சகரியாவுக்குத் தேவன் பொன்குத்துவிளக்கையும், இரண்டு ஒலிவமரங்களையும் காட்டினார். குத்துவிளக்கு இயேசுவையும், அதன் எண்ணெய் நிறைந்த தன்மை ஆவியானவரின் நிறைவையும் காட்டும். ஒருவன் தேவனது கிரியையை மனித பலத்தில் செய்ய முடியாது. ஆவியானவரின் உதவியால் மட்டுமே தேவபணியைச் செய்ய முடியும். நம்மூலமாகக் கிரியை செய்யும் ஆவியானவரின் வல்லமையால் மலை போல் பெரிதாய்த் தோன்றும் கஷ்டங்களை கூட நாம் எளிதாய் மேற்கொள்ளலாம். தேவமக்களுக்கு தேவனின் பணிக்கும், ஆவிக்குரிய பிரச்சனைகளுக்கும் ஆவியானவரின் வெளிப்பாடுகள் இல்லாவிட்டால் எதிர்ப்புகள் அவர்களை மேற்கொண்டுவிடும். ஆவியானவரது வல்லமையாலும், ஆசீர்வாதத்தாலும் செய்யப்படும் எந்த வேலையும் அற்பமானது அல்ல. அதற்கு மதிப்பும், முக்கியத்துவமும் உண்டு. சகரியா பார்த்த இரண்டு ஒலிவமரங்கள் இஸ்ரவேலின் ஆசாரிய, அரசபதவிகளைக் காட்டும். இத்தகைய இரு பதவிகளையும் ஒருங்கே பெற்ற ராஜரிக ஆசாரியைக் கூட்டமான நாம் ஆவியானவரின் நிறைவில் பலத்த காரியங்களை நடப்பிக்கும் சாட்சிகளாகவாழ அழைக்கப் படுகிறோம் – சக 4:1-14