இயேசுவின் உவமைகள்

நல்ல சமாரியன் – லூக்கா 10 : 25 – 37

உவமை கூறக் காரணம்:

சமாரியா என்பது ஒரு தேசம். அந்த தேசத்திலிலுள்ள ஒரு மனிதன் செய்த செயல் இயேசுவினால் உவமையாகச் சொல்லப்பட்டதால் நல்ல சமாரியன் என்று இந்த உவமைக்குப் பெயர் வைத்தார்கள். இதை லூக்கா 10:1-37ல் காணலாம். சாலமோனுக்குப் பின் தேசம் இரண்டாகப் பிரிந்தது. 10 கோத்திரம் ஒரு பகுதியாகவும், இரண்டு கோத்திரம் மற்றொரு பகுதியாகவும் இருந்து ஆட்சி செய்தனர். சாலமோனின் மகனான ரெகபெயாம் யூதா தேசத்தின் தலைநகராக எருசலேமைத் தெரிந்து கொண்டு ஆட்சி செய்தான். இவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படி கூடாரங்களில் தேவனைத் தொழுது கொண்டு வந்தனர். மற்ற 10 கோத்திரங்கள் யெரொபெயாம் என்ற மோசமான ராஜா சமாரியாவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவன் இரண்டு பொன் கன்றுக்குட்டிகளை அங்கு வைத்து அதற்குத் தூபம் காட்டி ஜனங்களைத் திசை திருப்பினான். இஸ்ரவேலின் உடன்படிக்கையிலிருந்து அவர்கள் பிரிந்து போனார்கள். இந்த யூதர்களை புறக்கணிக்கப் பட்டவர்களாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் நினைத்தனர். ரெகபெயாமின் ஆட்கள் தங்களை உத்தமர் என்று எண்ணி அந்த 10 கோத்திரத்தாரையும் வெறுத்தனர். 

அந்த பத்து கோத்திரத்தாரும் தான் மத்திய ஆசியாவில் இஸ்லாமியராக பலுகி இருக்கிறார்கள் என்பது செய்தி. இயேசுவைச் சோதிப்பதற்காக ஒரு நியாயசாஸ்திரி நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். இந்த சம்பவம் சிலுவைக்கு முன்பாக நடந்தது. நியாய சாஸ்திரியிடம் இயேசு நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது அதன்படி செய் என்றார். உடனே அவன் தன்னை நீதிமானாக நினைத்து தனக்கு ஒப்பானவர் யார் என்றான் (லூக்கா 10 : 25 – 29). அவன் அவ்வாறு பெருமைப் படும்போது இந்த உவமையை இயேசு கூறினார். இயேசுவுக்கு முன்புவரை சமாரியர்கள் தீண்டத்தகாதவர்களாக எண்ணியதால் அவர்களிடம் தண்ணீர்கூட வாங்கிக் குடிக்க மாட்டார்கள் (யோவான் 4 : 9). 

முன்னுரை: 

பரலோக ராஜ்யத்தைப் பற்றி அநேக உவமைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. உவமைகளில் சொல்லப்பட்டிருக்கிற சத்தியங்கள் விசேஷமானவைகள். வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவன் இனி நடக்கப் போகிறவைகளை வெளிப்படுத்தினார். அனேகமாக அதில் கூறப்பட்டவைகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. இன்னும் நிறைவேறவும் போகின்றது. பரலோகராஜ்யம் படித்தவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டும் உரியதல்ல. பரிசுத்தமாய் ஜீவிக்கிற அனைவருக்கும் அது சொந்தமாக இருக்கிறது. இதைத்தான் எபிரேய ஆக்கியோன் 13 : 14ல் “நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை” என்றார். தேவன் நமக்காக அசைவில்லாத, அழியாத, பெலனான நகரத்தை ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிறார். இந்த உவமையில் ஐந்து வகையான மக்களைப் பார்க்கிறோம். 

  1. வழிப்போக்கன்
  2. கள்ளன்
  3. ஆசாரியன் லேவியன்
  4. சமாரியன்

5 சத்திரக்காரன்.

வழிப்போக்கன்:

லூக்கா 10 : 30 “இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; ….”

ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகிறான். எரிகோவுக்கும், எருசலேமுக்கும் இடையிலுள்ள தூரம் 18 மைல். இது பயங்கரமான பாறைகளும், பள்ளங்களும், குகைகளும், குன்றுகளும் நிறைந்த இடம். கள்ளர்களும், கொலைகாரர்களும் ஒளிந்து வாழுமிடம். எருசலேம் தேவனுடைய நகரம், மகாராஜாவின் நகரம், சமாதானமான, இளைப்பாறுதலான திருப்தியான ஆகாரம் கிடைக்கக் கூடிய இடம். ஒரு குறைவுமில்லாத இடம். துதியின் ஆராதனை நிறைந்த இடம். அதைவிட்டுத் தேவன் விரும்பாத, சாபம் நிறைந்த, ஆடம்பரம் நிறைந்த, தேவன் புறம்பாகத்தள்ளின, தீமைநிறைந்த சபிக்கப்பட்ட பட்டணத்துக்குச் செல்கிறான். தேவாலயம் இருக்கிற பட்டணத்தை விட்டுவிட்டு ஆலயம் இல்லாத சமாரியா பட்டணத்திற்குப் போகிறான். 

பிசாசினால் அவனுடைய மனம் கெடுக்கப்பட்டு அவனுடைய இருதயம் எரிகோவுக்கு நேராகத் திரும்புகிறது. ஆசீர்வாதமான இடத்தை விட்டு விட்டுத் துயரமான இடத்தை நோக்கி தனியாக நடந்தான். என்றைக்கு அவன் எருசலேமை விட்டுப் புறப்பட்டானோ அன்றே அவன் பாதுகாப்பை இழந்து விட்டான். அவன் தேவனை விட்டு தேவனுடைய பராமரிப்பை விட்டு விலகுகிறான். தேவன் தந்த சமாதானத்தை இழந்தான். அதனால்தான் கள்ளர் கையில் அகப்பட்டான். லோத்தின் குடும்பம் ஆபிரகாமை விட்டு சோதோமுக்குச் சென்றனர். அந்த சோதோம் அழிவுக்கு வைக்கப் பட்டிருந்தது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஏற்கனவே வழிப்போக்கன் செல்கிற அந்த பாதைக்கு இரத்தத்தின் பாதை என்று பெயர். இதேபோல்தான் சுவிசேஷகர்கள் நரகத்தைக் குறித்து எச்சரித்தும், உலகத்தின் முடிவைப் பற்றி போதித்தும், இயேசு கிறிஸ்து அல்லாமல் இரட்சிப்பு கிடையாது என்று கூறியும், ஜனங்கள் அறிவில்லாமல் சங்காரமாகிறார்கள் என்றார். 

நாம் இந்த உலகத்தில் நடக்கும் போது நமக்குத் துணையாய், பாதுகாப்பாய் நம்மோடு கூட நடந்து வர இயேசு ஆவலாயிருக்கிறார். அன்று கர்த்தர் ஏனோக்கோடு 300 வருடங்கள் நடந்தார். மோசேயோடு கூட வனாந்தரப் பயணமெல்லாம் நடந்தார். தாவீது ஆடுகளை மேய்க்கும் போதும், சவுலுக்குப் பயந்து மலைகளிலும், குன்றுகளிலும் ஒளிந்து கொள்ள நடந்த போதும் தேவன் அவனோடு நடந்தார். எம்மாவூர் சீடர்களோடு நடந்தார். நாமும் அவரை வாஞ்சையோடு இயேசுவே நம்மோடு கூட வாரும் என்றழைக்கும் போது நம்மோடு கூட வருவார்.

கள்ளர்கள்:

லூக்கா 10 : 30 “ இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.”

அந்த மனுஷன் கள்ளர் கையில் அகப்பட்டதால் கள்ளர்கள் முதலில் அவனுடைய வஸ்திரத்தை உரிகின்றனர். இரண்டாவது அவனைக் காயப்படுத்துகின்றனர். மூன்றாவது அவனைக் குற்றுயிராய் போட்டு விட்டுப் போய் விடுகின்றனர். இன்றைக்கும் சாத்தான் தேவனுடைய பிள்ளைகளைத் தாக்கக் காத்துக் கொண்டிருக்கிறான். இதைத்தான் இயேசு,

யோவான் 10 : 10ல் “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” என்றார். 

