நாகமான்:
2 இராஜாக்கள் 5 : 1 – 19 “நாகமோன் சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.”
“சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு
சிறு பெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.”
நாகமான் சீரிய ராஜாவின் வலிமை மிக்க பராக்கிரமசாலியான படைத் தலைவன். இந்த தேசம் பாலஸ்தீனத்திற்கு அடுத்ததாக உள்ள தேசம். நாகமான் தலைமையில் சீரியா பலநாடுகளை வென்றது. அதனால் அவனுக்கு அந்த நாட்டில் நல்ல மரியாதை இருந்தது. நாட்டு மக்களும் படை வீரர்களும் அவனிடம் மிகுந்த அன்பாயிருந்தனர். தாவீது ராஜாவுடன் இவர்கள் யுத்தம் செய்து தோல்வியடைந்தனர். அப்பொழுது சீரியா தாவீதின் வசமானது. பின் ரெகொபெயாமின் காலத்தில் அது தனி ராஜ்ஜியமாயிற்று. பின்பு ரோம சாம்ராஜ்ஜியத்திற்கு கீழ்ப்பட்டிருந்தது. இவன் மூலமாகத்தான் சீரியா தேசத்துக்கு விடுதலையும், இரட்சிப்பும் கிடைத்தது. கர்த்தர் கிறிஸ்தவர்கள் அல்லாத பார்வோன், அலெக்ஸ்சாண்டர், நேபுகாத்நேச்சார், கோரேஸ் போன்றவர்களையும் எடுத்துக் பயன்படுத்தியதை வேதத்தில் பல இடங்களில் பார்க்கிறோம். அதேபோல் நாகமானையும் தேவன் சீரிய தேசத்துக்காகப் பயன்படுத்தினார். மனிதர்கள் எத்தனை பெரிய பதவியிலிருந்தாலும், பெரிய வர்களாக இருந்தாலும் தேவனுடைய பார்வையில் பாவிகளே (ரோமர் 3 : 23). அந்நிய தேசத்தில் குஷ்டரோகிகளைத் தங்கள் தேசத்தை விட்டுத் தள்ளி வைக்கவில்லை. ஆனால் கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு இப்படிப்பட்ட வர்களை ஊருக்குப் புறம்பே தள்ளி வைக்கும்படிக் கட்டளை கொடுத்திரு ந்தார். குஷ்டரோகம் பரவாமலிருக்க அவ்வாறு கூறினார்.
அவன் மிகுந்த செல்வந்தனாகவும், வீரனாகவும் இருந்த பின்னும் நாகமானால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. அதற்குக் காரணம் குணமாக்க முடியாத குஷ்டரோக வியாதியால் பாதிக்கப் பட்டிருந்தான். அவனுடைய பணத்தாலோ, பதவியாலோ, அவன் வணங்கிக் கொண்டிருக்கிற தெய்வத் தாலோ அந்த வியாதியைக் குணமாக்க முடியாதவனாக, வெளியே சொல்ல முடியாதவனாக ஆழ்ந்த துயரத்திலிருந்தான். அதனால் அவனுடைய வேலை க்காரர்கள், உறவினர்கள் அனைவரும் வருத்தப்பட்டனர். வேதத்தில் குஷ்ட ரோகமானது பாவத்திற்கு அடையாளமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது மனிதனால் குணமாக்க முடியாத வியாதி. தேவன் ஒருவரே பாவத்தை நீக்கி பாவிகளை இரட்சிக்க முடியும். நாகமான் தன்னுடைய வியாதியை மூடி மறைக்க முற்பட்டான். அது அவனால் முடியவில்லை. இவனுக்கு ராஜ்ஜியங் களோடுகூட போரிட்டு ஜெயிக்கக் கூடிய வல்லமையிருந்தது. ஆனால் வியாதியை ஜெயிக்க அதிகாரம் இல்லை. அத்தனைபேரும் நாகமான் சொன்னால் கீழ்ப்படிவர். ஆனால் அவன் சொன்னால் வியாதி கீழ்ப்படியாது.. இவன் இஸ்ரவேல் தேசத்திலிருந்து அதிகமான ஜனங்களை சிறைபிடித்துச் சென்றான். அவர்களில் ஒருத்தியை நாகமான் தன்னுடைய வீட்டில் தன்னுடைய மனைவிக்குப் பணிவிடைக்காரியாக வைத்துக் கொண்டான்.
