இயேசுவின் உவமைகள்

காணாமல் போன ஆடு – மத்தேயு 18 : 12 – 14, லூக்கா 15 : 3 – 7

இயேசு கூறிய 46 உவமைகளில் இந்த உவமையும் ஒன்று. இயேசு என்ன நோக்கத்தோடு இந்த உவமையைக் கூறினாரென்றால் மனம் திரும்புவதைக் குறித்தும், பரலோக ராஜ்யத்தைக் குறித்தும், தன்னோடு இருந்த மனிதர்களோடு பேசினார். தன்னுடைய பிள்ளைகள் எளிமையாகக் கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இயேசு உவமைகளாகப் பேசினார். அன்றாடம் நடக்கிற தொழிலிலிருந்து அனேக உவமைகளைக் கூறினார். ரோம அரசாங்கத்தில் வரிவசூல் பண்ணும் வேலை பார்த்த யூதன் தான் மத்தேயு. அவன் ஆயத்துறையில் இருக்கும் போது இயேசு அவனைக் கூப்பிட்டார். வரி வசூலிப்பவர்களை ஜனங்களுக்குப் பிடிக்காது. அவர்கள் மத்தியில் இயேசு சாப்பிடுவதால் யூதர்கள் எப்படி பாவிகளோடு சாப்பிடுகிறாரே என்று கேட்டபொழுது, இயேசு இந்த உவமையைக் கூறினார். அங்கு வந்திருக்கிறவர்கள் பாவிகள் தான். ஆனால் அவர்களும் இயேசுவின் வசனத்தை கேட்கத்தான் வந்திருந்தனர். ஆண்டவர் படைத்த உலகங்களிலும் தொலைந்து போன உலகம் இந்த பூமிதான். அந்த பூமியை மீட்பதற்காகத்தான் இயேசு பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார். இயேசு இந்தப் பூமிக்கு வந்ததன் முக்கியமான நோக்கம் இழந்து போனதைத் தேடவும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும்தான்.

ஆட்டைத் தேடிப்போன மேய்ப்பன்:

லூக்கா 15 : 4 “உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?”

ஒரு மனுஷனுக்கு 100 ஆடுகள் இருந்தது. அவைகளை மேய்க்கிறதற்காக வனாந்திரத்திற்கு அழைத்துச் செல்கிறான். மாலையில் பார்க்கும்போது அதில் ஒரு ஆடு காணாமல் போய்விட்டது. இதில் கூறப்பட்ட மேய்ப்பன் என்பது இயேசுவைக் குறிக்கிறது (யோவான் 10 : 11). காணாமல் போன ஆடு என்பது ஏசாயா 53 : 6 கூறியதைப்போல பாவத்தில் விழுந்து போன ஆதாமின் சந்ததியான நம்மைக் குறிக்கிறது. நாம் கர்த்தருடைய மேய்ச்சலின் ஜனங்களும், கர்த்தருடைய கைக்குள்ளான ஆடுகளாக இருக்கிறோமென்று சங்கீதம் 95 : 7லும், இஸ்ரவேல் ஜனங்களை ஒரு ஆட்டு மந்தையைப் போல வழிநடத்தினாரென்று சங்கீதம் 77 : 20லும் பார்க்கிறோம். இயேசுவின் காலத்தில் பரிசேயர்களும், யூதர்களும் 99 ஆடுகளாக இருந்தனர். மேய்ப்பனான இயேசு கிறிஸ்து காணாமல் போனவர்களைத் தேடுவதைப் பற்றி உவமையாகக் கூறுகிறார். காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிப்பதற்காக மற்ற 99 ஆடுகளையும் வனாந்தரத்தில் விட்டுவிட்டு மேய்ப்பன் தொலைந்துபோன அந்த ஆட்டைத் தேடுகிறான். ஏனெனில் காணாமல் போன அந்த ஆட்டுக்குத் திரும்பி வர வழி தெரியாது. அது தடுமாறி சத்தமிடாதவாறு மேய்ப்பனைத் தேடி அங்குமிங்கும் அலையும். மேய்ப்பனின் சத்தத்திற்காக ஏங்கும். மேய்ப்பனைக் காணும் வரை நிலை கொள்ளாது. மேய்ப்பன் அதைத் தேடித் திரிகிறான். கடைசியில் மேய்ப்பன் ஆட்டின் கதறலைக் கேட்டுக் கண்டுபிடித்தான். 