இந்த வசனத்தின்படி வழிப்போக்கனிடமுள்ளதை திருடவும், அவனை அழிக்கவும், கொல்லவும் தான் வந்தான். இயேசு ஒருவரே பாவத்தினாலும், அக்கிரமத்தினாலும் மரித்துப் போன நமக்குள் புதிய ஜீவனைக் கொடுக்க வந்தார். அந்த மனிதன் அவனுடைய ஸ்தானத்தையும், இடத்தையும் இழந்து போனான். கர்த்தர் ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டத்தில் வைத்த போது தேவனுடைய மகிமை அவர்களை வஸ்திரமாய் மூடிக் கொண்டிருந்தது. அழியாத சரீரமுள்ளவர்களாய் அவர்களைத் தேவன் வைத்திருந்தார். ஆனால் அவர்கள் சாத்தானின் சொல்லைக் கேட்டுப் பாவம் செய்தபோது அவர்களை அறியாமலேயே சாத்தான் அந்த மகிமையின் வஸ்திரத்தை உரிந்துகொண்டான். ஆகவே அவர்கள் நிர்வாணியாகக் காணப்பட்டார்கள். எனவே கர்த்தர் தோல் உடைகளை உண்டாக்கி அணிவித்தாரென்று ஆதியாகமம் 3 : 21ல் பார்க்கிறோம். சாத்தான் ஒரு கிறிஸ்தவனைத் தாக்கும் போது முதலில் அவன் உரிய நினைப்பது இரட்சிப்பின் வஸ்திரத்தைத் தான். தேவ பிள்ளைகளாகிய நாம் ஒருபோதும் ஆவிக்குரிய வஸ்திரங்களை உரிய விடக்கூடாது. நாம் வேதவாசிப்பு, ஜெபஜீவியம், சபை கூடுதலில் இணைந்திருந்தால் ஒரு நாளும் சாத்தான் நம்முடைய ஆவிக்குரிய வஸ்திரத்தைப் பிடுங்கி விட முடியாது. பிசாசு பிடித்திருந்த லேகியோன் வஸ்திரம் இல்லாதவனாய் தான் இருந்தான். வஸ்திரத்தை உரிவதென்பது விசுவாசத்தை உரிவதைக் காட்டுகிறது. விசுவாசம் போனவுடன் மகிமையும் போய்விடுகிறது. கள்ளன் வழிப்போக்கனின் ஆத்மாவைக் காயப்படுத்தியதால் அவன் குற்றுயிராய் கிடக்கிறான். வழிப்போக்கனால் தனியாகக் கள்ளர்களை எதிர்க்க முடியவில்லை. ஏனெனில் அவன் ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தை அணிந்து கொள்ளவில்லை. எனவே குற்றுயிராய் அனாதையாய் ஆதரவுக்கு யாரும் இல்லாதவனாய் கிடக்கிறான். இங்கு கள்ளர்கள் என்பது பிசாசைக் காட்டுகிறது. இந்தப் பிசாசு அந்த வழிப்போக்கனிடம் திருடுகிறது, கொல்லுகிறது, அழிக்கிறது. இதில் திருடுவது என்பது விசுவாசத்தைத் திருடுவதைக் காட்டுகிறது. கொல்லுவது என்பது ஆத்மாவைக் கொல்லுவதைக் குறிக்கிறது. அழிக்கிறதென்பது சரீரத்தை அழிப்பதைக் குறிக்கிறது.

ஆசாரியனும் லேவியனும்:

லூக்கா 10 : 31, 32 “அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.”

“அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.”

அப்பொழுது அந்த வழியாக ஒரு ஆசாரியனும் லேவியனும் வருகிறார்கள். அவர்களைப் பார்த்தவுடன் என்னைக் காப்பாற்றுங்கள் என்று இந்த வழிப்போக்கன் கேட்டிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் இருவரும் விலகிப் போனார்கள். ஏன் விலகிப் போனார்கள் என்றால் மரித்த சடலத்தை ஒரு ஆசாரியனும் லேவியனும் தொட்டால் நியாயப்பிரமாணத்தின் படி ஏழு நாட்கள் தீட்டுப்பட வேண்டியதாயிருக்கும். அந்த நாட்களில் அவர்கள் ஆசாரிய ஊழியமும், லேவிய பணியும் செய்ய முடியாது. அவர்கள் ஆலயத்திற்குள்ளும் பிரவேசிக்க முடியாது. எனவே விலகிப் போயிருக்கலாம். மேலும் ஆசாரியன் என்பவன் பலி செலுத்துகிறவன். ஆடு மாடுகளைப் பலி செலுத்துவதினால் ஒரு மனிதனுக்கு நிவாரணம் கிடைக்காது. அதனால் அப்படிப்பட்ட பலி செலுத்துகிறது தாமதப்படும் ஆதலால் குற்றுயிராய் கிடக்கும் அவனை மீட்க முடியாது என்று ஒதுங்கி விடுகிறான். ஆடு மாடுகளான அறிவற்ற அந்த மிருகங்களைப் பலி செலுத்தினால் அறிவுள்ள மனிதனுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதை இன்றே மாற்றுங்கள். லேவியன் சட்டதிட்டங்களைக் கைக்கொள்ளுகிறவன். ஆசாரியனுக்கு உதவி பண்ணுகிறவன். எனவே அவனாலும் அந்த மனிதனை மீட்க முடியாது என்று அவனும் விலகிப் போகிறான். ஆனால் அவர்கள் கட்டளையைக் கைக்கொண்டது நல்லது தான் ஆனால் உன்னைப் போல பிறரையும் நேசி என்ற இன்னுமொரு கட்டளையை மறந்து விட்டனர். குற்றுயிராய்க் கிடக்கிறவனைப் பார்த்தும் அவர்களுக்கு இரக்கம் வரவில்லை. மேலும் அவர்களிடம் காயம் ஆற்றும் எண்ணையும் அவர்கள் கையில் இல்லை. சுகமாக்கும் வரங்களும் அவர்களிடம் இல்லை. ஆகவே அவர்கள் இருவரும் விலகிப் போனார்கள். இயேசு அவ்வாறு போகிறவர் அல்ல குஷ்டரோகியைக் கண்டு மனதுருகி தொட்டு சுகமாக்கினார். குஷ்டரோகியைத் தொட்டால் தீட்டுப் படுமே என்று எண்ணவில்லை. நாயீன் ஊர் விதவையின் மகன் மரித்த போது மனதுருகி அந்த பாடையைத் தொட்டு அவனை உயிரோடு எழுப்பினார் இறந்த சடலம் இருக்கும் பாடையைத் தொட்டால் தீட்டு என்று இயேசு விலகிப் போகவில்லை. அவரே நமக்கு நல்ல சமாரியன்.

காயம் கட்டும் சமாரியன்:

லூக்கா 10 : 33, 34 “பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,”

“கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.”

லேவியனும் ஆசாரியனும் போன பின் அங்கு ஒரு சமாரியன் வருகிறான். காயம்கட்டும் சமாரியன் என்பது இயேசுவைக் குறிக்கிறது. குற்றுயிராய் கிடக்கும் அவனைப் பார்க்கிறான். மற்றவர்களைப் போல அப்படியே அந்த மனிதனை விட்டு விட்டுப் போக அவனுடைய மனசாட்சி அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. 

  1. அவனைக் காண்கிறான்
  2. மனதுருகுகிறான்
  3. கிட்ட போகிறான்
  4. காயங்களில் எண்ணையும் திராட்சை ரசமும் ஊற்றுகிறான்
  5. காயங்களைக் கட்டுகிறான்
  6. அவனைத் தன் சுய வாகனத்தில் ஏற்றுகிறான்
  7. அவனைச் சத்திரத்துக்குக் கொண்டு போய் பராமரிக்கிறான்.

இவ்வாறு குற்றுயிராய்க் கிடக்கிற மனிதனுக்கு இந்த சமாரியன் பல பணிவிடைகள் செய்வதைப் பார்க்கிறோம். 

இது நடந்த சம்பவம் அல்ல ஒரு உவமை. இதற்குள் ஆழமான சத்தியங்கள் புதைந்து கிடக்கின்றன. காயங்களை அந்த சமாரியன் தன்னிடமுள்ள திராட்சரசத்தையும், எண்ணெயையும் பயன்படுத்திக் கட்டுகிறான். திராட்சைரசம் இயேசுவின் இரத்தத்தைக் காட்டுகிறது. எண்ணெயானது பரிசுத்த ஆவியானவரைக் காட்டுகிறது. இயேசுவின் இரத்தமானது சகல பாவங்களையும் நீக்கி அவனை சுத்திகரித்து காயங்களை ஆற்றுகிறது. ஆவியானவர் தந்த ஆவியால் ஆறுதலையும் தேறுதலையும், சுகத்தையும் அந்த மனிதன் பெற முடிந்தது. இந்த இரண்டும் அந்த மனிதனின் உள்ளான புண்களை ஆற்றி தெய்வீக சுகத்தை அந்த மனிதனுக்குக் கொடுத்தது. நம்முடைய தேவன் இரக்கமுள்ளவர். காயங்களை ஆற்றுகிறவர். ஏசாயா தீர்க்கதரிசி இயேசு என்ன செய்வார், எப்படிப்பட்டவர் என்று தீர்க்கதரிசனமாக, 

ஏசாயா 61 1, 2, 3ல் “ கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்ட வர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,”

“கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,”

“சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்;” என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். 

இதில் ஏசாயா தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவினுடைய முதலாம் வருகையைக் குறித்தும், இரண்டாம் வருகையைக் குறித்தும் ஒன்று சேரவே கூறியுள்ளார். கிறிஸ்துவின் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கி சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, நொறுங்குண்ட இதயங்களின் காயங்களைக் கட்டினார். துயரப்பட்டவர்களின் துயரத்தை மாற்றி அவர்களை ஆறுதல் படுத்தினார். கட்டுண்டவர்களின் கட்டுகளை அவிழ்த்தார். நம்முடைய காயங்களைக் கட்ட கிருபையும், சத்தியமும் நிறைந்த இயேசுவானவர் நமக்குள் வந்திருக்கிறார். அவர் தம்முடைய கரத்தை நீட்டும் போது அவருடைய கரத்திலிருந்து அபிஷேகத் தைலம் வழிந்து வரும். அவர் நம்மை ஒரு தாய் தேற்றுவது போல் தேற்றுகிறவர் (ஏசாயா 66 : 13). நம்முடைய காயங்கள் தேற்றரவாளனாகிய ஆவியானவரால் ஆற்றப்படும் பொழுது, நமக்கு ஆறுதலும், சமாதானமும் இளைப்பாறுதலும் கிடைக்கும். அதேபோல் அறிக்கை செய்யாத பாவங்கள் நமக்குள் இருக்குமானால் அது நமக்கு இளைப்பாறுதலைக் கொடுக்காது. அவைகளை நாம் நல்ல சமாரியனான இயேசுவிடம் அறிக்கையிடம் போது அவர் நமக்கு பாவமன்னிப்பாகிய, இரட்சிப்பின் பொக்கிஷத்தைத் தந்தருளுவார். 

 சத்திரக்காரன்:

லூக்கா 10 : 35 “மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.” 

நல்ல சமாரியன் காயப்பட்டவனை சத்திரத்திற்குக் கொண்டுவந்து சத்திரக்காரனிடம் ஒப்படைக்கிறான். அவனைப் பராமரிக்கும் பொறுப்பையும் சத்திரக்காரனிடம் கொடுக்கிறான். சத்திரக்காரனும் அந்தப் பொறுப்பையும் உத்தரவாதத்தையும் ஏற்றுக் கொண்டான். மறுநாளில் சமாரியன் சத்திரத்தை விட்டுப் புறப்படும் போது சத்திரக்காரன் கையில் 2 காசைக் கொடுத்து அவனை மறுபடியும் தான் திரும்பி வருகிற வரை நன்றாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னான். மேலும் அவனுக்கென்று ஏதாவது செலவழித்தால் தான் திரும்பி வரும்போது தருவதாகக் கூறி சத்திரத்திலிருந்து புறப்பட்டான். இங்கு சத்திரமானது சபையைக் குறிக்கிறது. இது அநேக மக்களைப் பராமரிக்கும் இடம். மறுநாள் சமாரியன் புறப்படும்போது அந்த சத்திரக்காரனிடம் கொடுத்த அந்த இரண்டு பணம் என்பது இரண்டு ஏற்பாடுகளைக் குறிக்கிறது. அதில் ஒன்று பழைய ஏற்பாடு, இரண்டாவது புதிய ஏற்பாடு. இவைகள் தான் ஒருவனுக்கு தெய்வீக ஆரோக்கியத்தை கொண்டுவரமுடியும் இதைத்தான் பேதுரு 

1 பேதுரு 2 : 3ல் “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” என்றார். 

இந்த 2 ஏற்பாடுகளையும் படிக்க படிக்க நமக்குள் தெய்வீக ஞானமும், அறிவும், வல்லமையும் பெருகுவதை உணர முடியும். வேத வெளிச்சத்தில் தான் ஆத்துமாவைப் பராமரிக்க முடியும். வேத வசனமே குழந்தைக்குப் பாலாகவும், பலவான்களுக்கு ஆகாரமாகவும் விளங்குகிறது. திரும்பி வரும்போது என்பது எதைக் குறிக்கிறது என்றால் நல்ல சமாரியனான இயேசு திரும்பி வருவார். தான் காயம் கட்டின தன்னுடைய பிள்ளைகளைக் கூட்டிச் சேர்க்க வருவார். நாம் இழந்து போன மகிமையின் வஸ்திரத்தை மறுபடியும் தருவதற்கு சமாரியனாகிய இயேசு தயாராயிருக்கிறார். காயங்கட்டுகிற இயேசு நம் மத்தியில் இருக்கிறார். அவருடைய இரத்தத்தின் துளிகள் நம் மீது விழுகிறது. அது நம்முடைய காயங்களை ஆற்றுகிறது. புதிய மனிதனாக நம்மை மாற்றுகிறது.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago