Menu Close

இயேசு கடலின் மீது நடந்தார்

மத்தேயு 9 : 20 – 22; மாற்கு 5 : 25 – 34; லூக்கா 8: 43 – 48

சீஷர்கள் கப்பர்நகூமுக்குப் பயணமானார்கள்: 

மாற்கு 6 : 45  இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படகில் ஏறி அக்கறையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத்  துரிதப்படுத்தினார்.”

யோவான்  6 : 15 – 17 “ஆதலால் ஜனங்கள் வந்து, தம்மை ராஜாவாகும்படிப்  பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார். சாயங்காலமான போது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு  நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாய் இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.”

இயேசு 5 அப்பம் 2 மீனை  ஆசீர்வதித்து 5000 பேரை போஷிக்கச் செய்து  அனுப்பிய பின், தான் துரிதமாகச் செயல்பட்டு தம்முடைய சீஷர்களை உடனடியாக  மீதியான  துணிக்கைகளுடன்  அவரவர்  வீடுகளுக்குத்  தமக்கு முன்னே அக்கரையில் உள்ள பெத்சாயிதாவுக்கு எதிராகப்  போகும்படி துரிதப்படுத்தினார். ஏனெனில் ஜனங்கள் இயேசுவை ராஜாவாக்க முயற்சித்ததால், அதை அறிந்த இயேசு மறுபடியும் அவர்களிடமிருந்து விலகித்  தனியாக மலையின்மேல் ஏறிச்  சென்றார். சீஷர்கள் மட்டும் அந்த இருட்டு வேளையில் படகில் ஏறி கடலின் கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு  இயேசு இல்லாமல் பயணமானார்கள்.  இது  போன்ற  நிகழ்ச்சி  மத்தேயு  8 : 23  –  27  ல்  உள்ளது.  அந்த  சோதனையில்  இயேசு  படகில்  இருந்தபோது சீஷர்களை  சோதித்தார்.  இந்த நிகழ்ச்சியில்  இயேசு  படகுக்கு  வெளியே  இருக்கும்போது  சோதித்தார்.  

இயேசு கடலின் மேல் நடந்தார்:

மாற்கு 6 :48, 49 “அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராக இருந்தபடியினால், அவர்கள் தண்டுவலிக்கிறதில் வருத்தப்படுகிறதை  இயேசு கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக்  கடந்துபோகிறவர் போல் காணப்பட்டார். அவர் கடலின் மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.” 

சீஷர்கள் படகில் போய்க்கொண்டிருந்தபோது பெருங்காற்றினால்  கடல் கொந்தளித்தது. காற்று படகுக்கு எதிராக வீசியது. சீஷர்களோ தாங்கள் சரியாகப் போவதாக நினைத்துக் கொண்டிருந்தனர். மூன்றுநாலு மணிநேரம் தண்டு  வலித்தார்கள்  என்று  யோவான்  6 :  19  ல்  கூறியிருப்பதால்  பலமணி  நேரம்  அவர்கள்  பிராயணப்  பட்டுக்  கொண்டிருக்க  வேண்டும்.  சீஷர்கள்  எத்தனையோ  முறை  இந்தக்  கடலில்  பயணம்  செய்திருக்கிறார்கள்.  அவர்கள்  வாழ்க்கையே  கடலில்தான்.  அப்பொழுதெல்லாம்  பயமில்லாமல்  பயணம்  செய்தனர். வாழ்க்கையென்பது  எப்பொழுதும்  ஒன்றுபோல்  இருப்பதில்லை  என்பதை  மனதில்  வைத்துக் கொள்ள  வேண்டும்.  5000 பேருக்கு  5  அப்பமும்  2  மீனையும்  கொண்டு  போஷித்து  சீஷர்களுக்கு  பாடத்தைக்  கற்றுக்  கொடுத்தார்.  கடலில்  நடந்த  சம்பவம்  இயேசு  அவர்களுக்கு  வைத்த  பரீட்சை.  நமது  வாழ்க்கையிலும்  சில  பாடங்களைத்  தேவன்  கற்றுக்  கொடுப்பார்.  நாம்  விசுவாசத்தில்  வளர்ந்திருக்கிறோமா  என்று  நம்மைச் சோதிக்க  சில  நெருக்கங்களையும்  பாடுகளையும்  தந்து  சோதிப்பார்.  

