இயேசுவின் உவமைகள்

கோபுரம் கட்டுதல் போருக்குப் புறப்படுதல் – லூக்கா 14 : 25 – 35

இயேசு, நாம் அவருடைய சீஷனாக ஆவதற்கு என்ன விலைக்கிரயம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு எவ்வாறு ஆயத்தப்பட வேண்டுமென்றும் இந்த உவமையில் விளக்குகிறார். ஆண்டவரை முதலிடத்தில் வைக்க வேண்டுமென்று இந்த உவமை வலியுறுத்துகின்றது. ஒரு விசுவாசியின் அர்ப்பணிப்பு இயேசுவை முதலிடத்திலும், மற்ற எல்லாவற்றையும் அதற்கடுத்த இடத்திலும் வைக்க வேண்டும் என்கிறார். இதை லூக்கா 14 : 25 – 35ல் பார்க்கிறோம். இந்த உவமையில் உதாரணமாக கோபுரத்தை ஒருவன் கட்ட நினைக்கும் போது என்ன செய்வானென்றும், போருக்குப் புறப்படுமுன் ராஜா என்ன செய்வானேன்றும் ஒற்றுமைப் படுத்திக் காட்டுகிறார். 

இயேசு கூறிய சீஷனாவதற்கான தகுதி:

லூக்கா 14 : 25 – 27 “பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:”

“யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.”

“தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.” 

இயேசுவோடுகூட அநேக ஜனங்கள் பிரயாணமாய்ப் போய்க் கொண்டிருக்கும் போது அவர்களைப் பார்த்து இதைக் கூறினார். தகப்பன், தாய், மனைவி, கணவர், பிள்ளைகள், சகோதரன், சகோதரி ஆகியோரை ஒதுக்கவோ, துரத்திவிடவோ, வெறுத்துவிடவோ, எதிர்க்கவோ, கடமைகளைச் செய்யாமல் இருக்கவோ இயேசு கூறவில்லை. இவர்களைவிட இயேசுவோடுள்ள உறவிற்கு அதிக மதிப்பளிக்குமாறு கர்த்தர் எதிர்பார்க்கிறார். கர்த்தருக்கு முதலிடத்தை கொடுத்து அவரிடம் அன்பு கூர்ந்து, மற்றவர்களுக்கும், தன்னுடைய சுயநலத்துக்கும் குறைவான அன்பும், குறைவான முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும். இதைத்தான் மத்தேயு 10 : 37ல் கூறுகிறார். இயேசுவைவிட மற்றவர்களை அதிகமாக நேசிக்கிறவன் விசுவாசி என்ற நிலையில் மட்டுமே இருக்க முடியுமே தவிர , சீஷன் என்ற நிலைக்கு மாற முடியாது. இவ்வாறு செயல்பட்டால் மட்டுமே இயேசுவுக்கு சீஷனாக முடியும். சீஷனாக இருக்க வேண்டுமென்றால் எல்லோருக்கும் மேலாக, எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவிடம் அன்பு கூற வேண்டும். அதைத்தான் வேதம் “உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூறாதிருங்கள்”. என்று கூறுகிறது. 

சிலுவையானது துன்பம் (1பேதுரு 2 : 21), மரணம் (அப்போஸ்தலர் 10 : 39), அவமானம் (எபிரேயர் 12 : 2), பரிகாசம் (மத்தேயு 27 : 39), ஒதுக்கித் தள்ளப்படுத்தல் (1பேதுரு 2 : 4), சுயவெறுப்பு (மத்தேயு 12 : 24) ஆகியவற்றின் அடையாளமாகும். கிறிஸ்து காட்டுகிற வழியில் நடக்க வேண்டும். தேவனுடைய சித்தம் செய்வது. நமது சொந்த திட்டங்களையும், நோக்கங்களையும் விட்டு தேவனுடைய நோக்கத்துக்காக, தேவனுடைய சித்தத்துக்காக, தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்படுவதற்காக வாழ்ந்து இயேசுவுக்காய் ஊழியம் செய்வதுதான் சீஷர்களின் கடமை. சீஷர்கள் தம்முடையவைகளை விட இயேசுவை விசுவாசிப்பதையும், அவருக்குப் பின் செல்வதையும் முக்கியமாகக் கருத வேண்டும். விசுவாசிகள் என்ற நிலையில் நாம் நம்முடைய சிலுவையை எடுத்துக் கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்றும் போது நாம் நம்மையே வெறுத்து விடுகிறோம். 