நாகமானின் அடிமைப் பெண்:
2 இராஜாக்கள் 5 : 3, 4 “அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.”
“அப்பொழுது அவன் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தான். அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது போகலாம், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிருபம் தருகிறேன் என்றான்; அப்படியே அவன் தன் கையிலே பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்னையும், பத்து மாற்றுவஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய்,”
நாகமானின் வீட்டில் வேலை பார்த்த இஸ்ரவேல் சிறுமி தன்னுடைய நாச்சியார் தன் கணவனுக்காகப் படும் துயரத்தைப் பார்த்து துணிவுடன் தன்னுடைய எஜமானியிடம் சென்று எஜமான் சமாரியாவிலிருக்கிற தீர்க்க தரிசியிடம் சென்றால் நல்லது. அவ்வாறு எஜமான் சென்றால் குஷ்டரோகம் குணமாகும் என்றாள். அவள் தங்களையெல்லாம் அடிமைப் படுத்துகிற வன்தானே என்றெண்ணவில்லை. அந்த நிலைமையிலிருந்த போதும் அந்த அடிமைப் பெண் நற்செய்திப் பணியையும், ஆத்தும ஆதாய பணியையும் செய்ததைப் பார்க்கிறோம். அவள் சிறியவளாக இருந்தாலும் சிறந்தவளாக இருந்திருக்கிறாள். எஸ்தரைப் போல, சாராளைப் போல, ரூத்தைப்போல சிறந்தவள். அவள் சிறை பிடிக்கப்பட்டு பாடுகள் அனுமதித்தது நன்மைக் கேதுவாக மாறியது. அவளுடைய எண்ணம் தன்னுடைய எஜமான் மரிக்கக் கூடாது. ஜீவனுள்ள தேவனை அறிந்து கொள்ள வேண்டுமென்பதுதான். அந்த வீட்டில் அடிமையாகக் கொண்டு வந்ததினால் எஜமாட்டியும் அடிமைப் பெண் கூறியதை அசட்டை பண்ணாமல் நம்பிக்கையுடன் அதைத் தன் கணவனுக்குத் தெரிவித்தாள். அவள் தீர்க்கதரிசியின் பெயரைக்கூடத் தெரிவிக்கவில்லை. நாகமானுக்கு அதைக் கேட்டவுடன் ஒரே ஆச்சரியம். தான் அவர்களுடைய நாட்டை அழித்த எதிரியென்று தெரிந்தும் தனக்கு உதவி செய்கிற மனது அவளிடம் இருப்பதை நினைத்து மிகவும் ஆச்சரியப்பட்டான். நாகமானும் இந்தப் பெண் கூறுவது எதிரியின் நாடல்லவா என்றெண்ணாமல் போவதற்குத் தயாரானான். இதிலிருந்து அடிமைப்பெண்ணின் சொல்லையும் கேட்கும் நற்குணமுடையவன் என்றறிகிறோம். ஒரு தேசத்திலிருந்து மற்றோரு தேசத்துக்குப் போக வேண்டுமானால் அந்த தேசத்து ராஜாவிடம் அனுமதி கேட்க வேண்டும். எதிரி நாடாதலால் தனக்கு உதவுவார்களா என்ற பயத் துடனே அந்தச் செய்தியை தன்னுடைய ராஜாவான இரண்டாம் பெனாதத் ராஜாவுக்குத் தெரிவித்தான். உடனே ராஜாவும் அவன் போவதற்கு அனுமதி கொடுத்தது மட்டுமல்லாமல், இஸ்ரவேல் ராஜாவுக்கு நிருபத்தையும் எழுதிக் கொடுத்தான். நாகமான் ராஜா கொடுத்த நிருபத்துடன் தீர்க்கதரிசிக்குக் கொடுப் பதற்கு பத்து தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறை பொன்னையும், பத்து மாற்று வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு தன்னு டைய பரிவாரங்களுடன் சென்றான். யாராயிருந்தாலும் நல்ல ஆலோசனை களைச் சொல்வார்களானால் அதைக் கேட்க வேண்டும். யோசேப்பு