தமிழ் பைபிள் விளக்கவுரை

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

  1. வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது:

வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.” 

முதலாவதாக யோவான் ஒரு வெள்ளை சிங்காசனத்தைப் பார்க்கிறார். அதின்மேல் ஒருவர் வீற்றிருக்கிறதையும் பார்க்கிறார். ஏற்கனவே தரிசனத்தில் சிங்காசனத்தில் தேவன் வீற்றிருப்பதைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த ஒரு தரிசனத்தில் அதின் நிறம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை நிறம் பரிசுத்தத்தையும், நியாயத்தீர்ப்பையும் குறிப்பிடுகிறது. வெளிப்படுத்தின விசேஷம் சிங்காசனத்தில் தொடங்கி சிங்காசனத்தில் முடிகிறது. பூமியும் வானமும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய சமூகத்திலிருந்து விலகி ஓடின என்றுள்ளது. வெள்ளை சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் பிதாவாகிய தேவனா, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவா என்று யோவான் அறிவிக்க வில்லை. 2 தீமோத்தேயு 4 : 1 ல் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர் களையும் நியாயந்தீர்க்கப் போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்று இயேசு அழைக்கப்படுகிறார். 

அப்போஸ்தலர் 17 : 31 ல் “பிதாவானவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.” என்றும், 

யோவான் 5 : 22 ல் “ அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.” 

ஆனால் வெளிப்படுத்தின விசேஷத்தில் பல வசனங்களில் சிங்காசனத்தில் வீற்றிருப்பவராகப் பிதாவாகிய தேவன் மட்டுமே குறிப்பிடப்படுகிறார் (4 : 2, 9, 5 : 1, 7, 13 6 : 16, 7 : 10, 15 19 : 4 , 21 : 5). “தேவன் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தீர்ப்பு கொடுப்பார்” என்று ரோமர் 2 : 16 ல் பவுல் குறிப்பிடுவதினால் பிதாவும், குமாரனும் இணைந்து செயல்படுவதாக எடுத்துக் கொள்ளலாம். இரகசிய வருகையில் சபை எடுத்துக் கொள்ளப்பட்டதும் நடக்கும் நியாயத்தீர்ப்பு (1 கொரிந்தியர் 3 : 11 – 15) கிறிஸ்துவின் நியாயாசனம் முன்பாக நடக்கிறது (2 கொரிந்தியர் 5 : 10, ரோமர் 14 : 10). இதில் பிதா சம்பந்தப்படுவதில்லை. இது ஆக்கினைத் தீர்ப்பாகவும் இருக்காது. அவனவன் கிரியைகளுக்கேற்றபடி பிரதி பலன்கள் மட்டுமே நிர்ணயம் செய்யப்படுகின்றன. “பூமியும் வானமும் அகன்று போயின” என்பதினால் புதிய வானமும் புதிய பூமியும் உருவாக்கப்படுகிறது என்பதாகும். 

  1. கிரியைகளின்படி நியாயத்தீர்ப்பு:

வெளிப்படுத்தல் 20 : 12 “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப் பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” 

மரித்தோராகிய சிறியோர், பெரியோர் யாவரையும் யோவான் வெள்ளை சிங்காசனத்துக்கு முன்பாக நிற்பதைக் காண்கிறார். இவர்கள் தங்கள் பாவத்தினாலும், அக்கிரமத்தினாலும் நித்திய ஆக்கினைக்குப் பாத்திரர்களாயிருக்கிறபடியால் முதலாவது உயிர்த்தெழுதலில் பங்குபெற முடியவில்லை. வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பாக அவர்கள் நிற்கும்போது சிறியோர் – பெரியோர், ஏழை – பணக்காரன், அடிமை – சுயாதீனன் தொழிலாளி – முதலாளி என்ற பாகுபாடு கிடையாது. நீதிமான்கள் முதலாம் உயித்தெழுதலில் பங்கு பெறுகிறார்கள். ஆயிரம் ஆண்டுகள் கடந்தபின் துன்மார்க்கர்கள் இரண்டாவது உயிர்த்தெழுதலில் பங்கு பெறுகிறார்கள் இரண்டிலுமே மனிதனுடைய ஆவி, ஆத்துமா மரிப்பதில்லை. இரண்டிலுமே உயிர்த்தெழுவது அவர்களுடைய மரித்த சரீரமே. 

