இயேசு பரலோக ராஜ்யத்தைப் பற்றிய இரகசியங்களை ஜனங்கள் எளிதாக புரிந்து கொள்வதற்காக உவமைகளாகக் கூறினார். இந்த உவமை யூத மக்களுக்காகச் சொல்லப்பட்டது. இயேசுகிறிஸ்துவின் வருகையில் மணவாட்டியாகிய திருச்சபை எடுத்துக் கொள்ளப்படும் போது எல்லோரும் எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள். அதற்கு இந்த உவமை எடுத்துக்காட்டு. மத்தேயு 24 : 3ல் சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்னவென்று கேட்டனர்”. அதனுடைய தொடர்ச்சியாக கூறப்பட்ட உவமைதான் இது. சபை எடுத்துக்கொள்ளப்படுதல் இரண்டாவது வருகை அல்ல. இயேசு பூமியில் பகிரங்கமாக வருவதுதான் இரண்டாவது வருகை. மகா உபத்திரவ காலத்தின் ஏழாவது ஆண்டின் முடிவில் அவர் திருச்சபையோடு பூமிக்கு வருவார். அப்போது இருக்கும் நிலமையைத்தான் இந்த உவமையில் இயேசு கூறியிருக்கிறார். இயேசுவின் வருகையைக் குறித்து நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதை இந்த உவமை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்த உவமையின் நோக்கம் விழித்திருங்கள் என்று எச்சரிப்பு கொடுப்பதாகும்.
10 கன்னிகைகள்:
மத்தேயு 25 : 1 – 13 “அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.”
இந்த உவமையைப் புரிந்து கொள்ள யூதர்களின் கலாச்சார பின்னணியைத் தெரிந்து கொள்ளவேண்டும். இஸ்ரவேலில் திருமணம் ஒரு பொது இடத்தில் வைத்து நடத்திய பின் மணப்பெண்ணின் வீட்டில் ஏழு நாட்கள் விருந்து நடக்கும். பின்பு மணவாட்டியை அழைத்துக் கொண்டு மணவாளன் தனது வீட்டிற்குச் செல்வர். இன்றைக்கும் அதே போல் தான் நடத்துகிறார்கள். மணமக்களும், குழுவினரும் மணவாளன் வீட்டை நெருங்கும் போது கன்னிகைகளாலான ஒரு குழு ஊர்வலமாக அழைத்து கொண்டு வரச்செல்லும். அவ்வாறு ஆயத்தப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் தான் இந்த உவமையில் கூறப்பட்ட 10 கன்னிகைகள். இதில் கூறப்பட்ட கன்னிகைகள் என்பது சபையிலிலுள்ள விசுவாசப் பிள்ளைகளைக் குறிக்கிறது. மணவாளன் என்பது இயேசுவையும், தீவட்டிகள் என்பது இரட்சிப்பின் வெளிச்சத்தையும், எண்ணை என்பது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தையும், கிருபையையும், வல்லமையையும் இங்கு காட்டுகிறது. இந்த ஊர்வலம் இரவில் நடக்கும். வேதத்தில் கன்னியானவள் விவாகம் இல்லாதவளாகவும் சரீரத்திலும், ஆத்மாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி கர்த்தருக்குரியவைகளைக் குறித்துக் கவலைப் படுகிறவளாகவும் இருப்பதாக 1 கொரிந்தியர் 7 : 34லும் கூறப்பட்டுள்ளது. இங்கு கூறப்பட்டுள்ள 10 கன்னிகைகளின் பிரதான நோக்கம் மணவாளனுக்கு எதிர் கொண்டு போகவேண்டும் என்பதுதான்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
இயேசு கன்னிகைகளை பற்றி கூறியது:
மத்தேயு 25 : 2 “அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.”
