Menu Close

சாறிபாத் விதவையின் மகனை எலியா உயிரோடு எழுப்பினான்

கர்த்தர் சாறிபாத் விதவைக்கு எலியா தீர்க்கதரிசியின் மூலமாக மாவும், எண்ணெயும் குறைந்து போகாமல் இருக்கும்படி ஆசீர்வதித்த அதே வேளையில், அவளுக்குத் துக்கமும், துயரமும் ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியின் காலத்திற்குப் பின்பு மாற்றம் ஏற்பட்டது. சில வேளைகளில் தேவனுடைய ராஜ்ஜியத்தில் தேவனுக்கென்று உண்மையுடன் உழைத்துக் கொண்டும், தேவனுடைய சித்தத்தைச் செய்து கொண்டும் இருக்கிற ஊழியக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய நோய் அல்லது துன்பம் நேரிடும். அந்த விதவையின் மகன் நோய்வாய்பட்டு மரித்தான். எனவே அந்த விதவை கோபத்துடன் எலியாவை நோக்கி, 

“தேவனுடைய மனுஷனே என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனைச் சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்” என்று கேட்டாள் (1இராஜாக்கள் 17: 18 ). 

அவர்களுடைய கடந்த கால வாழ்க்கையில் ஏதோ பாவம் இருப்பதால் தான், அதை அவள் நினைக்கப் பண்ண வந்தீரோ என்கிறாள். கர்த்தர் தமது ஜனங்களின் பாவங்களை ஞாபகப் படுத்துகிறவர். ஆனால் இங்கு கர்த்தர் அவ்வாறு செய்யவில்லை. அவளைப் போஷிக்கத் தான் கர்த்தர் எலியாவை அனுப்பினார். அவளுடைய வாயின் வார்த்தையினால் தான் அவளுடைய மகன் இறந்தான். அவள் எலியாவிடம் “நானும் என் மகனும் சாப்பிட்டுச் செத்துப் போகலாம் என்றிருக்கிறோம்” என்றாள் ( 1இராஜாக்கள் 17:12) அப்படியே சில நாட்களுக்குள் அந்த மகன் மரித்துப் போனான். ஆகவே தேவனுடைய பிள்ளைகள் வாயின் வார்த்தைகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேதம் என்ன கூறுகிறதென்றால், 

நீதிமொழிகள் 18: 21 ல் “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” என்றும் 

மத்தேயு 12 : 36,37 ல் “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் ….உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்” என்றார். 

அந்த விதவையின் அலறல் எலியாவை அசைத்தது. அவளிடம் எலியா “உன் குமாரனை என்னிடத்தில் தா” என்று சொல்லி, தான் தங்கியிருந்த மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன்னுடைய கட்டிலின் மேல் வைத்து தனக்குத் தங்க இடங்கொடுத்த இவர்களுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரிடம் கேட்டு, . அந்த இடத்தில் ஜெபித்த ஜெபம் தேவனை அசைத்தது. 

1இராஜாக்கள் 17: 21,22 “அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்து; என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்மாவை அவனுக்குள் திரும்பிவரப் பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.” 

ஜீவனுள்ள தேவனுடன் தொடர்பு கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய செய்கையும், உடலும் ஆத்மாவும் ஒன்றல்ல என்பதை அவருடைய வசனமும் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. எலியாவினுடைய விசுவாசத் துணிச்சல் பரலோகத்தைச் செயல்பட வைத்தது. 

1 இராஜாக்கள் 17: 22 “கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளை யினுடைய ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது; அவன் பிழைத்தான்.” 

வேதத்தில் முதல்முதலாக இறந்த ஒருவனை உயிருடன் எழுப்பப்பட்ட நிகழ்ச்சி இதுதான். எலியாவின் தேவன் நம் தேவன். நம்மைக் கொண்டும் அற்புதம் செய்வார். இன்றைக்கும் கிறிஸ்துவை அறிந்திருக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் இயேசுவோடு நெருங்கிய தொடர்புள்ளவர்களாக வாழ வேண்டும். அவ்வாறு இணையாவிட்டால், நாம் ஒன்றுமில்லை. எலியா செய்த அற்புதம், அவருடைய தூய நடக்கை ஆகியன அந்தப் பெண்மணியை அசைத்தது. எலியா தான் உயிரோடெழுப்பிய அந்த மகனை மேல் வீட்டிலிருந்து கீழ் வீட்டிற்குக் கொண்டு வந்து, அந்தத் தாயினிடத்தில் கொடுத்து, உன்பிள்ளை உயிரோடிருக்கிறான் என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி 

1 இராஜாக்கள் 17: 23 “நீ தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தருடைய வார்த்தை உண்மை என்றும் இதனால் அறிந்திருக்கிறேன் என்றாள்.” 

சுமார் இரண்டு ஆண்டுகள் வாழ்க்கையில், அந்த புறஜாதி நகரில் எலியாவின் பண்புக்கு எந்த மாற்றமும் உண்டாகவில்லை.17ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள 3அற்புதங்களும் தேவனுடைய அன்பையும், மகிமையையும் வெளிப்படுத்தியது. நெருக்கமான சூழ்நிலைகளில் தேவன் தனது வல்லமையையும், அன்பையும் தன்னை நேசிக்கிறவர்கள்மீதும், அவருடைய சித்தத்தின்படி அழைக்கப் பட்டவர்கள் மீதும் அதிகமாகப் பொழியப்படுவதைப் பார்க்கிறோம். எலியாவும் அந்தப் பெண்ணும் அதை அறிந்து கொண்டனர். எலியாவின் ஊழியத்திலிருந்த மாபெரும் வல்லமைக்குக் காரணம், கர்த்தரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது தான். அவர் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து தன்னை தேவனுக்குச் சமர்ப்பித்தவர். அந்த விதவை எலியாவுக்குத் தங்க இடமும் போஜனமும் கொடுத்ததால், அவளுக்கு எத்தனை பெரிய வெகுமதி கிடைத்தது எனப் பார்க்கிறோம். அவளுடைய குமாரன் மரித்த போது எலியா அவளுடைய மகனை உயிரோடெழுப்பினார்.

Related Posts