இயேசு மலைப் பிரசங்கத்தில் உவமைகள் மூலம் முக்கியமான கருத்துக்களை விளக்கியுள்ளார். இந்த உவமையில் புத்தியுள்ளவர்கள் கட்டிய வீட்டைப் பற்றியும், புத்தி இல்லாதவர்கள் கட்டிய வீட்டைப் பற்றியும் இயேசு விவரிக்கிறார். இதை மத்தேயு 7 : 24 – 29லும், லூக்கா 6 : 47 – 49லும் காணலாம். தேவனுடைய வார்த்தைகளை ஒருவன் கடைபிடித்தால் அவன் எப்படி இருப்பான் என்றும், கடைபிடிக்காவிட்டால் எவ்வாறிருப்பான் என்றும் இதன் மூலம் அறியமுடிகிறது.
புத்தியுள்ள, புத்தியில்லாத நபர்கள்:
லூக்கா 6 : 47 “என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.”
இந்த உவமையில் இரண்டு வித்தியாசமான நபர்களை நம்முடைய கண்களுக்கு முன்பாக கொண்டு வந்து இயேசு நிறுத்துகிறார். 1. தேவனுடைய வார்த்தையைக் கேட்டு நடக்கிற புத்தியுள்ளவர்கள். 2. தேவனுடைய வார்த்தையைக் கேட்காத புத்தியில்லாதவர்கள். இரண்டு பேரும் ஒரே ஆசையுடையவர்களாய் தங்களுக்கு ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்று கட்டுகிறார்கள். இவர்களுடைய வீடு என்னவாகும் என்பதை இந்த உவமையில் நாம் அறியலாம். 1யோவான் 1 : 1ல் யோவான் வார்த்தையின் வளர்ச்சியைக் குறித்துக் கூறியிருக்கிறார். அநேகர் தேவ வார்த்தைகளைக் கேட்டும் அந்த இடத்தை விட்டு கடந்து போய் விடுகிறார்கள். ஆனால் யோவானோ ஆதிமுதல் இருந்ததைக் கேட்டதாகவும், கண்களினால் அதை உற்றுப் பார்க்க ஆரம்பித்து, அவரைக் கண்டதாகவும், தாங்கள் கைகளினால் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொண்டதாகவுமுள்ள ஜீவாவார்த்தையென்கிறார். அந்தக் கன்மலை இயேசுகிறிஸ்து. வார்த்தைகளைக் கேட்கிறவர்களையல்ல அதன்படி செய்கிறவர்களைத்தான் தேவன் கவனித்துப் பார்த்து ஆசியளிக்கிறார். இதைத்தான் இயேசு
லூக்கா 6 : 46ல் “என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?”
என்று கேட்பதைப் பார்க்கிறோம். இந்த அனுபவம் ஒருவனுக்குள் வராவிட்டால் அவன் மறுரூபமாகவில்லையென்று பொருள். இதைத்தான் லூக்கா 6 : 47ல் என்னிடத்தில் வந்து என்கிறார் இயேசுவிடம் நெருங்கி, அவருடைய வார்த்தைகளைக் கேட்கிறவர்கள் யாருக்கு ஒப்பாயிருப்பார்கள் என்று இந்த உவமையில் சுட்டிக் காட்டுகிறார்.
புத்தியுள்ள மனிதனின் செயல்கள்:
மத்தேயு 7 : 24 “ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.”