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

பாவிகளைத் தேடி வந்த மேய்ப்பனான இயேசு:

இந்த ஆட்டின் மேய்ப்பனைப் போல நம்முடைய தேவனாகிய இயேசு சாதாரண மேய்ப்பன் அல்ல. நல்ல மேய்ப்பன் என்று யோவான் 10 : 11லும், பெரிய மேய்ப்பன் என்று எபிரேயர் 13 : 20லும் பிரதான மேய்ப்பன் என்று பேதுரு 1பேதுரு 5 : 4லும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இஸ்ரவேலருக்குள் மனம் மாறத் தேவையில்லையென்று நினைத்த பரிசேயர்களையும், யூதர்களையும் பாலைநிலத்தில் விட்டு விட்டு தம்முடைய ஆடுகளாகிய சீஷர்களையும், பாவிகளையும் தேடியே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். அவர்களுக்காகத் தம்முடைய உயிரையும் விட்டாரென்று யோவான் 10 : 11ல் பார்க்கிறோம். நமக்காக இயேசு என்ற நல்ல மேய்ப்பன் கல்வாரி சிலுவையில் தன்னுடைய ஜீவனையே கொடுத்ததைப் பார்க்கிறோம். அதனால்தான் நாம் தேவனுடைய சமூகத்தில் இருக்கும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளோம். நல்ல மேய்ப்பனான இயேசு 

யோவான் 10 : 14 , 15ல் “நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,” 

“நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.”

என்று கூறி இருப்பதைப் பார்க்கிறோம். தேவன் நம்மை அறிந்திருப்பதனாலும் நாம் தேவனை அறியப்பட்டிருப்பதினாலும் தான் அனேக ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் அவரை அறிந்ததால் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறோம் (யோவான் 17 : 3). அதனால் தான் நமக்கு கிருபையும், சமாதானமும் கிடைத்தது (2 பேதுரு 1 : 2). பெரிய மேய்ப்பனான இயேசு அவருக்குப் பிரியமான காரியங்களை நம்மில் நடப்பித்து, எல்லாவித நற்கிரியைகளிலும் நம்மைப் பூரணப் படுத்துகிறார் (எபிரேயர் 13 : 21). பிரதான மேய்ப்பனான இயேசு தன்னுடைய மந்தையில் பிரயாசப்படுகிறவர்களுக்குப் பிரதிபலனைத் தருகிறார் (1 பேதுரு 1 : 5 ). இஸ்ரவேலில் பிரதான ஆசாரியர்கள் ஏபோத்தை அணிந்திருந்தார்கள். ஏபோத்தில் தோள்களில் இரண்டு கற்கள் இருக்கும். அதன் ஒரு கல்லில் 6 கோத்திரங்களின் பெயர்களும், மற்ற கல்லில் மற்ற 6 கோத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கும். பிரதான ஆசாரியர்கள் இஸ்ரவேல் புத்திரரை தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு இருந்தார்கள் என்பதற்கு அடையாளமாக அவைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதேபோல் நம்முடைய பிரதான ஆசாரியனாகிய இயேசுவும் நம்மைத் தோள்களில் சுமந்து கொண்டு செல்கிறார்.

தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களைப் பற்றி தேவனுக்குத் திருப்தி ஏற்படாததால், காணாமல் போனவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம் மனுஷனுடைய ஆத்துமா விலையேறப் பெற்றது. மனுஷனுடைய ஆத்துமா தனித்தன்மை வாய்ந்தது. அதனால்தான் அதைத் தேடிப் போகிறார். நல்ல மேய்ப்பனான இயேசு இந்த உலகத்தில் தன்னுடைய பிள்ளைகள் எந்த சூழ்நிலையில் எந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைத் தேடிச் செல்கிறார். அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அப்போஸ்தலர் 9 : 10, 11ல் அனனியா என்ற தீர்க்கதரிசிக்குக் கர்த்தர் தரிசனமாகி சவுலைப் பற்றி கூறுவதைப் பார்க்கிறோம். சவுல் இருக்கிற தெரு தேர்த்தெரு என்றும், அவன் இருக்கிற வீடு யூதாவின் வீடு என்றும், அந்த வீட்டிலிருக்கிற சவுல் என்ற ஒருவனைத் தேடு என்றும், அவன் இப்பொழுது ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிறான் என்றும், அவன் இருக்கிற தெரு, வீடு தேட வேண்டிய நபரின் பெயர், அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற அனைத்தையும் அந்த தீர்க்கதரிசிக்குத் தெரிவிப்பதைப் பார்க்கிறோம். சவுல் இயேசுவுக்கு எதிராளியாக இருந்தவன் (அப்போஸ்தலர் 9 : 1, 2). அப்படிப்பட்டவனைக் கூட தேவன் தன்னுடைய பிள்ளையாக அழைத்து உயர்த்தினார். தேவனான இயேசு காணாமற்போன ஆடுகளாகிய நம்மைத் தேடி பரலோகத்தை விட்டு அவருடைய கனத்தையும் மகிமையையும் விட்டு வந்தார். பாவத்தில் விழுந்த நம்மிடம் தேவன் இடைபடாவிட்டால் நம்மால் அந்தப் பாவத்திலிருந்து மீளமுடியாது. மீட்பும் கிடைத்திருக்காது. 

  1. இயேசு எதற்காக நம்மை தேடி வருகிறார் என்றால் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை நமக்களித்து மீட்பதற்காக வந்தார் (1 பேதுரு 1:19).
  2. இயேசு தன்னுடைய பிள்ளைகளை தனக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தும் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாக மாற்றுவதற்காக அவர்களைத் தேடி வந்தார் (1 பேதுரு 2 : 5).
  3. இயேசு தன்னுடைய பிள்ளைகள் இச்சையினால் உலகத்தில் உண்டாகும் கேட்டுக்கு அவர்களைத் தப்புவிக்கவும், திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்படிக்கும் அவர்களைத் தேடி தந்தார் (2 பேதுரு 1 : 4)

 ஆட்டின் குணம்:

ஆடு எல்லாவிதத்திலும் பாதுகாப்பில்லாத பிராணி. சிங்கம், புலி, ஓநாய், கரடி ஆகிய விலங்குகள் ஆட்டின் விரோதிகள். ஆடுகள் விரோதிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஆடு மந்த சுபாவமுள்ளது. அந்த மந்த சுபாவத்தினால் அது மேய்ப்பனை விட்டு அக்கரையில் புல் உள்ளதென்றால் அதை நோக்கி ஓடும். தனக்கிருக்கும் ஆபத்துகளை அது அறிவதில்லை. ஆடுகளுக்குத் தப்பிப்போனால் திரும்பி வருவதற்கு வழி தெரியாது. 

மேய்ப்பனின் குணம்: 

மேய்ப்பன் தன்னுடைய மந்தையில் உள்ள ஆடுகள் அனைத்தையும் அறிந்திருக்கிறான். மேய்ப்பனின் குரலை ஆடுகளும் அறிந்திருக்கும். மேய்ப்பன் ஒவ்வொரு ஆட்டையும் பெயர் சொல்லி அழைப்பான் (யோவான் 10 : 3). அவன் பெயரைச் சொல்லி அழைத்தவுடன் அந்தச் சத்தத்தைக் கேட்டு அந்த ஆடுகள் ஓடிவரும். ஆடுகளை அன்போடு நடத்துவான். ஆடுகளுடன் தன் நேரங்களைச் செலவழிப்பான். ஆடுகளைச் சரியான வழியில் நடத்துவான். ஆடுகளை எதிரிகளிடமிருந்து மீட்டெடுப்பான். ஆடுகளுக்குச் சரியான போஜனத்தைக் கொடுப்பான். மத்தியான வேளையில் வெயிலின் அகோரத்தினால் ஆடுகள் கிறுகிறுத்து வரும்போது மேய்ப்பன் அதன் தலையில் மருந்து கலந்த எண்ணெய் வார்த்து குளிரப் பண்ணுவான். அதனால் ஆடுகள் குளிர்ச்சியாகி சுகம் பெற்று, ஆறுதல் அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி அடையும். அந்த எண்ணையைப் பூசும்போது முட்களால் கிழிக்கப்பட்ட காயங்கள் ஆறுகின்றன. அந்த எண்ணெயினால் ஆடுகளின் சரீரங்களில் ஒட்டியிருந்த பூச்சிகள், புழுக்கள் செதில்கள் செத்து விழுகின்றன. மேய்ப்பன் எல்லா ஆடுகளையும் ஒன்றுபோல் நடத்துவதில்லை கறவை ஆடுகளையும், பலவீனமான ஆடுகளையும், ஊனமுற்ற ஆடுகளையும் பின்தங்கி மெதுவாக நடத்திச் செல்வான். ஒவ்வொன்றையும் அதன் நிலைமைக்கு ஏற்றார்போல் மிகவும் அன்போடு நடத்திச் செல்வான். நலிவுற்ற ஆடுகளைச் சுமந்து கொண்டு செல்வான்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

