சகரியா இந்த தரிசனத்தில் இரண்டு வெண்கல பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நாலு இரதங்களைக் கண்டான். அந்த பர்வதங்கள் சீயோன்மலையும், ஒலிவ மலையும் எனலாம். இதிலுள்ள நான்கு என்பது சிருஷ்டியைக் குறிக்கிறது. இதில் முதலாம் இரதத்தில் காணப்படும் குதிரைகளின் சிவப்பு நிறம் யுத்தத்தையும் அதாவது இரத்தம் சிந்துதலையும், இரண்டாம் இரதத்தில் காணப்படும் குதிரையின் கறுப்பு நிறம் பஞ்சத்தையும், மூன்றாம் இரதத்தில் காணப்படும் குதிரையின் வெள்ளை நிறம் வெற்றியையும், நான்காம் இரதத்தில் காணப்படும் புள்ளிபுள்ளியான சிவப்புக் குதிரை கொள்ளைநோயையும், மரணத்தையும் குறிக்கிறது. வெள்ளைநிற குதிரைகளால் இழுக்கப்பட்ட இரதம் தேவநியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவர்களுக்கு கிடைக்கும் மகிமையான ஜெயத்தைக் குறிக்கிறது. சகரியா பார்த்த நான்கு ஆவிகளும் நான்கு தேவ தூதர்களாம். தேவனுடைய சத்துருக்களுக்கு எதிராக வரும் நியாயத்தீர்ப்பைத் தான் வெண்கல பர்வதங்களும், யுத்த இரதங்களும் காண்பிக்கின்றன. அவைகளில் சவாரி செய்தவர்கள் வடதிசைக்கும், தென்திசைக்கும் நேராய் சென்றார்கள். இத்திசைகள் பாபிலோனையும், எகிப்தையும் குறிக்கின்றன. காலங்களின் முடிவில் தேவன் அழிக்கப்போகும் வடதிசை வல்லமைகளையும் தென்திசை வல்லமைகளையும் இத்தேசங்கள் குறிக்கின்றன. கிறிஸ்துவின் போரான அர்மகெதோன் போர் தேவ நியாயத்தீர்ப்பை உலகின் மேல் செலுத்தும் – சக 6:1 – 8