தானியேல் 12 : 2 ல் “பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.” 

என்று தானியேலுக்குச் சொல்லப்பட்டபடி இவர்கள் நிந்தைக்கும், இகழ்ச்சிக்கும் எழும்பி நிற்கிறார்கள். இயேசுவும் அவ்வாறே, 

யோவான் 5 : 29 ல் “அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”என்று சொல்கிறார். 

இந்த நியாயத்தீர்ப்பின்போது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன என்று யோவான் கூறுகிறார். அதற்குத் தேவன் நான்கு புஸ்தகங்களைப் பயன்படுத்துகிறார். 1. நியாயப்பிரமாண புஸ்தகம் (கலாத்தியர் 3 : 10). 2. கிரியைகளின் புஸ்தகம் (வெளிப்படுத்தல் 20 : 12). 3. ஜீவ புஸ்தகம் (வெளிப்படுத்தல் 20 : 12). 4. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகம் (வெளிப்படுத்தல் 21 : 27). முதலில் திறக்கப்படுவது நியாயப்பிரமாண புஸ்தகம் மனிதன் எந்தெந்த கிரியைகளைச் செய்யவேண்டுமென்ற 248 பிரமாணங்களையும், எந்தெந்த கிரியைகளைச் செய்யக்கூடாதென்று 365 பிரமாணங்களையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களுக்கு வழங்கினார். இதன் அடிப்படையில் நியாயத்தீர்ப்பு உண்டாயிருக்கும். அடுத்ததாக கிரியைகளின் புஸ்தகம் பரிசீலிக்கப்படுகிறது. மனிதனுடைய ஒவ்வொரு கிரியையும் பதிவு செய்யப்பட்டு நியாயத்தீர்ப்பு நாளிலே பரிசீலிக்கப்படுகிறது. பவுல், 

ரோமர் 2 :6 “தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.” என்றும், தாவீது 

சங்கீதம் 62 : 12 ல் “ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர்.” என்றும், 

எரேமியா 17 : 10 ல் “ கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும் படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உன்னிந்திரியங்களைச் சோதித்தறிகிற வருமாயிருக்கிறேன் என்றார்.” சாலொமோன்,

”பிரசங்கி 12 : 14 ல் “.ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.” என்றும், 

இயேசு மத்தேயு 12 : 36 ல் “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்றும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.

ஜீவ புஸ்தகம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 3 : 5, 17 : 8, 20 : 12, 15; 21 : 27; 22 : 19, லூக்கா 10 : 20, பிலிப்பியர் 4 : 3, தானியேல் 12 : 1, சங்கீதம் 69 : 28, ஏசாயா 4 : 4 ஆகிய வசனங்களில் காணப்படுகின்றன. உலகத்தோற்றமுதல் தேவனால் முன்னறியப்பட்டு, முன்குறிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட (ரோமர் 8 : 29, 30) பரிசுத்தவான்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட வேண்டியதின் அவசியத்தை 

இயேசு, லூக்கா 10 : 20 ல் “ உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.” 

ஜீவபுஸ்தகத்திலிருந்து ஜெயங்கொண்டவர்களின் பெயர்கள் நீக்கப்படாது. ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுகப்பட்டவர்களே நித்திய ஜீவனைப் பெறமுடியும். 

வெளிப்படுத்தல் 20 : 15 ல் “ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாத வனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.” கர்த்தர் மோசேயிடம் யாத்திராகமம் 32 : 33 ல் “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.”

என்றதிலிருந்து ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்ட பெயர் கூடக் கிறுக்கிப் போடக்கூடும். என்று அறிகிறோம். 

