Menu Close

பெரிய வெள்ளி – Good Friday

இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த தினத்தை உலகமெங்கும் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி என்ற பெயருடன் கொண்டாடுகின்றனர். வருடத்தில் 52 வெள்ளிகள் வந்தாலும், இயேசு சிலுவையில் அறையப்பட்ட வெள்ளி விசேஷமானது. ஆங்கிலத்தில் அதை குட் ஃப்ரைடே என்கின்றனர். மலையாளத்தில் அதை துக்கவெள்ளி என்று கூறுகின்றனர். இயேசுவை இரக்கமில்லாமல் கொலை செய்யப்பட்ட அந்த நாளை ஏன் புனித வெள்ளி என்கிறோமென்றால் இயேசு நமக்காக மரித்தார், நமக்காக உயிர்த்தார். அதனால் மனுக்குலத்திற்கு ஏராளமான ஆசீர்வாதங்களை தந்திருக்கிறார். சிலுவை என்பது உலகத்தாரின் பார்வையில் அது ஒரு கொலைக்கருவி. சிலுவை மரணமானது சித்திரவதையான மரணம். சிலுவை மரணம் யூதர்களால் வெறுக்கப்பட்ட ஒரு அவமானச் சின்னம். ஆனால் பரலோகத்தின் பார்வையில் சிலுவை மரணம் தியாகமானது. சிலுவையானது பாவத்தையும் பாவத்துக்கான நியாயத்தீர்ப்பையும் அடையாளப்படுத்துகிறது. தேவாதி தேவன் மனுக்குலத்திற்காகப் பூமிக்கு இறங்கி வந்து, தன் ஜீவனைக் கொடுத்தார், அது ஒரு சாதாரணமான நிகழ்வு அல்ல. அது முக்கியமான நிகழ்ச்சி. நாம் சிலுவையைப் புனிதச் சின்னமாகக் கருதுகிறோம். ஏனெனில் அது இயேசுவின் இரத்தம் பட்டு புனிதமானது. 

சிலுவைக்கு இயேசுவைக் கொண்டு சென்றதற்குக் காரணம் யூதர்களோ, கிரேக்கர்களோ, ரோமர்களோ, பரிசேயர்களோ, சதுசேயர்களோ, வேதபாரகரோ அல்ல. மனுக்குலத்தின் பாவங்களால் தான் அத்தனை பாடுகளையும் இயேசு ராஜா சிலுவையில் தானே ஏற்று சுமந்தார். சிலுவையில் அறையப்படுவதற்கு முன் குற்றவாளியை சவுக்கால் அடித்து நிர்வாணமாக்கி கேலியும், பரிகாசமும் செய்து எல்லோரும் பார்க்கும்படி சந்தை வெளிகளில் தொங்க விடுவார்கள். சிலர் அந்த நிலைமையிலேயே மரித்துப்போவார்கள். சிலர் அந்த சிலுவையிலே இரண்டு மூன்று நாட்கள் தொங்குவர். அவர்களுடைய கண்களை கழுகுகள் கொத்தி தின்னும். இரவிலே நரிகளும், ஓநாய்களும், கால்களைக் குதறும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஜீவனை விடுவர். இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன் அவர்கள் நடத்திய விசாரணைகளைப் பார்ப்போம்.

இயேசுவின் விசாரணைகள்

இயேசுவின் ஒன்றாம் விசாரணை:

யோவான் 18 12 : 13 “அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,” 

“முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.”

ரோம போர் சேவகரும் ஆயிரம் போர்சேவகர்களுக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் சேர்ந்து இயேசுவைப் பிடித்து அவரைக் கட்டி வியாழன் அன்று இரவோடு இரவாக அன்னா என்பவரிடத்தில் விசாரிக்கும்படி கொண்டுபோனார்கள். அவன் வயது சென்றவன். அந்த வருஷத்து பிரதான ஆசாரியனான காய்பாபாவுக்கு மாமனாயிருந்தான். காய்பாபாவின் மேல் வீட்டில் தான் அன்னா தங்கி இருந்தான். அங்கே ஒரு சேவகன் இயேசுவைக் கன்னத்தில் ஓங்கி அடித்தான். 

இயேசுவின் இரண்டாம் விசாரணை:

மத்தேயு 26 : 57 “இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.”

அன்னா இயேசுவைக் கட்டுண்டவராய் பிரதான ஆசாரியனாகிய காய்பாபாவினிடத்தில் விசாரிக்கும்படி கொண்டு போனார்கள். பிரதான ஆசாரியரும், மூப்பரும், ஆலோசனை சங்கத்தார் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்ய பொய்சாட்சி தேடினார்கள். தேடியும் கிடைக்கவில்லை. காய்பா இயேசுவை நோக்கி நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா என்று கேட்டான். அதை ஜீவனுள்ள தேவன் பேரில் ஆணையிட்டுக் கேட்டார் – மத்தேயு 26 : 57, 59, 63. அதற்கு இயேசு

மத்தேயு 26 : 64 “அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” 

இந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அவரை அவருடைய கன்னத்தில் அறைந்தனர். அவருடைய முகத்தில் துப்பினர். அவரைக் குட்டினார்கள். அவர் கண்களைக் கட்டி, உன்னை அடித்தவன் யார் என்று ஞான திருஷ்டியினால் சொல்லும் என்று இயேசுவைக் கேட்டு பரிகாசம் பண்ணினார்கள் — மத்தேயு 26 : 67, 68.

இயேசுவின் மூன்றாம் விசாரணை:

விடியற்காலமானபோது இயேசுவை ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், கூடிவந்து தங்கள் ஆலோசனை சங்கத்தில் இயேசுவை கொண்டு வந்து நிறுத்தி, 

லூக்கா 22 : 67, 68, 69 “நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச்சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.”

“நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.”

“இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.”

இயேசுவைப் பார்த்து “ நீ கிறிஸ்துவா” என்று கேட்டனர். அவர்களுக்கு இயேசு “நான் என்ன கூறினாலும் நீங்கள் விடுதலை பண்ண மாட்டீர்கள். இதுமுதல் மனுஷகுமாரன் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பார்” என்றார். இதைக் கேட்டவர்கள் மறுபடியும் “அப்படியானால் நீர் தேவனுடைய குமாரனா” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு ஆணித்தரமாக “நீங்கள் சொல்கிறபடி நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு தான்” என்று கூறினார். அவர்கள் அதைக் கேட்டு இனி வேறு சாட்சிகள் நமக்கு வேண்டுவதில்லை என்று சொல்லிக்கொண்டு பிலாத்துவிடம் இயேசுவை அழைத்துக்கொண்டு சென்றார்கள் – லூக்கா 22 : 70, 71.

இயேசுவின் நான்காம் விசாரணை:

மாற்கு 15 : 2 – 5 “பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.” 

“பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.”

“அப்பொழுது, பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.”

“இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.”

பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், ஆலோசனை சங்கத்தார் அனைவரும் கூடி பிலாத்துவினிடத்தில் இயேசுவை ஒப்படைத்தனர். பிலாத்து இயேசுவை நோக்கி “நீ யூதருடைய ராஜாவா” என்று கேட்டான். அதற்கு இயேசு “நீர் சொல்லுகிறபடி நான் யூதருடைய ராஜா தான்” என்றார். மேலும் பிலாத்து இயேசுவை நோக்கி “இவர்கள் அனைவரும் உன்னைப் பற்றி அனேக குற்றச்சாட்டுகளை கூறுகிறார்களே நீ அதற்கு ஏதேனும் பதில் சொல்லுகிறதில்லையா” என்று கேட்டான். இயேசுவோ ஒரு பதிலும் கூறவில்லை. அதனால் பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான். 

இயேசுவின் ஐந்தாம் விசாரணை:

இயேசு கலிலேயன் என்பதை பிலாத்து கேள்விப்பட்டபோது இயேசுவை ஏரோதுவின் அதிகாரத்திற்கு உள்ளானவர் என்றறிந்து அந்த நாட்களில் எருசலேமுக்கு வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு இயேசுவை அனுப்பினர்.

லூக்கா 23 : 8, 9 “ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,”

“அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை”

ஏரோது இயேசுவின் அற்புதங்களையும் அவருடைய வல்லமைகளையும் பற்றி கேள்விப்பட்டிருந்ததாலும் அவர் மூலமாக அடையாளத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பி அவரைக் காணும்படி வெகு நாளாய் ஆசை பட்டிருந்ததாலும் இயேசுவைக் கண்ட போது மிகவும் சந்தோஷத்துடன், அனேக காரியங்களைக் குறித்து இயேசுவிடம் கேள்வி கேட்டான். ஆனால் இயேசுவோ அவரிடம் மறுமொழியாக எந்தப் பதிலும் கூறவில்லை. ஆனால் கூட்டிவந்த பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் இயேசுவின் மேல் குற்றம் சாட்டிக் கொண்டே நின்றார்கள். எனவே ஏரோது தன் போர் சேவகரோடு கூட இயேசுவை நிந்தித்து பரியாசம் பண்ணி மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி அவரைத் திரும்ப பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான் – லூக்கா 23 : 10, 11. 