இதைத்தான் பவுல் அப்போஸ்தலர் 9 : 6ல் “ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்” என்றான். இதுதான் உள்ளான மாற்றம். இயேசுவின் சீஷனாவதற்கு அர்ப்பணம் தேவை. அர்ப்பணம் என்பது வேண்டாத ஒன்றை இழப்பதல்ல. மிகவும் தேவை எனத்தோன்றும் எதையும் விட்டுவிடத் துணிவதாகும். தன்சிலுவை என்பது அவரவர்க்கு தேவன் வைத்திருக்கிற திட்டம், நோக்கம் சித்தம் நிறைவேற்றுவதாகும். மற்றவர்களின் சிலுவையை நாம் சுமக்க முடியாது. இயேசுவை ஒருவன் நம்பும் போது, அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது, ஞானஸ்நானம் எடுக்கும்போது இரட்சிக்கப்படுகிறான். தேவனுடைய பிள்ளை என்று அழைக்கப்படுகிறான். ஆண்டவரின் நோக்கத்தை, சித்தத்தை, திட்டத்தை, உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கான விலைக்கிரயம் செலுத்தி இயேசுவைப் பின்பற்றுகிற மக்களைத்தான் சீஷர்கள் என்று இயேசு இங்கு கூறுகிறார். சீஷன் என்பவன் குருவாகத் தேவனை ஏற்றுக்கொண்டு அவர் கற்றுக்கொடுப்பவைகளைக் கற்றுக்கொண்டு, அவரைப் பின்பற்றும் அனுபவம் தான் சீஷத்துவ அனுபவம். அதே முறையில் நடக்க வேண்டும். 

கோபுரம் கட்ட நினைப்பவன்:

லூக்கா `14 : 28 – 30 “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,”

“அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:”

“இந்த மனுஷன் கட்டத்தொடங்கி முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?”

இயேசு இந்த உவமையில் உங்களில் ஒருவன் என்று நம்மைப் பார்த்து ஆரம்பித்ததைப் பார்க்கிறோம். இயேசு இதில் கட்டடம் கட்டுவதைப்பற்றி கூறாமல் கோபுரம் கட்டுவதை பற்றி கூறுகிறார். கோபுரம் கட்டுவதற்கு முன் அதற்கு என்ன உயரம் வேண்டும், எவ்வளவு சிமெண்ட் தேவைப்படும். எவ்வளவு கம்பி, வேலை ஆட்கள், செலவு எவ்வளவு ஆகுமென்பதை கணக்குப் பார்த்த பின்புதான் கட்ட ஆரம்பிப்பான். எந்த ஒரு செயலும் செய்வதற்கு முன் அதற்குத் திராணி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். திராணி இல்லை என்றால் அதைச் செய்யக்கூடாது. கோபுரத்தை கட்டி அதில் ஜாமக்காரர்களை இருக்க வைத்து எதிரிகள் வருகிறார்களா என்று பார்ப்பார்கள். கோபுரம் கட்டும் வேலையானது பாதியில் நின்று விட்டால் எல்லோரும் அவனைப் பார்த்து பரிகாசம் பண்ணுவார்கள். அவன் அவனுக்கிருக்கிற மதிப்பையும் இழந்து விடுவான். 

