நேபுகாத்நேச்சாரின் காலங்களில் இருந்ததுபோல கோரேஸ், தரியு ஆகியோர் காலத்திலும் தானியேல் உன்னதமான ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்தான். தரியுராஜா பல சீர்திருத்தங்களைச் செய்து தானியேலை உயர்த்தினான். இதினிமித்தம் பொறாமை கொண்ட பிரதானிகளும், தேசாதிபதிகளும் தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள். தானியேல் மேல் குற்றம் சுமத்த யாதொரு குறையும் காணவில்லை. அவர்கள் ராஜாவிடம் சென்று “முப்பது நாட்கள்வரை ராஜாவாகிய உம்மைத் தவிர எந்த தேவனையானாலும், மனுஷனையானாலும் நோக்கி விண்ணப்பம் பண்ணக் கூடாது என்றும், அப்படியே விண்ணப்பம் பண்ணினால் அவர்களை சிங்கக் கெபியில் போடவேண்டும்” என்று கட்டளை பிறப்பிக்கச் சொன்னார்கள். அப்படியே தரியு ராஜாவும் அந்த கட்டளைப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான்.
தானியேலோ அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் தினம் மூன்று வேளையும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணினான். பிரதானிகள் அதைப் பார்த்து ராஜாவிடம் தெரிவித்தான். ராஜா மிகவும் சஞ்சலப்பட்டு தானியேலைத் தப்புவிப்பதற்காக சூரியன் அஸ்தமிக்கும் மட்டும் பிரயாசப்பட்டான். ஆனால் ஒன்றும் செய்ய முடியாததால் தனியேலை நோக்கி “நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்” என்றான். தானியேலை சிங்கத்தின் குகைக்குள் போட்டனர்.
தேவன் சிங்கங்களின் வாயைக்கட்டிப் போட்டார். தானியேலைக் குற்றஞ் சுமத்தியவர்களையும், அவர்கள் குமாரரையும், அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். அவர்கள் அடியில் சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப் போட்டது. முடிவில் ராஜா “தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த கர்த்தரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்கிறவராயிருக்கிறார்.” என்று தேசமெங்கும் பறைசாற்றினான் – தானி 6:1 – 28