தாவீது சவுலை விட்டு பெத்லகேமுக்குச் சென்று தன் தகப்பனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். பெலிஸ்தியர் யுத்தத்திற்கு வந்தபோது அவனுடைய சகோதரர்கள் போர் முனைக்குச் சென்றுவிட்டனர். தாவீது தன் தகப்பனின் ஆணைப்படி தன் சகோதரனைப் பார்க்க போர் முனைக்குச் சென்றான். அங்கு கோலியாத் “தன்னோடு யாராவது யுத்தம் பண்ணி ஜெயித்தால் அவர்களுக்கு நாங்கள் வேலைகாரராயிருப்போம் என்றும், நாங்கள் ஜெயித்தால், நீங்கள் எங்களுக்கு வேலைகாரராயிருக்க வேண்டும்” என்றும் சவால் விட்டான். இதைக் கேட்ட தாவீது “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் “என்று கூறி சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே அவனை எதிர்க்கச் சென்றான். தன் தடியைக் கையிலே பிடித்துக் கொண்டு ஐந்து கற்களுடன் சென்று, ஒரு கல்லை எடுத்து கவணிலே வைத்து சுழற்றி கர்த்தர் கொடுத்த ஞானத்தின்படி கவசமில்லாத நெற்றியிலே பட்டென்று எறிந்தான். கோலியாத் தரையிலே முகங்குப்புற விழுந்தான். தாவீது அவன் மேல் நின்று அவன் பட்டயத்தை எடுத்து அவன் தலையை வெட்டினான் – 1சாமு 17ம் அதிகாரம்