இயேசுவின் உவமைகள்

மலைமேல் இருக்கிற பட்டணம், விளக்கு – மத்தேயு 5 : 14 – 16, லூக்கா 8 : 16

உலகத்தில் நடைமுறையிலிருக்கும் ஒரு காரியத்தை கதையாகச் சொல்லி சத்தியத்தை நமக்கு இயேசு கற்றுக் கொடுத்தார். இந்த உவமை இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களிடம் தனது மலைப்பிரசங்கத்தில் கூறினார். இதில் விளக்கு, விளக்குத்தண்டு, மரக்கால், மலை மேல் இருக்கிற பட்டணம் போன்றவைகளைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. இதை மத்தேயு 5 : 14 – 16லும், லூக்கா 8 : 16லும் காணலாம். இயேசு இதைக் கூறும்போது இயேசுவின் தாயும், அவருடைய சகோதரரும் அங்கிருந்தனர் (லூக்கா 8 :19). ஜனக்கூட்டம் அதிகமாயிருந்ததால் அவர்களால் இயேசுவைப் பார்க்க முடியவில்லை. இயேசு ஞானஸ்நானம் பெற்றபின் வீட்டில் இல்லை. தாயைவிட, சகோதரர்களைவிட, தேவவசனத்தின்படி நடக்கிற வெளிச்சத்தின் பிள்ளைகளை இயேசு அடையாளம் காட்டுகிறார். இந்த உவமையானது கிறிஸ்துவின் பிள்ளைகள் உலகத்திற்கு ஒளியாக இருக்க வேண்டுமென்றும் விசுவாசிகள் கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் ஒளியாயிருப்பார்களென்ற உன்னதமான விதிமுறையை நமக்குச் சொல்கிறது. 

மலைமேலிருக்கிற பட்டணம்:

மத்தேயு 5 : 14 “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.”

இயேசு தான் உலகத்துக்கு வெளிச்சமாக இருப்பதால் தன்னைப் பின்பற்றுபவர்களைப் பார்த்து “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று கூறுகிறார். நீங்கள் உலகத்துக்கு வெளிச்சம் என்று இயேசு சொல்வது கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பற்றி அவர் கொண்டுள்ள நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகிறது. திரளான ஜனங்களைப் பார்த்த போது இயேசு மலையின் மேல் ஏறினார். அந்த மலை கடல்மட்டத்திலிருந்து 2650 அடி உயரத்தில் இருந்தது அங்கிருந்து பார்த்தால் பாலஸ்தீன பட்டணம் முழுவதும் தெரியும் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகம் படைக்கப்படுவதற்கு முன் பூமியில் வெளிச்சம் இல்லை. இருள் தான் இருந்தது. கர்த்தர் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று (ஆதியாகமம் 1 : 2 , 3). தேவன் தான் உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுத்தவர். சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினவர். கர்த்தர் முதலில் உண்டாக்கியது வெளிச்சம்தான். தேவன் மனிதனை உண்டாக்கிய போது வெளிச்சமாகத்தான் உண்டாக்கினார். கர்த்தருடைய வெளிச்சத்தில் நாம் வெளிச்சம் காண்கிறோம் என்று சங்கீதம் 36 : 9ல் பார்க்கிறோம். 

ஏசாயா 60 : 19ல் “கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்.”என்றும் 

மீகா 7 : 8ல் “ நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.” 

என்றும் கூறுவதைப் பார்க்கிறோம். தேவன் ஒளியாக இருக்கிறார் ஆனால் அந்த ஒளியை நாம் காணமுடியாது. உலகமானது பாவம், அறியாமை, இச்சை ஆகிய இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இருளின் காரணம் என்னவென்றும். அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இயேசுவின் வெளிச்சம் நமக்குக் காட்டுகிறது. நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும்போதுதான் கிறிஸ்துவின் வெளிச்சம் நம்மில் பிரதிபலிக்கும். 

