அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன் என்ற இடம் மெகிதோ மலை என்று குறிப்பிடப்பட்டாலும், எருசலேமுக்கு அருகே எகிப்திலிருந்து தமஸ்கு பட்டணத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலிலுள்ள மெகிதோ என்ற மலைப் பள்ளத்தாக்கான பகுதியை இது குறிப்பிடுகிறது. இதை யோசாபாத் பள்ளத்தாக்கு என்றும் கூறுவர். இதன் பொருள் “ஒன்று சேருகிற இடம்” என்பதாகும். கர்மேல் மலையின் தென்பகுதியில், பாலஸ்தீனின் நடுவில் அமைந்திருக்கும் இந்த நிலப்பரப்பு உலகின் மிகச் சிறந்த யுத்த களமாக விளங்குகிறது. பாபிலோன், அசிரியா, சிரியா, எகிப்து, பெர்சியா, துருக்கி, அரேபியா தேசங்களின் இராணுவங்கள் இங்கு யுத்தம் செய்திருக்கிறார்கள். கோகுக்கும் மாகோக்கும் எதிராகத் தேவன் நடத்தும் கடைசி யுத்தம் இஸ்ரவேலின் மலைப்பகுதிகளில் தான் நடக்குமென்ற தீர்க்கதரிசனத்தை எசேக்கியேல் 38 : 8, 21; 39 : 24 : 17 ஆகிய வசனங்களில் காணலாம்.
ஏற்கெனவே மெகிதோவில் நடந்த நான்கு யுத்தங்களை வேதம் குறிப்பிடுகிறது. அவைகள்: 1. சிசெராவோடு தெபோராளும் பாராக்கும் செய்த யுத்தம் (நியாயாதிபதிகள் 5 : 19 – 21), 2. அகசியாவுக்கும் யெகூவுக்கும் நடந்த யுத்தம் (2 இராஜாக்கள் 23 : 27), 3. பார்வோன் நெகோவுக்கும் யோசியாவுக்கும் நடந்த யுத்தம் (2 இராஜாக்கள் 23 : 29, 30), 4. மீதியானியருக்கு எதிரான கிதியோனின் யுத்தம் (நியாயாதிபதிகள் 7 ம் அதிகாரம்), சவுலுக்கும் பெலிஸ்தியருக்கும் நடந்த யுத்தம் (1 சாமுவேல் 31 : 8). தற்போதைய இஸ்ரவேல் தேசத்தில் மெகிதோ நிலப்பரப்பில் ரமாட் டேவிட் என்ற நவீன விமானப்படைத்தளம் அமைந்திருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் யாரும் இந்த இராணுவத் தளத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை.
வெளிப்படுத்தல் 16 : 12 “ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. “
ஆறாம் தூதன் தன்னுடைய கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான். அந்த நதியின் தண்ணீர் வற்றிப் போயிற்று. ஆதியாகமம் 2 : 11 – 14 ல் ஏதெனில் பைசோன், கீகோன், இதெக்கேல், ஐபிராத் என்ற நான்கு நதிகள் உற்பத்தியாகிறது என்று பார்த்தோம். இதில் மூன்று நதிகள் இப்போதில்லை. அதில் ஒன்றுதான் இந்த ஐபிராத் நதி. “ஐபிராத் நதி” என்ற வார்த்தை வேதத்தில் 21 இடங்களிலும், “ஐபிராத் நதியான பெரிய நதி” என்று நான்கு இடங்களிலும் குறிப்பிடப்படுகிறது. இது 1800 மைல் நீளமுடையது. உலகின் முதல் பாவம், முதலாவது கொலை, முதலாவது யுத்தம் இந்த நதியருகே தான் நடந்தது. முதலாவது கோபுரம் இதனருகே தான் கட்டப்பட்டது. முதலாவது பட்டணம் (பாபிலோன்) இதனருகே தான் உருவானது. பாபிலோனியர்களால் இஸ்ரவேலர் சிறைபிடிக்கப்பட்டு இங்கு தான் கொண்டுவரப்பட்டனர். இந்த நதிக்கு அப்புறத்திலே காணப்படுகின்ற கீழ்த்தேசங்களிலே உலக ஜனத்தொகையில் பெரும்பகுதி காணப்படுகிறது. நேபுகாத்நேச்சாரின் மகன் பெல்ஷாத்சார் இருக்கும் போது பெர்சிய மன்னன் கோரேஸ் ஐபிராத் நதியைத் திசை திருப்பி வற்றிப் போகப் பண்ணிய பின்புதான் பாபிலோன் பட்டணத்தை கைப்பற்றினான்.