  1. சமுத்திரம், பாதாளம் மரித்தோரை ஒப்புவித்தது:

வெளிப்படுத்தல் 20 : 13 ‘சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். “

சமுத்திரம் முதலாவது தன்னிலிலுள்ள மரித்தோரின் சரீரத்தை ஒப்புவிக்கிறது. கோடிக்கணக்கானவர்களின் சடலங்கள் மண்ணில் அடக்கம் பண்ணப்படாமல் தண்ணீரில் மூழ்கியிருக்கும். உயிர்த்தெழுதலானது கடலின் ஆழத்திலும் நடைபெறலாம். அடுத்து மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கின்றன. இங்கே மரணம் என்ற வார்த்தை மரணமடைந்தோரின் சரீரத்தை நியாயத்தீர்ப்பின் நாளிலே எழுப்பும்படியாக நியமிக்கப்பட்டிருக்கும் கல்லறையாக எடுத்துக் கொள்ளவேண்டும். மனித சரீரத்தின் சாம்பல் கல்லறைகளில் மண்ணோடு மண்ணோடாகவோ தண்ணீரில் கரைந்தோ போயிருக்கலாம். ஆனாலும் ‘ பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்” என்ற வார்த்தையின்படி, அந்த சரீரம் ஒருநாள் எழுந்து, பாதாளத்தில் காவல் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் ஆவி ஆத்துமாவோடு அது இணைந்து, வெள்ளை சிங்காசனத்துக்கு முன்பாகக் காணப்படும். யாவரும், தங்கள் தங்கள் கிரியைகளின்படி நியாயத்தீர்ப்படைகிறார்கள். அது தேவநீதியின் அடிப்படையில் அமைந்திருக்கும். ஏனென்றால் “தேவனிடத்தில் பட்சபாதமில்லை” (ரோமர் 2 : 11, அப்போஸ்தலர் 10 : 34). அவனவன் பெற்றுக் கொண்ட வெளிச்சத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் (ரோமர் 2 : 12 – 15, மத்தேயு 10 : 15, 11 : 21 – 24, லூக்கா 11 : 31, 32 அப்போஸ்தலர் 10 : 34, 35). இதைத்தான் இயேசு,

லூக்கா 12 : 48 ல் “ எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.” என்கிறார்.

  1. இரண்டாம் மரணம்:

வெளிப்படுத்தல் 20 14 “அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.” 

அந்திகிறிஸ்துவும், கள்ளத்தீர்க்கதரிசியும்தான் முதலாவது அக்கினிக்கடலில் தள்ளப்படுகிறார்கள் (வெளிப்படுத்தல் 19 : 20). ஆயிரம் ஆண்டுகள் கழித்து சாத்தான் தள்ளப்படப்போவதை வெளிப்படுத்தல் 20 : 10 ல் பார்த்தோம். இதில் மரணமும் பாதாளமும் தள்ளப்படுவதை இங்கு கூறப்பட்டுள்ளது. வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்குப்பின் மரணமும் பாதாளமும் இருக்கப் போவதில்லை.,

1கொரிந்தியர் 15 : 26 “பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” என்றும், 

ஏசாயா 25 : 8 “ அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்;” என்றும் 

வெளிப்படுத்தல் 1 : 18 ல் கிறிஸ்து, “ மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.”