நல்ல மேய்ப்பனின் குணங்கள்:

யோவான் 10 : 27ல் “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.”

“நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.”

என்று இயேசு கூறியதைப் பார்க்கிறோம். நம்மை இயேசுவின் சத்தத்துக்குச் செவிகொடுக்கச் செய்கிறார். நாம் இயேசுவை அறியவும், அவருக்குப் பின் செல்லவும் வைக்கிறார். நமக்கு நித்தியஜீவனைக் கொடுப்பவரும் அவரே. நாம் கெட்டுப் போகாமல் காப்பவரும் அவரே. தன்னுடைய பிள்ளைகளை சாத்தான் பறிக்காதபடி காப்பவரும் அவரே. கர்த்தர் வேதத்தின் மூலமாகவும், ஆவியானவர், ஊழியக்காரர்கள், தீர்க்கதரிசிகள், மூலமாகவும் குரல் கொடுக்கிறார். மோசேயைப் பெயர் சொல்லி அழைத்தார். அவன் அந்த அழைப்புக்கு இணங்கி தேவனுக்குப் பின் சென்றான் (யாத்திராகமம் 3 : 2 – 10). அதே போல நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறவராக இருக்கிறார். இயேசு இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் நடந்து மேக ஸ்தம்பத்தினாலும், அக்கினி ஸ்தம்பத்தினாலும் வழி நடத்தியதைப் போல நமக்கு முன்னால் நடந்து நம்முடைய எதிரிகள் நம்மைத் தாக்காதபடி முடிவுபரியந்தம் நம்மோடு கூட வருகிறவராக இருக்கிறார் நல்ல மேய்ப்பனான இயேசு நம்மை ஒருபோதும் தளர்ச்சியடைய விடுவதில்லை. நாம் குறைவுபடவும் விடப் போவதில்லை. நம் கால்களைத் தள்ளாட விடாதவர். இயேசுவும் நல்ல சமாரியனாக இருந்து நம்முடைய காயங்களைக் கட்டுவார். காயங்களுக்கு எண்ணை பூசுவார். அன்போடு அரவணைத்து பாதுகாப்பார் (எசேக்கியேல் 34 : 16).

ஏசாயா 40 : 11 “மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.”

இயேசு ஆடுகளை மேய்ப்பவனைப் போல, தம்முடைய மந்தையில் உள்ள விசுவாசிகளின் பலவீனங்களையும், சோர்வுகளையும் அகற்றி, ஆவிக்குரிய நிலைமையை அறிந்து தகப்பன் தன் பிள்ளையை சுமந்து கொண்டு செல்வது போலவும் ஒரு தாய் தேற்றுவது போலவும் தேற்றுவார். 

தேடியதற்குக் காரணம்:

