Menu Close

நாயினூர் விதவையின் மகனை உயிரோடு எழுப்பினார்

நாயீன்  ஊரில்  இயேசு: 

லூக்கா 7 : 11, 12 “மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்கு போனார்; அவருடைய சீஷர்  அநேகரும்  திரளான  ஜனங்களும்  அவருடனேகூடப்  போனார்கள். அவர் ஊரின்  வாசலுக்குச்  சமீபித்த  போது, மரித்துப்போன  ஒருவனை  அடக்கம் பண்ணும்  படி கொண்டு வந்தார்கள்; அவன் தன் தாய்க்கு  ஒரே மகனாயிருந்தான். அவளோ  கைம்பெண்பெண்ணாய் இருந்தாள்; ஊராரில்  வெகு  ஜனங்கள் அவருடனேகூட வந்தார்கள்.”

இயேசு  நூற்றுக்கதிபதியின்  வேலைக்காரனுக்கு  அவனுடைய  வீட்டிற்கு போகாமலே  சுகம்  கிடைக்கச்  செய்தபின்  நாயீன்  என்ற  ஊருக்குத்  தன்னுடைய சீடர்களுடனும், திரளான  ஜனங்களுடனும்  சென்றார்.  இந்தக்  கிராமம்  இசக்கார் கோத்திரத்தைச்  சேர்ந்தது. கப்பர்நகூமிலிருந்து  12  மைல்  தொலைவிலுள்ளது. இந்த  ஊருக்குள் இயேசு  ஒரே  ஒரு  முறைதான்  சென்றார். இந்த  ஊரில்  இயேசு செய்த  அற்புதம், அந்த  ஊரை  மிகவும்  முக்கியத்துவம்  வாய்ந்ததாக மாற்றியது. அந்த  ஊரின்  வாசலுக்கருகில்  இயேசு  சென்றபோது,  அந்த ஊரிலிருந்து புறப்பட்டு  ஒரு  ஊர்வலம்  வந்து  கொண்டிருந்தது. அந்த  ஊர்வலத்தில்  மரித்த  ஒரு வாலிபனை  அடக்கம்  பண்ணும்படி கொண்டு  வந்து  கொண்டிருந்தனர்.  அந்த வாலிபனுக்குத்  தகப்பனில்லை. அவன்  அந்தத்  தம்பதியருக்கு  ஒரே  மகன்.  தாய்  கைம்பெண்ணாக  இருந்ததால், ஊரிலுள்ள அநேக  ஜனங்கள்  பாடைக்குப்  பின்னால்  வந்து  கொண்டிருந்தனர்.  அந்தத்  தாய்  அழுது  கொண்டே  வந்து கொண்டிருந்தாள். அந்த  ஊர்வலமும்,  இந்த  ஊர்வலமும்  நாயீன் ஊர் வாசலிலே  நேருக்கு  நேர்  சந்தித்தது.  இயேசுவின்  திட்டத்தில்  இது  முக்கியமான  நிகழ்ச்சியாக  இருந்தது.  பிதாவின்  திட்டத்திலும்  இது  பிரதான  திட்டமாக  இருந்திருக்கிறது (பிரசங்கி  3 : 11).  

இயேசு செய்த அற்புதம்:

லூக்கா 7 : 13, 14 “ கர்த்தர்  அவளைப்  பார்த்து, அவள்  மேல்  மனதுருகி: அழாதே என்று சொல்லி,  கிட்டவந்து,  பாடையைத்  தொட்டார்;  அதைச்  சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது  அவர்:வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

இயேசு  அந்த  மரண  ஊர்வலத்தைப்  பார்த்து  விலகிச்  செல்லவில்லை. எரிகோ வீதியில்  குற்றுயிராய்க்  கிடந்த மனிதனைப் பார்த்து லேவியனும், ஆசாரியனும்  விலகிப்  போனார்கள். ஆனால்  இயேசு  மனதுருக்கம்  உள்ளவர். தனது  பிள்ளைகளின்  கண்ணீரைப்  பார்க்கிறவர். அந்த  விதவைத்தாய் யாருமற்ற  அநாதையாய்  ஆகிவிட்டதை  இயேசு  பார்த்தார்.  இயேசுவுக்கு  எப்பொழுதும்  விதவைகளின் மேல், திக்கற்றவர்களின்  மேல் அனுதாபமும், இரக்கமும்  உண்டு.  இயேசு  திரளான  ஜனங்களைக்  கண்ட  போதெல்லாம்  மனதுருகினாரென்று  மத்தேயு  9 : 36 லும்,  14 : 14 லும்  பார்க்கிறோம்.  இந்த  மனதுருக்கமே  வியாதியஸ்தர்களை  சுகப்படுத்தவும்,  திரளான  ஜனங்களின்  பசியைப்  போக்கவும்,  வேதவாக்கியங்களை  அவர்களுக்குப்  போதிக்கவும்  இயேசுவை  உந்தித்  தள்ளியதென  சுவிசேஷங்களில்  நாம்  வாசிக்கிறோம்.  அந்த  மனதுருக்கத்துடன்  இயேசு  அந்தத்  தாயைப்  பார்த்து அழாதே  என்று  ஆறுதலாகக்  கூறினார். மற்றவர்கள்  அழாதே  என்று சொல்வதற்கும்,  இயேசு  அழாதே  என்று  சொல்வதற்கும்  ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. மற்றவர்கள்  அழாதே  என்று  எத்தனை  தரம்  கூறினாலும் ஆறுதல்  பெறவே  முடியாது. ஆனால்  அழாதே  என்று  சொல்லுகிற இயேசு அவனை  உயிரோடு  எழுப்பிக்  கொடுக்க  வல்லவர். ஆனால்  அவர்கள்  யாரும் இயேசுவிடம்  வந்து  அந்த  மகனை  உயிரோடெழுப்பும்படி  கேட்கவில்லை. இயேசு  அழாதே  என்று  சொல்லி  அதோடு  நின்று  விடாமல், அந்த  வாலிபன்  படுத்திருந்த  பாடையைத்  தொட்டார். பிரேதத்தைத்  தொடவில்லை. 

மரித்தவர்களைப்  பற்றிய  கர்த்தருடைய  கட்டளை  என்னவென்றால்,  மரித்த பிரேதத்தைத்  தொட்டவன்  ஏழு நாட்கள்  தீட்டுப்பட்டிருப்பான். ஏழு  நாட்கள் அவர்கள்  பலி  செலுத்த  முடியாதென்று  ஆகாய்  2 : 13 ல்  பார்க்கிறோம். பிணத்தால்  தீட்டுப்பட்டவன்  அவைகளில்  எதையாகிலும்  தொட்டால்  அது தீட்டுப்படுமா  என்று  கேட்டதற்கு  ஆசாரியர்  பிரதியுத்தரமாக  தீட்டப்படும் என்றார்கள் எசேக்கியேல்  44 : 25 ல்  தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரர், புருஷனுக்கு  வாழ்க்கைப்படாத  சகோதரி, என்னும்  இவர்களுடைய சவத்தினால்  தீட்டுப்படலாமேயல்லாமல்  அவர்களில்  ஒருவனும்  செத்த  ஒருவனிடத்தில்  போய் தீட்டுப்படலாகாது  என்றுள்ளது. 

இயேசு  பாடையைத்  தொட்டதும்  சுமந்த  நான்கு  பேரும்  அப்படியே  நின்று  விட்டார்கள். இயேசுவின்  வல்லமை அந்தப்  பாடையின்  வழியாக  அந்த வாலிபனுக்குள் சென்றிருக்கும். மரணம் ஏற்படுவதற்கான நான்கு  காரணங்களை  வேதம்  கூறுகிறது. 1)  பாவத்தின்  விளைவினால்  மரணம்  வருகிறது. (ரோமர்  6 : 23)  2)  மாம்ச  சிந்தையானது  மரணத்தைக்  கொண்டு  வருகிறது. (ரோமர் 8 : 6, 13)  3)  லௌகீக  துக்கமோ  மரணத்தைக்  ஏற்படுத்துகிறது.  (2 கொரிந்தியர் 7.: 10) 4) இச்சையானது  கர்ப்பம்  தரித்து பாவத்தைக்  கொண்டு  வருகிறது. (யாக்கோபு  1 : 15) பாவம்  பூரணமாகும்  போது மரணம்  ஏற்படுகிறது. இந்த  நான்கையும்  கொண்டு, நமது  ஆத்மாவின் நிலையை  நாம்  சோதித்துப்  பார்க்கலாம். இயேசு  ஜீவன்  உண்டாயிருக்கவும் அது  பரிபூரணப்பட வும்  வந்தார்.  “வாலிபனே  எழுந்திரு” என்று  இயேசு  சொன்ன வார்த்தையானது  அந்த  வாலிபனை  உயிரோடெழும்பச்  செய்தது. இறந்தவனின்  குளிர்ந்த  சரீரம்  அனல்  கொண்டு,  இருதயம்  செயல்பட்டு  எழுந்து  உட்கார்ந்தான்.  இதைத்தான்  சங்கீதம்  33 : 9 ல்  “கர்த்தர்  சொல்ல  ஆகும் ,  அவர்  கட்டளையிட  நிற்கும்”  என்று  பார்க்கிறோம்.  இயேசுவுக்கு  இயற்கையின்  மீதும்,  பிசாசின்  மீதும்,  நோய்களின்  மீதும்  மட்டுமல்லாமல்  மரணத்தின்  மீதும்  அதிகாரம்  உண்டு  என்பதை  நிரூபித்தார் (எபிரேயர் 2 : 14, 15). 

