சகரியா பள்ளத்தாக்கிலே இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருக்கிற ஒரு புருஷனைக் கண்டான். அந்த புருஷன் இயேசுவைக் குறிக்கலாம். குதிரையின் நிறங்கள் நியாயத்தீர்ப்பையும் வெற்றியையும் குறிக்கலாம். மிருதுச்செடி இஸ்ரவேலின் உபத்திரவத்தைக் காட்டலாம். அந்த குதிரைகள் பூமி எங்கும் சுற்றிப் பார்த்து அது அமைதியையும், அமரிக்கையையும் உடையதாக இருந்ததாக ஒரு தூதன் சகரியாவிடம் கூறினான். இருப்பினும் யூதாவிலிருந்த தேவமக்கள் இன்னும் ஒடுக்கப்பட்டு பாதுகாப்பில்லாமலும் இருந்தார்கள். வளமுடன் வாழும் தீயவர்களான புறஜாதியாரின் மகிழ்ச்சி நிலையற்றது. தக்கவேளையில் கர்த்தர் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குவார். தேவன் இஸ்ரவேலரின் நிலைக்கு மனமிறங்கி நிலையான அமைதியை வழங்குவார். கர்த்தர் எருசலேமையும், யூதாவின் பட்டணங்களையும் மீட்டு ஆசீர்வதித்து உலக சூழ்நிலையை மாற்றுவார். எருசலேமின் ஆலயம் கட்டப்படும் என்றார் – சக 1:7 – 17