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

பாடுகள்  என்பது  தேவன்  நமக்கு  வைக்கும்  தேர்வு.  பெருங்காற்று,  எதிர்காற்று,  இருட்டு  என்பது  நாம்  சந்திக்கிற  உலகத்தின்  போராட்டங்களைக்  குறிக்கிறது.  படகு  என்பது  நமது  குடும்பம்,  வேலை,  தொழிலைக்  குறிக்கிறது.  தண்டு  வலிக்கிறதில்  கஷ்டமாயிருந்ததைப்  போல  நமது  குடும்பமும்,  வேலையும்  .நமக்குப்  பாராமாய்த்  தோன்றும்.  ஆனால்  இயேசுவுக்கு  எதுவுமே  பாரமாய்த்  தோன்றியதில்லை.  அவர்களின் உண்மையான நிலையை இயேசு கண்டார். மலையின்மேல் இருந்தாலும், சீஷர்களின் நிலைமையை அறிந்து,  இரவின் நாலாம் ஜாமத்தில்  கடலில் நீந்தி வராமல், நீரின் மேல்  நடந்து  அவர்களிடத்தில் வந்தார். இதைத்தான்  யோபு  9 : 8 ல்  “அவர் ஒருவரே வானங்களை  விரித்து, சமுத்திர  அலைகளின்மேல்  நடக்கிறவர்”  என்றார். நான்காம்  ஜாமம்  என்பது  விடியற்காலம்  4 மணி,  அப்படியானால்  அவர்கள்  9  மணி  நேரம்  கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.  இயேசுதான்  அவர்களை  போகும்படி  கூறினர்.  எனவே  சீஷர்கள் கட்டளை  கொடுத்தவர்  கைவிடமாட்டார்  என்று விசுவாசித்திருக்க  வேண்டும்.  இதுவரை  நடத்தினவர்  இனியும்  நடத்துவார்  என்று  விசுவாசித்திருக்க  வேண்டும்.

இயேசுவோடிருந்த  சீஷர்களே  மிகப்பெரிய  ஆபத்தை  எதிர்கொள்ள  வேண்டியதிருந்தது.  அதேபோல்  தேவனுடைய  பிள்ளைகளாகிய  நம்முடைய  வாழ்க்கையிலும்  எதிர்பாராத  நேரத்தில்  ஆபத்தான  சூழ்நிலைகளைச் சந்திக்க  வேண்டியதிருக்கலாம்.  இருளின் மத்தியில் சீஷர்கள் பயந்த சூழ்நிலையில் இருந்ததால் இயேசு  நடந்து வருகிறதைப்  பார்த்து ஆவேசம் என்று சத்தமிட்டனர். இதற்கு முன் அவர்கள் இதைப் போன்ற எந்த ஆவேசத்தையும் பார்த்ததில்லை. எனவே அலறினார்கள். உண்மையில்  அவர்கள்  இயேசு  வருவதைப் பார்த்து  மகிழ்ச்சியடைந்திருக்க  வேண்டும். இயேசுவினுடைய  மகிமையையும்  மகத்துவத்தையும்,  அவர்  தன்னுடைய  சீஷர்கள்  மேல்  கொண்டிருந்த  அன்பையும்  அவர்கள்  கண்டுகொள்ளவில்லை  என்றறிகிறோம். இதனால்  இயேசு  வருத்தப்பட்டதாகவோ,  கோபப்பட்டதாகவோ  சொல்லப்படவில்லை.  லூக்கா  24 : 37 ல் இயேசு  உயிர்த்தெழுந்தபின் எம்மாவூர்  சீடர்களோடு  நடந்து  சென்றார்.  பின்  அவர்களோடு  தங்கும்படி  சென்றார்  அவர்கள்  இயேசுவை  அறியவில்லை.  

