யோசேப்போடு சிறைச்சாலையிலிருந்த பார்வோனின் அதிகாரிகளான பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் சொப்பனம் கண்டார்கள். பானபாத்திரக்காரன் மூன்று கொடிகளுள்ள, துளிர்த்திருந்த, பூத்திருந்த, பழுத்த பழங்களுள்ள திராட்சைச் செடியைப் பார்த்ததாகவும், அந்த பழங்களைப் பறித்து, பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அதை அவருக்குக் கொடுத்ததாக சொப்பனத்தில் பார்த்ததாகக் கூறினான். அதற்கு யோசேப்பு அந்த மூன்று கொடிகளும் மூன்று நாட்கள் என்றும், இன்னும் மூன்று நாட்களுக்குள் பார்வோன் பழைய நிலையில் அவரை நிறுத்துவார் என்றும் விளக்கமளித்தான்.
சுயம்பாகிகளின் தலைவன் தன் தலையின் மேல் மூன்று வெள்ளைக் கூடைகள் இருந்ததாகவும், அதில் மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களும் கொஞ்சம் கொஞ்சம் இருந்ததாகவும், அவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்று சொப்பனத்தில் கண்டேன் என்றான். அதற்கு யோசேப்பு இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் அவர் தலையை உயர்த்தி, மரத்திலே தூக்கிப்போடுவார். அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும் என்று விளக்கமளித்தான் – ஆதி 40:1 – 23