ஆட்டைக் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து தேடுகிறான். ஏன் அவ்வாறு தேடுகிறான் என்றால் அந்த ஆடு அவனுக்குச் சொந்தமானது. மேலும் அந்த ஆடு தொலைந்து போனதற்கான காரணம், அது தன்னுடைய மேய்ப்பனைப் பார்க்காமலும், அவன் காட்டிய வழியில் செல்லாமலும், மற்ற ஆடுகளையும் பார்க்காமல், அது தன்னுடைய சொந்த வழியில் போனதால்தான். உலகத்தில் உள்ள மற்ற மிருகங்களை மேய்ப்பதற்கு மேய்ப்பன் கிடையாது. மற்ற மிருகங்கள் தானாகவே தன் வீட்டைத் தேடி வந்துவிடும். ஆட்டிற்கு மட்டும் திரும்பி வர வழி தெரியாது. அதற்குத் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியாது. எனவே இந்த ஆட்டின் மேய்ப்பன் தொலைந்து போன தன்னுடைய ஆட்டைத் தேடிப் போகிறார். அதேபோல் இயேசுவுக்கு நாம் சொந்தமானவர்கள். அப்பா பிதாவே என்று கூப்பிடும் உரிமை உள்ளவர்கள். இயேசுவாகிய மேய்ப்பன் தன்னுடைய ஒவ்வொரு ஆடுகளையும் பெயர் சொல்லி அழைப்பார் (யோவான் 10 : 3). கர்த்தர் வேதத்தின் மூலமாகவும், ஊழியர்களின் மூலமாகவும், தீர்க்கதரிசிகளின் மூலமாகவும் குரல் கொடுக்கிறார். இஸ்ரவேலருக்குள் மனம் மாறத் தேவையில்லையென்று நினைத்த பரிசேயர்களையும், யூதர்களையும் பாலைநிலத்தில் விட்டு விட்டு தம்முடைய ஆடுகளாகிய சீஷர்களையும், பாவிகளையும் தேடியே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். அவர்களுக்காகத் தம்முடைய உயிரையும் விட்டார். அதைத்தான் 

லூக்கா 19 : 10 “ இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.” 

இயேசுவுக்குப் பின்னால் நாம் செல்ல வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் பொழுது மேய்ப்பனான இயேசு நம்மை நல்ல வழியில் திசை திருப்பி அழைத்துச் செல்வார். அந்த மேய்ப்பனின் வழியில் நாம் செல்லும்பொழுது ஆசீர்வாதத்தின் மேல் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். தேவன் பல தேசங்களில் சிதறுண்ட தன்னுடைய பிள்ளைகளை அவர்களுடைய சுய தேசத்துக்குக் கூட்டிச் சேர்த்து, அவர்களை விசாரித்து, நல்ல மேய்ச்சலுள்ள இடங்களில் ஆசீர்வாதமாக வைப்பேன் என்று எசேக்கியேல் 34 : 11 – 15ல் கூறுவதைப் பார்க்கிறோம்.. 

மேய்ப்பனின் சந்தோஷம்:

லூக்கா 15 : 5, 6 “கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,”

“வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?”

ஆட்டைத் தேடிச் சென்ற மேய்ப்பன் அந்த ஒரு ஆட்டைத் தூரத்தில் கண்டவுடன் ஓடிப்போய் அதைப் பிடித்து நடத்திக் கொண்டு வராமல், தன் தோளின் மேல் சுமந்து கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன் தன் வீட்டுக்குப் போவான். ஆட்டுக்கு வர வழி தெரியாததால் அதைக் கண்டுபிடித்தவுடன் ஏன் வழிவிலகினாய் என்று அடிக்கவோ, பயமுறுத்தவோ இல்லை. இது மேய்ப்பன் ஆட்டின் மேல் வைத்திருந்த அன்பையும், அது கிடைத்து விட்டதால் உள்ள சந்தோஷத்தையும் காட்டுகிறது. அதேபோல் ஆட்டிற்கும் இந்த மேய்ப்பனை விட்டு பிரிந்து, வழிதப்பித் போனேனே, ஆனால் மேய்ப்பன் தன்னைத் தேடி வந்து கண்டுபிடித்தாரே, தன்னைத் தோளின் மேல் சுமக்கிறாரே என்ற சந்தோஷம் ஏற்படும். காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடித்த சந்தோஷத்தை வெளிப்படுத்த மேய்ப்பன் தன்னுடைய சிநேகிதர்களையும் பக்கத்தில் உள்ளவர்களையும் அழைத்து அந்த ஆட்டை கண்டுபிடித்த விவரத்தைச் சொல்லி சந்தோஷப்படுவான். 