சிறைச் சாலையில் இருக்கும் போது பார்வோன் சொப்பனம் கண்டான். அதன் அர்த்தத் தைச் சொல்வதற்கு பானபாத்திரக்காரனின் ஆலோசனையின் பேரில் யோசேப்பை அழைத்துக் கொண்டு வந்தான். யோசேப்பு அதன் அர்த்தத்தைக் கூறியதால் பார்வோன் தனக்கு அடுத்தபடியாக யோசேப்பை நியமித்தான். எகிப்திலுள்ள இஸ்ரவேலரை மீட்கக் கர்த்தர் மோசேயைப் போகச் சொன்ன போது அவன் சாக்குப் போக்குச் சொன்னான். தான் வாக்குவல்லவன் அல்ல என்றும், உமது நாமம் என்னவென்று கேட்பார்கள் என்றெல்லாம் கூறுகிறான் ஆண்டவர் நீதான் போக வேண்டுமென்றதால் போகிறான். அங்கு அற்புதங் களை நடத்தி இஸ்ரவேலரை அழைத்து வந்தான். மனமில்லாமல் கீழ்ப்படிந் தாலும் ஆசீர்வாதம் உண்டென்று நாம் இதிலிருந்து அறிகிறோம். கர்த்தராகிய இயேசு என்ன சொல்கிறாரோ அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். இதைத்தான் இயேசுவின் தாயாகிய மரியாள் “அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்” என்கிறார்.
இஸ்ரவேலின் ராஜா செய்த செயல்:
2 இராஜாக்கள் 5 : 5, 6 “இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கி விட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது.”
“இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கி விடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்கச் சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.”
இரண்டு தேசங்களுக்கிடையேயுள்ள தூரம் மிகவும் அதிகமானதால் அநேக நாள் பிரயாணப்பட்டு நாகமான் இஸ்ரவேல் ராஜாவின் அரண்மனையை அடைந்தான். இஸ்ரவேலில் குஷ்டரோகிகள் ஊருக்கு வெளியேதானிருக்க வேண்டும். ஆனால் இவனோ அரண்மனைக்கே சென்று விட்டான். பெரிய தேசத்து படைத்தளபதி தன்னைப் பார்க்க வந்திருப்பதையறிந்த இஸ்ரவேல் ராஜா ஏதோ தன்னிடம் உதவிகேட்டுத்தான் வந்திருப்பான் என்று சந்தோஷம் அடைந்திருப்பான். அங்கு சென்று ராஜாவினிடத்தில் தன்னுடைய நாட்டு ராஜா கொடுத்த நிருபத்தைக் கொடுத்தான். அதில் சீரிய ராஜா என்ன எழுதியிருந் தானென்றால் “என்னுடைய ஊழியக்காரனான நாகமானின் குஷ்டரோகத்தை நீக்கிவிட உன்னிடத்தில் அனுப்பியிருக்கிறேன்” என்று எழுதியிருந்தது. நாகமான் தன்னுடைய ராஜாவிடம் இஸ்ரவேலிலுள்ள தீர்க்கதரிசிக்குக் கடிதம் எழுதச் சொல்லியிருப்பான், ஆனால் ராஜா இஸ்ரவேல் ராஜாவுக்கே எழுதியிருக்கிறான். இஸ்ரவேலின் ராஜா அதைப் பார்த்தவுடன் தான் கடவுளா தன்னால் கொல்லவும், உயிர்ப்பிக்கவும் முடியுமா? தன்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்றும், போருக்கான வாய்ப்பைத் தேடுகிறான் என்றும் பயத்துடன் தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்தான். .குணமாகவில்லை யென்றால் தன்னைப் பழிவாங்குவானே என்றெண்ணியிருக்கலாம். அடிமை யான சிறுபெண்ணுக்கிருந்த விசுவாசம் இஸ்ரவேலின் ராஜாவுக்கில்லை. சீரிய ராஜா அந்தக் கடிதத்தை தீர்க்கதரிசியிடம் கொடுக்கச் சொல்லி எழுதியிருக்க வேண்டும்.