மலையின் மேலிருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாதது போல, கிறிஸ்துவின் வெளிச்சம் நம்மிடமிருந்து வெளிப்படுவதை நம்மாலேயே மறைத்துக் கொள்ள முடியாது என்ற உண்மையை கிறிஸ்து இங்கு கூறுகிறார். நம் நாட்டில் சில பட்டணங்கள் மலையின் மேல் இருக்கிறது. ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல், மாஞ்சோலை போன்றவைகள் மலையின் மேல் இருக்கின்றன. இயேசு ஏன் இதைக் கூறுகிறார் என்றால், மலையின் மேலுள்ள பட்டணத்தை அதன் கீழே அதைச் சுற்றி இருக்கிற எல்லா பகுதிகளிலிருந்து, எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். யூதேயாவிலுள்ள பட்டணங்கள் அனேகம் மலையின் மேல்தான் இருக்கும். எருசலேம் பட்டணமே ஒரு மலையின் மேல் தானிருக்கிறது. தூரத்தில் இருந்து வரும் போது அந்தப் பட்டணங்களைப் பார்க்கலாம். அதை யாரும் மறைக்க முடியாது. அதேபோல் உலகத்தில் வாழும் தேவபிள்ளைகளாகிய நாம் எல்லோருக்கும் தெரியும் வண்ணமாக ஆசீர்வாதமாக, பரிசுத்தமாக வாழ வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் சாட்சி தூரத்தில் உள்ளவர்களாலும், புற மதத்தினராலும் எளிதாகக் கண்டு கொள்ளபட வேண்டும். நம்மை கிறிஸ்துவுக்குள் மறைத்துக் கொள்ளவேண்டும். நம்மில் கிறிஸ்து வெளிப்பட வேண்டும். இதைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி,

ஏசாயா 8 : 18 “இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.”

கூறியதிலிருந்து நாம் கர்த்தருடைய பிள்ளைகளென்றும், இஸ்ரவேலின் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோமென்று அறிகிறோம். 

மரக்கால், விளக்குத்தண்டு:

மத்தேயு 5 : 15 “விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.”

லூக்கா 8 : 16 “ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.”

இந்த வசனத்தில் நம்முடைய சொந்த வீட்டில், நம்முடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அயலாகத்தார், மற்றும் நாம் வேலை செய்யும் இடங்களில் நாம் எவ்விதமாக அறியப்பட வேண்டுமென்பதை இந்த எடுத்துக்காட்டின் மூலம் இயேசு விளக்குகிறார். அந்தக் காலத்தில் மின்சாரங்கள் கிடையாது. விளக்கினால்தான் வீட்டிற்கு வெளிச்சம் கிடைக்கும். விளக்கு எரிந்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. அது உபயோகப்பட வேண்டுமானால் மற்றவர்கள் காணும்படியான இடத்தில் வைக்கப்பட வேண்டும். அதனால் விளக்கைக் கொளுத்தி விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள். அப்பொழுது அது வீடு முழுவதும் வெளிச்சம் கொடுக்கும். வீட்டிலிருக்கிற நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய், வெளிச்சமாய், பாதை காட்டுகிறவர்களாய் இருக்க வேண்டுமென்று இயேசு கூறுகிறார். யாரும் விளக்கைக் கொளுத்தி மரக்காலில் மூடி வைக்க மாட்டார்கள். மரக்கால் என்பது அளக்கிறபடி. அதை வைத்து விளக்கை மூடினால் வெளிச்சம் மறைக்கப்பட்டு விடும். லூக்கா 8 : 16ல் ஒருவனும் விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினால் மூடவும் மாட்டான். கட்டிலின் கீழ் வைக்கவும் மாட்டான் என்கிறார். பாத்திரமென்பது வீட்டிலிருக்கும் பொருள் இது வீட்டு வேலையைக் காண்பிக்கிறது. வீட்டில் பல வேலைகள் உண்டு. அது அவசியம் தான். ஆனால் இயேசு மார்த்தாள் வீட்டிற்குச் சென்றபோது மார்த்தாள் இயேசுவுக்குப் பணிவிடை செய்தாள். ஆனால் இயேசு அவளை பாராட்டிப் பேசவில்லை. 

