இந்த உவமையை லூக்கா 7 : 36 – 48ல் பார்க்கிறோம். இந்த சம்பவம் இயேசுவின் தொடக்ககால ஊழியத்தில் நடைபெற்றது. இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் கலிலேயா. இதில் வருகிற பரிசேயனான சீமோன் என்பவர் மத்தேயு, மாற்கு குறிப்பிடும் குஷ்டரோகியாக இருந்த சீமோன். இதில் இரண்டுவிதமான ஜனங்கள் மன்னிக்கப்பட்டதைக் குறித்த உவமானத்தைப் இயேசு கூறுகிறார். நம்முடைய கடந்த கால வாழ்க்கை பாவம் நிறைந்தது என்பதையும், நம்மீது இயேசு கொண்ட அன்பு, நமக்காக அவர் தமது உயிரை சிலுவையில் விட்டதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும் அறிய வேண்டும். நாம் நம்முடைய பாவங்களை இயேசு மன்னித்திருக்கிறார். நரகத்தில் வேதனைப்பட வேண்டிய நம்மை விடுவித்திருக்கிறார். நமக்காக அவர் கவலைப்படுகிறார் என்பதையெல்லாம் உணர்வதன் மூலம் நமக்கு ஆண்டவர் மீது உண்மையான அன்பும் இயேசுவின் மீது பக்தியும் ஏற்படும். இந்த அடிப்படையான சத்தியங்களை நாம் அறியாவிட்டால் நம்முடைய விசுவாசம் நிலைத்து நிற்காது என்பதைப் பற்றி இதில் விளக்குகிறார்.
பரிசேயன் வீட்டில் நடந்தது:
லூக்கா 7 : 36 – 48 “பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.”
“அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,”
“அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.”
சீமோன் என்ற பரிசேயன் ஒருவன் இயேசுவை தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தான். பரிசேயர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத போதிலும் ஒரு சில பரிசேயர் அவரை மதித்தனர். இயேசுவும் அவனுடைய அழைப்புக்கு இணங்கி அவனுடைய வீட்டிற்குச் சென்றார். ஜனங்களை ஆசீர்வதிக்க அழைக்கப்பட்ட எல்லா இடத்திற்கும் இயேசு சென்றார். அதேபோல் நமது உள்ளத்திற்குள்ளும், இல்லத்திற்குள்ளும் வருவதற்கு ஆவலாக இருக்கிறார். அந்த நாட்களில் ஒருவரை விருந்துக்கு அழைத்தால், அழைத்தவர் வந்தவுடன் அணைத்து முத்தம் கொடுப்பார்கள். இது அவரை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளம். அடுத்ததாக அவரைக் கனம் பண்ணியதற்கு அடையாளமாகக் கால்களைக் கழுவுவர். இது யூதர்களின் கலாச்சாரத்தில் இருந்த காரியங்கள். ஆனால் இந்த பரிசேயனான சீமோனோ இத்தகைய மரியாதை எதுவும் இயேசுவுக்குச் செய்யவில்லை. இதிலிருந்து இயேசுவைக் கனம் பண்ணவோ, பிரியப்படுத்தவோ அழைக்கவில்லை என்று தெரிகிறது. இந்த பரிசேயனின் வீட்டிற்கு இயேசு வந்திருக்கிறார் என்பதையறிந்து, அந்த ஊரில் வாழ்ந்த பாவியான ஒரு பெண் துணிச்சலுடன் இயேசுவிடம் வந்து மன்னிப்பைத் தேடினாள். தான் கொண்டுவந்த பரிமளத்தைலத்தை வைத்துக் கொண்டு இயேசுவின் பின்னால் நின்று தனக்கு மன்னிப்பு அவரிடத்தில் மட்டுமே கிடைக்கும் என்றெண்ணத்தில் அழுதாள்.
தன் வேசித்தனத்தினால் சம்பாதித்த பணத்தில் மூலமாகத்தான் அந்த நளததைலத்தை வாங்கியிருப்பாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உபாகமம் 23 : 18ல் ஒரு வேசியின் பணம் தேவனுக்குப் படைத்திடக் கூடாது என்ற தேவ கட்டளையைப் பார்க்கிறோம். இப்படி இருப்பது இயேசுவுக்குத் தெரிந்தும், அவர் அதை அனுமதித்தார். ஏனென்றால் தன்னை விருந்திற்கு அழைத்த பரிசேயனைப் போல பழைய ஏற்பாட்டு பிரமாணத்துக்குரியவர் இயேசு அல்ல. அதன்பின் அவள் கண்ணீரினால் இயேசுவின் பாதங்களை நனைத்து, அந்தக் கண்ணீரைத் தன்னுடைய தலைமயிரினால் துடைத்தாள். பின் அவருடைய பாதங்களை முத்தம் செய்து அதில் தான் கொண்டுவந்த பரிமளத் தைலத்தைப் பூசினாள். விருந்துக்கு அழைக்கப்படாவிட்டாலும், இயேசுவுக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த ஆர்வத்தை அவளிடம் பார்க்கிறோம். பின்னாலே நின்று கொள்ளும் பணிவையும், கால்களைத் கண்ணீரினால் நனைத்த பாசத்தையும் பார்க்கிறோம். தனது தலைமயிரினால் இயேசுவின் பாதங்களைத் துடைத்த மாபெரும் தாழ்மையையும், கால்களை முத்தம் செய்யும் கனிவையும் அவளிடம் பரிமளத்தைலத்தைப் பூசிய தியாகத்தையும் பார்க்க முடிகிறது. மனப்பூர்வமான நன்றியையும் அன்பையும் தனது செயலினால் இயேசுவின் பாதத்தில் ஊற்றி இப்பெண் மிகச் சிறந்தவளாகி விட்டாள் .
பரிசேயனின் சந்தேகம்:
லூக்கா 7 : 39, 40 “அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.”
“இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.”
இந்தப் பரிசேயனுக்கு அந்தப் பாவியான பெண் அந்த ஊரைச் சேர்ந்தவளாதலால் அவள் எப்படிப்பட்டவள் என்று தெரியும். எனவே அவன் அந்தப் பெண் செய்த செயலையும் அதற்கு இயேசு ஒன்றும் சொல்லாமல் அவள் செய்ததை அனுமதித்ததையும் பார்த்த போது அவனுடைய மனதில் இயேசு யாரென்ற சந்தேகம் எழும்புகிறது. எனவே அவன் தனக்குள்ளே பேசினான். இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் அந்தப் பெண் ஒரு பாவி என்று அறிந்திருப்பாரே! அப்படித் தெரிந்திருந்தால் எப்படித் தன்னைத் தொடுவதற்கு அனுமதிக்கிறார் என்ற கேள்வி அவன் மனதில் எழும்பியது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனுடைய மனதில் எழும்பிய சந்தேகத்தை அறிந்து அவனுக்குப் பாடம் கற்பிக்க நினைத்து, அவனை நோக்கி “உன்னிடம் ஒரு காரியம் சொல்ல வேண்டும்” என்றார். அதற்கு அவன் போதகரே சொல்லும் என்றான். இதிலிருந்து அவன் இயேசுவைப் போதகராக ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்றறிகிறோம். அப்பொழுது இயேசு இந்த உவமையைக் கூறினார். நமது உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறியும் கர்த்தர், அவன் வாயைத்திறந்து எதுவும் சொல்லாவிட்டாலும் அதை அறிந்தார்.
இயேசு கூறிய உவமையும் பரிசேயனின் பதிலும்:
லூக்கா 7 : 41 – 43 “அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.”
“கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.”
“சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,”
இயேசு பரிசேயனுக்கு இரண்டு கடன்காரர்களை ஒப்புமைப் படுத்தி விளக்குகிறார். ஒருவனுக்கு ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றோருவனுக்கு ஐம்பது வெள்ளிக்காசும் கடன் இருந்தது. அந்த இருவருக்கும் கடனைச் செலுத்த முடியாதபடியால் அந்த இருவருடைய கடன்களையும் கடன் கொடுத்தவன் மன்னித்து விட்டான். இவர்களில் யார் அவனிடம் அதிகமாக அன்பாயிருப்பான் என்று இயேசு கேட்டார். அதற்கு சீமோன் எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ, அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்று பதில் கூறினான். இதில் எஜமானனாக இயேசுவும் கடன்காரர்களாக நாமும் இருக்கிறோம். அதற்கு இயேசு சரியாய் நிதானித்தாய் என்று அவனைப் பாராட்டினார். தான் மன்னிக்கப்படுவதற்கு அநேக பாவங்கள் இல்லை என சீமோன் எண்ணிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டவே இந்த உதாரணத்தைக் கூறினார். ஆகவேதான் அவன் ஆண்டவரை அதிகமாய் அன்பு கூறவில்லை. ஆனால் அந்த மனமாற்றம் அடைந்த வேசியோ “தான் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்பதை அறிந்திருந்தாள். அவளும் ஒரு பெரிய பாவிதான். அவளுடைய அத்தனை பாவங்களும் இயேசுவால் மன்னிக்கப்பட்டது. . அவள் அதிகம் அன்பு கூர்ந்தாள். நாம் எவ்வளவு அதிகம் மன்னிக்கப்பட்டோம் என்ற உணர்வைப் பொறுத்தே நாம் ஆண்டவரிடத்தில் செலுத்தும் அன்பும் இருக்கிறது.
உலகத்தில் நான்கு விதமான மனிதர்களை பார்க்கிறோம். முதலாவது தான் பாவி என்று ஒத்துக்கொள்வதேயில்லை. காரணம் அவன்தன் மனம்போன போக்கில் வாழ்கிறான். அவனுடைய மனசாட்சி உறுத்தினாலும் அவன் ஒத்துக்கொள்வதேயில்லை. இரண்டாவது மனிதன் தான் ஒரு பாவி என்று ஒத்துக்கொள்கிறான். ஆனால் அவன் தான் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ததாக ஒத்துக்கொள்வதேயில்லை. இளையகுமாரன் தன் தகப்பனிடம் திரும்பி வந்து லூக்கா 15 : 21ல் “குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்,” என்றான். அவன் தன் தகப்பனின் சொத்தைத்தான் அழித்தான். ஆனாலும் தான் செய்தது தேவனுக்கு விரோதமான செயல் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. மூன்றாவது மனிதன் தன்னை நல்லவன் என்று கூறி மற்றவர்களைப் பாவி என்பான். நான்காவது மனிதன் தன்னைப் பாவி என்று ஒத்துக்க கொள்ளுகிறவன். முதல் இரண்டு நிலையில் நாம் இல்லாவிட்டாலும் மூன்றாவது நான்காவது நிலையில் நாம் இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். நாம் எல்லோரும் பாவிகள்தான். கைவிடப்பட்டவர்கள்தான். நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிடும்போது தேவன் நம்மேல் அன்பு வைத்து நம்முடைய எல்லா பாவங்களையும் மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிக்க உண்மையும், நீதியுமுள்ளவராக இருக்கிறார். பவுல் அப்போஸ்தலன் தன்னை பிரதான பாவி என்றும், அகாலப் பிறவி என்றும் கூறுகிறார். இயேசுவின் அன்பு தன்னை நெருக்கி ஏவுகிறது என்கிறார். பவுல் யூதர்களால் அடிக்கப்பட்டார். கல்லெறி பட்டார். செத்துப் போய்விட்டாரென்று அவரைப் பட்டணத்திற்கு வெளியே போட்டு விட்டனர். அத்தனை பாடுகள் பட்டாலும் பவுல் கிறிஸ்துவின் அன்பை விட்டு உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ, தன்னைப் பிரிக்க முடியாது என்று ரோமர் 8 : 35 – 39ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.
இயேசு கூறிய விளக்கம்:
லூக்கா 7 : 44 – 47 “ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.”
“நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.”
“நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.”
“ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி”
“அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.”
