தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் யூதாவிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு பாபிலோன் தேசத்தில் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படும்படி பயிற்சி மையத்தில் வைத்தார்கள். அங்கே அவர்களுக்கு பாபிலோனிய முறைப்படி ராஜா உண்ணும் விசேஷித்த உணவுகள் கொடுக்கப்பட கட்டளை ஆயிற்று. ஆனால் தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும், அவர் பானம் பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக் கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் சென்று பத்து நாள் வரைக்கும் சோதித்துப் பார்க்கும்படி தயவாகச் சொன்னான். பிரதானிகளின் தலைவனோ “இவர்களுக்கு இணங்கினால் ராஜாவின் கோபம் நம்மேல் திரும்பும்” என்று பயந்தான். தேவன் பிரதானிகளிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கச் செய்தார். பத்து நாட்களுக்குப் பின் அவர்களைத் தலைவன் சோதித்தபோது மற்றவர்களைப் பார்க்கிலும் இவர்களுடைய முகம் அதிக களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது – தானி 1:4 – 15