என்று கூறியதை வெளிப்படுத்தின விசேஷத்தின் முடிவில் செயல்படுத்துகிறார். நித்திய அக்கினியில் தள்ளப்படும் அனுபவமே இரண்டாம் மரணம். முதலாவது மரணம் என்ற வார்த்தையை யோவான் ஒரு இடத்திலும் பயன்படுத்தவில்லை. இது எல்லோருக்கும் பொதுவானது. பூமியில் பிறந்த அனைவரும் இந்த மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். இதில் மனிதனுடைய சரீரம் மரணமடைந்து, ஆவி ஆத்துமாவை விட்டுப் பிரிந்து செல்கிறது. இரண்டாவது மரணத்தின் போது, துன்மார்க்கருடைய ஆவியும் ஆத்துமாவும் சரீரமும் நித்திய நித்தியமாய் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு , அக்கினிக்கடலிலே வாதிக்கப்படும்படியாக ஒப்புவிக்கப்படுகிறது. என்பதை வெளிப்படுத்தல் 20 : 6 ல் உள்ளது. புதிய வானமும் பூமியும் தோன்றுவதற்கு முன் அனைத்து தீயவர்களும் உயிர்ப்பிக்கப்பட்டு அவரவர் கிரியைகளுக்கேற்ப நரக சிட்சைக்கு அனுப்பப்படுவர். இதுவே இறுதி நியாயத்தீர்ப்பு. இதுவே இரண்டாம் மரணமுமாகும் (வெளிப்படுத்தல் 20 : 11 – 15, 12 : 8, 22 : 10 – 15). இந்த வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் வருமனைவரும் நரக சிட்சையடைவர். இந்த வெள்ளை சிங்காசனத்துக்கு சற்று முன்பு சாத்தான் நியாயந்தீர்க்கப்பட்டு நரகம் செல்வான் (வெளிப்படுத்தல் 29 : 10). அப்போது அவனுடைய தூத கணங்கள் யாவும் நியாயந்தீர்க்கப்படும் (2பேதுரு 2 : 4, ஏசாயா 14 : 12 – 17, எசேக்கியேல் 28 : 12 – 19, 1 கொரிந்தியர் 6 : 3). அவர்களனைவரும் அக்கினிக்கடலுக்குள் செல்வர் (வெளிப்படுத்தல் 20 : 10). 

  1. அக்கினிக்கடலில் தள்ளப்பட்டவர்கள்:

வெளிப்படுத்தல் 20 : 15 “ ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.” 

ஜீவ புஸ்தகத்தில் பெயரில்லாதவர்கள் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டார்கள். .நரகம் என்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை அக்கினிக்கடல் (உபாகமம் 32 : 22, சங்கீதம் 9 : 17, மத்தேயு 10 : 28). இந்த வார்த்தை வெளிப்படுத்தல் 20 : 10, 14, 15 லிலும் பயன்படுத்தப்படுகிறது. எரிநரகமென்றால் தண்டனை கொடுக்குமிடம் என்று பொருள் (மத்தேயு 5 : 22, 18 : 9). நரக அக்கினி (யாத்திராகமம் 3 : 6, மாற்கு 9 : 47), படுகுழி (யோபு 33 : 24, சங்கீதம் 30 : 8), அக்கினிச்சூளை (மத்தேயு 13 : 42, 50), அக்கினிஜ்வாலை (லூக்கா 16 : 24), நித்திய அக்கினி (மத்தேயு 18 : 9), என்ற வார்த்தைகளும் நரகத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இயேசு, 

மத்தேயு 8 : 12 ல் “அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றும், மாற்கு 9 : 46 ல் “ அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.” 

என்றும் கூறுகிறார். அக்கினிக்கடலில் போடப்பட்ட மனிதன் முற்றிலும் அழிந்து பிறக்குமுன் எவ்வாறிருந்தானோ அந்த நிலையை அடைகிறான். அதனால்தான் 

பிரசங்கி 12 : 7 ல் “ இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.” என்கிறார்.”