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

பரலோக சந்தோஷம்:

லூக்கா 15 : 7 “அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

ஆடுகளின் மேய்ப்பன் ஆடுகளை தன்னுடைய சந்ததோஷத்தினால் தூக்கிக் கொண்டு வந்ததைப் போல, நமது மேய்ப்பனும் அவரது அன்பினிமித்தமும், பரிதாபத்தினிமித்தமும் இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தார் என்று ஏசாயா 63 : 9ல் பார்க்கிறோம். இயேசு பாவத்தில் வழி விலகி போனவர்களைத் தேட பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்தார். தானே முன்வந்து நமக்காகத் தம் ஜீவனையே கொடுத்தார். பாவம் செய்தவர்களைத் தண்டிக்காமல் அவர்களுக்கு பாவமன்னிப்பு கொடுத்து, இரட்சிப்பின் பாதையில் வழி நடத்துகிறார். இயேசு போதகராக, ஆசாரியராக வேண்டுமென்பதற்காக வரவில்லை. ஜீவனைக் கொடுக்கிற மேய்ப்பனாக வந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரே பணி மேய்ப்பன். தானாக முன்வந்து தன் உயிரையே கொடுத்து, அவரது மீட்டெடுக்கும் அன்பினால் நம்மை மீட்டெடுத்தார். பாவிகளில் ஒருவன் இரட்சிக்கப் பட்டாலும் கூட பரலோகத்திலும், தேவதூதர்கள் மத்தியிலும் . மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று வேதத்தில் பார்க்கிறோம். பரலோக வீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்ல நம்முடைய பாரத்தையம் துக்கத்தையும் அவர் சுமக்க வேண்டியதாயிருந்தது. 

நாம் கற்றுக் கொண்ட பாடம்:

நாம் ஒவ்வொருவரும் நல்ல மேய்ப்பனான இயேசுவையே நோக்கிப் பார்க்க வேண்டும். அவர் நம்முடைய எல்லா சத்துருக்களுக்கும் முன்பாக நம் தலையை உயர்த்தி, எண்ணெயால் அபிஷேகம் பண்ணுவார். நம்முடைய பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்வார். நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடரச் செய்வார். நாம் ஆண்டவரை விட்டு வேறு வழியில் செல்கிறோமா, பாவ வழியில் செல்லுகிறோமா என்று ஆராய வேண்டும். நம்முடைய கோபங்கள், வெறுப்புகள், பொறாமைகள், பெருமைகள் அனைத்தையும் அகற்றி விடவேண்டும். ஆடு கத்துவது போல நம்முடைய பாவத்தை இயேசுவண்டை அறிக்கையிட்டு கதற வேண்டும். அப்பொழுது இயேசுவாகிய மேய்ப்பன் அந்த ஆட்டுக்குட்டியைச் சுமப்பது போல நம்மையும் பரலோக வீட்டிற்கு சுமந்து சென்று சேர்ப்பார். நாம் மனம் திரும்பிக் கதறும் போது நல்ல மேய்ப்பனான இயேசு சந்தோஷப்படுவார். நல்ல மேய்ப்பனாக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மோசேயை கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை மேய்த்து கானானுக்கு வழி நடத்தினார். அதேபோல் தாவீது தன்னுடைய தந்தையின் ஆடுகளுக்கு நல்ல மேய்ப்பனாக இருந்ததால் கர்த்தர் அவனை ராஜாவாக்கினார். யூதர்கள் இவர்கள் இருவரையும் நல்ல மேய்ப்பன் என்பார்கள். இவர்கள் இருவரும் நல்ல மேய்ப்பன் என்பது உண்மை. ஏனெனில் அவர்கள் நடத்தினார்கள், பாதுகாத்தார்கள். ஆனால் இயேசுவோ தன்னுடைய ஜீவனையே கொடுத்து ஜனங்களை மீட்டெடுக்கிறார். அந்த இயேசுவின் மேல் நாம் நம்பிக்கை வைத்தோமானால் அந்த மேய்ப்பன் உளையான சேற்றிலிருப்பவர்களையும், சாத்தானின் அடிமைத்தனத்திற்குள் இருப்பவர்களையும், பாவ சேற்றிற்குள் மூழ்கியிருப்பவர்களையும் தேடிக் கண்டுபிடித்து, தூக்கியெடுத்து பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கச் செய்வார். இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago