Menu Close

பஞ்சநேரத்தில் விலைவாசி குறையுமென்றார்

சமாரியாவில் ஏற்பட்ட பஞ்சம்:

2 இராஜாக்கள் 6 : 24 – 31 “இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்.”

“அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கை போட்டார்கள்.”

“இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின்மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.”

“அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,”

“ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.

அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்து விட்டாள் என்றாள்.”

“அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள்.”

“அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.”

இந்த அற்புதம் 23 மணி நேரத்துக்குள் நடைபெற்றது. சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் ராஜா தன் இராணுவத்துடன் சமாரியாவை முற்றுகையிட்டதால் கொடிய பஞ்சம் உண்டானது. இந்தப் பஞ்சம் கொடிய பஞ்சம். இது மழைக்குறைவினால் வந்த பஞ்சம் கிடையாது. இது ராஜாக்கள் முற்றுகை போட்டதால் வந்தது. இதைக்குறித்து 1 இராஜாக்கள் 8 : 37 – 40 ல் பஞ்ச காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ராஜா தன்னுடைய கைகளை கர்த்தருக்கு நேராக விரித்து கர்த்தரிடம் கேட்க வேண்டும். ஒரு கழுதையின் தலை 80 காசுக்கும், ஒரு காற்படிபயறு 5 வெள்ளிக்காசுக்கும் விற்றது. இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தில் நடந்து போகையில் ஒரு பெண்மணி ராஜாவே என்னை இரட்சியும் என்று கேட்டாள். ராஜா அவளிடம் கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருக்கிறார். 

தான் அவளை எதிலிருந்து இரட்சிக்க முடியும் ஆலயத்திலோ, களஞ்சியத்திலோ ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு உனக்கு என்ன வேண்டுமென்கிறார். அப்பொழுது அந்தப் பெண்மணிகள் இருவரும் பண்ணிய ஒப்பந்தத்தைக் கூறினர். பஞ்சத்தின் காரணமாக ஒருநாள் ஒருத்தியின் பிள்ளையைக் கொன்று திங்கலாமென்றும், அடுத்தநாள் அடுத்தவள் பிள்ளையைக் கொன்று திங்கலாமென்று முடிவெடுத்து முதல்நாள் நடந்தது. இரண்டாவது நாள் அவள் தன்னுடைய பிள்ளையைத் தராமல் ஒழித்து வைத்துவிட்டாள் என்றாள். தாய்தன் குழந்தையைத் தின்னும் அவலநிலை இஸ்ரவேலருக்கு ஏற்பட்டது. கர்த்தரை விட்டு விலகினால் இவ்வாறு நடக்குமென்று மோசேயின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது நிறைவேறிற்று (உபகாமம் 28 : 53 – 57). அவர்கள் கூறியதைக் கேட்ட ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டான். தனது நாட்டின் அவல நிலையைப் பார்த்து தனது நாட்டு மக்களை கன்றுக்குட்டி வணக்கத்தினின்று திரும்பத் தவறிய ராஜாதான் அதற்குக் காரணம். 

கர்த்தரையும், தீர்க்கதரிசியையும் குறை கூறினான். எந்த சூழ்நிலையிலும் கர்த்தரைக் குறை கூறாதீர். அதற்குப் பதிலாக நம்மை ஆராய்ந்து பார்த்து மனந்திரும்பிக் கர்த்தரை நோக்கி ஜெபித்தால் கர்த்தர் உதவி செய்வார். அப்போது இஸ்ரவேலின் ராஜாவின் கோபம் எலிசாவின் மேல் பற்றியெரிந்தது. எலிசாவைக் கொல்ல முற்பட்டான். அதற்குக் காரணம் எலிசா ஜனங்களின் ஆன்மீக வீழ்ச்சியால் பஞ்சம் ஏற்படப்போகிறதை முன்னறிவித்திருக்கலாமென்றும், எலிசா ஜெபம் பண்ணவில்லை என்றும் எண்ணியிருக்கலாம். இதே யோராம் ராஜா பெரிய படைகளைக் கண்மயக்கம் உண்டாக்கச் செய்தபோது எலிசாவைப் பார்த்துத் தகப்பனே என்றழைத்து அவர்களை வெட்டிப் போடலாமா என்று கேட்டவன், ஆனால் இன்று எலிசாவை சத்துருவாகப் பார்த்துக் கொலை செய்ய வேண்டுமென்கிறான். 

எலிசா கூறிய கர்த்தருடைய வார்த்தை:

2 இராஜாக்கள் 6 “ 32, 33 “எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.”

“அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.” 

 2 இராஜாக்கள் 7 : 1,2 “அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.”

“அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.”

எலிசா தன்னுடைய மூப்பர்களோடு தன்னுடைய வீட்டில் உட்கார்ந்திருந்தான். ராஜா தன்னுடைய தலையை வாங்க ஆள் அனுப்புகிறானென்று ராஜா அனுப்பிய ஆள்வருமுன்னே கூறினான். மேலும் அந்த ஆளை உள்ளே வரவிடாமல் கதவைப் பூட்டிப் போடுங்கள் என்றும், ஏனெனில் ராஜாவும் அவன் பின்னே வருகிறான் என்றான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ராஜாவின் மனுஷன் வந்து இந்தப் பஞ்சம் கர்த்தரால் வந்ததால் இனி கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியதில்லையென்று ராஜா சொல்வதாகக் கூறினான். அப்பொழுது எலிசா தீர்க்கதரிசி சமாரியா தேசத்தில் காணப்படும் உணவுப் பஞ்சம் விரைவில் தீர்ந்துவிடுமென்று தீர்க்கதரிசனமாக எலிசா நாளை இதே நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படுமென்று கர்த்தர் கூறுவதாகத் தீர்க்கதரிசனத்தை தைரியமாக உரைத்தான். உணவுப் பண்டங்களின் விலைகள் ஒரே நாளில் மிக மிகக் குறைந்து சாதாரண நிலைக்கு வந்து விடுமென்று அறிவித்தான். எலிசா தன்னுடைய உயிரை தற்சமயம் காத்துக் கொள்வதற்குச் சொன்ன வார்த்தையாக ராஜா நினைத்தான். 

தம்மைக் குற்றம்சாட்டிய ராஜாவுக்கு மறுநாள் அதிசயமாக மிகவும் மலிவாக உணவு வழங்கப்படும் என்று கூறிய எலிசாவின் தீர்க்கதரிசனத்தை நம்பாமல் ராஜாவின் பிரதானி கர்த்தர் வானத்திலே சன்னல்களை உண்டாக்கிக் கொட்டினாலும் இது நடக்காது என்று சந்தேகப்பட்டுப் பேசினான். அவிசுவாசச் சொற்களைக் கூறினான். தோமா இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பாததைப் போல இந்தப் பிரதானி கூறினான். இவன் அன்றைக்கிருந்த சூழ்நிலையைப் பார்க்கிறான். கோதுமையே இல்லை கோதுமை மாவு எங்கிருந்து வருமென்று நினைத்திருப்பான். கர்த்தர் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்ட தேவன் என்பதை அவன் அறியவில்லை. . சாராள் கர்ப்பம் செத்து ஸ்திரீகளுக்குண்டான வழிபாடும் நின்று போயிற்று. அதுதான் சூழ்நிலை. ஆனால் கர்த்தர் “வானத்து நட்சத்திரங்களை போல கடற்கரை மணலைப் போல ஆபிரகாமின் சந்ததியைப் பெருகப் பண்ணுவேன் என்கிறார். ஆபிரகாம் அதை நம்பினான். அதனால் அவன் விசுவாசத்தின் தகப்பனானான். யோசேப்போ சிறைக்கைதியாக இருந்தான். அதுதான் அவனது சூழ்நிலை. கர்த்தரோ அவனைத் தேட வைத்து பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தைக் கொடுத்தார். 

வானத்தின் மதகுகளைத் திறக்காமலே அவ்விதம் செய்யக் கர்த்தர் வல்லவராயிருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும். அற்புதங்களைச் செய்வதற்கு கர்த்தருக்கு எண்ணிறந்த வழிகள் உண்டு. இனியும் தாங்க முடியாது என்றநிலை வரும்போது சூழ்நிலைகளை நொடிப்பொழுதில் மாற்ற வல்லவரான கர்த்தரை முற்றிலும் நம்பவேண்டும். தேவனுக்குக் கூரையைப் பிய்த்துக் கொட்டுவது பெரிய காரியமல்ல. அது உழைக்காமல் இருப்பவர்களுக்கும், சுகபோகப் பிரியருக்கும் கிடைக்காது. தேவைகளில் தேவனைத் தேடி அவரது வாசலைத் தட்டுவோருக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் நமது வாயின் வார்த்தைகளைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். மனிதனால், இயற்கையால் நடக்காது என்று பேசுவதைவிட, தேவனால் முடியும் என்ற விசுவாச வார்த்தைகளைப் பேச வேண்டும். எலிசா அவனுடைய அவிசுவாசத்துக்குத் தண்டனையாக “உன்னுடைய கண்களினால் அதைக் காண்பாய்; ஆணாலும் அதிலே சாப்பிடமாட்டாய்” என்றான். 

குஷ்டரோகிகளின் செயல்: 

2 இராஜாக்கள் 7 : 3 – 8 “குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?”

“பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,”

“சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.”

“ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,”

“இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.”

“அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்து,”

நான்கு குஷ்டரோகிகள் பட்டணத்துக்கு வெளியே விலக்கி வைக்கப்பட்டி ருந்தார்கள். இவர்களுக்கு உறவினர்கள் யாரும் உணவு கொடுத்தால் தான் உணவு கிடைக்கும். அவர்கள் பட்டினியாயிருக்கிறார்கள். எதிரிகளிடமாவது தங்களுக்கு இரக்கம் கிடைக்குமா என்று நினைத்து இருவரும் சீரிய இராணுவம் இருக்கிற இடத்துக்குச் சென்றனர். பட்டினியால் சாகும் தருவாயிலிருந்த நான்கு பெரும் துணிந்து பகைவரின் பாளையத்திற்கு பிச்சைக்குச் சென்றனர். பிச்சை அல்லது மரணம் என்பது அவர்களின் தீர்மானமாக இருந்தது. அந்நாட்களில் படையெடுக்கச் செல்லும்போது அவர்களுக்கு வேண்டிய எல்லா உணவுப் பொருட்களையும் எடுத்துச் செல்வர். ஆனால் அங்கே ஒருவருமில்லை. ஏனெனில் கர்த்தர் சீரியரின் இராணுவத்தினருக்கு, இரத்தங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினார். அவைகளைக் கேட்ட அவர்கள் இஸ்ரவேலின் ராஜா நம்மிடத்தில் போருக்கு வருவதற்கு எகிப்தியரின் ராஜாக்களுக்கும், ஏத்தியரின் ராஜாக்களும் நமக்கு விரோதமாகக் கூட்டிக் கொண்டு வருகின்றனர் என்று நினைத்து, இருட்டோடு தாங்கள் கொண்டு வந்த அத்தனை பொருட்களையும், மிருகங்களையும் விட்டு தங்கள் பிராணன் மாத்திரம் தப்பினால் போதுமென்று ஓடினர். சீரியர்களுக்கு ஒரு பெரிய படை வருவதைப் போன்று சத்தம் கேட்டதால் அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தலைதெறிக்கச் சென்றனர். பிச்சைக்குச் சென்றவர்களுக்குக் கொள்ளைப் பொருட்கள் குவிந்து கிடந்தன. எனவே குஷ்டரோகிகள் தங்களுக்கு வேண்டிய மட்டும் உணவை எடுத்து உண்டனர். மேலும் அங்குள்ள வெள்ளியையும், பொன்னையும், வஸ்திரங்களையும் எடுத்து ஒழித்து வைத்துக் கொண்டனர். அந்தநேரத்தில் அந்த இருவருக்கும் தங்களைக் குறித்த ஆர்வம் குறைந்து மற்றவர்களைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தனர். 

குஷ்டரோகிகள் ராஜாவுக்கு செய்தி அறிவித்தல்:

2 இராஜாக்கள் 7 : 9 – 11 “பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.”

“அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்தபிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.”

“அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள்.”

உணவின்றி ஜனங்கள் மரணமடைந்து கொண்டிருப்பதால் உடனடியாக பெரிய படைகள் போய்விட்ட செய்தியை உடனே அறிவிக்க வேண்டுமென்று தீர்மானமெடுத்தனர். பின்பு அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி தாங்கள் செய்வது சரியல்ல என்றும், இன்று நல்ல செய்தியை அறிவிக்கும் நாள். விடிகிறவரை நாம் இதைத் தெரிவிக்காவிட்டால் நம்மேல் குற்றம் சுமருமென்று, அதை ராஜாவுக்குத் தெரிவிக்கச் சென்றனர். கிறிஸ்து இல்லாமல் மரணமடைந்து ஜனங்கள் நரகத்திற்குச் சென்று கொண்டிருப்பதால் அவரைக் குறித்த நற்செய்தியை உடனடியாக யாவருக்கும் அறிவிக்க வேண்டியது நமது தலையாய கடமை. காலம் தாழ்த்தினால் குற்றம் நம்மீது சுமரும். நம்முடைய விசுவாசத்தை மட்டும் கவனித்துக் கொண்டிராமல் நம்மைச் சுற்றி இருப்போருக்கு எவ்விதத்திலேனும் நற்செய்தியைக் கூறக்கடவோம். கிருபையின் வாசல் அடைக்கப்படுமுன் இயேசுவை அறியாதவர்களுக்கு அவரைப் பற்றி அறிவிக்க முற்படுவோம். அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்தபிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான். அவர்கள் உள்ளேபோய் ராஜாவின் அரண்மனையுள்ளவர்களுக்கு அதை அறிவித்தான். 

நடந்த அற்புதம்:

2 இராஜாக்கள் 7 : 16, 17, 18 “அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.”

“ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே, அவன் செத்துப்போனான்.”

“இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.”

குஷ்டரோகிகள் கூறியதைக் கேட்டு ராஜா ஆட்களை அனுப்பினான், அவர்கள் சீரியரின் படைகள் உயிர்தப்பி தன்னுடைய பொருட்களைக் கூட விட்டுவிட்டுப் போனதைப் பார்த்து வந்து ராஜாவிடம் கூறினர். அதையறிந்த ஜனங்கள் சீரியரின் பாளையத்திற்குச் சென்று அங்குள்ளவைகளைக் கொள்ளையிட்டனர். அதனால் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு மரக்கால் கோதுமைமா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது. ராஜா எலிசாவின் தீர்க்கதரிசனத்தை வானத்தின் மதகுகளை உண்டாக்கினாலும் நடக்காது என்று மறுத்துப் பேசினவனை ஒலிமுக வாசலிலே விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட் டிருந்தான். ஆனால் அவனுடைய கண்களினால் எலிசா கூறிய கர்த்தருடைய வார்த்தையின்படியே மறுநாளே மலிவாக விற்றதைப் பார்த்தான். ஆனால் எலிசா கூறியபடி ஜனங்கள் அவனை நெருக்கி மிதித்ததினால் செத்துப் போனான். சமாரியாவிலுள்ள எல்லாக் கடைகளிலும் விலை மலிவாகி விட்டது. இனி கழுதைத் தலையை வாங்கிச் சமைக்கத் தேவையில்லை. மலிவாகக் கோதுமையே கிடைத்தது. எலிசா சொன்ன வார்த்தை அப்படியே நிறைவேறிற்று. கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த பெரிய இரட்சிப்பை மறந்துபோய் மீண்டும் பாவத்துக்குத் திரும்பி விட்டனர். எனவே கர்த்தர் மீண்டும் பஞ்சத்தை அனுப்பினார்.

இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய வார்த்தை உண்மையானது என்றும், அவர் தமது இரக்கத்தினால் விசுவாசத் துரோகம் செய்த மக்களை அவர்கள் மீண்டும் மனந்திரும்பி தேவனிடம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் இரக்கம் கொண்டார். அவர்களோ தேவனுடைய வார்த்தையில் நம்பிக்கை கொள்ளாததால் கர்த்தர் ஒரு கடும் பஞ்சத்தைத் தேசத்தில் வரச் செய்தார். அற்புதங்களினாலே மாத்திரம் தேவன் நமக்கு உதவி செய்யவில்லை. சில வேளைகளில் கடினமான பாதைகளின் வழியாகவும் வழி நடத்துகிறார். ஆனாலும் அந்தப் பாதையிலும் தேவன் நம்மோடுகூடவே இருக்கிறார். இதனால் ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியத் தவறினால் கடுமையான நியாயத்தீர்ப்பு வழங்கப்படுமென்று அறிந்து கொண்டனர். தேவன் நினைத்தால் நாளைக்கே உங்கள் துக்கம் சந்தோஷமாயும். உங்கள் பலவீனம் பலமாயும், உங்கள் இருள் வெளிச்சமாயும் மாறும்.

Related Posts