இயேசுவின் ஆறாம் விசாரணை:

இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். பிலாத்து பிரதான ஆசாரியர்களையும், அதிகாரிகளையும், ஜனங்களையும் கூடி வரச்செய்து, 

லூக்கா 23 : 14 “அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.” என்றார்.

பிலாத்து கூட்டி வந்தவர்களை நோக்கி இயேசுவை கலகத்துக்கு தூண்டி விடுகிறவன் என்று கூறி கூட்டி வந்தீர்கள். ஆனால் நான் இயேசுவை விசாரித்த போது இயேசுவின் மேல் நீங்கள் காட்டுகிற ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான். மேலும் நான் ஏரோதிடம் இயேசுவை அனுப்பிய போதும் ஏரோதும் இயேசுவிடம் ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்கவில்லை. மரணத்துக்கேதுவாக இயேசு ஒன்றும் செய்யவில்லை எனவே இயேசுவைக் கண்டித்து விடுதலையாக்குவேன் என்று அவர்களிடம் கூறினான். பண்டிகைதோறும் ஏதாவது ஒரு குற்றவாளியை விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியினால் ஜனங்கள் எல்லோரும் பிலாத்து கூறியதைக் கேட்டவுடன் பரபாசை விடுதலையாக்கும், இயேசுவை சிலுவையிலறையும் என்று கூக்குரலிட்டனர். எனவே பிலாத்து,

மத்தேயு 27 : 24 “கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.”

பிலாத்து தன்னுடைய பிரயாசத்தினால் ஒன்றும் நடக்காது என்பதையறிந்து தண்ணீரினால் தன் கைகளைக் கழுவி நீதிமானாகிய இயேசுவின் இரத்தப்பழிக்கு தான் குற்றமற்றவன் என்று தன் வாயினால் அறிக்கையிட்டான். ஆனால் அதற்கு ஜனங்கள் இயேசுவினுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.

இந்த விசாரணைகளனைத்தும் நியாயமற்ற விசாரணைகள்:

குற்றம் செய்தவரைப் பிடித்து விசாரிப்பது நியாயம். ஒருவரை பிடித்து வைத்துக்கொண்டு குற்றம் தேடினது மிகவும் அநியாயம் (யோவான் 11 : 50, மாற்கு 14 : 1, 55). பொய் சாட்சிகளை உண்டாக்கினார்கள் (மத்தேயு 26 : 60, 61). குற்றவாளியின் சொற்களை அவர்கள் யாரும் கவனிக்கவில்லை (லூக்கா 22 : 67 — 71). ஆலோசனை சங்கமானது இரவில் சட்டப்படி கூட்டப்படக்கூடாது. எனவே அதுவும் தவறு (மத்தேயு 26 : 63 66). பிரதான ஆசாரியன் குற்றவாளியை ஆணையிட வைத்து அந்த ஆணையைக் கொண்டு தீர்ப்பது அநியாயம் (மத்தேயு 26 : 63 – 66). ஆலோசனை சங்கம் கூடிய இடம் பிரதான ஆசாரியனின் வீடு. இது முறைப்படி தேவாலயத்துடன் இணைந்திருக்கும் நீதிமன்ற அறையில் கூடித்தான் தீர்ப்பிட வேண்டும். இதுவும் அவர்கள் செய்தது தவறு (லூக்கா 22 : 54).

சிலுவைப் பாடுகள்:

இயேசுவைக் கொலைக் குற்றவாளிகளை அறைவது போல தேவகுமாரரானவரை, சர்வத்துக்கும் சுதந்திரவாளியானவரை, முதற்பேறானவரை, சாவாமையுள்ளவரை, பிதாவின் வலதுபாரிசத்தில் இருந்தவரை, மகாபரிசுத்தரை சிலுவையில் அறைந்தனர். இயேசு அதற்குத் தன்னையே ஒப்புக்கொடுத்தார். பழைய ஏற்பாட்டில் பாவங்கள் மன்னிக்கப்பட ஆடுமாடுகளைப் பலி செலுத்தி பாவ மன்னிப்புப் பெறுவர். அதே போல நமது பாவங்கள் மன்னிக்கப்பட இயேசு தன்னையே சிலுவையில் விலைக்கிரயமாகக் கொடுத்தார். இந்த உலகத்தில் அக்கிரமக்காரர்களை, துரோகிகளை, துன்மார்க்கரை மன்னிக்க இயேசு தன் உயிரையே பணயமாகக் கொடுத்தார். இந்தப் பணியை கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்தார். இயேசுவின் காலத்தில் 30 ஆயிரம் பேர் சிலுவையில் அறையப்பட்டனர். ஆனால் இயேசுவின் சிலுவை மரணம் மட்டும் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தனை பேருக்கும் இல்லாத புகழ் மாட்சிமை ஏன் இயேசுவுக்கு மட்டும் வந்ததென்றால் இயேசுவின் சிலுவை மரணம் மற்றவர்களை விட வித்தியாசமானது.

இயேசுவினுடைய வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்களினால் ஒரு முடியைப் பின்னி, இயேசுவின் சிரசின்மேல் வைத்தனர். அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு “யூதருடைய ராஜாவே வாழ்க” என்று கூறி அவரைப் பரிகாசம் பண்ணினார்கள். இயேசுவின் மேல் துப்பி, அந்த கோலினால் இயேசுவின் சிரசில் அடித்தார்கள். பின்பு இயேசுவுக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தம் கொள்ளும் கொல்கதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது சிலுவையில் அறைந்தனர். அதன்பின் இயேசுவின் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, உடையின் பேரில் சீட்டுப் போட்டார்கள் — மத்தேயு 27 :28 – 35. இயேசு சுமந்த 

சிலுவையின் எடை 150 கிலோ. 

சிலுவையின் நீளம் 15 அடி

சிலுவையில் அகலம் 8 அடி.

“இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” என்று எழுதி இயேசுவின் சிரசின்மேல் வைத்தார்கள். அவருடைய வலது பக்கத்தில் ஒரு கள்ளனும், இடது பக்கத்தில் ஒரு கள்ளனுமாக அவரோடு கூட சிலுவையில் அறையப்பட்டனர். அந்த வழியாக நடந்து போனவர்கள், தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே உன்னை நீயே இரட்சித்து கொள். நீ தேவனுடைய குமாரனானால் இறங்கி வா என்று ஏளனம் செய்தனர் மத்தேயு 27 : 37 – 40.

இயேசு சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகள்:

லூக்கா 23 : 34 “அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.”

இயேசு சிலுவையில் அறையப்பட்டு இருக்கும் நேரத்தில் கூட தன்னை ஒப்புக்கொடுத்த பகைவர்களிடம் கசப்போ, கோபமோ இல்லாதபடி அன்போடு பிதாவை நோக்கி “பிதாவே இவர்களை மன்னியும்” என்று மன்றாடினதைப் பார்க்கிறோம். இந்த பாவமன்னிப்பின் வார்த்தையானது நம்மை இயேசுவினிடம் இன்னும் அதிகமாக அன்பு கூற வைக்கிறது. நாமும் அதேபோல் இயேசு கற்றுக் கொடுத்த இந்த வார்த்தைகளை மனதில் வைத்து எந்தக் கசப்புகளும் வெறுப்புகளும் யாரிடமும் இல்லாதபடி மன்னிக்கும் மனப்பக்குவத்தை நமக்குத் தர வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டுவோம்.

லூக்கா 23 : 43 “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் அந்த நேரத்திலாவது பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி “உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று மன்றாடினான் உடனே இயேசுவானவர் அவனை நோக்கி “இன்றைக்கு நீ என்னோடு கூட பரதீசியிலிருப்பாய்” என்று வாக்களித்தார். இந்த வாக்குத்தத்தமானது பாதாளத்திற்குச் செல்லவேண்டிய அவளைத் தூக்கி எடுத்து கிறிஸ்துவினுடனே கூட பரதேசியில் நிறுத்தியது. சிலுவையில் துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட இயேசு கள்ளனுக்கு இரட்சிப்பைக் கொடுத்ததைப் பார்க்கிறோம். 

யோவான் 19 : 26, 27 “அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.” “பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.”

இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த மரண நேரத்திலும் கூட தன்னுடைய கர்ப்பத்தை தனக்காக தந்த அந்தத் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை மறக்காமல் அவருக்குப் பின் பிறந்த சகோதர, சகோதரிகளிடம் தன்னுடைய தாயை ஒப்படைக்காமல் தன்னோடு இருந்த சிஷ்யனிடம் அந்தத் தாயை ஒப்படைத்ததைப் பார்க்கிறோம். இதேபோல் நாமும் நம்முடைய பெற்றோர்களைக் கனம் பண்ணி, அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும்.

மத்தேயு 27 : 46 “ ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.”

நம் அனைவருடைய பாவங்களும், சாபங்களும் இயேசுவின் மேல் இறங்கியதால் “என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்” என்று கதறியதைப் பார்க்கிறோம். வேதாகமத்தில் இந்த இடத்தில் மட்டும் தான் தேவனை பிதாவே என்று அழைக்காமல், என் தேவனே என் தேவனே என்று அழைத்ததைப் பார்க்கிறோம். பிதாவுக்கும் இயேசுவுக்குமிடையே உள்ள உறவு துண்டிக்கப்பட்டது. அடுத்த நிமிடம் இயேசுவினுடைய இரத்தம் சகல பாவங்களையும் கழுவி சுத்திகரித்து, பிதாவுக்கும் அவருக்குமிடையே உள்ள உறவை அது துளிர்விடச் செய்தது. பிதா தன்னுடைய முகத்தை மறைத்த நேரம் இமைப்பொழுது தான். 

யோவான் 19 : 28 “அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.”

வேதவாக்கியம் நிறைவேறத் தக்கதாக, இயேசு தாகமாயிருக்கிறேன் என்றார். உலகத்திலுள்ள எதுவும் நம்மை திருப்திப்படுத்த முடியாது. நாம் திருப்தியாகும்படி அவர் தாகமானார். அவருடைய அன்பையும், இரட்சிப்பையும் நாம் ருசி பார்த்தோமானால் வேறு எங்கும் நாம் போக மாட்டோம். வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக நான் தாகமாயிருக்கிறேன் என்று கூறியதிலிருந்து, இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதிலும் கூட வேதவாக்கியங்கள் நிறைவேற்ற வேண்டுமே என்ற தாகம் அவருக்கு இருந்ததைப் பார்க்கிறோம். எனவே வேதத்தில் மிகவும் பிரியமாயிருந்து இரவும், பகலும் அதை தியானிக்க வாஞ்சிப்போம்.

யோவான் 19 : 30 “இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.”

இங்கே இயேசு முடிந்தது என்று கூறியது, அவருடைய சரீர பாடுகள் முடிந்தது. அவர் பட்ட வேதனை முடிந்தது. அடுத்ததாக சாத்தானின் மேல் ஜெயம் பெற்று முடித்தார். மரணத்தினால் சாத்தானை ஜெயித்து மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல் பெற்றுக்கொண்டு ஜெயமாய் விளங்கினார். சிலுவை பாடுகள் பற்றிய எல்லா தீர்க்கதரிசனங்களையும், பிதா தன்னை அனுப்பிய சித்தத்தையும் நிறைவேற்றி முடித்தார்.

லூக்கா 23 : 46 “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.”

இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லி தன்னுடைய ஜீவனை ஒப்புக் கொடுத்தார் இன்றைக்கும் நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்தோமானால் நாளையதினம் கடவுளுடைய கையில் அது பத்திரமாக இருக்கும்.

இயேசு தன் ஆவியை ஒப்புக்கொடுத்த போது நடந்தது:

மத்தேயு 27 : 51, 52 “அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.”

“கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.

லூக்கா 23 : 44, 45 “அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.

“சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.

இயேசு தன் ஆவியை ஒப்புக்கொடுத்த உடன், தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. இப்பொழுது தேவனுடைய சமூகத்துக்குச் செல்ல பாதை திறந்து விட்டதை அது காட்டிற்று. பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்காகப் போடப்பட்டிருந்த திரைச்சீலை தேவனுடைய சமூகத்துக்கு செல்லும் பாதையை மறைத்தது. கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் அது இப்போது நீக்கப்பட்டுவிட்டது. மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு செல்லும் வாசல் எல்லோருக்குமாகத் திறக்கப்பட்டது. கல்லறைகள் திறந்தன. நித்திரையடைந்த அனேக பரிசுத்தவான்களின் சரீரம் அந்த நிமிடத்தில் எழுந்தது. ஏறக்குறைய ஆறுமணியிலிருந்து ஒன்பது மணி வரை மூன்று மணி நேரம் பூமியெங்கும் அந்தகார இருள் சூழ்ந்தது. சூரியன் இருளடைந்து காணப்பட்டது. 

சிலுவையில் நிறைவேறிய காரியங்கள்

  1. கிறிஸ்துவின் பாடுகளைப் பற்றிய அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியது — லூக்கா 24 : 44, யோவான் 19 : 28, 1 பேதுரு 3 : 18.
  2. சாத்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டான் — யோவான் 12 : 31, 32 கொலோசெயர் 2 : 14, 15 எபிரேயர் 2 : 14 , 15.
  3. யூதருக்கும், புறஜாதியருக்குமிடையே இருந்த பிரிவினையின் சுவர் நொறுக்கப்பட்டது — எபேசியர் 2 : 14, 18, 3 : 6, 1 கொரிந்தியர் 12 : 13 கலாத்தியர் 3 : 28.
  4. ஒரே ஆவியினால் பிதாவிடம் செல்லும் உரிமை வழங்கப்பட்டது — எபேசியர் 2 : 13 — 18, எபிரேயர் 10 :19 — 38.
  5. ஒரே பலியினால் சபைக்கான யாவும் நிறைவேற்றப்பட்டது — எபிரேயர் 9 : 28, 10 : 14, எபேசியர் 2 : 1 — 9, அப்போஸ்தலர் 2 : 47.
  6. மரணத்தின் அதிகாரம் முடிவடைந்தது — ரோமர் 6 : 1 — 23, 8 : 2, 1 கொரிந்தியர் 15 ஆம் அதிகாரம்.
  7. மரணத்தை மாற்றி பாடுகளைக் கீழ்படிதலின் பாதையாக மாற்றினார் — பிலிப்பியர் 2 : 8, 1 பேதுரு 3 :21, 4 : 1.
  8. கிறிஸ்து சிலுவை மரணத்தினால் பூரணமானவராகிறார் — எபிரேயர் 2 : 17, 5 : 8 — 11.
  9. சகல பாவங்களுக்கும் பரிகாரம் வந்தது — மத்தேயு 28 : 18, கொலோசெயர் 1 : 14, எபிரேயர் 9 : 15, வெளிப்படுத்தல் 1 : 5, 5 : 9, 10.
  10. மனிதனுக்கும் தேவனுக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்தினார் கொலோசெயர் 1 : 20, 22, 2 கொரிந்தியர் 5 : 14 — 23.
  11. எல்லோருக்குமான மரண தண்டனையை கிறிஸ்து தம்மைக் கொடுத்து நிறைவேற்றினார் — 2 கொரிந்தியர் 5 : 14 — 21, எபிரேயர் 2 : 9 — 1,5 ரோமர் 5 : 6 — 8, 1 பேதுரு 1 : 19.
  12. மனிதரை சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விலைக்கு வாங்கி விடுவித்தார் — 1கொரிந்தியர் 6 : 19, 20.
  13. தேவநீதி முழுமையாக நிறைவேற்றப்பட்டது — ஆதியாகமம் 2 : 17 ரோமர் — 3 : 21 — 26, 5 : 1 — 11, யோவான் 3 : 16.
  14. பழைய பிரமாணத்தை மாய்த்து புதிய ஏற்பாட்டை ஏற்படுத்தி உறுதிப்படுத்தினார் — கொலோசெயர் 2 : 14, 15 

எபிரேயர் 12 :2 “இயேசு தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” 

அனேக மதங்கள் இருந்தாலும் சுவிசேஷம் ஒன்றுதான். அனேக அவதாரம் எடுத்தாலும் இரட்சகர் ஒருவர்தான். பாவங்களை மன்னிக்கிற தேவன் இயேசு ஒருவரே. நம்மை பரலோகத்திற்கு கொண்டு சேர்க்கிற தேவனும் அவரே. அதனால் தான் இயேசு தன்னுடைய வாயால்

யோவான் 14 : 6ல் “அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”

கூறினார் அவரை உறுதியாக பற்றிக் கொண்டு, பரிசுத்தமான வாழ்க்கை வாழ, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற, பரலோகத்திற்கு செல்ல வாஞ்சிப்போம். இயேசுவின் சிலுவைப் பாடுகளைத் தியானித்து, அவரண்டை இன்னும் அதிகமாக சேர பிரயாசப்படுவோம்.

Related Posts