இயேசு  அங்கு  பந்தியிருக்கையில்  அப்பத்தை  எடுத்து  ஆசீர்வதித்து  அவர்களுக்குக் கொடுத்தார்  அப்பொழுது  அவர்களுடைய  கண்கள்  திறக்கப்பட்டது  உடனே  இயேசு  மறைந்து  போனார்.  அப்பொழுது  அவர்கள்  கலங்கி  பயந்து  ஒரு  ஆவியைப்  காண்கிறதாக  நினைத்தனர்.  கர்த்தர் தான்  சமுத்திரம் புரண்டு வந்தபோது கதவுகளால் அடைத்தவர், (யோபு 38 :8) அவைகளிடம் அதன் எல்லையைக்  குறித்து அதற்குத்  தாழ்ப்பாள்களையும், கதவுகளையும் போட்டு, இம்மட்டும் மிஞ்சி வராதே என்றவரும் அவரே (யோபு 38:10,11)  இயற்கை மட்டுமல்ல, கடலும் கூட அவருக்குக்  கட்டுப்படும் என்றறிகிறோம். சீஷர்களின்  படகு  அமிழ்ந்து விடுமே என்று ஓடி வந்த இயேசு  ,நமது  வாழ்க்கையும் அமிழ்ந்து போக விட  மாட்டார். மாற்கு  மட்டுமே அவர்கள் வருத்தப்படுவதாகக்  கூறியிருந்தார்.  இது  சபைக்குப்  பொருத்தமாகும். மலையில்  இயேசு  ஜெபம்  பண்ணிக்க  கொண்டிருந்ததுபோல  பரலோகத்தில்  இயேசு  நமக்காக  ஜெபம்  பண்ணிக்  கொண்டிருக்கிறார்  (ரோமர் 8 : 34). இயேசு  மறுபடியும்  படகுக்கு  வந்ததுபோல  மறுபடியும்  சபையைத்தேடி  வரப்போகிறார்.  

படகுக்கு வரும்போது பேதுருவோடு வந்ததுபோல  மரித்த  பரிசுத்தவான்களோடு  வருவார்.  இதுஒரு  முன்னடையாளமாக  கூறப்பட்ட  நிகழ்ச்சி. இயேசு  நேரடியாக  வராமல்  ஏன்  கடந்துபோகிறவர்  போல்  காணப்பட்டார்  என்றால்  அவரை  சீஷர்கள்  நம்ப  வேண்டுமென்றும்,  சரியாய்ப்  புரிந்து  கொள்ள  வேண்டுமென்றும்  விரும்பினார்.  அவரைப்  படகுக்கு  அழைக்க  வேண்டுஎன்று  விரும்பினார்.  அதனால்தான்  போக்கு  காட்டினார்  அநேக  நேரத்தில்  நமது  வாழ்க்கையிலும்  நாம் எத்தனை  விண்ணப்பம்  பண்ணியும்,  கெஞ்சியும்  கேட்காதவர்போல்  தோன்றும்.  ஆனால்  இயேசுவுக்கு  நமக்கு  என்ன  தேவை,  எப்பொழுது  தேவை  என்பது  தெரியும்.  நாம் விரும்புவதைக்  காட்டிலும்  அவர்  நமக்கு  கொடுக்க  விரும்புகிறதே  சிறந்ததாகும்.  

நடந்த அதிசயம்:

மாற்கு 6 : 50, 51 “அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே இயேசு அவர்களோடே  பேசி: திடன்கொள்ளுங்கள், நான் தான் பயப்படாதிருங்கள் என்று சொல்லி, அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.”