இயேசு புத்தியுள்ள ஒரு மனுஷனைப் பற்றி கூறுகிறார். இந்த புத்தியுள்ள மனுஷன் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்கிறவன். அதாவது தேவனுடைய சுவிசேஷத்தைக் கேட்டு, அதை விசுவாசித்து வார்த்தையின்படி செய்பவர்கள் என்று கூறுகிறார். கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டுகிற மனிதன் சாதாரண மனிதனல்ல. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிற மனிதன். இவர்கள் தேவனிடம் நெருங்கி வாழ்கிறவர்கள். தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பது, கேட்பது, தியானிப்பது, பிரசங்கிப்பது நல்லதுதான். ஆனால் இவைகள் மட்டும் போதாது. ஆவியானவரோடு மேலும் மேலும் ஏறிப்போகிற அனுபவம், அதாவது வளருகின்ற அனுபவம் வேண்டுமென்கிறார். இதற்கு உதாரணமாக லூக்கா 17 : 12 – 19ல் பத்து குஷ்டரோகிகள் தங்களை சுகப் படுத்துவதற்காக இயேசுவிடம் வந்து கெஞ்சினார்கள் அப்பொழுது இயேசு அவர்களை சுகப்படுத்தி ஆசாரியர்களிடம் அவர்கள் சுத்தமானதைக் காண்பிக்கச் சொன்னார். அவர்கள் காண்பித்து விட்டு ஒன்பது பேரும் அவர்கள் வழியே போய் விட்டார்கள். ஆனால் ஒரு சமாரியன் மட்டும் இயேசுவிடம் திரும்ப வந்து தான் சுகம் பெற்றதற்காக இயேசுவின் பாதத்தில் விழுந்து ஸ்தோத்திரம் செலுத்தினான். அவன் இயேசுவிடம் வந்ததால், அவன் மட்டுமே இரட்சிப்பை பெற்றான். அதே போல் மாற்கு 9 : 2ல் பேதுருவும், யாக்கோபும், யோவானும் உயர்ந்த மலையின்மேல் ஏறிச்சென்ற போதுதான் இயேசுவின் மறுரூபத்தைப் பார்த்தனர்.
இந்த உவமையில் உள்ள புத்தியுள்ள மனுஷன் என்று பாராட்டப்படும் இந்த மனிதன் தான் கட்டப் போகிற வீட்டின் வெளித்தோற்றத்திற்கு முக்கியம் கொடுக்காமலும், அதனுடைய அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும், வீட்டின் அஸ்திபாரத்தை ஆழமாகத் தோண்டி, கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டுகிறான். அதேபோல் கிறிஸ்துவுக்குள் வேரூன்றி நிற்கிற அனுபவத்துக்குள் நாம் வளர வேண்டும். எபேசியர் 3 : 18, 19ல் கூறியதைப் போல அறிவுக்கெட்டாத இயேசுவின் அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக வேண்டும். இதுதான் ஆழமாகக் குழி தோண்டுதல். கர்த்தருடைய அன்பின் அகலம், நீளம், ஆழம், உயரம் எவ்வளவு என்பதை அறிந்து கொண்டு அவரைக் கிட்டி சேர வேண்டும். இதைத்தான் பவுல் தன்னுடைய,
1 கொரிந்தியர் 3 : 11 – 15ல் “போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.”
“ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,”
“அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.”
“அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.”
“ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.”
என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். நம்முடைய கன்மலை கிறிஸ்துவே. கிறிஸ்துவின் மேல் நீங்கள் நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் கட்டப்பட்டிருந்தால் எந்தப் புயலும், வெள்ளமும் வந்தாலும் அதை அசைக்க முடியாது. எனவே நாம் கட்டுகிற வீடு கிறிஸ்துவின் அஸ்திபாரத்தின் மேல் கட்டபட வேண்டும். கிறிஸ்து அல்லாத வேறு எந்த நம்பிக்கையில் கட்டினாலும் அது விழுந்து விடும். கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்து கட்டும்போது அது இடிந்து விழாது. கர்த்தருடைய கரம் அதைத் தாங்கும். ஒருவன் எந்த ஆபத்தை சந்திக்க நேர்ந்தாலும் அவனுடைய அஸ்திபாரம் கன்மலையாகிய இயேசுவின் மேல் கட்டப்பட்டிருந்தால் அவன் பயப்படத் தேவையில்லை. உபத்திரவங்களும், பாடுகளும் அவனுடைய இரட்சிப்பைப் பாதிப்பதில்லை. அவனுக்கு நித்தியத்திலும் பாதிப்பு இல்லை.
புத்தியுள்ளவன் கட்டிய வீட்டின் நிலை:
மத்தேயு 7 : 25 “பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.”