கட்டிலின் கீழ் என்பது சுகபோக ஜீவியத்தை, அந்தரங்க ஜீவியத்தைக் காட்டுகிறது. அந்தரங்கத்தில் சுத்தமாக இல்லாவிட்டால், விளக்கு அணைந்து விடும். நம்முடைய அந்தரங்கத்தைக் கர்த்தர் மட்டுமே காண முடியும். விளக்கு அணைந்து போகுமானால் காணாமற்போன நிலைமையில் உள்ளோம் என்பதாகும். உணர்வில்லாத இருதயம் விளக்கை அணைக்கும். அப்பொழுது நாம் மரித்த நிலைமையிலிருப்போம். அப்பொழுது நாம் சத்தியத்தில் நடக்க முடியாது. அதனால் வாழ்க்கையில் ஒருமனமில்லாமல் ஐக்கியமில்லாமல் ஆகிவிடும். நற்செயல்கள் செய்ய நாம் தவறும்போது, தவறுகளுக்கு ஒத்துப் போகும்போது, தவறுகளை எதிர்த்துப் பேசாதபோது, பாவத்தினால் கறைபடும்போது, நற்செய்தியை அறிவிக்கும் வாய்ப்பைத் தள்ளி விடும்போது, உண்மைக்காகத் தைரியமாக நிற்காதபோது விளக்கை மரக்காலால் முடுக்கிறவர்களாக இருக்கிறோம். எனவே வெளிச்சமானது இருக்க வேண்டிய இடத்தில் இருக்குமானால் அதை எந்தப் பொருளாலும் மறைக்க முடியாது என்கிறார். விளக்கைக் வைக்கக்கூடாத இடத்தில் வைப்போமானால் அது ஒருவருக்கும் பிரயோஜனமில்லாததாகிவிடும். எனவே நம்மில் நாமே வெளிச்சமாயிராமல் கர்த்தருக்குள் நாம் வெளிச்சமாயிருக்கிறோம். 

இயேசுவே ஒளி:

யோவான் 8 : 12 “மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

யோவான் 9 : 5 “நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.”

இயேசு இதில் ஜனங்களை நோக்கித் தான் உலகத்துக்கு ஒளியாக இருப்பதால் தன்னைப் பின்பற்றுகிறவர்களும் பாவ இருளில் நடவாமல் ஜீவஒளியைப் பெறுவார்கள் என்கிறார். ஒரு மனிதன் மற்றோரு மனிதனுக்கு வெளிச்சத்தைக் கொடுக்க முடியாது. சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் ஒளியென்றுதான் அழைக்கப்பட்டுகின்றன. இவைகள் சரீரத்திற்குரிய வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஆனால் இயேசுவை மட்டுமே ஜீவஒளி என்கிறோம். அந்த ஜீவ ஒளியானது நமக்கு நன்மை எது, தீமை எது என்று காட்டுகிறது. சரி எது, தவறு எது என்பதைப் புரிந்து கொள்ள வைக்கிறது. இயேசுவின் ஒளி நமக்குள் வந்துவிட்டால் நாம் நன்மை செய்கிறவர்களாக மாறிவிடுவோம். இயேசு ஆவிக்குரிய வெளிச்சத்தைக் கொடுக்கிறார். யோவான் 1 : 4 ல் இயேசுவுக்குள் ஜீவன் இருந்ததாகவும், அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியைக் கொடுத்ததாகவும் பார்க்கிறோம். உயிர் போகிற மனிதனுக்கு உயிர் திரும்பி வந்தது போல, பாவங்களில் மரித்தவர்களாக இருந்தவர்களுக்கு இயேசுவின் ஒளி இருளில் பிரகாசிக்கிறது. (யோவான் 1 : 5). சாத்தானின் அதிகாரத்திற்கும், பாவத்திற்கும் எதிராக கிறிஸ்துவின் ஒளி பிரகாசிக்கிறது. அவைகளால் ஒளியை மேற்கொள்ள முடியவில்லை. இயேசு அவைகளைச் சிலுவையில் தோற்கடித்தார் (கொலோ 2 : 15). இயேசு கொடுக்கிற ஒளி இருளால் மூடப்படாத ஒளி. 

