யான பொருள் என்று பிரித்துக் கூறுகிறார். நாம் அநீதியான உலகப் பொருளையும் பணத்தையும் ஆவிக்குரிய விதத்தில் ஞானமாக பயன்படுத்த வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார். நம்முடைய பணம் ஆவிக்குரிய விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான விதத்தில் பயன்படுத்தினால் கர்த்தர் நம்மிடம் கணக்கு கேட்பார். நாம் பூமியிலே கொடுக்கப்பட்ட செல்வத்தை சரியாக பயன்படுத்தாதபோது தேவன் பரலோக செல்வங்களைக் நம்மிடம் கொடுப்பாரோ என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் அதை இயேசுவின் ராஜ்ஜியம் கட்டப்பட கொடுக்க வேண்டும். பாவிகள் இரட்சிப்படையவும், அவர்களைத் தேவனண்டை கொண்டுவரவும் பயன்படுத்த வேண்டும். அப்பொழுது பரலோகத்தில் வரவேற்பு கிடைக்கும். நாம் நம்முடைய பணத்தைக் கொண்டு உலகக் காரியங்களுக்காக வீணாக செலவு செய்தோமென்றால் உலகத்திற்காக ஊழியம் செய்கிறவர்களாக இருப்போம். அதுவே நம்முடைய எஜமானனாக ஆகிவிடும்.. தேவனுக்கும் உலக பொருளுக்கும் ஊழியஞ் செய்ய ஒருவனாலும் முடியாது. ஏனெனில் ஒருவனை அதிகமாக நேசித்து மற்றவனை பகைப்பான் என்கிறார்.
நாம் கற்றுக்கொண்ட பாடம்:
அவனுக்கு எஜமான் நீதிமான் என்ற அறிவு இருந்தது. தான் அவருக்குத் தெரியாமல் தவறு பண்ணுகிறேன், எனவே நிச்சயமாக தன் எஜமானனுக்குத் தெரியும். ஆதலால் நிச்சயமாகத் தனக்குத் தண்டனை உண்டு என்று தனக்குத்தானே ஒத்துக் கொள்கிறான். இந்த உக்கிராணக்காரன் ஒளியின் பிள்ளைகளைவிட அதிக ஞானவானாக இருக்கிறான். இவன் மற்றவர்களுக்குத் தன்னுடைய பாவத்தில் பங்கு வைத்ததைப் போல, தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற நல்ல காரியங்களை மற்றவர்களுக்குக் கொடுத்தால்தான் நித்தியத்திற்காகச் சேமித்து வைப்பதாகப் பொருள் என்று இயேசு உரைக்கிறார். மற்றவர்களுக்கு நன்மை செய்வதின் மூலம் நாமும் நன்மையைப் பெறுகிறோம் என்று தேவன் நமக்குப் புரிய வைக்கிறார். நமக்கும் நாம் செய்கிற வேண்டாத காரியங்களுக்காக ஒருநாள் நியாயத்தீர்ப்பில் நின்று விசாரிக்கப் படுவோம் என்ற உணர்வு வேண்டும். கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற ஒவ்வொன்றுக்கும் நாம் அவரிடம் கணக்கு கொடுக்க வேண்டும். நாம் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் தேவனுடைய பார்வையில் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? உலகப்பொருளைத் தேடுவதில் ஆர்வமாயிருக்கிறோமா? பரலோகத்திற்குச் செல்ல நம்மைத் தகுதி படுத்த ஆயத்தமாயிருக்கிறோமா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் இந்த உலகத்தில் வாழும்போது ஒளியுள்ள பிள்ளைகளாய், ஞானமுள்ள பிள்ளைகளாய், அறிவுள்ள பிள்ளைகளாய், குற்றம் சாட்டப்படாதவர்களாய், ஆண்டவர் மெச்சிக் கொள்ளத்தக்கதாய், ஆச்சரியப்படத்தக்கதாய் வளர வேண்டும். நம்முடைய மரணத்திற்குப்பின் பரலோகம் நம்மை வரவேற்கும்படி தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்பட பாடுபடுவோம்.