Menu Close

கேயாசிக்குக் கொடுத்த சாபம்

கேயாசியின் தவறான எண்ணம்:

2 இராஜாக்கள் 5 : 20 “தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,”

நாகமான் தன்னுடைய குஷ்டரோக வியாதி குணமானவுடன் தான் கொண்டு வந்த வெகுமதிகளை எலிசாவிடம் தன்னுடைய காணிக்கையாகக் கொடுத்தான். எலிசா நாகமான் கொடுத்த வெகுமதியை வாங்க மறுத்தான். நாகமான் எவ்வளவோ வற்புறுத்தியும் எலிசா வாங்கவில்லை. இது கேயாசிக்குப் பிடிக்கவில்லை. பழைய ஏற்பாட்டில் குஷ்டரோகம் சரியானால் அவன் செலுத்தும் காணிக்கை பாவநிவாரணப் பலியாக தேவனுக்குச் செலுத்தப்பட வேண்டுமென்று லேவியராகமம் 14 : 3 – 9 ல் பார்க்கிறோம். எலிசாவும், கேயாசியும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் கர்த்தருக்கென்று முழுநேர ஊழியம் செய்தவர்கள். எலியாவுக்கு எப்படி எலிசா இருந்தானோ அதேபோல் எலிசாவுக்கு கேயாசி இருந்தான். எலியாவின் வேலைக்காரனாக எலிசாவின் வாஞ்சையும் அதனால் அவர் பெற்றுக் கொண்ட மாபெரும் வரங்களையும் ஊழியத்தையும் 2 இராஜாக்கள் 2ம் அதிகாரம் முதல் காண்கிறோம். எலிசாவுக்கு வரங்களின் மேலிருந்த தாகத்தால் ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் எலியாவுக்கு அடிமையைப் போலவும், வேலைக்காரனைப் போலவும், சீஷனைப் போலவும் ஊழியம் செய்தான். அதனால்தான் 2 இராஜாக்கள் 3 : 11 ல் எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த எலிசா என்று எலிசாவைக் குறித்து வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 

ஆனால் எலிசாவின் வேலைக்காரனாக கேயாசியோ பேராசையுள்ள இருதயம் உள்ளவன். எலிசாவைப் போன்ற தாகம் கேயாசியிடமில்லை. எனவே அவன் உலகப்பிரகாரமான இலாபத்துக்காகத் தேவனுடைய கிருபை நிறைந்த செயலைக் கறைபடுத்தத் துணிந்தான். அதனால் நாகமானிடமும், எலிசாவிடமும் பொய் சொன்னான். தேவனுடைய நாமத்துக்கு அவமரியாதையை உண்டாக்கினான். பொருளாசையும், பொய்யும் அவன் அடைந்த தண்டனையும் இதற்கு நேரிடையாக இருந்தது. கேயாசியின் கண்கள் நாகமானின் பணத்துக்கு ஆசைப்பட்டது . அதுவரை தேவ மனுஷனான எலிசாவுக்குப் பின்னால் போனவன் இப்பொழுது பணத்துக்கு ஆசைப்பட்டு நாகமானின் பின்னே மூச்சிரைக்க ஓடினான். கர்த்தரின் ஜீவனைக் கொண்டு ஆணையிட்டு பிடிவாதமாய் ஓடி நாகமானை அடைந்தான். எதையாகிலும் அவனுடைய கையிலிருந்து வாங்க வேண்டுமென்று எண்ணுகிறான். ஆபகூக் தீர்க்கதரிசி ஆபகூக் 2 : 9 ல் “…பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!” என்கிறார். சாபத்தீட்டான பட்டணமாகிய எரிகோவிலிருந்து ஒன்றையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தேவகட்டளை. ஆனால் பொருளாசையால் ஆகான் அங்குள்ள சில பொருட்களை இச்சித்து எடுத்து மறைத்து வைத்தான். யூதாஸ்கோரியாத்து 30 வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டு இயேசுவையே காட்டிக் கொடுத்தான். அனனியாவும், சப்பீராளும் தன்னுடைய நிலத்தை விற்று ஒரு பகுதியை அப்போஸ்தலனாகிய பேதுருவுக்குத் தெரியாமல் ஒழித்து வைத்து, பொய் சொன்னதினால் அந்த இடத்திலேயே கணவனும், மனைவியும் மரித்ததை அப்போஸ்தலர் 5 : 1 – 10 ல் பார்க்கிறோம். எலிசா அவன் கையில் வாங்காமல் விட்டுவிட்டார் என்கிறான். எதற்கு விட்டார் என்று அவனுக்குத் தெரியாது. தான்தான் ஞானமுள்ளவனாக, பொறுப்புள்ளவனாக இருப்பதாக நினைக்கிறான். கர்த்தரால் நியமிக்கப்பட்ட தலைவர்களை ஒருநாளும் மீறக்கூடாது. ஏனெனில் கர்த்தர் தலைவனாக தான் ஒருவனை ஆக்குவதற்கு முன்னமே அவனை ஞானத்தினால் நிரப்பி, அபிஷேகம் பண்ணித்தான் தலைவனாக நியமிப்பார். 

நாகமான் கேயாசிக்குக் கொடுத்தது:

2 இராஜாக்கள் 5 : 21 – 23 “நாகமானைப் பின் தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டு போக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.”

“அதற்கு அவன்: சுகசெய்திதான்; தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான்.”

“அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு கைகளில் இரண்டு மாற்று வஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்து போக, தன் வேலைக்காரரான இரண்டு பேர்மேல் வைத்தான்.”

கேயாசி தன்னிடம் ஓடிவருகிறதைக் கேயாசி கண்டான். உடனே தான் மரியாதையாக இரதத்திலிருந்து குதித்து சுக செய்தியா என்று அவனிடம் கேட்டான். அதற்கு கேயாசி தான் சுக செய்தியைத்தான் கொண்டு வந்திரு க்கிறேன் என்கிறான். எப்பிராயீம் மலைதேசத்திலுள்ள தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர்கள் இப்பொழுது தான் தங்களிடத்தில் வந்தார்க ளென்றும், அவர்களுக்காக இரண்டு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்று வஸ்திரங்களையும் வாங்கி வரச் சொல்லி தன்னுடைய எஜமான் அனுப்பிய தாகப் பொய் சொல்லுகிறான். எலிசாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்து கிறான். நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகளில் ஒரு கட்டளை “பொய் சொல்லாதிருப்பாயாக” என்பதாகும் நாகமான் நேரில் எலிசா வேண்டாமென்று கூறிவிட்டு பின்னால் இவனை அனுப்பியிருக்கிறான் என்றெண்ணியிருப்பான் நாகமான் கேட்டவுடன் தாமதம் செய்யாமல் , தயவுசெய்து வாங்கிக் கொள்ளும் என்று கூறி இரண்டு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான். அதுமட்டுமல்லாமல் அதைச் சுமந்து கொண்டுபோக தன்னுடைய இரண்டு வேலைக்காரர்களையும் அனுப்பி வைத்தான். நாகமான் பெற்ற சுகமானது எவ்வளவு கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது. கேயாசி கர்த்தருக்குள் இருந்தும் கர்த்தருக்குப் பிடித்தமில்லாத காரியங்களை அவன் மனதில் வைத்துக் கொண்டிருந்தான். இதைத்தான் பவுல்,

1 தீமோத்தேயு 6 : 10ல் “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” என்கிறார். 

எலிசா கொடுத்த சாபம்:

2 இராஜாக்கள் 5 : 24 – 26 “அவன் மேட்டண்டைக்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள்.”

“பின்பு அவன் உள்ளே போய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.”

“அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?”

“ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப் போனான்”.

கேயாசியும், நாகமானின் வேலைக்காரர்கள் இருவரும் மேட்டண்டை வந்தபோது வேலைக்காரர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை வாங்கி, வீட்டிலே அவைகளை வைத்து விட்டு, அவர்களை அனுப்பி விட்டான். எலிசாவுக்கு எதுவும் தெரியக்கூடாதென்பதற்காக அவைகளை ஒழித்து வைத்து விட்டுத் தனியாக எலிசாவிடம் சென்றான். எப்பொழுதும் போல தன்னுடைய வேலைகளில் கேயாசி ஈடுபடுகிறான். எலிசா கேயாசியைப் பார்த்து “எங்கேயிருந்து வருகிறாய்?” என்று கேட்டான். அதற்கு கேயாசி “உமது அடியானாகிய தான் எங்கும் போகவில்லையென்று” இரண்டாவது பொய் சொல்கிறான். எலிசா கேயாசியிடம் நாகமான் தன்னுடைய இரத்தத்திலிருந்து இறங்கி வரும்போது உன்னுடைய மனம் அவனோடு கூட செல்லவில்லையா என்று கேட்கிறான். மேலும் அவனிடம் பணத்தையும், ஒலிவத் தோப்புக ளையும், வஸ்திரங்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஆடுமாடுகளை யும் , வேலைக்காரிகளையும், வேலைக்காரரையும் வாங்குவது அவனிடமோ அப்பொழுதோ என்று கேட்டார். எனினும் அவன் ஆசைக்கு அடிமைப்பட்டான். அதனால் எலிசாவால் கண்டிக்கப்பட்டான். நாகமானின் குஷ்டரோகம் அந்த தீர்க்கதரிசியின் சீஷனான கேயாசியைப் பிடித்தது. கேயாசி உலகத்துக்குப் பின்னால் போனதால் பரிசுத்தத்தை இழந்து பாவத்தில் வீழ்ந்து அனுதினமும் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கிற, உறவாடுகிற, பேசிக் கொண்டி ருக்கிற பாக்கியத்தை இழந்தான். எலிசாவோடிருக்கிற பாக்கியத்தை இழந் தான். எலிசாவை விட்டுப் பிரிந்து போனான். கேயாசியின் பொருளாசையால் குஷ்டரோகம் வந்ததென்று பார்க்கிறோம். அவனை மட்டுமல்லாமல் அவனுடைய சந்ததியாருக்கும் அந்த சாபம் பிடித்தது. மிரியாம் மோசேக்கு விரோதமாகப் பேசினத்தினால் குஷ்டரோகியானாள் என்றறிகிறோம். 

சட்டங்கள் நம்மைத் திருத்துவதில்லை. மாறாக நம்மைக் கட்டுப்படுத்தி நடத்துகின்றன. ஆனால் ஆண்டவரோ நம்மையும் திருத்தி நாம் நடக்க வேண்டிய வழிகளையும் காட்டி அந்த நடத்தைக்குக் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறார். விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவரும் அவரே. தன் உள்ளத்தையும், தனக்குள்ளதையும் எடுத்து இயேசுவுக்குப் பின்செல்லுகி றவன் அவருடைய பிள்ளையாகிறான். தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்து அவருக்குப் பின் சொல்லுகிறவன் அவரது சீடனாகிறான் கலப்பையின் மேல் கைவைத்துப் பின்னிட்டுப் பாராமல் அவருக்குப் பின் சொல்லுகிறவன் அவருக்கு ஊழியக்காரனாகிறான். முடிவுபரியந்தம் விசுவாசத்தில் நிலைத்திருந்து விசுவாசத்தைக் காத்துக் கொண்டவன் பரலோக உறுப்பினராகிறான். கேயாசியை போலில்லாமல் எளிய விசுவாசத்தோடு இயேசுவைப் பின்பற்றி வந்தால் நித்திய ஆக்கினைக்குத் தப்புவித்து நித்திய ராஜ்ஜியத்தில் முடிசூடப்படும் பாக்கியத்தை நாம் பெறுவோம். ஆமென்.

Related Posts