Menu Close

ஆகார்

ஆகார் பெயரின் அர்த்தம் அந்நிய ஸ்த்ரீ

ஆகாரைப் பற்றி: (ஆதியாகமம் 12 : 10 – 17)

ஆகார் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். ஆகார் என்ற வார்த்தைக்கு அலைகிறவள் என்று பொருள். ஆகாரின் தாய், தந்தையர் அவர்களுடைய வறுமையினால் எகிப்து மன்னனிடம் விற்றனர். எகிப்து மன்னனோ பார்வோனுக்கு அவளை அடிமையாக விற்றான். அப்பொழுது ஆபிரகாம் கானானில் இருந்தான். அங்கிருக்கும் போது கொடிய பஞ்சம் ஏற்பட்டதால் தேவனைக் கேட்காமல், தேவன் வாக்குறுதி கொடுத்த இடத்தை விட்டு, எகிப்திற்கு சாராளுடன் சென்றான். அங்கு ஆபிரகாம் தன் மனைவியிடம் “நீ அழகாயிருப்பதால் என்னைக் கொன்று போட்டு உன்னை அழைத்துச் சென்று விடுவர். ஆதலால் உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கு நீ உன்னை என் சகோதரி“ என்று சொல்லச் சொன்னான். தன் மனைவியின் மானத்தை விட தன்னுடைய உயிரை ஆபிரகாம் பெரிதாகக் கருதியதைப் பார்க்கிறோம். சாராளும் அதேபோல் கூறினாள். ஆபிரகாம் கானான் தேசத்திற்கு வரும்போது இல்லாத பயம் எகிப்தில் வந்தது. எகிப்து என்பது பாவ அடிமைத்தனத்தைக் குறிக்கும். பாவ அடிமைத்தனம் பயத்தைத் தரும். 

பார்வோனுடைய பிரபுக்கள் சாராளைக் கண்டு பார்வோனுடைய அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். சாராளினிமித்தம் பார்வோன் ஆபிரகாமுக்குப் பரிசாக ஆடுமாடுகளையும், கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான். அதனைப் பார்த்த கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்து சாராள் மானத்தைக் காப்பாற்றினார். அப்பொழுது பார்வோனால் ஆபிரகாமுக்கு அனுப்பப்பட்ட வேலைக்காரிகளில் ஒருத்திதான் ஆகார். ஆகாரை முதலில் வறுமையால் தாய் தந்தையர் எகிப்து மன்னனிடம் விற்றனர். எகிப்து மன்னன் பார்வோனுக்கு ஆகாரை அடிமையாக விற்றான். இப்பொழுது பார்வோன் தன்னுடைய சுய இச்சைக்காக ஆகாரை ஆபிரகாமிடம் அனுப்பினான். ஆகார் தன் மனதில் ஆபிரகாம் தம்பதியினர் மிகவும் நல்லவர்களாக இருந்ததால்தான் கர்த்தர் அவர்களுக்காக வாதைகளை பார்வோனுக்கு அனுப்பினார். எனவே நாம் நல்லவர்களோடு செல்கிறோம் என்று நினைத்திருப்பாள். 

சாராளின் செயல்: 

ஆதியாகாமம் 16 : 1 – 6 “ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள். சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.

அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்பாராக என்றாள். அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.”

ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் பிள்ளையில்லாதிருந்தது. சாராள் ஆபிரகாமிடம் கர்த்தர் தன்னுடைய கர்ப்பத்தை அடைத்திருப்பதால் தன்னுடைய அடிமைப் பெண்ணாகிய ஆகாரோடு சேரக் கூறினாள். இருவரும் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின், ஆகாரால் தன் வீடு கட்டப்படுமென்று எண்ணுகிறாள். சாராள் ஏன் ஆகாரை அத்தனை வேலைக்காரர்களின் மத்தியிலும் தெரிந்தெடுத்தாள் என்றால் சாராள் சொல்வதை அப்படியே ஆகார் கேட்பாள். மேலும் அவள் சாராளின் நம்பிக்கைக்குரிய பணிப்பெண்ணாக இருந்திருக்க வேண்டும். அதனால் சாராள் அவளிடம் அதிகப் பிரியம் வைத்திருந்திருப்பாள். ஆபிரகாம் சாராள் கூறியது அன்றைய கலாச்சாரத்துக்கு ஒத்துப் போவதாக இருந்தாலும் தேவ திட்டத்தோடு ஒத்துப் போகிறதா என்று சிறிதும் யோசிக்காமல் சாராள் ஆலோசனையைக் கேட்டு தன்னுடைய 85 வது வயதில் ஆகாரைத் தன்னுடைய மறுமனையாட்டியாக்கினான். ஆபிரகாம் அவளை மனதார ஏற்றுக் கொண்டிருந்தால் அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பான். அதனால்தான் இங்கு மறுமனையாட்டி என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகாரின் மூலம் தம்பதிகளுக்குக் குழந்தை மட்டும் வேண்டும். ஆனால் அவளுக்கு மனைவி என்ற தகுதியைக் கொடுக்க அவர்களுக்கு விரும்பவில்லை. ஆகார் ஆபிரகாமோடு சேர்ந்து கர்ப்பம் தரித்த போது தனக்கு இந்த ஸ்தானத்தைக் கொடுத்த நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். அடிமையாயிருந்த ஆகார் குடும்பத்தில் தனக்கு கிடைத்த ஆபிரகாமின் மறுமனையாட்டி என்ற இடத்திற்காக நன்றியுள்ளவளாயிருக்கத் தவறினாள். சாராள் தன் கணவனிடம் தன்னை அவள் அற்பமாக எண்ணுவதைக் கூறி கர்த்தர் நம் இருவருக்கும் நடுநின்று நியாயம் தீர்ப்பாராக என்றாள். அவள் ஆகாரைத் தன் கணவனோடு சேரச் சொல்லும்போது கர்த்தரிடம் கேட்காதவள், இப்பொழுது கர்த்தர் நடுநின்று நியாயம் தீர்க்க வேண்டுமென்று நினைக்கிறாள். ஆபிரகாம் அவளிடம் “உன் பார்வைக்கு நலமானபடி செய்” என்றான். எனவே சாராள் ஆகாரைக் கடினமாய் நடத்தினாள். கொடூரமாக நடத்துவது தவறு. சாராள் ஆகாரிடம் பேசி அவளைத் திருத்தியிருக்க வேண்டும். எனவே ஆகார் அவர்களை விட்டு ஓடிப்போனாள். ஆகாரைப் போல நாமும் யாரையும் அற்பமாக எண்ணக் கூடாது. 

ஆகாரும், கர்த்தருடைய தூதனானவரும்: 

ஆதியாகமம் 16 : 7 – 16 “கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு: சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார். பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார். பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். அப்பொழுது அவள்: என்னைக்காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள். ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ என்னப்பட்டது; அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது. ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான். ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.”

ஆகார் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்ட சூழ்நிலையில் தன்னந்தனியாக சூர் வனாந்தரத்தில் அலைந்து திரிகிறாள். சூர் வனாந்தரம் என்றால் அடைக்கப்பட்ட இடம் என்று பொருள். ஆகார் தன்னை விட்டுப் பிரிந்த தாய் தந்தை விற்று விட்டதையும். தன்னை அடிமையாக வாங்கின பார்வோன் விட்டு விட்டதையும், தன்னை மறுமனையாட்டியாக்கின ஆபிரகாமும் தன்னை விட்டு விட்டதையும் எண்ணிக் கலங்கியிருப்பாள். ஆகார் ஒரு அடிமையாயிருந்தும், ஆகார் பக்கம் தவறு இருந்தும், தேவன் ஆகாரின் அங்கலாய்ப்பைக் கேட்டார். இதேபோல்தான் இஸ்ரவேலின் பெருமூச்சையும் கர்த்தர் கேட்டாரென்று யாத்திராகமம் 2 : 24, 25, 3 : 7 லும் பார்க்கிறோம். ஆகார் வனாந்தரத்திலே சூருக்குப் போகிற வழியருகே செல்லும் போது கர்த்தருடைய தூதனானவர் “சாராயின் அடிமைப் பெண்ணாகிய ஆகாரே” என்று அழைக்கிறார். இதிலிருந்து கர்த்தருக்கு நாம் யார், நம் வேலை என்ன நம்முடைய பெயர் என்ன என்பதை அறிந்தவர் என்றறிகிறோம். 

மேலும் அவர் எங்கிருந்து வருகிறாய் எங்கு போகிறாய் என்று கேட்டார். அதற்கு ஆகார் “என் நாச்சியாரை விட்டு ஓடிப்போகிறேன்” என்று தன் நிலைமையை உண்மையாய் ஒப்புக்கொண்டாள். இங்கு கர்த்தருடைய துதானானவர் என்று எங்கெல்லாம் மரியாதையாகக் கூறப்பட்டிருக்கிறதோ அது இயேசுவைக் குறிக்கும். செங்கடலைப் பிளந்த போதும், சீனாய் மலையில் இறங்கி வந்த போதும், சிம்சோனுக்கும், மனோவாவுக்கும் தரிசனமானதும் மனித உருவில் தூதனானவராக இயேசு தன்னை வெளிப்படுத்தினார். கர்த்தருடைய தூதனானவர் ஆகாரிடம் “சாராளிடம் திரும்பிப் போய் அடங்கியிரு” என்று கூறி, அவள் வயிற்றில் உள்ள பிள்ளையைப் பற்றிய வாக்குத்தத்தங்களைக் கூறினார் அவைகள் என்னவென்றால், 

  1.  உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன். 
  2. உன்னுடைய சந்ததி பெருகி எண்ணி முடியாததாயிருக்கும். 
  3. நீ ஒரு குமாரனைப் பெறுவாய்.
  4. அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு. 
  5. அவன் துஷ்ட மனுஷனாயிருப்பான்.
  6. அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்.
  7. தன்னுடைய சகோதரர் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான். 

ஆகாருக்கு தூதனானவர் தன்னுடைய சந்ததியைப் பற்றிக் கூறியது மிகுந்த சந்தோஷத்தை அளித்திருக்க வேண்டும். சாராள், ஆபிரகாம், ஆகார் ஆகிய மூவரும் தவறு செய்தனர். கர்த்தரோ இரக்கமுள்ளவராக அவர்களது சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு கொடுத்தார். ஆகார் தன்னோடு பேசின கர்த்தருக்கு வேதத்தில் முதன்முதலில் “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று பெயரிட்டாள். அந்த இடம் காதேசுக்கும், பாரேத்துக்கும் நடுவேயுள்ளது. அங்குள்ள துரவின் பெயர் லகாய்ரோயீ என்பதாகும். நாம் யாராக இருந்தாலும் சரி ஒடுக்கப்படுகிற காலங்களில் அவரே நமது தஞ்சமும், அனுகூலமான துணையும் ஆவார். கர்த்தர் நம்மைக் காண்கிறவர், கவனிக்கிறவர் என்ற உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் தேவை. இந்த உணர்வு நமக்குள் இருந்தால் நாம் அவரை விட்டுத் தூரம்போக மாட்டோம். அவருக்கு விரோதமாகப் பாவத்தில் விழுவதற்கு முயல மாட்டோம். கர்த்தருடைய தூதனானவர் ஆகாரைக் கண்டார். அதை ஆகாரும் காணும்படி உதவினார். தேவன் நம்மை எப்போதும் காண்கிறவர். நாம் அவரை உத்தம இருதயத்தோடு பற்றிக் கொள்ளும்போது தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது (2நாளாகாமம் 16 : 9). 

ஆகாருக்கு விருப்பமில்லாதபோதிலும், தான் கொடுமைப்படுத்தப்பட்ட போதிலும், சிரமங்கள் அதிகரிப்பதற்கு சூழ்நிலைகள் இருந்த போதிலும், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, ஆகார் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் சாராளிடம் போய் அடங்கியிருந்தாள். சாராளும், ஆபிரகாமும் மறுபடியும் அவளை ஏற்றுக்கொண்டனர். அதற்குக் காரணம் தேவதூதனானவர் அவளைச் சந்தித்ததையும், அவர் கூறினதையும், அவள் அவர்களிடம் சொல்லியிருக்கக் கூடும். ஆகார் அதே நாச்சியாரோடு இன்னும் 20 வருடங்கள் அதே இடத்தில் வாழ்ந்தாள். அவளது அத்தகைய கீழ்ப்படிதலினால் அவளுடைய வாழ்வில் எண்ணிமுடியாத ஆசீர்களைக் கொண்டு வந்தது. ஆதியாகமம் 17 : 20 ல் ஆபிரகாம் இஸ்மவேலுக்காக பண்ணிய விண்ணப்பத்தைக் கேட்டு அவனை ஆசீர்வதிப்பேன் என்றும், அவனை மிகவும் பலுகவும், பெருகவும் பண்ணி அவன் 12 பிரபுக்களைப் பெறுவான் என்றும் அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றும் கர்த்தருடைய வாக்குத்தத்தைப் பெற்றான். மேலும் அவனுக்கு ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணி ஆசீர்வாதத்தைப் பெற வைத்தான். ஆபிரகாமுக்கு 86 வயதாயிருக்கும்போது ஆகாருக்கு ஆண் குழந்தை பிறந்து தேவதூதனானவர் சொன்னபடியே அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிட்டனர். இஸ்மவேல் என்ற பெயருக்கு கர்த்தர் கேட்கிறார் என்று பொருள். 

ஈசாக்கு, இஸ்மவேல் பிரச்சனையில் தேவன்: (ஆதியாகமம் 21 : 1 – 16) 

ஆதியாகமம் 21 : 2, 3, 9 – 13 “ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான். பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு, ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.”

ஆபிரகாமுக்கு 100 வது வயதில் ஈசாக்கு பிறந்தான். அப்பொழுது இஸ்மவேலுக்கு பதினான்கு வயது. மறுபடியும் இஸ்மவேலினால் பிரச்சனை ஆரம்பமாகிறது. அவன் தனது அன்பற்ற, பொல்லாத செய்கையினால் குடும்பத்தில் பிளவுண்டாக்கினான். இஸ்மவேல் ஈசாக்கைப் பரிகாசம் பண்ணுகிறதை சாராள் கண்டாள். அதனால் கோபமடைந்த சாராள் ஆபிரகாமிடம் ஆகாரையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளச் சொன்னாள். மேலும் அடிமைப் பெண்ணின் மகன் தன் குமாரனோடு சுதந்தரவாளியாக இருப்பதில்லை என்றாள். ஆபிரகாமுக்கு அந்த சமயம் மிகவும் துக்கமாயிருந்தது. ஆபிரகாமின் வித்தான ஈசாக்கின் மூலம் மேசியாவின் சந்ததி வர வேண்டுமென்பது தேவ சித்தம். அப்பொழுது தேவன் இடைப்பட்டு ஆபிரகாமிடம், சாராள் சொற்படி ஆபிரகாம் கேட்கக் கட்டளையிட்டார். தேவனுக்கு உடனடியாகக் கீழ்ப்படிவதைத் தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் ஆபிரகாம். நாமும் கர்த்தருடைய வார்த்தைக்கு உடனடியாக முற்றிலும் கீழ்படிய ஒப்புக் கொடுக்க வேண்டும். 

எனவே கர்த்தரின் சொற்படி ஆபிரகாம் அப்பத்தையும், ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து ஆகாருடைய தோளின் மேல் வைத்து பிள்ளையையும் ஒப்புக் கொடுத்து ஆகாரை அனுப்பி விட்டான். இஸ்மவேலின் ஒட்டு மொத்த பாரத்தையும் ஆகாரின்மேல் சுமத்தினான். ஆபிரகாம் பெரிய பணக்காரனாக இருந்தாலும் ஆகாரின் கையில் ஒன்றுமே கொடுத்து அனுப்பவில்லை. முன்னால் தானாக ஓடிப்போனாள். ஆனால் இப்பொழுது ஆகார் விரட்டப்படிருக்கிறாள். ஒருவேளை அவள் நேராகச் சென்றிருந்தால் தன்னுடைய ஜனத்தண்டை சென்றிருப்பாள். ஆனால் மனக் கவலையினால் வழிதவறி விட்டாள் . பெயர்செபா வனாந்தரத்தில் அலைந்து திரியும் சூழ்நிலை ஏற்பட்டது. கையிலிருந்த தண்ணீரும் செலவழிந்து போயிற்று. யாருமில்லாத சூழ்நிலையில் தாகத்தால் பிள்ளை சாகிறதைப் பார்க்க முடியாமல் பிள்ளையை ஒரு செடியின் கீழ் விட்டு விட்டுத் துரத்தில் போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். 

தேவனும் ஆகாரும்: 

ஆதியாகமம் 21 : 17 – 19 “தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.” “நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.”

தேவன் இஸ்மவேலின் சத்தத்தைக் கேட்டார். உடனே ஆகாரின் கண்கள் திறக்கப்பட்டதால் அவள் அங்கு ஒரு நீருற்றைக் கண்டாள். பாவத்தினால் அடிமையாயிருந்து அதிலிருந்து மனம் திரும்ப வாஞ்சிக்கும் மக்களை “ஜீவத்தண்ணீரண்டைக்கு” ஆவியானவர் வழிநடத்துவதை, ஆகாரின் கண்களைத்திறந்து தண்ணீரண்டை நடத்தியதற்கு ஒப்பிடலாம். உடனே அவள் தன் துருத்தியில் தண்ணீரை நிரப்பி பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். இஸ்மவேல் அந்தத் தண்ணீரைக் குடித்துப் பிழைத்தான். அனேக வேளைகளில் நாம் ஆசீர்வாதத்தைச் சுதந்தரிக்க முடியாததற்குக் காரணம் நமது கண்கள் திறக்காமல் இருப்பதால்தான். நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும்போது உன்னதத்திலுள்ள சகல ஆசீர்வாதங்களையும் நாம் கண்டு அவற்றைச் சுதந்தரிக்க முடியும். கிறிஸ்துவின் பிள்ளைகள் அவரை விட்டுத் துரத்திலிருந்தாலும் சமீபத்திலிருந்தாலும் அவர்களின் சத்தத்தைக் கேட்கிறவர் கிறிஸ்து. அன்று ஆகாரின் கண்ணீரால் அவள் தன் அருகிலிருந்த நீருற்றைக் கண்டாள். இன்றும் அவள் சந்ததியினர் அதற்கும் கீழேயிருக்கும் விலையுயர்ந்த எண்ணையைக் கண்டெடுக்கிறார்கள்.

இஸ்மவேல்: 

ஆகார் தன மகனை வில் வித்தையில் வல்லவனாக்கினாள். எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் தன்னுடைய மகனுக்கு எகிப்து தேசத்துப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தாள். தேவன் அவளிடம் வாக்குப் பண்ணியபடி அவனை ஆசீர்வதித்தார். அவனது சந்ததியில் 12 பிரபுக்களும், வம்சங்களும் தோன்றினர். (ஆதியாகமம் 25 : 12 – 18). அவன் சந்ததியார் கடுக்கன் போடும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர் (நியாயாதிபதிகள் 8 : 24). இன்றும் சரித்திரத்திலும், உலகப்பிரகாரமாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்/ (ஆதியாகமம் 37 : 25 – 28 ). ஆகாரின் சந்ததியார் இன்றைய அரேபியர்கள். ஆகார் தான் கண்ட தேவனைத் தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையில் கண்டதாகவோ, சேவித்ததாகவோ வேதம் கூறவில்லை. தன்னுடைய மகனுக்கும் அதைச் சொல்லி வளர்த்ததாகவும் வேதத்தில் சொல்லப்படவில்லை. 

கலாத்தியர் 4 : 22 – 31ல் அப்போஸ்தலனாகிய பவுல் ஆகாரையும் சாராளையும் ஒப்பிட்டு ஆகாரை பழைய உடன்படிக்கையென்றும், சாராளை புதிய உடன்படிக்கையென்றும் கூறுகிறார். பழைய உடன்படிக்கை மாம்சத்தினால் உண்டானது. புதிய உடன்படிக்கை ஆவியின்படி உண்டானது. பழைய உடன்படிக்கை அடிமைத்தனத்திக்குரியது. புதிய உடன்படிக்கை சுயாதீனமுடையது, தேவன் அங்கீகரித்தது. பழைய உடன்படிக்கையோடு கிறிஸ்துவினால் உண்டாகும் புதிய உடன்படிக்கை ஒருநாளும் ஒத்துப்போகாது. எனவே நாம் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கிறிஸ்துவில் ஒரு சுயாதீன வாழ்வு வாழ பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆகாரின் கண்ணீரைக் கண்டு அவளுக்கு ஆறுதல் படுத்தியது போல, நமது கண்ணீரையும் காண்கிற தேவன் ஒருவர் உண்டு. நம் மேல் அன்பும், அக்கறையும் கரிசனையும் உள்ள கர்த்தர் ஒருவர் உண்டு. அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் நமக்கு உத்தரவு கொடுத்து நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார் (எரேமியா 33 : 3). ஆமென்.

Related Posts