மேலும் இயேசு இங்கு சீமோனுக்குப் பாடம் கற்பிக்கிறார். இயேசு சீமோனை நோக்கி தான் அவன் வீட்டுக்கு வந்தபோது கால்கள் கழுவத் தண்ணீர் கூடத் தரவில்லை, ஆனால் அந்தப் பெண் தன் கண்ணீரினால் தன் கால்களைக் கழுவினாள் என்றார். மேலும் அவன் தன்னை வரவேற்று முத்தம் செய்யவுமில்லை, தன் தலைக்கு எண்ணெய் பூசவுமில்லை என்றும், ஆனால் அவளோ தான் உட்பிரவேசித்தது முதல் தன்னுடைய பாதங்களை ஓயாமல் முத்தம் செய்து, தன்னுடைய பாதங்களுக்குப் பரிமளத்தைலம் பூசினாள் என்றார். எனவே அவள் தன்னிடம் அதிகமாக அன்பு கூர்ந்ததால் அவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று கூறினார். சீமோனோ தான் ஒரு பாவி என்றும் எண்ணவில்லை. அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கில்லை இந்த முக்கியமான சத்தியத்தை இயேசு அவனுக்கு விளக்கிக் கூறினார். . மாய்மாலமான வாழ்க்கை வாழ்ந்த அந்த பரிசேயன் மன்னிக்கப்படாத பாவியாக அங்கே உட்கார்ந்திருந்தான். மற்ற பரிசேயர்கள் இயேசுவை அவமானப்படுத்திப் பேசினதைப் போல சீமோன் பேசவில்லை. ஆனால் அவரை சரியான விதத்தில் கனம் பண்ணவில்லை. இவனைப் போல நாமும் நாம் ஒரு பாவி என்ற உணர்வில்லாமல் நம்முடைய பாவத்தை கர்த்தருடைய சமூகத்தில் அறிக்கையிடாமல் இருப்போமென்றால் பரிசேயனான சீமோனைப் போலத்தானிருப்போம். நாம் நம்மை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டு தேவனுக்குச் சேவை செய்ய முடியாது. தேவனைக் கனம் பண்ணுவதற்கு யாரும் வெட்கப்பட வேண்டியதில்லை. மனுஷர்கள் நம்மைப் பாராட்ட வேண்டுமென்று நினைக்காமல் கர்த்தராகிய இயேசு நம்மைப் பாராட்ட வேண்டுமென்று நினைத்து செயல் புரிந்தால் அதில் கிடைக்கும் சமாதானமும் சந்தோஷமும் வேறு எதிலும் கிடைக்காது.
கருத்து:
ஆண்டவருக்காக நாம் செய்கின்ற பணியை விட ஆண்டவரிடம் நாம் செய்கின்ற அன்பும் ஆராதனையுமே கர்த்தர் விரும்புகின்றார். பரிசேயனான சீமோன் ஆண்டவருக்கு மிகச்சிறந்த விருந்தைக் கொடுத்தான் ஆனால் பாவியான ஸ்திரீயோ தன்னிடத்தில் உள்ள மிகச்சிறந்த வெகுமதியான கண்ணீரோடு கூடிய தொழுகையைக் கொடுத்தாள். ஆகவே ஆண்டவரும் இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே என்று பாராட்டினார். இயேசுவை நேசிப்பது இதயப்பூர்வமாக இருக்க வேண்டுமென பிதாவானவர் விரும்புகின்றார். இயேசுவின் மேல் நாம் வைத்திருக்கிற அன்பே அவருக்குப் பணி செய்வதற்கு நம்மை உந்தித் தள்ளுகிறது. மாத்திரமல்ல பாவத்தை வெறுக்கவும் நமக்கு உதவி செய்கிறது. கர்த்தருடைய வார்த்தையைத் தியானித்து ஏற்றுக்கொண்டு அவற்றின்படி செய்வது அவரில் அன்பு கூறுவதாகும். இயேசுவில் அன்பு கூறுவோம். இந்த உலகை வென்றிடுவோம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…