எலிசாவுக்குக் கொண்டுவந்த காணிக்கை:
2 இராஜாக்கள் 4 : 42 “பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான்.”
ஐசுவரியவான்களுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றிலும் மாறாக தீர்க்கதரிசிகளின் புத்திரர் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினர். அவர்கள் உண்மையான ஊழியம் செய்து சுய வெறுப்புடையவர்களாக இருந்தார்கள் (2 கொரிந்தியர் 4 : 7 – 12, 6 : 4 – 10). ரெகெபெயாம் லேவியர்க ளையும், ஆசாரியர்களையும் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து விரட்டி விட்டான் பாகால் சலீஷாவிலிருந்து வந்த ஒரு மனிதன் தன்னுடைய காணிக்கைகளை அக்கிரமக் கறையுள்ள ஆசாரியர்களுக்கும், லேவியர்க ளுக்கும் கொடுக்க மறுத்து விட்டான் (1 இராஜாக்கள் 12 : 28 – 31). ஆனால் அதற்குப் பதிலாக அவன் ஒரு தேவபக்தியுள்ள மோசேயின் கற்பனைக்கு கீழ்ப்படிகிற மனிதானாக இருந்தபடியால் தன்னுடைய முதற்பலனைக் காணிக்கையாக வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும், தாள்கதிர்க ளையும் தேவனுடைய உண்மையான ஊழியக்காரனாகிய எலிசா தீர்க்கதரிசி க்குக் கொண்டு வந்தான். இதை எசேக்கியேல் 44 : 30ல் எல்லா முதற்பலனும், முதற்கனியும் ஆசாரியர்களுக்குரியது என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். 1 சாமுவேல் 9 : 5ல் சவுல் கழுதையைத் தேடிப்போனபோது அவன் சலீஷா நாட்டிற்குச் சென்றதைப் பார்க்கிறோம்.
அன்னாள் தன்னுடைய முதற் பிள்ளையான சாமுவேலைக் கர்த்தருக்கு கொடுத்தாள். ஆபிரகாமிடம் தேவன் அவனுடைய முதற்பலனான ஈசாக்கை தனக்குத் தகனபலியாகக் கொடுக்கக் கட்டளையிட்டார். அவனும் அதைக் கொடுத்தான். எலியா சாறிபாத் விதவையிடம் முதலில் ஒரு அடையைப் பின்னித் தனக்குத் தரும்படி கூறினான். அவள் எலியா கூறியபடி கொடுத்து 3 வருடம் 6 மாதம் பஞ்சகாலம் முடிகிறவரை அவளுடைய வீட்டில் மாவு குறையவோ எண்ணெய் குறையவோ இல்லை. கர்த்தர் அதைத் திரும்பக் கொடுத்தார். முதற்கனியும், முதற் குழந்தையும் ஆண்டவருக்குரியது. எலிசா தன்னோடு இருந்த நூறு பேர்களுக்கு சாப்பிடக் கொடுக்கும் படி கூறினான். தனக்கு இலவசமாக வந்ததை எலிசா இலவசமாகக் கொடுக்கச் சொன்னதைப் பார்க்கிறோம். இதேபோல்தான் தேவனிடமிருந்து இலவசமாக நாம் பெற்ற இரட்சிப்பை நாம் மற்றவர்களிடம் அதைச் சொல்ல வேண்டும். மேய்ப்பர்கள் கூடத் தாங்கள் கண்ட இயேசுவை மற்றவர்களுக்குப் பிரசித்தப் படுத்தினார்கள்.
எலிசா செய்த அற்புதம்:
2 இராஜாக்கள் 4 : 43, 44 “அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.”
“அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.”
எலிசா இருப்பது அப்பங்களை தாள் கதிர்களையும் நுறு நபருக்கு கொடுக்கக் கூறினான். அதற்கு அந்தப் பணிவிடைக்காரன் அவைகளை நூறு பேருக்கு எவ்வாறு கொடுக்க முடியுமென்று கேட்டான். எலிசா அவனிடம் இதைக் கொடு அவர்கள் சாப்பிட்டபின் மீதியும் இருக்குமென்று கர்த்தர் சொல்கிறார் என்றான். எலிசா சொன்னபடி செய்தபோது கர்த்தர் கூறினபடி எல்லோரும் சாப்பிட்ட பின்னும் மீதியிருந்தது. குறைவான ஆகாரத்தைக் கொண்டு அநேகருக்கு வயிறார உணவு படைத்து மீதியும் இருக்கும்படி எலிசா செய்ததைப் பார்க்கிறோம். கர்த்தராகிய இயேசுவும் 5 அப்பம், 2 மீன்களைக் கொண்டது 5000 பேருக்கு வயிறார உணவு கொடுத்து 12 கூடை நிறைய மீதியும் இருக்கும் அற்புதத்தை இருமுறை செய்தார். இதேபோல் நம்மிடமும் இருப்பது கொஞ்சமாக இருந்தாலும் அதை போதுமானதாகக் கர்த்தர் தருவார்.
“தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை, மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள் மேல் நோக்கமாயிருக்கிறது” என்று சங்கீதம் 33 : 18, 19 ல் ஆவியானவர் தெரிவித்ததைப் போல தன்னுடைய பிள்ளைகளை பஞ்சத்தில் வாடவிடாமல் காப்பவர் கர்த்தர். “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையையும் குறைவுபடாது” என்று தாவீது தன்னுடைய வாயால் பாடின சங்கீதத்தை சங்கீதம் 34 : 10 ல் பார்க்கிறோம். . தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாகக் கீழ்ப்படியும் மக்களுக்கு தேவனுடைய பராமரிப்பு எப்போதும் உண்டு (மாற்கு 16 : 16). மேலும் குறைவான ஆகாரத்தைக் கொண்டு அநேகருக்கு வயிறார உணவு படைத்து மீதியும் இருக்கும்படியும் செய்தார். எசேக்கியா ராஜாவின் நாட்களில் ஆசாரியனாக இருந்த அசரியா சொல்கிறான்,
2நாளாகாமம் 31 : 10 “சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.”
யோவான் 14 : 12 ல் கூறியுள்ளது போல வியக்கத்தக்க மாபெரும் மாற்றத்தை நம்மிலும், வியக்கத்தக்க ஆச்சரியமான காரியங்களை நம்மைக் கொண்டும் உருவாக்கப் போகிறார். ஆமென்.