எலிசா ராஜாவிடமும், நாகமானிடமும் கூறியது:
2 இராஜாக்கள்: 5 : 7 – 10 “இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான்.”
“அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.”
“அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.
இஸ்ரவேலின் ராஜா வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்ட செய்தி நாட்டிலுள்ள எல்லோருக்கும் பரவிற்று. அந்தச் செய்தியைத் தோத்தானில் இருந்த எலிசா அறிந்தான். ராஜாவுக்கு ஆளனுப்பி வஸ்திரங்களை எதற்காகக் கிழிக்க வேண்டும். அவனைத் தன்னிடத்தில் அனுப்பபச் சொல்லி இஸ்ரவேலில் தீர்க்கதரிசி உண்டென்பதை அவன் அறிந்து கொள்ளட்டும் என்றான். எலிசாவின் வாயிலிருந்து நாகமானைக் குணமாக்க முயற்சி செய்கிறேன் என்ற வார்த்தை அவனுக்குள்ளிருந்து வரவில்லை. தான் சொல்லிக் குணமாகவில்லையென்றால் என்ன செய்வது என்ற தயக்கமும் எலிசாவிடம் எள்ளளவுமில்லை. ராஜாவால் முடியாதது தேவனால் முடியுமென்பதை எலிசா அறிந்திருந்தான். எலிசாவுக்குத் தான் நேசிக்கிற தேவன் தன்னைக் கைவிடமாட்டாரென்று அவனுக்குத் தெரியும். இதை எலிசா தன்னுடைய சுய நலத்துக்காகச் செய்யவில்லை. ராஜா எலிசா சொன்னபடி நாகமானை எலிசாவிடம் அனுப்பினான். எலிசாவின் வாசலில் நாகமான் தன்னுடைய குதிரைகளோடும், இரத்தங்களோடும் தான் கொண்டு வந்த பொருட்களோடும் வந்து நின்றான்.
எலிசா அவனை எதிர்கொண்டு வரவேற்கவோ, பார்க்கவோ இல்லை. ஏனெனில் அவனிடமுள்ள அகந்தை எலிசாவுக்குத் தெரிந்தது. கீழ்ப்படிதலையும், தாழ்மையையும் செயல்படுத்திக் காட்டும்படியாக, எலிசா ஆளனுப்பி நாகமானைக் கலங்கின தண்ணீர் ஓடும் யோர்தான் நதியில் சென்று 7 தரம் முழுகி ஸ்நானம் பண்ணினால் குஷ்டரோகம் நீங்கி சுகமாவான் என்று சொல்லியனுப்பினான். நாகமான் பயங்கரமான பராக்கிரமசாலியான படைத்தளபதியென்றும், மேலும் குணமாக்க வருகிறவன் இரதங்களோடும், குதிரைகளோடும் வந்திருக்கிறானென்றும் எலிசாவுக்குத் தெரியும் இவைகள் ஒன்றுக்கும் எலிசா சிறிதளவுகூட பயப்படவில்லை. அப்படிச் செய்வதன் மூலம் நாகமான் தனக்குச் சுகம் கிடைத்ததற்குக் காரணம் என்று எந்த மனிதனையும், இயற்கை சக்திகளையும் சுட்டிக் காட்ட முடியாது. யோர்தான் நதியினால் குஷ்டரோகத்தைக் குணமாக்க முடியாதென்று இஸ்ரவேலருக்கும் சீரிய மக்களுக்கும் தெரியும். எலிசா வெளியே வந்து தன்னை வரவேற்பான் என்று நினைத்த நாகமான் ஏமாந்தான்.