பாதாளம் என்ற வார்த்தை (ஆதியாகமம் 3 : 35, 42 : 38, சங்கீதம் 89 : 48, மத்தேயு 11 : 23, அப்போஸ்தலர் 2 : 27, வெளிப்படுத்தல் : 20 : 13) நரகத்தைக் குறிப்பிடுவதில்லை. இது மரித்தோரின் வாசஸ்தலம் என்று பொருள்படும். பாதாளம் இரண்டு பகுதிகளையுடையது. நீதிமான்கள் ஆவி, ஆத்துமா பரதீசு என்ற இடத்திலும் துன்மார்க்கரின் ஆவி ஆத்துமா வாதை என்ற இடத்திலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

லூக்கா 23 : 43 ல் “ இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

கிறிஸ்து கல்வாரியில் மரித்தபோது மாம்சத்திலே கொலையுண்டவராயும், ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டவராயும் பாதாளத்துக்குள் பிரவேசித்தாரென்பதை 1 பேதுரு 3 : 18, 19, எபேசியர் 4 : 9, 10 ல் வாசிக்கிறோம். அதற்குப்பின் பரதீசுவில் உள்ள பரிசுத்தவான்களை மீட்க, இயேசு சிலுவையில் கிரயத்தைக் கொடுத்து விட்டபடியால் அவர்களுடைய ஆவியும் ஆத்துமாவும் உடனடியாக பரலோகத் துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்குப் பிறகு மரிக்கும் பரிசுத்தவான்களுடைய ஆவி ஆத்துமாவும் பாதாளத்துக்குள் செல்லாமல் கிறிஸ்து வண்டையில் நேரடியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

முடிவுரை:

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு பெரிய நியாயத்தீர்ப்பு, இறுதி நியாயத் தீர்ப்பு, துன்மார்க்கரின் நியாயத்தீர்ப்பு என்று பலவாறு அழைக்கப்படுகிறது. கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சியின் முடிவில் சாத்தான் நரகத்தில் தள்ளப்பட்ட பின் இது நடைபெறும் துன்மார்க்கர் யாவரும் உயிர்த்தெழும்பப் பட்டு நியாயந்தீர்க்கப் படுவார்கள் (வெளிப்படுத்தல் 20 : 10 – 15) அக்கிரமக்காரர் களும், தேவபக்தி இல்லாதவர்களும் தண்டனைகளைப் பெறுவார்கள் (2 பேதுரு 2 : 9, 3 : 7). ஜீவ புஸ்தகத்தில் பெயர் இல்லாதவர்களும் நரகத்தில் தள்ளப் படுவார்கள் (வெளிப்படுத்தல் 20 : 15). பிதாவாகிய தேவனே நியாயாதிபதி. ஆனால் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தைக் குமாரனுக்குக் கொடுத்துள்ளார் (யோவான் 5 : 22, அப்போஸ்தலர் 10 : 42, 17 : 31, ரோமர் 2 : 16). பரிசுத்தவான்களும் இதில் பங்கேற்பதை சங்கீதம் 149 : 6 – 9, தானியேல் 7 : 10, 26, வெளிப்படுத்தல் 20 : 4 கூறுகின்றன. இயேசுவின் சீடர்கள் இஸ்வேலின் பன்னிரண்டு கோத்திரங்களை நியாயந்தீர்ப்பார்கள் (மத்தேயு 19 : 28, லூக்கா 22 : 28 30). செயல்கள், சொற்கள் மட்டுமின்றி நோக்கங்களும் தவறான சிந்தனைகளும் நியாயந்தீர்க்கப்படும் (எரேமியா 11 : 20, ரோமர் 2 : 16, 2 பேதுரு 3 : 7, யூதா 14, 15). இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு (யோவான் 3 : 16, ஆவியின்படி நடக்கிற வர்களுக்கு ரோமர் 8 : 1, ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களுக்கு வெளிப்படுத்தல் 20 : 15, 21 : 27) தண்டனை இல்லை. கர்த்தருடைய வசனத்தின்படி நியாயத்தீர்ப்பு இருக்கும் (யோவான் 12 : 48). நியாத்தீர்ப்பில் தண்டனை பெறாமலிருக்க பரிசுத்தமாய் வாழ பிரயாசப்படுவோம். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago

இயேசுவின் இரகசிய வருகை

இயேசுவின் வருகைக்கு முன் நடப்பது: இயேசுவானவர் முதல்முறை வரும்போது ஜனங்களின் பாவத்தை மன்னிக் கவும், அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கவும்…

1 month ago