மணவாட்டியாயிருக்கிற நம்மை, விசுவாசியாக இருக்கிற நம்மை, கோபுரத்தைக் கட்டச் சொல்லுகிறார். கிறிஸ்தவுக்குள் வந்த பின் கட்டாயம் ஒரு கோபுரம் கட்ட வேண்டும். ராஜா ஒரு அரண்மனையைக் கட்டினால் அது அவனுக்குப் பெருமை. அதில் எத்தனை கோபுரம் இருக்கிறதோ அந்த அளவு ராஜாவுக்குப் பெருமை. இயேசு நம்மிடம் ஆவிக்குரிய கோபுரத்தைக் கட்டுங்கள் என்கிறார். நமது உள்ளத்தில் இயேசு என்ற கோபுரம் வார்த்தையென்கிற கோபுரம் உருவாக வேண்டும். இயேசுவுக்காய் வாழ முடிவு செய்வதற்கு முன்பாக சில காரியங்களைச் செய்ய வேண்டியது அவசியம். நாம் இயேசுவைப் பின் செல்வதற்கு முன்பாக எவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். விசுவாசியாக இருப்பதற்கும், சீடனாக இருப்பதற்கும் வித்தியாசமிருக்கிறது. இரட்சிக்கப்பட்டபின் விசுவாசியானபின் சீஷனாக மாறவேண்டுமென்றால் கர்த்தரை நேசித்து அவருக்கு முதலிடம் கொடுத்து வர வேண்டும். அப்பொழுது உயர்த்தப் பட்டு மதிப்பும், மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். 

கலாத்தியர் 4 : 19 “என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.”

பிலிப்பியர் 3 : 8 “அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.”

பவுல் கலாத்தியர்களிடம் கிறிஸ்துவின் சாயல் உருவாக வேண்டும் என அவர் இருதயத்தில் இருந்த பாரத்தையே கர்ப்பவேதனைப்பட்டு பிள்ளை பெறும் தாய்க்குத் தன்னை ஒப்பிட்டுக் கூறுகிறார். இயேசுவுக்காக எல்லாவற்றையும் விட்டேனென்று கூறியது மட்டுமல்லாமல் அதைத் குப்பையாக எண்ணுகிறேன் என்கிறார் (பிலிப்பியர் 3 : 11). நாம் கிறிஸ்தவனாக இருப்பதற்குத் தகுதியாக இருக்கிறோமா, மணவாட்டியாகிறதற்குத் தகுதியாக இருக்கிறோமா, இயேசுவோடு எடுத்துக் கொள்ளப்பட தகுதியாக இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். ஆவிக்குரிய காரியங்களைப் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று பார்க்க வேண்டும். இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக எதை விடவேண்டும், எதை விடக் கூடாது என்று பார்க்க வேண்டும். மண்ணின் மேல் ஆசை கூடாது. பொன்னின் மேலேயும் ஆசை கூடாது. உலகத்தின் புகழ்ச்சியையும் விடணும். பெண்கள் மேலிருக்கும் ஆசையை விடணும். இவைகள் அனைத்தையும் விட்டால் தான் இயேசுவின் மணவாட்டியாக மாறமுடியும். அதை விட்டவன் தான் இயேசுவுக்கு சீஷனாக ஆக முடியும். அவன்தான் நூறத்தனையாக ஆசீர்வாதத்தைப் பெறுவான். 

போருக்குப் போகும்போது 

லூக்கா 14 : 31, 32 “அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?”

“கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.”

ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு யுத்தம் செய்யப் போகும்போது தன்னிடம் எத்தனை போர் சேவகர் இருக்கிறார்கள், எதிரியிடம் எவ்வளவு போர் சேவகர்கள் இருக்கிறார்கள் என்று ஆலோசனை பண்ணிப் பார்ப்பார். எதிரிகளிடம் 20000 போர்சேவகர்கள் இருக்கும் போது, இவரிடம் 10000 போர்சேவகர் மட்டுமே இருந்தார்களென்றால் தம்மால் இத்தனை பேரோடு போய் எதிரியை ஜெயிக்க முடியுமா என்று கண்டிப்பாக ஆலோசனை பண்ணுவார். தம்மால் வெற்றிபெற முடியாதென்று கணித்தபின் எதிரியின் படை தூரத்திலிருக்கும் போதே தன்னுடைய ஸ்தானாதிபதிகளை அனுப்பி சமாதானத் தூது அனுப்புவார். தவறான ஆலோசனை பண்ணுவாரானால் யுத்தத்தில் தோற்றுப் போய் அவமானமடைவார். ராஜாவின் மதிப்பும் போய் ஜனங்களின் உயிரும் போய்விடும். அதனால் ராஜா அந்த எதிரியோடு சமாதானமாகி விடுவார். 

இயேசு நம்மைக் குறித்துக் கணக்குப் பார்க்கிறவராக இருக்கிறார். அவர் நாம் இயேசுவுக்கென்று விலைக்கிரயம் செலுத்துகிறவராக இருக்கிறோமா என்று பார்க்கிறார். இயேசு நம்மைக் கொண்டு சபையைக் கட்ட முடியுமா, நம்மால் சத்துருக்களின் சேனையை எதிர்க்க முடியுமா என்று நிறுத்துப் பார்க்கிறார். அரைகுறை மனதோடு நாம் இருந்தோமானால் நம்மைக் கொண்டு தேவனால் எதையும் செய்ய முடியாது. நாம் தேவனுடைய கணக்குப்படி சரியாக இருப்போமென்றால், கர்த்தர் நம்மைக் கொண்டு ராஜ்ஜியத்தைக் கட்டுவார். நம்மைக் கொண்டு சாத்தானை முறியடிக்க வல்லமையாகப் பயன்படுத்துவார். ஜெயம் பெற நம்மால் முடியும். நாம் இதன்படி தேவனுக்கென்று விலைக்கிரயம் செலுத்த ஆயத்தமாயிருந்தால் நமது மூலம் தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்படும். 

அதனால் நாம் பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாக தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்வோம். (எபேசியர் 6 : 11). அதனால் நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்போம். (யாக்கோபு 4 : 7). அப்பொழுது சமாதானத்தின் தேவனாகிய கர்த்தர் சீக்கிரமாய்ச் சாத்தானை நமது கால்களின் கீழே நசுக்கிப் போடுவார் (ரோமர் 16 : 20). எனவே, 

2பேதுரு 1 : 5 – 7 “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,”

“ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,”

“தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.”

இவ்வாறு பேதுரு அப்போஸ்தலன் கூறியிருக்கும் விசுவாசத்துடன் தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு என்ற ஏழு குணாதிசயங்கள் நம்மிடம் வரும் போது, அவைகள் செயல்படும்போது தேவனுடைய ராஜ்ஜியத்தை நம்மால் கட்ட முடியும். யோவான்ஸ்நானகன் இயேசுவின் முதல் வருகையை அறிவித்து ஆட்டுக்குட்டியானவரை அடையாளம் காட்டினார். நாமோ வேதத்தில் கூறியவைகளை கைக்கொண்டு அவருடைய வருகைக்கு ஆயத்தமாவோம். 

உப்பு:

லூக்கா 14 : 33, 34, 35 “அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.”

 “உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?”

“அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.”