ஆறாம் தூதன் எக்காளம் ஊதியபோது ஐபிராத் நதியண்டையில் கட்டப்பட்டிருந்த நான்கு தூதர்கள் அவிழ்த்து விடப்பட்டதை வெளிப்படுத்தல் 9 : 13, 14 ல் பார்க்கிறோம். இந்தப் பெரிய நதி வற்றிப்போகச் செய்ததற்குக் காரணம், சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையிலிருந்து வரும் ராஜாக்களின் ராணுவ வீரர்கள் இதன் மூலமாகப் பாலஸ்தீனத்துக்குள் பிரவேசிக்கிறார்கள். மேலும் வெளிப்படுத்தல் 9 : 16 ல் கிழக்குத் திசையிலிருந்து வரும் ராஜாக்களின் குதிரைச் சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது என்றும், அவிழ்த்து விடப்பட்ட நான்கு தூதர்களும், அவர்களின் ராணுவத்தை ஆயத்தம் பண்ணுவார்கள் என்றுமுள்ளது. முதல் முறையாக கிழக்கு நாடுகளின் ராணுவம் மேற்கு நாடுகளுக்குள் வரும்படியாக ஐபிராத் நதி வற்றிப் போகிறது. இஸ்ரவேலர் பார்வோனின் இராணுவத்தினால் அழிக்கப்படாதபடிக்கு தேவன் செங்கடலை வற்றிப்போகப்பண்ணினார் (யாத்திராகமம் 14 : 21). அவர்கள் கானானுக்குள் பிரவேசிக்கும்படியாக யோர்தான் நதியைப் பிரிந்து போகச் செய்தார் (யோசுவா 3 : 17).
வெளிப்படுத்தல் 16 : 13, 14, 16 “அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது. அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.”
இந்நிகழ்ச்சி மகா உபத்திரவ காலத்தின் இறுதியில் நடைபெறும், உலகமெங்குமுள்ள நாடுகளின் தலைவர்களைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு இஸ்ரவேல் நாட்டையும், அதன் தலைநகரான எருசலேமையும் கைப்பற்றுவதற்குச் சாத்தானும், அந்திகிறிஸ்துவும், கள்ளத்தீர்க்கதரிசியும் முயற்சிப்பார்கள். போரிடுவதற்கு வரும் பலநாடுகளில் தலைவர்களுக்கும் படைகளுக்கும் தங்கள் கிறிஸ்துவுக்கு எதிராக போரிடப்போகிறோம் என்று தெரியாமலிருக்கலாம். அந்திகிறிஸ்துவும், கள்ள தீர்க்கதரிசியும் மனிதர்கள். அசுத்த ஆவிகள் இரட்சிக்கப்படாத மனிதருக்குள் செல்வதும் அவர்களிலிருந்து வெளியே செல்வதும் நடைபெறக்கூடியதாகுமென்பதை லூக்கா 11 : 24 – 26 ல் காண்கிறோம். எனவே அசுத்த ஆவிகள் அவர்களிலிருந்து புறப்படும். அந்திகிறிஸ்துவின் ஆட்சி பூமியின் ஒரு பகுதியில் தானிருக்குமென்று இப் பகுதியிலிருந்து அறிகிறோம். அல்லது ஆட்சிக்கு வெளியே இருப்பவர்களை சேர்ப்பதற்கு முயற்சி செய்வதிலிருந்து இது தெரிகிறது. இதை யோவேல் தீர்க்கதரிசி,
யோவேல் 3 : 2 “நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,” என்றுள்ளது.