பத்து கன்னிகைகளும் ஒரே இடத்திலிருந்து புறப்பட்டாலும் கர்த்தர் அதைப் பிரித்துக் காட்டுகிறார். ஆண்டவருடைய பார்வையில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. 10 பேரும் மணவாளனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்கள்தான். இரண்டு பேருடைய கைகளிலும் தீவட்டிகள் இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம். அதில் 5 பேர் புத்தியுள்ளவர்கள் என்றும் 5 பேர் புத்தியில்லாதவர்கள் என்றும் கூறுகிறார். அதற்குக் காரணம் 5 பேரின் கையிலுள்ள பாத்திரத்தில் எண்ணெய் நிரம்பியிருக்கிறது. மற்ற 5பேரின் கைகளிலோ எண்ணெய் இல்லை. ஆகவே அவர்கள் புத்தியில்லாதவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். உலகத்தின் பார்வையில் புத்தியுள்ளவர்கள் என்றால் படித்தவர்களையும், பண்டிதர்களையும், ஞானமாய் நடக்கிறவர்களையும்தான் கூறுவார்கள். ஆனால் தேவனுடைய பார்வையில் தேவனுடைய வார்த்தையின்படி செய்கிறவர்கள் புத்தி உள்ளவர்கள் என்று மத்தேயு 7 : 24ல் இயேசு கூறியிருக்கிறார். புத்தியுள்ளவர்களைத் தேவன் எபேசியர் 4 : 13ல் கூறப்பட்டுள்ள அப்போஸ்தலராகவும், தீர்க்கதரிசிகளாகவும், சுவிசேஷகராகவும், மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். அதேபோல் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயல்படாதவர்கள் புத்தி இல்லாதவர்கள் என்றும் மத்தேயு 7 : 26ல் இயேசு கூறியிருக்கிறார். இதில் 10 பேரின் தரிசனம், நோக்கம், புறப்பாடு எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது ஆனால் கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்படிவதில்தான் வித்தியாசத்தைப் பார்க்கிறோம். தரிசனத்தைக் குறித்த நோக்கம் இருக்கும் போது எவ்வாறு கீழ்படியாமல் இருக்க முடியும் (மத்தேயு 25 : 11). இதைத்தான் இயேசு இந்த உவமையின் மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார்.
கன்னிகைகள் எடுத்துக் கொண்டுபோனது:
மத்தேயு 25 : 3 – 6 “புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.”
“புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.”
புத்தியுள்ள கன்னிகைகளான 5 பேர் தங்கள் கைகளில் மணவாளனை வரவேற்பதற்காகத் தீவட்டிகளையும், மணவாளன் வருகிறவரை எரிவதற்கான எண்ணையையும் தங்கள் பாத்திரங்களில் கொண்டு வந்திருந்தனர். ஆனால் புத்தியில்லாத ஐந்து பேர்களின் கையில் அவர்களின் தீவட்டிகளுக்கான எண்ணை மட்டுமே உண்டு. தனியாகப் பாத்திரங்களில் அதிகமான எண்ணை கொண்டு வரவில்லை. தீவட்டிகள் என்பது துணியில் எண்ணையைத் தோய்த்துப் பயன்படுத்தும் தீப்பந்தங்கள். பாத்திரம் என்பது 2 தீமோத்தேயு 2 : 21ல் கூறியிருப்பது போல எஜமானனுக்கு உபயோகமான கனத்திற்குரிய பாத்திரமாகும். இவர்கள் மணவாளன் வரும்போது அவரை வரவேற்க எதிர்கொண்டு போய் தீவட்டி வெளிச்சத்தைக் காண்பித்து மணவாளனை அழைத்து கொண்டு வர வேண்டும். இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
நாமும் அதேபோல் ,
வேதத்தில் புத்தியீனமாகச் செய்தவர்கள்:
மோசேயின் கூடப் பிறந்தவர்கள் தான் மிரியாமும் ஆரோனும். ஆரோன் முழு இஸ்ரவேலுக்கும் பிரதான ஆசாரியனாக அபிஷேகம் பண்ணப்பட்டவன். மோசேயின் மூலமாகத்தான் ஆரோனைத் தேவன் அபிஷேகம் பண்ணினார். மிரியாமும் தீர்க்கதரிசியாக இருந்தாள் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு காலகட்டத்தில் ஆரோனுக்கும் மிரியாமுக்கும் மோசேயின் மேலே பொறாமை வந்தது. எப்பொழுதும் ஜனங்கள் மோசேயிடம் போய் கேட்கிறார்கள். எங்களிடம் ஏன் கேட்கவில்லை. மோசேயோடு மட்டும்தான் தேவன் பேசுவாரோ? எங்களிடம் பேச மாட்டாரா? என்ற பொறாமை வந்தது. எனவே மோசே ஒரு யூதப் பெண்ணை திருமணம் பண்ணாமல் எத்தியோப்பியப் பெண்ணைத் திருமணம் பண்ணியதைக் குறித்துக் குற்றம் சாட்டினார்கள். மோசே அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. மோசே ஏற்கனவே உடைக்கப்பட்டிருந்தான்.