ஜனங்கள் அடைந்த ஆச்சரியம்:

லூக்கா 7 : 15, 16 “மரித்தவன்  எழுந்து  உட்கார்ந்து, பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயம் அடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைத் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”

மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். இயேசு அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார். சவ  ஊர்வலத்தை  சந்தோஷ  ஊர்வலமாக  மாற்றினார்.  எலியாவும், எலிசாவும் கூட மரித்தோரை எழுப்பியதால், ஜனங்கள் இயேசுவை மகா தீர்க்கதரிசி என்றனர். அதன்பின் அந்த ஊர்வலத்துக்கு அவசியமில்லாமல் போனது. அவர்கள் அனைவரும் இயேசுவின் பக்கமாய் திரும்பினார்கள். இனி அவர்கள் சுடுகாட்டை நோக்கியோ, கல்லறையை நோக்கியோ  பயணம் செய்ய வேண்டியதில்லை. அந்த ஊர்வலம் இயேசுவின் ஊர்வலத்தோடு இணைந்துவிட்டது. ஜீவாதிபதியான இயேசுவோடு, மரித்த வாலிபனும் சந்தோஷத்துடன் நகரத்திற்குள் பிரவேசித்தான். கிறிஸ்து நமக்குள் இருப்பாரென்றால் மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே என்று நாம் கூறமுடியும். யவீருவின் மகளை மரணம் அடைந்த சிறிது நேரத்தில் இயேசு எழுப்பினார். (லூக்கா 8 : 49 – 56) நாயீன் ஊர் வாலிபனை அடக்கம் பண்ணக்  கொண்டு செல்லப்பட்ட வேளையில் எழுப்பினார். (லூக்கா 7 : 1 – 16) லாசருவை இயேசு மரணமடைந்து  நான்கு நாட்களுக்குப் பின் எழுப்பினார் (யோவான் 11 : 31). மரண இருளிலிருப்பவர்களுக்கு வெளிச்சத்தை உதிக்கச்  செய்பவர் இயேசு.திரளான  ஜனங்கள்  அந்தத்  தாயுடன்  வந்தும்  இறந்தவனை  அடக்கம்  பண்ணத்தான்  முடியுமே  தவிர  வேறு  ஒன்றும்  முடியாது.  ஆனால்  இயேசுவோ  செத்தவனுக்கு  உயிர்  கொடுத்து  வாழ  வைத்தார்.  அந்த விதவையின் கண்ணீரைத் துடைத்து இறந்துபோன மகனை உயிரோடு எழுப்பிக் கொடுத்த இயேசு,  நம் ஒவ்வொருவருடைய கண்ணீரையும் துடைக்க வல்லவராய் இருக்கிறார். பவுல் மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், அவருக்கு நேரிட்ட சோதனைகளோடும் கர்த்தரைச்  சேவித்ததைப்  போல நாமும் சேவிப்போம்.  நாம்  நம்முடைய  இருதயத்தை  மனதுருக்கத்தால்  நிறைப்பதற்கு  திறந்து  கொடுப்போம்.  ஆமென்!

Related Posts