இந்த ஆவிகள் (மனிதர் மூலம்) செய்யும் அற்புதங்களைக் கண்டு, தாங்களும் சேர்ந்து கொண்டு போரில் வெற்றி பெறலாம் என்றெண்ணி, பூமியின் தலைவர்கள் அந்திகிறிஸ்துவோடு சேர்ந்து போரிட இணங்குவர். ஆகாப் ராஜா இவ்விதம் போருக்குத் தூண்டிய ஒரு ஆவியைப் பற்றி 1 இராஜாக்கள் 22 : 19 – 23 ல் பார்க்கிறோம். “அப்பொழுது” என்ற வார்த்தை ஐபிராத் நதி வற்றிப் போவதினால் கிழக்குத் திசை ராஜாக்களின் இராணுவம் பாலஸ்தீனுக்குள் பிரவேசிக்கும் போகிறது என்பதாகும். பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள் கடைசி காலத்தில் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். இஸ்ரவேல் ஒரு சிறிய நாடு. எனவே அதை எதிர்த்துப் போரிடுவதற்கு ஒரு பெரிய படை தேவையில்லை. ஆனால் தாங்கள் கிறிஸ்துவை எதிர்த்துப் போரிட நேரிடுமென்பது சாத்தானுக்குத் தெரியுமென்பதால் உலகநாடுகளின் படைகளைத் திரட்டுவதற்கு முயற்சி செய்வான். ஆறாவது கோபக்கலசத்துக்கும், வலுசர்ப்பம், மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி ஆகிய மூன்று நபர்களின் வாயிலிருந்து தவளைக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டு வருவதை யோவான் பார்க்கிறார்.
இவை தவளைகளைப் போல அசுத்தமானவை, அருவருப்பானவை (லேவியரா கமம் 11 : 10). அவர்கள் பூமியெங்கும் பொய்யின் ஆவியாக செயல்படும் விதத்தை 1 இராஜாக்கள் 22 : 21, 22 ல் பார்க்கிறோம். இந்த மூன்று அசுத்த ஆவிகளும் வலுசர்ப்பம், மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி ஆகியோரின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. அவை அவர்களுடைய தூதுவர்களாகவும், செய்தியாளர்களாகவும் செயல்படும். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசின் ஆவிகள். இரண்டு வஸ்திரமுடுத்திய சாட்சிகளுக்குப் போட்டியாக இவைகள் பொய்யான அற்புத அடையாளங்களை நடப்பிக்கின்றன. இந்த அடையாளங்களின் மூலமாகப் பூமியின் ராஜாக்கள் கவரப்படுகிறார்கள். அந்திகிறிஸ்துவுக்கு எதிராக ஆயத்தமாக்கப்பட்ட கிழக்குத் திசையிலிருந்து புறப்படும் இராணுவம் அவனோடிணைந்து சர்வவல்லமையுள்ள தேவனுடன் யுத்தம் செய்யத் துணிகரம் கொள்ளுகிறது.
செப்பனியா 3 : 8 “ ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிரகோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும்.”
அவைகள் எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தன.
வெளிப்படுத்தல் 19 : 11 – 14 “பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். அவருக்குப்பின் செல்லும் சேனைகளும் வெண்மை யான உடை அணிந்து வெள்ளக் குதிரைகளின் அவருக்குப் பின்சென்றார்கள்.”
இயேசுவானவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது வானம் திறக்கப்பட்டது (மத்தேயு 3 : 16). ஸ்தேவான் அப்போஸ்தலர் 7 : 56 ல் வானங்கள் திறந்திருக்கிறதையும் இயேசுவானவர் பிதாவினுடைய வலதுபாரிசத்தில் நிற்பதையும் கண்டாரென்று பார்த்தோம். ஆனால் பரலோகம் திறக்கப்பட்டதாக இதற்கு முன் எந்தக் குறிப்புமில்லை. தன்னுடைய முதலாவது வருகையில் கழுதைக்குட்டியின்மேல் ஏறிவந்த இயேசு (யோவான் 12 : 14, 15), இப்பொழுது வெற்றியின் சின்னமான வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி வருகிறார். வெளிப்படுத்தல் 6 : 2 ல் முதலாம் முத்திரை உடைக்கப்பட்டபோது தூதன் வெள்ளைக்குதிரையில் ஏறி வந்ததைப் பார்த்தோம். அவர் உண்மையும் சத்தியமுமுள்ளவர். பகிரங்க இரண்டாவது வருகையைக் குறித்து யோவான் இங்கு பார்க்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்தை இரட்சிக்கும்படியாக உலகத்தில் அவதரித்தவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய இரட்சிப்பை ஏற்றுக் கொண்டவர்களை பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளும்படியாக மத்திய வானத்தில் அவர்களை சந்தித்தவர், இப்போது தன்னுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை நியாயந்தீர்க்கும்படியாக நியாயாதிபதி யாக பூமிக்கு வரப்போகிறார். இதை
சங்கீதம் 96 : 13 ல் தீர்க்கதரிசனமாக “அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.”என்றும்,
2 தெசலோனிக்கேயர் 1 : 7 ல் “ தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,”
வருகிறார் என்றும் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்க்கிறோம். அதில் வருகிறவரின் கண்கள் அக்கினி ஜ்வாலையைப் போன்றிருப்பதையும் பார்க்கிறார். அதே போல் வெளிப்படுத்தல் 1 : 14 லில் இயேசுவின் கண்கள் அக்கினிஜ்வாலையைப் போலிருந் ததைப் பார்த்தார். அவருடைய கண்கள் மனிதனுடைய குணாதிசயங்களை, யோசனை களை, நினைவுகளை ஊடுருவிப் பார்க்கும் (சங்கீதம் 139 : 1). இந்தக் கண்களால்தான் நாத்தான்வேலைக் கண்டறிந்தார் (யோவான் 1 : 17 ). தலையில் அநேக கிரீடங்களை அணிந்திருந்தார். எந்த ராஜாவும் தலையில் அநேக கிரீடங்களை அணிந்திருக்க மாட்டார்கள். இயேசுவுக்கோ மரணத்தை ஜெயித்ததினால் கிரீடம், உலகத்தை ஜெயித்ததினால் கிரீடம், சாத்தானை ஜெயித்ததினால் கிரீடம், பாதாளத்தை ஜெயித்ததினால் கிரீடம், முற்றிலும் ஜெயங்கொண்டவராக இருப்பதினால் கிரீடம் என்று அவருக்கு அத்தனை கிரீடங்களைப் பிதாவானவர் கொடுத்துள்ளார்.
அவருடைய நெற்றியில் யாராலும் அறிந்துகொள்ள முடியாத , விளங்கிக் கொள்ள முடியாத நாமமும் எழுதப்பட்டிருப்பதையும், அவருடைய வஸ்திரம் இரத்தத்தினால் தோய்க்கப்பட்டிருப்பதையும் யோவான் பார்க்கிறார். இதை ஏசாயா 63 : 3 ல் தேவன் தனது கோபத்தினால் அவர்களை மிதித்து அவரது உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப் போட்டதினால் அவர்களுடைய இரத்தம் தேவனுடைய வஸ்திரங்களின் மேல் தெறித்தது என்றுள்ளது. அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதாகும். இதைத்தான் யோவான் 1 : 1 லிலும் 14 லிலும் எழுதியிருக்கிறார். பரலோகத்திலுள்ள சேனைகளும் வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், அவருக்குப் பின்சென்றார்கள். அவருக்குப்பின் செல்லும் சேனைகளும் வெண்மையான உடை அணிந்து வெள்ளைக் குதிரைகளில் அவருக்குப் பின்சென்றார்கள்.
வெளிப்படுத்தல் 19 : 15, 16 “புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.”
அப்பொழுது ஏழு வருடங்கள் முடிந்தாகி விட்டது. ஏழு முத்திரை உடைக்கப்பட்டாகி விட்டது. ஏழு எக்காளங்கள் ஊதி முடிந்தது. ஏழு கலசங்களை ஊற்றியாகி விட்டது. இப்பொழுது அவருடைய வாயிலிருந்து புறஜாதிகளை வெட்டும்படிக்கு கூர்மையான பட்டயம் புறப்படுகிறது. இதை,
வெளிப்படுத்தல் 1 : 16 ல் “அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது” என்றும்,
வெளிப்படுத்தல் 2 : 16 ல் “நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன்” என்று பெர்கமு தூதனை எச்சரித்ததிலும் பார்க்கிறோம்.
தேவாதி தேவன் இரண்டாம் வருகைக்குப் பின் இருப்புக் கோலால் அவர்களை அரசாளுவார் என்பது அதாவது முழு அதிகாரத்தோடு ஆட்சி செய்வார் என்பதாகும். இதை,
சங்கீதம் 2 : 9 ல் “இருப்புக் கோலால் அவர்களை நொறுக்குவார்” என்றும், வெளிப்படுத்தல் 2 : 27 ல் “அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்;” என்றும் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்துவின் உக்கிர கோபமாகிய மதுவுள்ள அந்த ஆலையை மிதிக்கும்போது வெளிப்படுவது மனித இரத்தம். இரத்தத்தினால் முழு இஸ்ரவேலும் இரத்தக்காடாக மாறும். இதைக்குறித்து வெளிப்படுத்தல் 14 : 19, 20 ல் காணலாம். இதைக் குறித்த தீர்க்கதரிசனத்தை,
ஏசாயா 11 : 4 ல் “ பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.” என்பதையும் பார்க்கிறோம்.
ஏசாயா 34 : 8 – 10 ல் “அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம். அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம். இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும், சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.” என்கிறார்..அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின் மேலும் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம்எழுதப்பட்டிருந்ததைப் பார்க்கிறார்.
மத்தேயு 28 : 3 ல் அவருடைய வஸ்திரம் உறைந்த மழை யைப்போல வெண்மையாக இருந்ததென்றுள்ளது.
வெளிப்படுத்தல் 19 : 17 – 19 “ பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும் படிக்குக் கூடிவரக்கண்டேன்.
சூரியனில் நின்று கொண்டிருக்கும் ஒரு தூதனை யோவான் பார்க்கிறார். சூரியனில் நிற்பதென்பது அதிசயம். அவன் வானத்தில் பறக்கிற சகல பறவைகளைப் பார்த்து ராஜாக்கள், சேனைத்தலைவர், பலவான்கள், குதிரைகள், குதிரைகளின் மேல் ஏறியிருக்கிறவர்கள், சுயாதீனர், அடிமைகள், சிறியோர், பெரியோர் இவர்கள் எல்லோருடைய மாமிசத்தையும் பட்சிப்பதற்காகத் தேவன் கொடுக்கும் விருந்துக்கு வாருங்கள் என்று கூறினான்.
வெளிப்படுத்தல் 19 : 21 ல் “அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன” என்று பார்க்கிறோம்.
எரேமியா 12 : 9 ல் “பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக “ என்று கூறப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான மனிதர்கள் அர்மகெதோன் யுத்தத்தில் மரணமடைவார்கள். அந்த யுத்தம் மற்ற யுத்தங்களைப்போல் பல வருஷங்களாக, உலகின் பல பகுதிகளில் நடைபெறாமல் ஒரே நாளில் ஒரே இடத்தில் நடக்கும். மனிதர்களின் இறுதிப்போர் இதுதான். பின்னர் ஒருமுறை போருக்கு வருவார்கள் ஆனால் போர் நடக்காது (வெளிப்படுத்தல் 20 : 7 – 9). அர்மகெதோன் யுத்தம் உலக மகா யுத்தம் எனக் கருதப்படுகிறத்து. இதுவரை இதுபோல் ஒரு போர் நடந்த தில்லை, நடக்கப் போவதுமில்லை. அது சர்வ வல்லமையுள்ள தேவனின் மகா யுத்தமாகும் (வெளிப்படுத்தல் 16 : 14). இந்த யுத்தம் இரண்டு உலக சாம்ராஜ்ஜி யங்களுக்கிடையே நடக்கும் யுத்தமல்ல. இது பரலோகத்தின் தேவனாகிய இயேசுகிறிஸ்துவுக்கும் உலகத்து சாம்ராஜ்ஜியங்களுக்குமிடையே நடக்கும் யுத்தம் (சகரியா 14 ம் அதிகாரம்). பரலோகத்திலுள்ள சேனைகள் யாரென்றால் யூதா 15 ம் வசனத்தில் கூறியுள்ளபடி ஆயிரஆயிரமான தமது பரிசுசுத்த வான்களோடு கூட வருவார்.
அதேபோல் சகரியா 14 : 5 லும் தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். பரிசுத்த தேவதூதர்களும் (மத்தேயு 16 : 27, 24 : 31, 25 : 31, லூக்கா 9 : 8) இந்தச் சேனையில் இருப்பார்கள். இவர்கள் யூதர்களுக்கு ஆதரவாய்ப் போரிடுவார்கள் (எசேக்கியேல் 38, 39 அதிகாரங்கள், சகரியா 14 : 1– 15). இவர்களோடு மிருகமும், அவனை ஆளுகைக்குள் கொண்டு வந்த உயிர்ப்பிக் கப்பட்ட ரோமின் அதிபதிகளும், அவர்களுடைய கோடிக்கணக்கான போர் வீரர் கள் அடங்கிய சேனைகளும், வெள்ளைக் குதிரையில் பரலோகத்திலிருந்து இறங்கி வரும் இயேசுகிறிஸ்துவோடும், அவருடைய பரலோக சேனையோடும் யுத்தம் பண்ணைக் கூடினார்கள் என்பதை யோவான் தரிசித்து எழுதுகிறார். இந்தப்போரைப் பற்றி எசேக்கியேல் 38, 39 அதிகாரங்களில், தானியேல் 2 : 44 லிலும் , சகரியா 14 : 1 – 15 லிலும் யோவேல் 3, ஏசாயா 63 ஆகிய அதிகாரங்களில் அறிந்து கொள்ளலாம்.
வெளிப்படுத்தல் 19 : 20, 21 “அந்திகிறிஸ்துவும், மோசம் போக்கின கள்ளத்தீர்க்கதரிசியும், மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும், அதின் சொரூபத்தை வணங்கினவர்களும் பிடிக்கப்படுகிறார்கள். மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் உயிரோடே அக்கினிக்கடைல் தள்ளப்படுகிறார்கள். “
அந்திகிறிஸ்துவும், மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்படுகிறான். மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும், அதின் சொரூபத்தை வணங்கின வர்களும் பிடிக்கப்படுகிறார்கள். மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் உயிரோடே அக்கினிக்கடலில் தள்ளப்படுகிறார்கள். தள்ளப்பட்ட பின்பும் அங்கே அவர்கள் மரணமடையப் போவதில்லை. ஏனென்றால் ஆயிரம் ஆண்டுகள் சென்றபின் அவர்களுடைய எஜமானாகிய வலுசர்ப்பம் அக்கினிக்கடலிலே தள்ளப்படும் போது இருவருமே உயிரோடே காணப்படுவார்கள் (வெளிப்படுத்தல் 20 : 10). யூதரையும் கிறிஸ்துவையும் கிறிஸ்துவின் சேனைகளையும் எதிர்த்துச் சாத்தானின் தூண்டுதலால் போரிடும் யாவரும் தோற்றுப் போவார்கள். அக்கினிக் கடல் என்பது நரகம் என்றும் அழைக்கலாம். வெளிப்படுத்தல் `9 : 20, 20 : 10, 14, 15, 21 : 8 ல் அக்கினிக்கடல் என்றுள்ளது. இதில் ஆறில் ஒரு பங்கு படைவீரர் கொல்லப்பட மாட்டார்கள் என்று எசேக்கியேல் 39 : 2 ல் உள்ளது.
போரின்போது கொள்ளை நோய், இரத்தம் சிந்துதல், பெருமழை, பெருங் கல்மழை , அக்கினி, கந்தகம், (எசேக்கியேல் 38 : 22), பரிசுத்தவான்கள் (சகரியா 14 : 5, யூதா 15, வெளிப்படுத்தல் 19 : 14), கலகம், உட்பூசல் (சகரியா 14 : 13), யூதப்படைகள் (சகரியா 14 : 14), தூதர்கள் (மத்தேயு 16 : 27), கர்த்தரின் சுவாசம், கர்த்தரின் வருகையின் பிரசன்னம் (2 தெசலோனிக்கேயர் 2 : 8), கிறிஸ்துவின் பட்டயம் (வெளிப்படுத்தல் 19 : 15) ஆகியவற்றால் கிறிஸ்துவின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். இதன் விளைவாக சகல ராஜ்ஜியங்களுக்கும் முடிவு உண்டாக்கப்பட்டு , தேவனுடைய அரசாட்சி உலகத்தில் துவங்குகிறது மத்தேயு 25 : 31 – 46, தானியேல் 2 : 44, 7 : 13, 14, 23 – 27, வெளிப்படுத்தல் 11 : 15, 20 : 1 – 10, 21 : 2 – 22 : 5). இதில் புறஜாதி நாடுகளனைத்தும் தங்கள் பாவத்திற்காகவும், விக்கிரக ஆராதனைக்காகவும், இஸ்ரவேலை அவர்கள் ஒடுக்கினதற்காகவும் நியாத்தீர்ப்படைவர். ஒரு நாளில் இந்த மகாபெரிய யுத்தம் நடந்து முடிந்து விடுமென்று உறுதிப்படுத்தப்படுகிறது. ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
இயேசுவின் வருகைக்கு முன் நடப்பது: இயேசுவானவர் முதல்முறை வரும்போது ஜனங்களின் பாவத்தை மன்னிக் கவும், அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கவும்…