மத்தேயு 14 : 28, 29 “பேதுரு அவரை நோக்கி:ஆண்டவரே! நீரேயானால் நான் ஜனத்தின்மேல்  நடந்து  உம்மிடத்தில் வரக்  கட்டளையிடும் என்றான். அதற்கு இயேசு:வா என்றார். அப்பொழுது பேதுரு படகை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான்.”

இயேசு  கடல்மேல்  நடந்தது  மிகப்  பெரிய  அற்புதம்.  பூமியில்  புவியீர்ப்பு  விசையானது  நாம்  ஜலத்தில்  நடக்க  முடியாதபடி  செய்து  கீழ்  நோக்கி  இழுக்கும்.  ஆனால்  இயேசு  அந்த  புவியீர்ப்பு  சக்தியை ஜெயித்து  கடலில்  நடந்தார்.  ஆனால்  அவர்  நடந்தபின்  அந்த  புவிஈர்ப்பு  விசை  மறைந்துவிடவோ,  அழிக்கப்படவோ  இல்லை.  மாறாக  ஜெயிக்கப்பட்டது.  சீஷர்கள் எல்லோரும் மிகவும் கலக்கம் அடைந்தனர். அதனால் இயேசு அவர்களோடே பேசி தான்தான் என்று அவர்களைத்  திடன் கொள்ளச் செய்தார். பயப்படாதிருங்கள் என்று கூறினார். அவர்கள் இருந்த படகில் இயேசு ஏறினார். உடன் காற்று அமர்ந்தது அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.  சீஷர்கள்  எவ்வாறு  இயேசுவின்  கரத்தில்  இருந்தார்களோ  அதேபோல்  புயலும்  இயேசுவின்  கரத்திலிருந்து. மாற்கு  4 : 39 லும்  இயேசு  காற்றை  அதட்டி,  கடலைப்  பார்த்து  இரையாதே  அமைதலாயிரு  என்றார்  உடனே  காற்று  நின்று  போய்  மிகுந்த  அமைதலுண்டாயிற்று. படகில் உள்ள அத்தனை பேருக்கும் இல்லாத ஒரு ஆசையும், வாஞ்சையும் பேதுருவுக்கு வந்தது. அந்த வாஞ்சையினால் இயேசுவிடம் தானும் இயேசுவைப்போல் கடலில் மேலே நடக்க வேண்டும் என்று கேட்டான். இயேசு வா என்று கூறினார். இயேசு எல்லோரையும் வா என்றுதான் அழைப்பார்.  பேதுரு படகை விட்டிறங்கி ஜலத்தின்  மேல் நடந்தான்

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

பேதுரு கடலில் நடந்தான்.

மத்தேயு 14 : 30 – 33 “ காற்று பலமாய் இருக்கிறதைக்  கண்டு, பயந்து, அமிழ்து போகையில்: ஆண்டவரே இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனை பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்  என்றார். அவர்கள் படகில் ஏறின உடனே  காற்று அமர்ந்தது. அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, இயேசுவைப் பணிந்து கொண்டார்கள்.”

பேதுரு  கடலின் மேல் நடக்கக்  கேட்டவுடன் இயேசு கடிந்து கொள்ளவில்லை. இப்படிப்பட்ட விசுவாசத்துடன் பேதுரு இருந்ததால்தான், இயேசு அவரை மிகுதியான வல்லமையுடன் பயன்படுத்தினார்.  பெந்தகோஸ்தே  நாளன்று பேதுரு பிரசங்கித்த செய்தியின்  மூலமாக 3000 பேர் மனந்திரும்பச் செய்தார். காற்று பலமாக வீசியதால் அதுவரை இயேசுவையே பார்த்துக் கொண்டிருந்தவர் காற்றைப்  பார்த்தவுடன் அமிழ்ந்து  போகிறான். பேதுரு திறமையான  மீனவன். அவன் எந்த ஆழத்தில் சென்றாலும் நீந்தி வெளியே வர அவனுக்குத் தெரியும். நடந்து  இயேசுவிடம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பயந்தான். பேதுரு  சமுத்திரத்தின்  ஆழம்  போகும்வரை  காத்திருக்கவில்லை.  முழ்கத்  தொடங்கின  அடுத்த  வினாடியே  பேதுருஒரு சின்ன  ஜெபத்தை ஏறெடுக்கிறான். “ஆண்டவரே இரட்சியும்” என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி“அற்பவிசுவாசியே” என்று கோபப்பட்டுத்  தூக்கினார். 