புத்தியுள்ளவன் கட்டின வீடு கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டதால் எத்தனை பெரிய வெள்ளம் வந்தாலும், பெரு மழை வந்து அதைத் தாக்கினாலும், புயல் காற்றினால் அடிக்கப்பட்டாலும், அந்த வீடு அசையாமல் நிற்கும். ஒரு கட்டிடத்தின் அஸ்திபாரம் வெளியே தெரிவதில்லை. அது பூமிக்கடியில் போட்டிருப்பதால் அதைக் கட்டி முடித்த பின்பும் அது பயனுள்ளதாக இருக்கிறதா இல்லையா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியாது. மழை, வெள்ளம், காற்று போன்றவைகள் வந்து அந்தக் கட்டிடத்தைத் தாக்கும் போதுதான், அந்த அஸ்திபாரத்தின் பலன் நமக்குத் தெரியும். அதேபோல மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனுக்கும் பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அவர்கள் வாழ்க்கையில் எதிர்ப்புகளையும் உபத்திரங்களையும் சந்திக்கும் போதுதான் வெளிப்படும். அதுவரை அவர்களுக்குள் வித்தியாசம் காணப்படாது. கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் மழை, வெள்ளம், காற்று போன்று உபத்திரவங்கள், துன்பங்கள், பாடுகள் கட்டாயமாக நேரிடும். அதனால் நமக்குள் சோர்வுகளும், பலவீனங்களும் வந்துவிடும்.
தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்ட ஆபிரகாம், மோசே, தாவீது, ஏசாயா, எரேமியா, பேதுரு, யாக்கோபு, யோவான், பவுல் போன்ற எல்லா தேவ மனிதர்களுமே தங்கள் வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில் மழை, வெள்ளம், காற்று ஆகிய சோர்வையும் பின்மாற்றத்தையும் தூண்டும் அனுபவங்களின் வழியாக நடந்து வந்தவர்கள்தான். தேவன் இவைகளை அனுமதிக்கிறார். அழிந்து போகிற அக்கினியினால் சோதிக்கப் படுவதைப் போல நாம் ஒவ்வொருவரும் சோதிக்கப்படுகிறோம் (1 பேதுரு 1 : 7). யோபுவைப் போல நாமும் “அவர் என்னைச் சோதித்த பின் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23 : 10) என்று விசுவாச அறிக்கையிட வேண்டும்.. கன்மலையின் மேல் அஸ்திபாரத்தைப் போட்டவன் எந்தக் கஷ்டத்தின் மத்தியிலும் மனதைத் தளர விடமாட்டான். விசுவாசத்தை இழக்க மாட்டான். தாவீதைப் போல கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொள்வான் (1சாமுவேல் 30 : 6).
புத்தியில்லாத மனிதனின் செயல்கள்:
மத்தேயு 7 : 26 “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.”
இதில் புத்தியில்லாத மனிதனைப் பற்றி இயேசு கூறுகிறார். புத்தி இல்லாதவன் அறிவில் குறைவு பட்டவன் அல்ல. ஒரு காரியத்தை எப்படிச் செய்யவேண்டும் என்று அறிந்தும், அதன்படி செய்யாதவன். தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவர்கள்தான் புத்தி இல்லாதவர்கள். இதைத்தான் ஜனங்கள் என் வார்த்தைகளை கேட்கிறார்கள் ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்வதில்லை என்று எசேக்கியல் 33 : 31ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். யாக்கோபு தன்னுடைய புத்தகத்தில்,
யாக்கோபு 1 : 22 – 25 “அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.”
“என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;”
“அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன்சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.”
“சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.”
மணலின் வீடுகட்டுகிறவன் நிச்சயமாகவே புத்தியில்லாத மனிதனாகத்தான் இருக்க முடியும். வீடு எப்படி கட்டப்பட வேண்டும் என்று யோசித்து அஸ்திபாரம் போடாமல், கற்பாறை வரும்வரை ஆழமாகத் தோண்டாமல் அவசர அவசரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போடுகிறவன் தான் புத்தி இல்லாதவன். அவன் தான் கட்டப்பட்ட பகுதியில் வெள்ளம் வருவதற்கு வாய்ப்பில்லை என்று தன்னுடைய மனதில் நினைத்திருப்பான். மனிதன் பூமியின் மண்ணினால் தான் உருவாக்கப்பட்டான் (ஆதியாகமம் 2 : 7). நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்குத் திரும்புவாய் என்றுதான் ஆதியாகமம் 3 : 19ல் சாபம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதேன் தோட்டத்தில் தங்கம், வெள்ளி இரும்பு போன்ற விலையேறப்பெற்ற கற்களும் இருந்திருக்கும். ஆனால் அவைகளிலிருந்து மனிதன் உருவாக்கப்படவில்லை. பூமியிலிலுள்ள மண்ணினால் தேவனுடைய கரத்தினால் மனிதன் உருவாக்கப்பட்டான். ஆனால் அந்த மண்ணினால் வீட்டைக் கட்டினால் அது நிற்காது. இயேசுவின் சுவிசேஷம் உலகமெங்கும் அறிவிக்கப்பட்டு யாவரும் அதை கேட்டாலும். அநேகர் தாங்கள் அனுசரித்து வந்த பாரம்பரியங்கள், தங்கள் முன்னோர் கடைப்பிடித்து வந்த நம்பிக்கைகள், கோட்பாடுகளைத் தான் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்கள். இவர்கள்தான் புத்தியில்லாத மனிதர்கள்.
உலகமெங்கும் கோடிக்கணக்கானவர்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பதாகச் சொல்லுகிறார்கள். இயேசுவின் அன்பையும் மனதுருக்கத்தையும் பற்றி பேசுவார்கள். ஆனால் இயேசு நீதியுள்ள நியாயாதிபதி, அவரிடத்தில் இருந்து ஆக்கினைத் தீர்ப்பு வரும் என்பதைக் கூற மாட்டார்கள். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவன் அடைவான் என்று பிரசங்கிப்பார்கள் (யோவான் 3 : 16). ஆனால் அந்த அதிகாரத்தின் கடைசியில் குமாரனை விசுவாசிக்காதவன் ஜீவனைக் காண முடியாது என்று யோவான் 3 : 36ல் கூறப்பட்ட வசனத்தை மறந்து விடுவார்கள். அதையும் கூற வேண்டும். இதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மணலின் மேல் அஸ்திபாரம் போடுகிறவர்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தைத் தான் தேடுகிறார்கள். தேவனை அல்ல. உண்மையான முறையில் தேவனுக்கு ஊழியம் செய்வதும் இல்லை. ஆவியோடும் உண்மையோடும் தேவனைத் தொழுது கொள்வதுமில்லை. தேவனிடமிருந்து எப்படியாகிலும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதில்தான் அவர்களுடைய முழுக் கவனமும் இருக்கிறது.
புத்தி இல்லாதவன் கட்டிய வீட்டின் நிலை:
மத்தேயு 7 : 27 “பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.”
ஒருவன் தன்னுடைய சுயபுத்தியினாலும், சுயஞானத்தினாலும் மணல் மீது வீட்டைக் கட்டினான். அதேபோல, நீங்களும் உங்கள் படிப்பையும், பணத்தையும் மேன்மைப் படுத்தி கர்த்தரைக் கேட்காமல், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்களையும் செய்வீர்களானால், புத்தியில்லாத மனிதன் கட்டிய வீட்டின் மேல் நீரோட்டம் மோதினவுடன் அது விழுந்து முழுவதும் அழிந்ததைப் போல அழிந்து போவீர்கள். ஆழமாய்த் தோண்டி கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போடாததால் அது அழிந்தது. மேற்போக்கான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்தால் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. பாலஸ்தீன தேசத்தில் வருடந்தோறும் சம்பவிக்கும் காரியங்கள் என்னவென்றால், தொடர்ச்சியாக பல மாதங்கள் மழையில்லாமல் வறட்சியாக இருந்தாலும், மழை பெய்யும் பொழுது பல நாட்கள் தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும். அதனால் வெள்ளப்பெருக்கும் பலத்த சேதமும் உண்டாகி விடும். இதை அறிந்தும் மணலினால் வீட்டை புத்தியில்லாமல் கட்டினதினால் அந்த வீடு அழிந்து போயிற்று.