மோசேயைக் குறித்து “என் வீட்டில் அவன் எங்கும் உண்மையுள்ளவன்” என்று தேவனே சாட்சி கொடுத்திருந்தார். தேவன் மூன்று பேரையும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு வரச்சொன்னார். மூன்று பேரும் கர்த்தருடைய ஆசரிப்புக் கூடாரத்தின் சமூகத்தில் நின்றனர். கர்த்தர் ஆரோனையும், மிரியாமையும் கூப்பிட்டார். அவர்கள் இருவரும் போனார்கள். அவர்களைப் பார்த்து ஒருவன் தீர்க்கதரிசியாக இருந்தால்தான் அவனோடு தரிசனத்தில் அவனுக்கு வெளிப்படுத்துவதாகவும், சொப்பனத்தில் அவனோடு பேசுவதாகவும் கூறி, ஆனால் தான் மோசேயுடன் மறைபொருளாகப் பேசுவதில்லை. முகமுகமாக பேசுவதாகவும் கர்த்தரின் சாயலை மோசே காண்பதாகவும் கூறினார். கர்த்தருடைய கோபம் அவர்கள் மேல் மூண்டது. மிரியாம் குஷ்டரோகியானாள். (எண்ணாகமம் 12 : 1 – 14) அப்பொழுது ஆரோன்,
எண்ணாகமம் 12 : 11 “அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.”
என்று மோசேயிடம் மன்றாடியதைப் பார்க்கிறோம். இங்கு மோசே தேவனிடம் மன்றாடி மிரியாமுக்கு சுகத்தைக் கொடுக்கச் செய்தார். தேவனால் அழைக்கப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்ட ஆரோன் புத்தியீனமாக செய்த இந்தக் காரியம் தேவனுடைய கோபத்தை கொண்டுவந்ததைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட்ட பின் இயேசுவின் குடும்பத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறோம் நமக்கு ஜாதி, மொழி, இன, தேச பாகுபாடு எதுவும் கிடையாது. தேவனுடைய பிள்ளைகள் அத்தகைய பாகுபாடு பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்க்கிறவர்கள் புத்தி இல்லாதவர்கள். அவர்களின் பார்வை மாற வேண்டும். நாம் பழைய இடத்திலிருந்து வெட்டப்பட்டு புதிய ஒலிவ மரத்திலே சேர்க்கப்பட்டோமென்று அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பழைய வரலாறு தேவையில்லை. அதைத்தான் சாலமோன்,
பிரசங்கி 10 : 1ல் “செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.” என்கிறார்.
தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய சித்தம் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய சித்தம் என்னவென்று அறிந்தும் அதைச் செய்யாமலிருந்தால் புத்தியில்லாதவர்களாவார்கள்.
மணவாளனின் வருகையின் போது நடந்தது :
மத்தேயு 25 : 5 – 8 “மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.”
“நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.”
“அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.”
“புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.”
