“அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்” (யோவான் 21:6).
“வலது புறமாய் வலைகளைப் போடுங்கள்” என்று இயேசு அன்போடு சொன்னார். கரையிலே நிற்பவர் இயேசு என்று சீஷர்கள் அறியாமல் இருந்தாலும்கூட அவருடைய அன்பின் வார்த்தைக்கு அவர்கள் உடனே கீழ்ப்படிந்தார்கள். தோல்வியான நிர்ப்பந்தமான நிலைமையிலிருந்து அவர்கள் உடனே அற்புதத்தைக் காண அது அவர்களுக்கு உதவியாய் இருந்தது. என்ன ஆச்சரியம்! “அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்” (யோவான் 21:8).
இயேசுவினுடைய வார்த்தை எல்லாம் அற்புதம்தான். இயேசுவின் வார்த்தையின்படி, அவர்கள் செய்ததாலே மீன்கள் கிடைத்தது. வலைக் கிழியத்தக்கதாகத் திரளான மீன்கள் நூற்றைம்பத்து மூன்று பெரிய மீன்கள் இருந்தன. தேவனுடைய வார்த்தைக்கும் வசனத்திற்கும் கீழ்ப்படியும் போது, நீங்களும்கூட உங்களுடைய வாழ்க்கையில் பெரிய அற்புதத்தைக் காண்பீர்கள். கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு அவர் உண்டு பண்ணி வைத்திருக்கிற ஆசீர்வாதங்கள் எத்தனை மேன்மையானது. கர்த்தர் ஆபிரகாமை அவ்வளவாய் ஆசீர்வதித்ததற்கு காரணம் என்ன? ஆபிரகாமுடைய கீழ்ப்படிதல்தான்.
கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து தன்னுடைய தகப்பன் வீட்டையும் தாய் வீட்டையும் விட்டு விட்டு கர்த்தர் காண்பித்த தேசத்திற்குப் போனார். கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஈசாக்கை பலிபீடத்தின்மேல் கிடத்தினார். கர்த்தர் ஆபிரகாமைக் குறித்து சாட்சிக் கொடுத்து, “ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” (ஆதி.26:4,5).
மோசேயுடைய வாழ்க்கையை வாசித்துப் பார்த்தால் அவர் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தபோது பெரிய ஆசீர்வாதம் என்பதையும், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனபோது சாபம் என்பதையும் நாம் அறியலாம். ஒருமுறை மோசே உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தார். அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள் (யாத்.24:7).
சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் கர்த்தருடைய வசனத்துக்கு கீழ்ப்படிவது அவசியம். கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் எடுத்துப் பாருங்கள், கீழ்ப்படிந்து கர்த்தருக்கு தசமபாகம் கொடுத்துப்பாருங்கள். நிச்சயமாகவே கர்த்தர் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், நித்தியத்திற்குரிய ஆசீர்வாதங்களையும் தந்தருளுவார்.