கானாவூரில் இயேசு:
யோவான் 4 : 46 “ பின்பு இயேசு தாம் தண்ணீரை திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானாவூருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமில் ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.”
இயேசு தான் முதல் அற்புதம் செய்த கலிலேயாவிலுள்ள கானாவூருக்கு மறுபடியும் வந்தார். இந்த ஊரானது நாசரேத்திலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. இயேசுவின் கலிலேயா ஊழியங்களுக்கு இந்த ஊர் மையமாக விளங்கியது. இந்த கப்பர்நகூம் ஊழியங்கள் பழையஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக இருந்தது. இதன் அருகில்தான் செபுலோன், நப்தலி தேசங்களும் கோராசீனும், பெத்சாயிதாவும் உள்ளது. இங்கு இயேசு பலத்த செய்கைகள் பல செய்தும் அவர்கள் மனந்திரும்பாமல் போனதால் அவர்களை இயேசு கடிந்து கொண்டாரென்று மத்தேயு 11 : 20 ல் பார்க்கிறோம். வெளிச்சமான இயேசு அவர்கள் நடுவில் உலாவியும், அவர்கள் கண்களை அடைத்துக் கொண்டனர். அதனால் தான் இயேசு லூக் 10 :15 ல் “வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்” என்று கூறினார். இவைகள் ரோமராஜ்யத்தின் கீழ் இருந்தது. அந்த சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்கிற ஏரோது ராஜாவின் சொந்தக்காரன் ஒருவனின் மகன் வியாதியாயிருந்தான்.
இயேசுவை வீட்டுக்கு அழைத்தார்:
யோவான் 4 :47, 48 “இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்க மாட்டார்கள் என்றார்.”
இயேசு தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றிய கானா ஊருக்கு மறுபடியும் வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட அந்த மனுஷன், தான் தங்கியிருந்த கப்பர்நகூமிலிருந்து 25 கிலோமீட்டர் பிரயாணம் பண்ணி இயேசுவைத் தேடி வந்தான். இவன் ஒரு யூதனல்ல, நூற்றுக்கதிபதியுமல்ல. ரோம சாம்ராஜ்ஜியத்தில் மிகவும் அந்தஸ்திலிருப்பவன். இப்படிப்பட்டவன் ஒரு வேலைக்காரனை இயேசுவிடம் அனுப்பாமல் தானே தேடிப் போனதைப் பார்க்கிறோம். அவன் தன்னுடைய மகன்மேல் வைத்திருக்கும் அன்பையும், அவன் குணமடைய வேண்டுமென்ற வாஞ்சையையும், புறஜாதி மனிதனாக இருந்தும் கிறிஸ்துவின் மேல் அவன் கொண்டிருந்த மரியாதையையும் இது வெளிப்படுத்துகிறது. வைத்தியர்களால் தன் மகனைக் குணமாக்க முடியாதென்பதையும் ரோமஅதிகாரி அறிந்திருக்க வேண்டும். எத்தனை உயர்ந்த பதவி, செல்வாக்கு, புகழ் ஒருவனுக்கு இருந்தாலும் ஒருகாலகட்டத்தில் இயேசு அவர்களுக்குத் தேவையாயிருந்தது. ஆனால் இயேசுவிடம் விசுவாசம் வைக்கும் அளவுக்கு அவனுடைய இருதயம் பக்குவப்பட்டிருந்தது. அற்புத அடையாளங்களைப் பார்க்கும் புறஜாதியாருக்கு விசுவாசம் ஏற்படுகிறது என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம். இந்த மனுஷனுடைய குமாரன் மரணத்தருவாயில் இருந்ததாலும், எந்த நேரத்திலும் மரித்து விடும் நிலமையில் இருந்ததாலும், அவனைக் கூட்டி வராமல் இயேசுவைத் தன் வீட்டிற்கு வர வேண்டும் என்று வேண்டினான். அதற்கு இயேசு அவனைப் பார்த்து “அற்புதங்களையும் அடையாளங்களையும் பார்த்தால் தானே நீங்கள் விசுவாசிப்பீர்கள்” என்றார். எதற்காக இயேசு இவ்வாறு கூறினாரென்றால், அற்புத, அடையாளங்களை விட மேலான ஒன்று இருக்கிறது. அதுதான் விசுவாசம், அதன் மூலம் தான் நித்தியஜீவனை அடைய முடியும் என்பது தான் (யோவான் 20 : 31). அந்தத் தகப்பனின் விசுவாசம் இயேசு தன் வீட்டுக்கு வந்து தன் மகனைத் தொட்டாலோ அல்லது பார்த்தாலோ சுகம் பெறுவான் என்பது தான்.
ராஜாவின் மனுஷன் இயேசுவை அழைத்தது:
யோவான் 4 : 49 – 51 “அதற்கு ராஜாவின் மனுஷன் ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்கு முன்னே வர வேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். அவன் போகையில் அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.”
ராஜாவின் மனுஷன் இயேசுவைப் பார்த்து ஆண்டவரே என்று அழைத்ததைப் பார்க்கிறோம். அரசகுடும்பத்தில் உள்ளவர்கள் மற்றவர்களைப் பார்த்து ஆண்டவரே என்று அழைக்க மாட்டார்கள். அதுவும் யூதகுலத்தில் பிறந்த இயேசுவைப் பார்த்து ரோமனான அந்த மனுஷன் அழைத்தது மிகுந்த ஆச்சரியம். அந்தத் தகப்பன் தன்னுடைய மகன் இறந்து போய் விடுவான் என்பதால் இயேசுவைச் சீக்கிரம் தன்னுடன் வரவேண்டுமென்று துரிதப்படுத்தினான். மரித்துப் போன ஒருவனைக்கூட உயிரோடெழுப்ப இயேசுவால் முடியுமென்ற விசுவாசம் அவனிடமில்லை. அத்தனை மைல் தூரத்தில் அவனுடைய வீடிருப்பதால் தான் அங்கு போவதற்கு முன் அவன் இறந்து விடுவான் என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே இயேசு அவனிடம் “நீ போகலாம் உன் குமாரன் பிழைத்திருக்கிறான்” என்றார். அந்தத் தகப்பன் ஒரு வார்த்தை இயேசு சொன்னாலே போதும் என்று அறிந்திருந்தான் . ஏனெனில் இயேசுவின் வார்த்தை உயிர்ப்பிக்கும் வார்த்தை, உருவாக்கும் வார்த்தை, பாவமன்னிப்பளித்து சமாதானத்தையும் நித்தியஜீவனையும் அளிக்கும் என்பதை அவன் அறிந்திருந்தான்.
ஏசாயா 55 : 10, 11 “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”
அதனால் இயேசு கூறிவிட்டார் என் மகன் பிழைத்து விடுவான் என்ற விசுவாசத்துடன் எந்தக் கேள்வியும் கேட்காமல் அந்தத் தகப்பன் புறப்பட்டான். கண்டிப்பாகத் தன் வீட்டுக்கு வர வேண்டுமென்று இயேசுவை வற்புறுத்தவில்லை. ஒரு மனிதனுடைய குறைவுபட்ட விசுவாசத்தையும் பெலப்படுத்தும் வல்லமை தேவனுடைய வார்த்தைக்கு உண்டு என்பதை இதிலிருந்து அறிகிறோம். மரணத்தருவாயில் தன்னுடைய மகன் இருந்தாலும் வீட்டிலுள்ளவர்கள் தேடுவார்கள் என்றிருந்தாலும் அன்று இரவே (யோவான் 4 : 52 ல் நேற்று) புறப்பட்டுப் போகாமல் இயேசு சொன்னதால் அப்படியே நடக்கும் என்ற முழு நிச்சயத்தோடு கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து அடுத்தநாள் தன்னுடைய வீட்டை நோக்கி பயணப்பட்டான். இயேசு கூறிய வார்த்தையால் அந்த நிமிடமே அவருடைய மகன் சுகம் அடைந்தான். இயேசு காலத்தைக் கடந்தவர் மட்டுமல்ல, தூரத்தையும் கடந்தவராக இருக்கிறார். எனவே தான் எரேமியா 23: 23 ல் “நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன் தூரத்திற்கும் தேவனல்லவோ என்றார்.” அப்பொழுது அவனுடைய ஊழியக்காரன் ஒருவன் எதிராக வந்து உம்முடைய மகன் பிழைத்து விட்டான் என்ற நல்ல செய்தியைக் கூறினான். அவன் எப்படி சுகமானான் என்று அவர்களுக்குப் புரியவில்லை தேவன் அற்புதம் செய்வதற்குத் தூரம் என்றோ அருகில் என்றோ வித்தியாசம் இல்லை. அதனால்தான் குமாரன் தேவனாக இருக்கிறார்.
அவனுடைய வீட்டார் விசுவாசித்தனர்:
யோவான் 4 : 52 – 54 “அப்பொழுது: எந்த மணி நேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாம்மணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள் உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணி நேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டார் அனைவரும்விசுவாசித்தார்கள். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பி வந்த பின்பு இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.”
அந்த ஊழியக்காரன் கூறியதைக் கேட்ட அந்தத் தகப்பன், எந்த மணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டு நீங்கியது எனக் கேட்டான். அந்த மனுஷன் தன் மகனை மறந்து, சுகமானதை மறந்து, இயேசுவின் வார்த்தையையும், அவருடைய வல்லமையையும் நினைத்து இந்தக் கேள்வியைக் கேட்டான். அதற்கு அவன் ஏழாம்மணி நேரம் என்றான். தகப்பனோ இயேசு தன்னிடம் உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று சொன்ன மணி நேரம் அது என்று உறுதிபடுத்திக்கொண்டான். அதைக் கேட்டபின் ரோம அதிகாரி விசுவாசத்தில் இன்னும் பெலனடைகிறான். இயேசுவின் வாயிலிருந்து வார்த்தை வெளிவந்த அந்த நிமிடமே தூரயிருந்த அந்த மகனின் சரீரத்தைத் தொட்டு சுகமாக்கியது. இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு சகலமும் நன்மையாக முடியுமென்று ரோமர் 8 : 28 ல் கூறப்பட்டுள்ளது. . அவன் வீட்டுக்குப் போன பின்பு அவனும் அவனுடைய வீட்டாரும் இயேசுவை விசுவாசித்தனர். பிள்ளையின் சுகவீனம் முடிவில் முழுக் குடும்பத்துக்கும் இரட்சிப்பைக் கொண்டு வந்தது. “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்று யோசுவா 24 : 15 ல் கூறியபடி ராஜாவின் மனுஷனின் குடும்பத்தார் இயேசுவைப் பற்றிக் கொண்டார்கள்.
கிறிஸ்து நடப்பித்த அற்புதம் மெய்யான விசுவாசத்தை உருவாக்குகிறது. யூதஜனத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். வேதத்தை அறியாத ஒரு புறஜாதி மனிதன் உடனடியாக இயேசுவே மெய்யான தேவன் என்று கண்டுகொள்கிறான். இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை இயேசுவிடம் இந்த அற்புதத்தின் மூலம் வெளிப்பட்டதைக் காண்கிறோம். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்குத் திரும்பி வந்த பின் செய்த இரண்டாம் அற்புதம். கானாவூர் திருமண வீட்டில் இயேசு செய்தது முதல் அற்புதம். இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்து பல்வேறு அற்புதங்களை நடப்பித்தார் என்றாலும் (மத்தேயு 4 : 23, மாற்கு 1 : 34, லூக்கா 4 : 40). இந்த அற்புதம் முக்கியமாகக் கருதப்பட்டபடியால் இது இரண்டாம் அற்புதமாகக் குறிப்பிடப்படுகிறது. யூதேயாவில் பல அற்புதங்களை செய்துவிட்டுத்தான் இயேசு கலிலேயாவிற்குத் திரும்பியிருந்தார். என்றாலும் (யோவான் 2 : 23, 4 : 45). அவைகளை யோவான் தன்னுடைய சுவிசேஷத்தின் எதுவும் அறிவிக்கவில்லை. ராஜாவின் மனுஷனுடைய வாழ்க்கையில் கேள்விப்பட்டது அவனுடைய குடும்பத்தில் ஒரு பெரிய அற்புதம் நடப்பதற்கு வழிவகுத்தது.
ஆனால் கேள்விப்பட்டவன் அரைகுறையாகக் கேள்விப்பட்டான். இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டவுடன் அவரைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் ஏனென்றால் யோவான் 4 : 47 ல் தன்னுடைய வீட்டிற்கு கப்பர்நகூமுக்கு மகனை குணமாக்க வரவேண்டுமென்று வேண்டினான். அவர் அங்கு வந்தால்தான் தன மகன் சுகமடைவான் என்று கேள்விப்பட்டிருந்தான். இயேசு இருக்கிற இடத்திலேயே ஒரு வார்த்தை சொன்னாலே தன் மகன் சொஸ்தமாவான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. இயேசு செய்த அற்புதங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருந்ததில்லை. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாகவே செய்தார். நோயாளியிருந்த இடத்திற்குச் செல்லாமலே அவனைப் பார்க்காமலே இருந்த இடத்திலிருந்தே இந்த இரண்டாம் அற்புதத்தைச் செய்தார். கப்பர்நகூமிலிருந்து வந்தாலும், விசுவாசித்த அந்தத் தகப்பனை ஏமாற்றாமல், இயேசு அவனுடைய மகனுக்கு விடுதலை கொடுத்தார். கர்த்தரின் வார்த்தையானது தீவிரமாய் செயல்படும். அனுப்பின காரியத்தை வாய்க்கப்பண்ணும். அதற்கு வாகனங்கள் தேவையில்லை. துயரங்களைத் துடைக்கும் வல்லமை அவருடைய வார்த்தைக்கு மட்டுமே உண்டு. மரணத்தருவாயிலிருந்த ஒருவனை இயேசு உயர்ப்பித்ததைப் போல சாவுக்கேதுவான சரிரங்களையும் இயேசு உயிர்ப்பிப்பார்.
அப்போஸ்தலர் 16 : 31 “ … கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” ஆமென்.