மழை வெள்ளம் காற்று என்ற 3 ஆபத்துக்களையும் சந்திக்கும்வரை மணலில் அஸ்திபாரம் போட்ட புத்தியற்ற மனிதனுடைய வாழ்க்கையானது அமைதியாகவும் பிரச்சனைகள் இல்லாததாகவும் இருந்திருக்கும். அதனால் பலமில்லாத தனது அஸ்திபாரத்தைக் குறித்துக் கவலைப்பட்டிருக்கவே மாட்டான். துவக்கத்தில் கொஞ்சம் அச்சம் இருந்தாலும் போகப்போக மனதைரியம் உண்டாயிருக்கும். கனி கொடாத அத்தி மரம் இலை தழைகளுடன் செழிப்பாகக் காணப்பட்டதைப் போல மண்ணில் கட்டப்பட்ட வீடும் வெளிப்பார்வைக்கு பிரமாண்டமானதாகத்தான் தோற்றம் அளித்திருக்கும். ஆனால் இந்த ஆபத்துக்களைச் சந்திப்பதற்கு முன்பு இந்த வீடு சிறிது சேதம் அடைந்திருந்தால், அந்த மனிதன் அஸ்திபாரத்தைப் பலப்படுத்த முயற்சி செய்திருப்பான் அல்லது வேறு வீட்டைத் தேடிப் போயிருப்பான். ஆபத்துக்களிலிருந்தும் தப்பி இருப்பான். அதற்குச் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. அதைத்தான் வேதம் “மாயக்காரரின் நம்பிக்கை சிலந்திப்பூச்சி கட்டிய வீடு” போல் இருக்கும் என்று வேதம் கூறுகிறது. சிலந்திப்பூச்சி கட்டியுள்ள வீடு எப்படி இருக்கும் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்தவர்களுக்குத் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற உணர்வு வேண்டும். மனந்திரும்பி இரட்சிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இயேசுவின் மந்தைக்குள் சேர முடியும். அதனால் இயேசு: அழிந்தது என்ற எச்சரிக்கையோடு கிறிஸ்து தன்னுடைய மலைப் பிரசங்கத்தை முடிப்பதைப் பார்க்கிறோம்.
உவமையின் கருத்து:
மத்தேயு 7 : 28, 29 “இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,”
“ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.”
இயேசு இவைகளை வேதபாரகரைப் போல் போதிக்காமல் அதிகாரத்துடன் போதித்தார். அவருடைய போதனைகள் ஆச்சரியப்பத் தக்கதாகவும் இருந்தது. நாம் நமது வாழ்க்கையை கன்மலையாகிய இயேசுவின் மேல் கட்ட வேண்டும். ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவங்களை அறிக்கையிட்டு இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்து பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட ஒப்புக் கொடுங்கள். மறுபடியும் பிறக்காதவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள் பரலோக ராஜ்ஜியத்திற்குள் நுழைய முடியாது (யோவான் 3 : 3). இரட்சிப்பைக் குறித்துக் கவலையற்றிருப்பவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ள முடியாது (எபிரேயர் 2 : 4). இரட்சிக்கப்படாதவர்களின் பெயர்கள் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாது. அவர்கள் அக்கினிக்கு கடலில் தள்ளப்படுவார்கள் (வெளிப்படுத்தல் 20 : 15) எனவே ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட வாஞ்சியுங்கள்.
கர்த்தருடைய வார்த்தைக்கு மோசே கீழ்ப்படிந்து செயல்பட்டபோது செங்கடலிலுள்ள ஜலம் பிளந்து பிரிந்து போனது (யாத்திராகாம் 14 : 21). கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து யோசுவா செயல்பட்டபோது யோர்தானின் தண்ணீர் குவியலாகக் குவிந்தது (யோசுவா 3 : 16). பேதுரு இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வலைகளைப் போட்டபோது திரளான மீன்களைப் பிடித்தனர் (லூக்கா 5 : 4 -6). பவுல் இயேசுவின் சித்தத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து செயல்பட்டதினால் பிரதான அப்போஸ்தலனாக வேதத்தில் இடம் பெற்றான் (அப்போஸ்தலர் (9 : 1 – 20). ஆரோனின் குமாரராகிய நாதாபும், அபியூவும் கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாததினால் அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்த போது கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப் போனார்கள் (எண்ணாகமம் 3 : 4). ஆகான் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் எரிகோவில் கொள்ளையிட்டதில் சில பொருட்களை ஒழித்து வைத்தான். எனவே கல்லெறிந்து கொல்லப்பட்டான் (யோசுவா 7 : 20 – 25). இவைகளை அறிந்த நாம், கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து இயேசுவின் மேல் நமது அஸ்திபாரத்தைப் போட்டு வாழ்க்கை வாழ முற்படுவோம். மாரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.