மணவாளன் வரத் தாமதித்ததால் 10 கன்னிகைகளும் தூங்கி விட்டனர். ஆனால் நடுராத்திரியில் மணவாளன் வரப்போகிறார். ஆயத்தமாயிருங்கள் என்ற சத்தம் கேட்கப்பட்டது. அப்பொழுது எல்லோரும் எழுந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினர். புத்தி உள்ளவர்களிடம் எண்ணை இருந்ததினால் தீவட்டிகளை எரிய வைத்தனர். புத்தியில்லாத ஐந்து கன்னியரிடம் எண்ணை இல்லாததால் மற்ற 5 பேரிடம் போய் தங்கள் தீவட்டிகள் அணைந்து போகப் போகிறதால் கொஞ்சம் எண்ணை கொடுங்கள் என்று கேட்டனர். புத்தியில்லாதவர்களின் தீவட்டியில் எண்ணையில்லாததால் அவைகள் வறண்டு போய் அணைந்து கொண்டிருக்கின்றன. கொஞ்ச காலம் மாத்திரம் வெளிச்சத்தைக் கொடுத்தார்கள். கொஞ்ச காலம் மாத்திரம் சுடர் விட்டார்கள் (மத்தேயு 13 : 21). ஆனால் இப்பொழுதோ இருளானது அவர்களது வாழ்க்கையில் கவ்விக்கொள்ள ஆரம்பிக்கிறது. மங்கியெறிகிற திரியாய் அணைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் (மத்தேயு 12 : 20). மணவாளன் வரத் தாமதித்ததால் புத்தியில்லாதவர்களுக்கு சோம்பேறித்தனமும், நிர்விசாரமும் வந்ததால் விளக்கில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்காமல் தூங்கிவிட்டனர்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
மணவாளன் வரத் தாமதித்தது, கர்த்தரின் வருகை தாமதிப்பதைக் குறிக்கிறது. கர்த்தர் ஒருவரும் கெட்டுப்போகாமல் மனந்திரும்ப வேண்டுமென்று தாமதம் பண்ணுகிறார் (2பேதுரு 3 : 9). தேவன் வரப்போகிறார் என்ற எக்காளச் சத்தம் கேட்க ஆவியின் அபிஷேகம் இருக்கிறதா என்று பாருங்கள். எபேசியர் 5 : 16ல் கர்த்தர் நம்மைக் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளச் சொல்வதைப் பார்க்கிறோம். ஆவியில் நிறைந்து இருங்கள். ஆவியில் நிறைந்திருந்தால்தான் கர்த்தரோடு நடக்க முடியும், பிரகாசிக்க முடியும், விருந்தில் கலந்துகொள்ள முடியும். எனவே எபேசியர் 5 : 18 – 21ல் பவுல் கூறியிருப்பதைப் போல ஆவியினால் நிறைந்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரித்து அவரது வருகைக்காக விழித்திருக்க வேண்டும்.
மத்தேயு 25 : 9, 10 “புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.”
“அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.”
புத்தியில்லாதவர்கள் கேட்ட எண்ணெய்க்கு புத்தியுள்ளவர்கள் தங்களிடம் கொஞ்சம்தான் இருக்கிறதென்றும், தங்களுக்குள்ளதும் குறைந்துவிடும் என்றும் கடையில் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டனர். கடைசி நேரத்தில் யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாது. அவர்கள் கடைக்குப் போய் வருவதற்குள் மணவாளன் வந்துவிட்டார். அருமையான ஓட்டத்தோடு தொடங்கினவர்கள் வேறு பக்கமாய்த் திரும்புகிறார்கள். மணவாளனைப் பார்த்துக் கொண்டிருந்த கண்கள் வேறு பக்கம் திரும்புகிறது. தரிசனத்தை விட்டு விலகுகின்றனர். அதுவும் மணவாளன் வருகின்ற சமயத்தில் நடக்கிறது. இவர்கள் போகிற பாதை மணவாளனாகிய இயேசுவினிடம் கொண்டு சேர்க்காது. ஆயத்தமாயிருந்தவர்கள் மணவாளனோடு விருந்து சாலைக்குள் பிரவேசித்தார்கள். உடனே கதவு அடைக்கப்பட்டது.
மத்தேயு 25 : 11 – 13 “பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.”
“அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” மணவாளனிடம் பேசினர். மணவாளனும் பதிலளித்தார்.
“மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.”
புத்தியில்லாதவர்கள் எண்ணையை வாங்கி வருவதற்குள் கதவும் அடைக்கப்பட்டது. மணவாளனும் விருந்துசாலைக்குள் நுழைந்துவிட்டார். எனவே அவர்கள் ஆண்டவரே, ஆண்டவரே என்று கூப்பிட்டு தங்களுக்குக் கதவைத் திறக்கச் சொல்லி கெஞ்சினர். ஆனால் ஆண்டவரோ அவர்களுக்குப் பதிலாக உங்களை அறியேன் என்று கூறிவிட்டார். இந்தக் கன்னிகைகளுக்கும் மணவாளனுக்கும் இடைவெளி மிகவும் குறைவு, ஆனால் அவர்களால் மணவாளனை நெருங்க முடியவில்லை. ஆனால் கன்னிகைகள் கேட்பதற்கு மணவாளன் பதிலளிப்பதைப் பார்க்கிறோம். கடைசியாக இயேசு தான் வருகிற நாளையும் நாழிகையும் யாருக்கும் தெரியாததால் விழித்திருங்கள் என்கிறார். அதை
மத்தேயு 24 : 44, 36 “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.”
“அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.” பார்க்கலாம்.
நாம் கற்றுக்கொண்டது:
இரட்சிக்கப்பட்டவர்களுக்கும், அபிஷேகம் பெற்றவர்களுக்கும் வேத வசனத்தின் அறிவு வேண்டும். வேத வசனத்தின் அறிவைப் பெருக்கிக் கொண்டு மணவாளனின் வருகைக்கு ஆயத்தமாகி பங்கெடுக்க வேண்டும் என்பது தேவனின் ஆசை. எனவே வேத வசனமாகிய எண்ணையையும், பரிசுத்தஆவி என்ற எண்ணையையும் குறைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அபிஷேகம் குறைவுபட்டால் தேவனுடைய சமூகத்தில் போய் நிற்க முடியாது. அபிஷேகத்தினால் நிறைந்து நிறைந்து ஆவிக்குள்ளாகி ஜீவிக்க வேண்டும். நாம் அபிஷேகம் பெற்றபின் ஒவ்வொரு நாளும் அந்த அபிஷேகத்தை அதிகமாக வாஞ்சித்து அபிஷேகத்தின் மேல் அபிஷேகத்தை பெற வேண்டும். இவைகள் இல்லாவிட்டால் மணவாளனோடு சேர்ந்து செல்லும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடும். கதவும் அடைக்கப்பட்டு விடும்.
பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அவசியம் என்பதை இந்த உவமை நமக்குக் காட்டுகிறது. யூதர்களுக்கு ஆண்டவர் சொன்னதும் இதுவே. இயேசுகிறிஸ்து தமது மணவாட்டியுடன் பரலோக விருந்தை முடித்து உபத்திரவ காலம் முடிந்தவுடன் மகிமையின் ராஜாவாக உலகிற்கு வருவார். நினையாத நாழிகையில் மனுஷகுமாரன் வருவார். எக்காளச் சத்தத்தோடு வருவார். எல்லாக் கண்களும் அவரைக் காணும். (மத்தேயு 24 : 44, 1 கொரிந்தியர் 15 : 52, 54). அப்போது அவரது ராஜ்ஜியமாகிய இஸ்ரவேல் மக்கள் நடுவில் இந்த வரவேற்பு நிகழும். அதன்பின்பு அவர்களையும் சேர்த்து உலக அரசை நிறுவி மேசியாவாக ஆளுகை செய்வார். இந்த உவமையில் விழித்திருங்கள் என்ற கட்டளை யூதர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை. மாரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…