பழையஏற்பாட்டில் லேவியர்களின் உடன்படிக்கைக்கு உப்பைப் பயன்படுத்தியதை லேவியராகமம் 2 : 13ல் காணலாம். எசேக்கியேல் 43 : 24ல் உடன்படிக்கையின் அடையாளமாக உப்பு தூவப்பட்டதைப் பார்க்கிறோம். எண்ணாகாமம் 18 : 19ல் ஆசாரிய உடன்படிக்கைக்கு அடையாளமாக உப்பைப் பயன்படுத்தியதைப் பார்க்கிறோம். உப்பில்லாமல் நாம் எதையும் சாப்பிடமுடியாது. உப்பானது அதன் தன்மையை உணவில் வெளிப்படுத்தித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் நாமும் இயேசுவைக் குறித்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உப்பு தனியாக இருக்குமானால் அதில் பயனில்லை. எந்த பொருளோடும் சேர்க்கும்போது தான் அது அந்தப் பொருளைப் கெட்டுப்போகாமல் பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதற்கு சுவையையும் கொடுக்கிறது. நல்ல பழக்க வழக்கங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களையும் நல்லவர்களாக மாற்ற வேண்டும். உலகத்திலுள்ளவர்கள் கெட்டுப்போகாமல் தேவனுடைய சத்திய வசனத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து கெட்டுப்போகாமல் காப்பாற்ற வேண்டும். உப்பு உருவாகும் பாத்தியில் தண்ணீரும், உப்பும் இருக்கிறது. அதேபோல் நாமும் உலகத்துக்குள் இருக்கிறோம். பாத்திக்குள் இருக்கும் அந்தத் தண்ணீர் உப்பாக மாற அதில் சூரிய வெளிச்சம் பட வேண்டும். அதேபோல் உலகத்தில் நாம் வாழ்ந்தாலும் வேதத்தின் வெளிச்சம் நமக்குள் இருக்கும் போது உலகத்திலுள்ளவர்கள் நமது நற்கிரியைகளைக் கண்டு பிதாவை மகிமைப்படுத்த ஏதுவாகும் (மத்தேயு 5 : 16) நமக்கு சாரமென்பது வேதவசனங்களை ஒத்துதான் நம்முடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான். உப்பு முழுவதும் வெண்மை நிறமுடையது. அதேபோல் பூமியிலிருக்கிற நாம் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். வேதத்தில் ஆவியானவர் பேதுரு மூலம், 

1பேதுரு 1 : 15ல் “ உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.”

என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். சபைக்குள்ளிருக்கிற நாம், கிறிஸ்துவை நம்புகிற, விசுவாசிக்கிற நாம் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பது இயேசுவின் விருப்பம். எதுவும் நம்மைக் கறைபடுத்தாதபடி வசனத்தைக் கொண்டு சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் (சங்கீதம் 119 : 30). உப்பு தன்னைக் கரைத்துக் கொண்டு மற்றவைகளுக்குப் பயன்படும். யாரும் உப்பைப் பாராட்ட மாட்டார்கள். கிறிஸ்துவுக்குள் நாமும் சுயநலமில்லாதவர்களாக வாழ வேண்டும். பவுல் நாம் எப்படியிருக்க வேண்டுமென்று, 

கொலோசெயர் 3 : 12 – 15 ல் “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;”

“ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”

“இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”

“தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.”

உங்களுக்குள்ளதனைத்தும் உங்களுடையதல்லவென்றும் அவைகள் தேவனுக்குச் சொந்தமானதென்றும் திட்டமாய்க் கருத்தில் கொள்ள வேண்டும். இதைக் கருத்தில் கொண்ட சீஷர்கள் மாத்திரமே சாரமில்லாத உப்பு என்கிறார். சாரமற்ற உப்பைப்போல பயனற்ற பொருள் எதுவுமே இருக்க முடியாது. பயனற்ற கிறிஸ்தவர்களாக ஆகாதபடி கர்த்தர் நம்மைக் காப்பாராக. 

முடிவுரை:

நம்முடைய உறவுகளைவிட இயேசுவோடுள்ள உறவிற்கு அதிக மதிப்பளிக்க வேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். எந்நேரமும் இயேசுவுக்காக மரணமடைவதற்கும், பாடுபடுவதற்கும் ஆயத்தமில்லாதவன் இயேசுவுக்குச் சீடனாயிருக்க முடியாது. எனவே சீஷனாவதற்கான தகுதிகளைப் பெற்று இயேசுவின் பணிக்கு ஆயத்தமாவோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago