Menu Close

கேயாசியின் கண்களைத் திறக்கச் செய்தார்

2 இராஜாக்கள் 6 : 8 – 10 “அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங் குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான்.”

“ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான்.”

“அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.”

கர்த்தருடைய ஜனங்களை அழிப்பதற்கு சீரிய ராஜா இஸ்ரவேல் ராஜாவுடன் யுத்தம் பண்ணுவதற்காக எங்கெல்லாம் படைகளை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை பண்ணுகிறான். ராஜாவினுடைய ஆலோசனையை கர்த்தர் எலிசாவுக்கு வெளிப்படுத்துகிறார். சீரியர்கள் அழிக்க முற்படும்போது கர்த்தர் எலிசாவுக்கு அதை தம் ஆவியினாலே வெளிப்படுத்தினார். தேவனுடன் அனுதினம் நெருங்கி உறவு கொண்டதால் தேவன் எலிசாவுக்கு சீரியரின் இரகசியத் திட்டங்களை வெளிப்படுத்தினார். அதை இஸ்ரவேலின் ராஜாவிடம் அறிவித்து எச்சரிக்கையாய் இருக்கக் கூறுகிறான். மத்தேயு 10 : 20 ல் கூறியது போல பிதாவின் ஆவியானவர் எலிசாவுக்குள்ளிருந்து பேசினார். லூக்கா 12 : 2 ல் தேவனால் “வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.”என்றும் பார்க்கிறோம். ராஜாவும் எலிசா சொல்வது உண்மையா என்பதை அறிய வேவுகாரர்களை அனுப்பி அது உண்மை என்று அறிகிறான். அதனால் எலிசா கூறியபடி எச்சரிக்கையாக இருந்து அநேகந்தரம் சீரியர்களிடமிருந்து தப்புவிக்கப் படுகிறான். எலிசாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால் தான் ராஜா காப்பாற்றப்பட்டான் எனவே நாமும் தெரியாததைத் தெரிந்து கொள்ளத் தேவனுடைய மனுஷர்களை அணுகலாம். நாமும் எலிசாவைப் போல தேவனுடன் நெருங்கி உறவாடி தேவனுடைய பிரசன்னத்தில் வாழ முயற்சிப்போம். அதனால் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மையுண்டாகும். 

ராஜா எலிசாவைப் பிடிக்க ராணுவத்தை அனுப்பியது:

2 இராஜாக்கள் 6 : 11 – 14 “இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.”

“அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.”

“அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.”

“அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.”

சீரியர்கள் போக நினைத்த இடங்களிலெல்லாம் இஸ்ரவேலின் ராணுவங்கள் நின்றது இதனால் சீரிய ராஜாவுக்கு மிகக் குழப்பம் ஏற்பட்டு கவலையில் ஆழ்ந்தார். தான் ஒவ்வொரு தடவையும் இரகசியமாகத் திட்டமிடுகிற திட்டங்கள் அனைத்தும் எவ்வாறு இஸ்ரவேல் ராஜாவுக்குத் தெரிகிறது என்று ஆராய்ந்தார். தம்முடைய படையிலும் தம்மை உழவு பார்க்கிற ஒருவன் இருப்பதாக உணருகிறான். எனவே சீரியராஜா மிகுந்த குழப்பத்துடன் தம்முடைய ஊழியக்காரர்களை அழைத்து நமக்குள் இஸ்ரவேல் ராஜாவுக்கு உளவாயிருப்பவன் யார் என்றான். அதற்கு அவனோடிருக்கிற ஒருவன் நம்மிடம் யாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ராஜா பள்ளியறையில் பேசுகிறவைகளைக் கூட இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாக எலிசா அதை இஸ்ரவேல் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான். உடனே ராஜா எலிசா எங்கேயிருக்கிறான் என்று கேட்டான். அவர்கள் எலிசா தோத்தானில் தங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். 

தோத்தான் எருசலேமிற்கு வடக்கே 60 மைல் தூரத்தில் உள்ளது. தோத்தான் என்றால் இரண்டு கிணறுகள் என்று பொருள். இந்த இடம் மிகவும் செழிப்பான இடம். இது அந்தக் காலத்தில் எலிசாவின் தலைமைச் செயலகமாய் இருந்திருக்கிறது. இந்தத் தோத்தானில்தான் யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை விற்றுப் போட்டனர். சீரியராஜா எலிசா தான் அந்தத் தேசத்தை தாக்காதபடியும், அவர்களை சிறை பிடிக்க முடியாதபடியும் தடுக்கிறான் என்று நினைத்து, எலிசாவைக் கொலை செய்யப் பார்க்கிறான். அதற்காகத் திட்டம் போட்டு பலத்த குதிரைகளையும், ரதங்களையும், இராணுவங்களையும் அனுப்புகிறான் ஒரு மனிதனான எலிசாவைப் பிடிக்க இத்தனை இராணுவங்களை அனுப்புவதைப் பார்க்கிறோம். அவர்கள் இரவு நேரத்தில் எலிசா இருக்கும் பட்டணத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். 

எலிசா கேயாசியின் கண்களைத் திறந்தான்:

2 இராஜாக்கள் 6 : 15 – 17 “தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.”

“அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.”

“அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.”

எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசி அதிகாலையில் எழுந்து வெளியே வந்து பார்க்கும் பொழுது சீரியர்களின் ராணுவமான குதிரைகளும், இரதங்களும் பட்டணத்தைச் சுற்றி இருப்பதைக் கண்டான். உடனே எலிசாவிடம் போய் “ஐயோ என் ஆண்டவனே நம்மைச் சுற்றிலும் படைகள் சூழ்ந்திருக்கிறதே என்ன செய்வோம்” என்று புலம்பினான். ஆனால் எலிசாவோ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம் “அவர்களுடன் இருப்பவர்களைக் காட்டிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்று கூறினான். இதுதான் விசுவாசம் உள்ளவர்களுக்கும், விசுவாசம் இல்லாதவர்களுக்குமுள்ள ஒரு பெரிய வித்தியாசம். மலையில் இருந்து ராணுவத்தை பார்த்து நடுங்கின கேயாசி ஐயோ என்று புலம்புகிறான். கண்கள் திறக்கப்பட்ட எலிசா நம்மோடு இருப்பவர்கள் அவர்களை விட அதிகம் என்று கூறுவதைக் காண்கிறோம். வேலைக்காரனாகிய எலிசா பிரச்சனையைப் பார்த்தான். ஆனால் எலிசாவோ கர்த்தரைப் பார்த்தான். அப்பொழுது எலிசா கர்த்தரிடம் கேயாசியின் கண்கள் திறக்கப்பட விண்ணப்பம் பண்ணினான். உடனே கர்த்தர் வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். அப்பொழுது கேயாசி எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரத்தங்களாலும் மலை நிறைந்திருப்பதைக் கண்டான். 

நம் கண்களால் பார்க்க முடியாத ஒரு ஆவிக்குரிய உலகம் இருந்து கொண்டிருக்கிறது. அதில் பணிவிடை செய்யும் திரளான வானதூதர்களின் சேனைகள் தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் கிரியை நடப்பிக்கிறார்கள். (ஆதியாகமம் 32 : 2, ஏசாயா 63 : 9). இந்த நிகழ்ச்சியிலிருந்து தேவன் தமது மக்களுக்குத் துணையாயிருப்பது மட்டுமல்ல (ரோமர் 8 : 31) அவருடைய தூதர்களின் சேனை விசுவாசிகளையும், தேவனுடைய ராஜ்ஜியத்தையும் பாதுகாக்க அருகிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள் என்றறிகிறோம். இதேபோல்தான் ஜனங்கள் கோலியாத்தைப் பார்த்தனர். ஆனால் தாவீதோ கர்த்தரைப் பார்த்தான். வேதத்தில் 365 இடங்களில் பயப்படாதே என்று வருகிறது. பரலோகத்தின் சேனை எப்பொழுதும் தம்முடைய பிள்ளைகளைச் சுற்றிக் காத்துக் கொண்டிருக்கும். எசேக்கியா ராஜாவின் காலத்தில் அசிரிய ராஜா தன்னுடைய ராணுவத்தை அனுப்பினான். சனகெரிப் என்ற பெரிய படைத்தலைவன் அவர்களுடைய ஒரு செய்தியை அனுப்புகிறான். தேவன் ஒரு தூதனை அனுப்பி ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேரை ஒரே நாளில் சங்கரிக்கச் செய்தார். 

நமக்கு விரோதமாக உருவாக்கப்படும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும். சங்கீதம் 119 : 18 ல் தாவீது “கர்த்தாவே உமது அதிசயங்களை பார்க்கும்படி தன்னுடைய கண்களைத் திறந்தருளும்” என்று ஜெபித்ததைப் பார்க்கிறோம். ஒரு வழியாய் நமக்கு எதிராக வருபவர்கள் ஏழு வழியாகப் புறப்பட்டுச் செல்வார்கள். 1 கொரிந்தியர் 2 : 9 ல் கூறியபடி கர்த்தர் நமக்கு ஆயத்தம் பண்ணியவைகளை நம்முடைய கண்கள் காணவேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். அதேபோல் எபேசியர் 1 : 19ல் கூறியபடி தேவனுடைய மகத்துவத்தின் வல்லமை இன்னதென்று அறிய நமக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைத் தர வேண்டுமென்று தேவனிடம் கெஞ்ச வேண்டும். நாம் காண்பதற்கும், உணர்வதற்கும் மிகவும் அதிகமாக நமக்கு உதவிகளைப் பலவிதங்களில் கர்த்தர் செய்து வருகிறார். கர்த்தருடைய பிள்ளைகள் யாரும் தனியாக இருக்கிறேன், தனக்குத் துணையாக யாருமில்லையென்று எண்ண வேண்டாம். கர்த்தரை நோக்கி ஜெபித்து எலிசாவைச் சுற்றியிருந்ததைப்போல நம்மைச் சுற்றியும் கர்த்தருடைய சேனையிருப்பதை விசுவாசிப்போமாக. அதன்படியே ஆகும். 

எலிசா எதிரிகளுக்கு கண்மயக்கம் உண்டாக்கியது:

2 இராஜாக்கள் 6 : 18 – 20 “அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.”

“அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோனான்.”

“அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.”

எதிரியின் படைகள் எலிசாவிடம் வந்தவுடன் எலிசா எதிரிகளுக்கு கண்மயக்கம் உண்டாகும்படி கர்த்தரை நோக்கி ஜெபித்தான். கர்த்தர் எலிசா விண்ணப்பித்தபடி எலிசாவின் எதிரிகளுக்கு கண்மயக்கம் வரும்படி செய்தார். அவர்களை ராஜாவிடம் அழைத்துச் சென்று பின்னர் அவர்களுடைய கண்களைத் தெளிவடையச் செய்ய வேண்டுமென்று எலிசா திட்டமிட்டான். . மனிதனின் திட்டத்தைக் கர்த்தர் செயல்படுத்தினார். உண்மையாகக் கர்த்தரை நேசித்துப் பின்பற்றுபவர்களின் திட்டங்களைக் கர்த்தர் நிறைவேற்றுகிறார். சீரியரின் படைகள் தேடுவது இஸ்ரவேலின் ராஜாவைத்தான். ராஜாவைப் பிடிக்க முடியாதபடி எலிசா தடுத்ததால் எலிசாவைத் தேடினர். எனவே எலிசா இது வழியுமல்ல, பட்டணமுமல்ல என்பின்னே வாருங்கள் நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் கூட்டிப் போகிறேன் என்று சொல்லி அவர்களை ராஜாவிடம் அழைத்துச் சென்றான். சமாரியாவுக்கு வருகிறவரை அவர்களனைவரும் கண் மயக்கத்தில்தான் இருந்தனர். சமாரியாவுக்கு வந்தபின் எலிசா கர்த்தரை நோக்கி அவர்கள் பார்க்கும்படி கண்களைத் திறந்தருளும் என்று வேண்டினான். இப்பொழுதும் கர்த்தர் எலிசாவின் ஜெபத்தைக் கேட்டு அவர்களின் கண்களை திறக்கும்படி செய்தார். எதிரிகள் பார்வை பெற்றபோது சமாரியாவின் நடுவிலிருப்பதைப் பார்த்தனர். 

எலிசா ராஜாவுக்கு கொடுத்த கட்டளை:

2 இராஜாக்கள் 6 : 21 – 23 “இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப் போடலாமா என்று கேட்டான்.”

“அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக் கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்.”

“அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.”

சமாரியாவின் ராஜா அவர்களைப் பார்த்தவுடன் அவர்களை வெட்டிப் போடலாமா என்று எலிசாவிடம் கேட்டான். ஆனால் எலிசா ராஜாவைப் பார்த்து அவர்களை வெட்ட வேண்டாம் அதற்குப் பதில் அவர்களைப் புசித்துக் குடிக்க வைத்து அதன்பின் அவர்களை ஆண்டவனிடத்தில் அனுப்பிவிட ஆலோசனை கூறினான். 

நீதிமொழிகள் 25 : 21, 22 ல் “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரம் கொடு: அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு” 

என்று கூறியிருப்பது போல் எலிசா ராஜாவிடம் அவர்களுக்குப் புசித்துக் குடிக்க அப்பமும், தண்ணீரும் கொடுக்கக் கூறினான். அதன்படியே ராஜா எதிரிகளுக்குப் பெரிய விருந்து பண்ணி அவர்களனைவரையும் புசித்துக் குடிக்கச் செய்து அனுப்பினான். தேவனுடைய வல்லமையும், கிரியையும் அங்கே வெளிப்பட்டது. சீரியரின் தண்டுகள் அதன்பின் எருசலேமுக்கு வரவேயில்லை. 

இதில் எலிசா மூன்றுமுறை ஜெபம் செய்ததைப் பார்க்கிறோம். 6 : 8 – 12 ல் தெரியாததைத் தெரிந்து கொண்டான். 6 : 13 – 17 ல் பார்க்க முடியாததைப் பார்த்தான். 6 : 18 – 23 ல் நிறைவேற்ற முடியாததை நிறைவேற்றினான். யுத்த களத்திலிருந்தாலும் வெற்றியையும், தோல்வியையும் தருவது தேவன்தான். எனவே கண்டிப்பாகத் தேவனுடைய சமூகத்தில் அமர வேண்டும். நன்மைகள் தேவனுடைய சமூகத்திலிருந்துதான் வரும். இதனால்தான் மோசே யுத்த களத்துக்குச் செல்லாமல் தன்னுடைய இரண்டு கரத்தையும் தேவசமுகத்துக்கு நேராக நீட்டி ஜெபித்து வெற்றி பெற்றான்.

Related Posts