அவர்கள் படகில் ஏறினவுடன் காற்று அமர்ந்தது. ஜலத்தின்மேல் நடப்பதற்கு பயப்படாத பேதுரு, அதற்கு சம்பந்தம் இல்லாத காற்றைப்  பார்த்துப்  பயப்பட்டது  நமக்கு வியப்பை அளிக்கிறது. இயேசுவை  நம்பியிருந்த  வரையிலும்  புவியீர்ப்புவிசையை  பேதுரு கூட  மேற்கொள்ள  முடிந்தது.  அவ்வாறு  இல்லையென்றால்  அந்த  விசை  பேதுருவை  மேற்கொண்டிருக்கும்.  அப்பொழுது படகில் உள்ளவர்கள் “உண்மையிலேயே நீர் மெய்யான தேவன்”  என்று இயேசுவைப் பணிந்து கொண்டனர். வாஞ்சையும், விசுவாசமும் உள்ளவர்களால் மட்டுமே அற்புதத்தைப்  பெற்றுக்கொள்ள முடியும் என்று பேதுருவிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். பேதுரு  நீரின் மேல் நடந்ததைப் போல, நாமும் பாவம், நோய் போன்ற பிரச்சனைகளில் மீது வெற்றி நடை போட முடியும். நாம் அதில் விசுவாசத்தோடு சில அடிகளை எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்த பின்னர், இயேசுவை நோக்காமல் மற்ற காரியங்களில் அதை முடிக்க நினைக்கும் பொழுது, இக்கட்டான சூழ்நிலைக்குத்  தள்ளப்படுவோம். 

இந்த அற்புதத்தை  செய்ததற்குக் காரணம், இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சீஷர்கள் அறிந்து, அவரைப் பணிந்து கொள்ளும்படி செய்யத்தான். இயேசுவுக்குக்  கிரியை செய்ய முடியாத எந்த சூழலும் உருவானதுமில்லை, உருவாகப் போவதுமில்லை. யோவான் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அற்புதங்களில் இரண்டு அற்புதங்கள் தண்ணீருடன் தொடர்புடையன. அதில் கடலின் மீது நடந்தது ஒன்று. இவைகள் இயற்கைக்கு மாறாகச்  செய்யப்பட்ட அற்புதங்கள்.

இயேசு தானும் கடலின் மேல் நடந்து, விசுவாசித்த பேதுருவையும் கடலின் மேல் நடக்க வைத்த அற்புதத்தை இதிலிருந்து அறிகிறோம். இந்த அற்புதத்தைப் பார்த்து இயேசுவை யாரென்று அறியாதவர்கள் அறிந்தனர். இயேசுவைத் தேடாதவர்களும் தேடினர். பேதுரு அமிழ்ந்து போகையில் இயேசு உடனே  வந்து  தூக்கி எடுத்ததைப் போல, இயேசு நம்முடைய போராட்டங்களிலும், கஷ்டங்களிலுமிருந்து உடனடி தீர்வை நமக்களிப்பார்.  கர்த்தர் பாதாளத்தின்  வல்லமையிலிருந்து நம்மை இரட்சிக்கிறார். பாவ பழக்க வழக்கத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறார். சத்துருக்களின் பிடியிலிருந்தும் பிசாசின்  பிடியிலிருந்தும் நம்மை இரட்சிக்கிறார். இரட்சிப்பின் ஒளியையும், பிரகாசத்தையும் நமக்குள் வீசச்  செய்கிறார். ஆமென்.

Related Posts