யோவான் 1 : 9 “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.”

நீதியின் சூரியனாகிய கிறிஸ்து யூதருக்கும், மற்ற மக்களுக்கும் பிரகாசிக்கும் ஒளியாக இருக்கிறார் (லூக்கா 2 : 30). தம்மைப் பின்பற்றுகிறவர்களை இயேசு ஒளியாகத் திகழச் செய்கிறார். சூரியனின் ஒளி நிலவில் பிரதிபலிப்பதைப் போன்று கிறிஸ்துவின் ஒளி நமக்குள் பிரகாசிக்க இடம் கொடுத்து பிரகாசிக்க வேண்டும். அந்த ஒளி நம்மில் பிரதிபலிப்பதால் நாம் ஒளி வீசுகிறவர்களாயிருக்கிறோம். ஏசாயா தீர்க்கதரிசி 60 : 19ல் கர்த்தர் தான் நமக்கு நித்திய வெளிச்சம் என்கிறார். மீகா தீர்க்கதரிசி மீகா 7 : 8ல் நாம் இருளில் உட்கார்ந்தாலும் கர்த்தர் நாக்கு வெளிச்சமாயிருப்பார் என்கிறார். இயேசு ஒளியாக வந்தும் (1 யோவான் 1 : 5) அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இருளை விரும்பினார்கள். அதாவது பாவத்தை விரும்பினார்களென்று பொருள். முதலில் மனுஷன் பாவம் செய்ய அறியாதவனாயிருந்தான். என்றைக்குச் சாத்தானுக்கு கீழ்ப்படிந்தானோ அன்றே பாவம் செய்தான். என்றைக்குப் பாவம் செய்தானோ அன்றே வெளிச்சத்தை இழந்தான். அதனால் தீமை செய்யப் பழகி விட்டான். வேதவசனமே வெளிச்சம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நமது இருண்ட வாழ்க்கைக்கு வெளிச்சத்தைத்தர விரும்புகிறார். நமது மனமும், இருதயமும், முழு ஜீவியமும் இருளடைந்து காணப்பட்டாலும், தேவன் சங்கீதம் 119 : 130 ல் கூறியிருப்பதைப் போல தேவனுடைய வசனத்தின் வெளிச்சம் பேதைகளைக்கூட உணர்வுள்ளவர்களாக்கும். வசனமானது நமக்குள் பிரவேசிக்க இடம் கொடுக்க வேண்டும். அவ்வாறுதான் லீதியாளின் இதயம் திறக்கப்பட்டது. எம்மாவூர் சீஷர்களின் இதயம் இயேசு பேசும்போது திறக்கப்படவில்லை. இயேசு வேதவசனத்தை எடுத்துக் பேசும்போதுதான் அவர்களின் இதயம் கொழுந்துவிட்டெறிந்தது. இயேசுவின் சீஷர்களாகிய நாம் நமக்குக் கொடுத்த அந்த இயேசுவின் வெளிச்சத்தை உள்ளான ஆவியிலே பெற்று உலகத்திலுள்ள மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். 

 நமது நற்கிரியைகள்:

மத்தேயு 5 : 16 “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.”

நம்மைத் தேவன் நற்கிரியைகள் செய்யவே ஆயத்தம் பண்ணியிருக்கிறார். தேவனுடைய சித்தத்தைச் செய்வதே நற்கிரியையாகும். கிறிஸ்தவன் என்ற முறையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நற்கிரியைகளே. இரண்டு காரியங்களை இயேசு இங்கு கோடிட்டு காட்டுகிறார். 1. மனிதர்கள் நம்முடைய நற்கிரியைகளைக் காண வேண்டும். 2. அவற்றின் மூலம் பிதா மகிமைப்பட வேண்டும் என்பதாகும். நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். ஆனால் நாம் செய்யும் நன்மைகள் யாவருக்கும் தெரிய வேண்டுமென்பதற்காக விளம்பரப்படுத்தலாகாது. நமது நற்கிரியைகளின் நோக்கம் பரலோகப் பிதாவை மகிமைப் படுத்துவதாக அமைய வேண்டும். இதை ஏசாயா தீர்க்கதரிசி, 

ஏசாயா 42 : 8ல் “நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.” என்றும் 

ஏசாயா 48 : 11 “என்னிமித்தம், என்னிமித்தமே அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.”