நாகமானின் கோபம்:
2 இராஜாக்கள் 5 : 11, 12 “அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.”
“நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப் போனான்.”
எலிசா வெளியே வந்து வரவேற்காததால் நாகமான் கோபமடைந்தான். எலிசா அழுக்கான யோர்தான் நதியில் முழ்கத் சொன்னதைக் கேட்ட நாகமான் கடுங்கோமமடைந்தான். ஏனெனில் அவன் எலிசா தன் தேவனாகிய கர்த்தரைத் தொழுது கொண்டு அவனுடைய கையினால் வியாதிப்பட்டிருக்கும் இடத்தைத் தொட்டு குஷ்டரோகத்தை நீக்குவான் என்றெண்ணியிருந்தான் ஆனால் எலிசாவோ அவ்வாறு எதுவும் செய்யவோ, அவனை வெளியே வந்து பார்க்கவோ இல்லை. சீரியா தேசத்தில் ஓடும் நதிகளான ஆப்னாவும், பர்பாரும் இஸ்ரவேலில் ஓடும் நதிகளின் தண்ணீரை விட சுத்தமான தண்ணீர். எனவேதான் நாகமானுக்குக் கோபம் வந்தது. ஏனெனில் கர்த்தர் ஏசாயா 55 : 8 ல் “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.” நாகமான் தனக்கு ஏற்பட்ட சுகம் தேவனுடைய கிருபையினால், தீர்க்கதரிசியின் மூலமாக அவனுக்கு கூறப்பட்ட தேவ வார்த்தையின் வல்லமையினால் அற்புதமாகக் கிடைத்ததென்று அறிய வேண்டும் என்று எலிசா எண்ணினான். . நாகமான் பெருமையினால் திரும்பிப் போனான்.
நீதிமொழிகள் 14 : 12 மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.“
அவன் மோதுகிறது கர்த்தருடன் என்பதும், போகிற வழி மரண வழியென்றும் அவனுக்குத் தெரியவில்லை.
நாகமான் பெற்ற அற்புதம்:
2 இராஜாக்கள் 5 : 13, 14 “அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.”
“அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.”
அவனோடிருந்த படைவீரர்களில் சில நல்லவர்களும் இருந்ததால் அவனிடம் அன்பாய்ப் பேசி அவனுடைய மனதை மாற்றினர். அவர்கள் நாகமானை நோக்கித் தகப்பனே என்றழைத்ததைப் பார்க்கிறோம். அவர்கள் எலிசாவிடம் அந்தத் தீர்க்கதரிசி உம்மிடம் ஏதாவது ஒரு பெரிய காரியத்தைச் செய்யச் சொல்லியிருந்தால் உடனே செய்திருப்பீர் அல்லவா, அவர் எளிதான காரியமாக ஏழுதடைவை யோர்தானில் ஸ்நானம் பண்ணத்தானே கூறுகிறார், நீர் அதை செய்து பார்க்கலாமே என்றான். நாகமான் அவன் சொன்னதைக் கேட்டு யோர்தானில் எழுதரம் முழுகினான். நாகமானின் நல்லகுணம் தன்னோடிருக்கிறவர்கள் சொல்வதைக் கேட்டுப் பணிந்து போகும் ஆவியை உடையவனாயிருந்தான். அவனுக்குப் பெருமை இருந்ததைப்போல தாழ்மையும் இருந்தது. விசுவாசத்தோடு தண்ணீருக்குள் சென்றான். முழுமையான கீழ்ப்படிதலோடு ஏழுதரம் முழுகினான். ஒவ்வொரு முறையும் அவன் முழுகி வெளியே வரும்போது எல்லோரும் அற்புதத்தை எதிர்பார்த்தனர். ஆனால் 1, 2, 3, 4, 5, 6 தடவை முழுகி வெளியே வரும் போதும் எந்த அற்புதமும் நடக்கவில்லை. ஏழாவது முறை முழுகி வெளியே வரும்போதுதான் எலிசா கூறினபடி நாகமானின் மாம்சம் சிறுகுழந்தையின் மாம்சத்தைப் போலானான். அவனிடமிருந்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். அவனோடிருந்தவர்கள் நாகமானிடமுள்ள வெளிப்புறமாக மகிழ்ச்சியை மட்டும் பார்த்தனர். அவனுக்குள் ஏற்பட்ட உள்ளான மாற்றத்தை அப்பொழுது அவர்கள் அறியவில்லை.
நாகமான் எலிசாவுக்கு முன் கூறிய அறிக்கை:
2 இராஜாக்கள் 5 : 15, 16 “அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.”
“அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக
அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்க வேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.”
நாகமான் தேவனுடைய படைபலம், மனிதர்களின் படைபலத்தைவிட அதிகமென்பதை அறிந்து கொண்டான். கர்த்தர் சூழ்நிலைகளை மாற்றக்கூடியவர். மனிதர்களை அவர்களின் தந்திரத்தினால் பிடிக்கிறவர். நாகமான் தான் குணமாக்க முடியாத பெரிய நோயிலிருந்து கர்த்தர் குணமாக்கியதால் மிகவும் சந்தோஷத்துடன் எலிசாவின் வீட்டிற்குத் தன் படைபலத்துடன் அவனைப் பார்க்கச் சென்றான். ஆனால் இந்தமுறை எலிசா வெளியே வந்து அவனைப் பார்த்தான். எலிசாவுக்கு முன்பாக நாகமான் தன்னுடைய வாயால் “இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை” என்று அறிக்கையிட்டான். அதன்பின் தான் கொண்டுவந்த காணிக்கையை வாங்கச் சொல்லி எலிசாவை வற்புறுத்தினான். நாகமான் கொடுத்த வெகுமதியை ஏன் எலிசா வாங்க மறுக்கிறார் என்றால் தேவனுடைய கிருபையை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. மத்தேயு 10 : 8 என்ன கூறுகிறது என்றால் “…. இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்பதுதான். தேவனுடைய கிருபை, இரட்சிப்பு, அவர் அருளும் சுகம் யாவும் இலவசமானவை. அதனால்தான் எலிசா அந்த வெகுமதியைத் துச்சமாக எண்ணினார். எலிசா பணத்துக்காகவோ, புகழுக்காகவோ ஊழியம் செய்யவில்லை. கர்த்தருக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் ஊழியம் செய்தார். தேவ ஊழியர் பணம் வாங்கக் கூடாது என்பதல்ல. பணம், புகழ் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஊழியம் செய்யக் கூடாது. கர்த்தர் மீது உள்ள அன்பினால் செயல்படுவதே உண்மையான ஊழியம் ஆகும். எலிசாவின் ஒரே நோக்கம் இஸ்ரவேலில் தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்பதுதான். ஆசீர்வாதத்தைப் பெற்றபின் நாகமானைப் போல காணிக்கை செலுத்த வேண்டுமென்ற எண்ணம் நமக்கு வரவேண்டும் (தானியேல் 3 : 29).
எலிசா எடுத்த தீர்மானம்:
2இராஜாக்கள் 5 : 17 – 19 “அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.”
“ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணிய வேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்.”
“அதற்கு அவன்: சமாதானத்தோடேபோ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,”
நாகமான் எலிசா காணிக்கையை வாங்க மறுத்தபின் அங்குள்ள மண்ணில் இரண்டு பொதி தான் தன்னுடைய நாட்டிற்கு எடுத்துப்போக அனுமதி கேட்டான். ஏனென்றால் நாகமானுக்கு அவனுடைய தேசத்தில் அவன் வணங்கின தெய்வங்கள் ஒன்றும் உதவி செய்யவில்லை. எனவே அந்த தெய்வங்களை இனி வணங்கக் கூடாதென்று முடிவெடுத்தான். நாகமான் கர்த்தரை மட்டும் பணிந்து கொள்ள உறுதி எடுத்துக் கொண்டான். மேலும் தகனபலி இனி கர்த்தருக்குத்தான் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து அதற்குப் பலிபீடம் கட்ட மண் கேட்டான். மேலும் அவன் இன்னுமொரு சந்தேகத்தை எலிசாவிடம் கேட்டான். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் தான் ராஜாவோடு ரிம்மோன் கோவிலுக்குள் செல்ல வேண்டியதிருக்கும். ராஜாவுக்கு கைலாகு கொடுத்து பணிய வேண்டியதாகும் . அதைத் தேவன் மன்னிப்பாரா? அதற்கு எலிசா ‘சமாதானத்தோடு போ” என்றான். எலிசா நாகமானைப் பார்த்து சமாதானத்தோடு போ என்கிறான். எலிசா அவனிடம் “சுகம் பெற்றுவிட்டாயே நீ மாறுவியா, ஞானஸ்நானம் எடுப்பியா” என்றெல்லாம் கேட்கவில்லை. யாராயிருந்தாலும் மன்னிக்க, சுகமளிக்க ஏற்றுக்கொள்ள தேவன் சித்தமானவர் என்று அவனுக்குத் தெரியும் இயேசு பெரும்பாடுள்ள ஸ்திரீயைப் பார்த்து “சமாதானத்தோடே போ” என்றார். ஒரு பாவியான ஸ்திரீ இயேசுவின் பாதத்தில் பரிமளத்தைலம் பூசி கண்ணீரால் அவருடைய பாதத்தைத் துடைத்தாள். அவளைப் பார்த்தும் இயேசு “சமாதானத்தோடே போ” என்றார். ஒரு மனிதனுக்கு நிம்மதியில்லாமல், சமாதானம் இல்லாமல் இருக்கும்போது சமாதானத்தோடு போ என்ற வார்த்தை தேவனிடமிருந்து வந்ததினால் அவன் மிகுந்த சமாதானத்துடன் சென்றான். நாகமான் தன்னுடைய ஊரில் கர்த்தருக்குப் பலிபீடம் கட்டி தொழுதான். நாகமானது பெருமை ஆசீர்வாதத்துக்குத் தடையாக இருந்ததைப் பார்த்தோம். நம்மையும் தேவன் இரட்சிக்கும்போது நம்மிடமுள்ள தேவன் வெறுக்கிற காரியங்களை எடுத்துக் போடுகிறார். மனிதனுடைய பெருமை தேவனுடைய திட்டங்களுக்கு எதிராகச் செயல்படும். எனவே நம்முடைய பெருமைகளை நம்மை விட்டே அகற்றுவோம்.
நாகமான் என்ற அந்நியன் அற்புதமாகக் குஷ்டரோகத்திலிருந்து சுகம் பெற்று உண்மையான தேவனை அறிந்து, அவரிடமாக மனம் திரும்பினான். என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம். அதே வேளையில் இன்னும் அநேக குஷ்டரோகிகள் சொஸ்தமடையாமல் இருந்தார்கள் என்று இயேசுவும் நாகமானைப் பற்றிக் குறிப்பிட்டார். (லூக்கா 4 : 27). இதிலிருந்து தேவனுடைய மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய வார்த்தையைக் கேளாமலும் இருக்கும் போது கர்த்தர் அவர்களிடமிருந்து தமது இராஜ்ஜியத்தை எடுத்து விட்டு மற்றவர்களை எழுப்பி அவர்கள் தேவனுடைய இரட்சிப்பை அனுபவிக்கவும், நீதியையும், அவருடைய வல்லமையையும் அறிந்து கொள்ளவும் செய்வார் என்பதை வலியுறுத்தினார் ராஜாவால் முடியாத பல உண்டு. தேவனால் எல்லாம் கூடும். தேவன் சொல்பவை எளிமையானவையாகத் தோன்றலாம். கீழ்ப்படிதல் முக்கியம். தேவனது நினைவுகளும், யோசனைகளும் வித்தியாசமானவை. நான் நினைத்தபடிதான் தேவன் செயல்பட வேண்டுமென்று நினைக்கக் கூடாது. ஆமென்.