என்றும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். பிதா மகிமைப்படும்படியாக நாம் நடப்பிக்கும் நற்கிரியைகளே நம்முடைய வெளிச்சம் என்று இயேசு கூறுகிறார். அந்த வெளிச்சம் மனிதர்கள் முன்பாக பிரகாசிக்கும்படியாக நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்முடைய நற்கிரியைகளாகிய வெளிச்சம் பிரகாசிக்கும் போது உலகம் நம்மைக்கண்டு அங்கீகரிக்கிறது. பலருக்கு ஆசீர்வாதமாகிறோம். தேவனுடைய சித்தத்தைச் செய்வதே நற்கிரியையாகும். ஆனால் இவற்றின் மூலம் வரும் பெயர், பிரஸ்தாபம், செல்வாக்கு புகழ், ஐசுவரியம் இவைகளை நாடி ஓடக்கூடாது. நம்மைக் கிறிஸ்துவுக்குள் மறைத்துக் கொள்ள வேண்டும். நம்மில் கிறிஸ்து வெளிப்பட வேண்டும். நாம் கிறிஸ்துவின் பிள்ளைகளானால், நம்முடைய எல்லா செயல்களிலும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். ஈசாக்கைப் பார்த்து அபிமெலேக்கு “கர்த்தர் நிச்சயமாய் உன்னோடிருக்கிறார்” என்றார் (ஆதியாகாமம் 26 : 28). யோசேப்போடு கர்த்தர் இருக்கிறாரென்பதைப் பொத்திப்பார் கண்டானென்று ஆதியாகமம் 39 : 3ல் பார்க்கிறோம். உலகத்திலுள்ள தேவனைத் தெரியாதவர்கள் நம்மைப் பார்த்து இவ்வாறு சொல்ல வேண்டும். 

கருத்து:

இந்த உவமையின் கருத்து என்னவென்றால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்றப்படுகிற வெளிச்சம் மரக்காலால் முடி வைக்கப்பட்ட விளக்காயிராமல், விளக்குத்தண்டின் மேல் வைத்த விளக்கைப் போலிருக்க வேண்டும். ஒரு பள்ளத்தாக்கில் மறைந்திருக்கிற பட்டணமாக இராமல் மலையின் மேலிருக்கிற பட்டணமாக இருக்க வேண்டும். தேவனுடைய வசனத்தை வாங்கி, வெளிச்சத்தை வாங்கி மனதிற்குள் புதைத்துக் கொண்டு வெளியே தெரியாத மனிதனைப் போலிருக்கக் கூடாது. இயேசு என்ற ஒளியை நோக்கிப் போக வேண்டும். தேவ வசனங்களை இருதயங்களில் முளைக்க வைத்து, இருதயத்தை வெளிச்சமாகும் ஜீவவசனத்தை விளக்குத் தண்டின்மேல் வைத்து எல்லா இரகசியங்களையும், எல்லா மறைபொருட்களையும் விளக்க நம்மைத் தேவன் அழைக்கிறார். “உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்” என்று ஏசாயா தீர்க்கதரிசி உரைத்த தீர்க்கதரிசனம் கிறிஸ்துவில் மட்டுமல்ல நம் ஒவ்வொருவரிலும் நிறைவேறுகிறது. நம்மிலும் நாம் விசுவாசித்து அறிவிக்கும் சுவிசேஷத்திலும் மட்டுமே இருளை நீக்கும் வெளிச்சம் இருக்கிறது. எனவே ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசித்தே ஆக வேண்டும் (பிலிப்பியர் 2 : 14). கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago